சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் 92 வது ஆண்டுவிழாவை ஒட்டி வான் சாகச நிகழ்ச்சியை கடந்த 06.10.2024 இல் நடத்திக்காட்டியுள்ளது இந்திய விமானப்படை. இதில் 15 லட்சம்பேர் பங்கேற்றதாகவும், லிம்கா சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்திருப்பதாகவும் அரசு தர்ப்பு பெருமிதம் கொள்கிறது.

எதிர்கட்சிகளின் ஊடகங்கள் இந்நிகழ்வில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதையும், பலர் சிகச்சையில் இருப்பதையும் வைத்து தமிழக அரசு நிர்வாகத்திறனற்றது என்பதை நிரூபிக்க போட்டிபோடுகின்றன. ஆனால் நாம் விவாதிக்க வேண்டியது நிகழ்ச்சி நடத்தியதில் ஏற்பட்ட பிரச்சினைகளை மட்டுமல்ல. அந்த நிகழ்ச்சியே தேவைதானா என்பது குறித்தே விவாதிக்க வேண்டும்.

வங்கக்கடலோரத்தில் இருவேறு காட்சிகள்!

கடந்த ஞாயிற்றுக்கிழமையில் வங்காள விரிகுடாவில் உள்ள சென்னையின் மெரினாவில் வான்சாகசமும், கொண்டாட்டங்களும் களைகட்டின. விமான, ஹெலிகாப்டர் பைலட்களின் பல்வேறு சாகசங்களால் மக்கள் மெய்சிலிர்த்ததாக மீடியாக்கள் வர்ணித்தன.

இதே கடலோரத்தில்தான் ராமேஸ்வரமும் வருகிறது. அம்மக்கள் தமது உயிருக்கு மதிப்பே இல்லையா? இலங்கை கடற்படையினர் எமது படகுகளை மூழ்கடித்து, வலைகளை அறுத்தெறிகின்றனரே கேட்க யார்ரும் வரமாட்டீர்களா? சிறைபிடிக்கப்பட்ட தமிழக (இந்திய) மீனவர்களின் தலையை மொட்டையடித்து, கோடிகளில் அபராதம் விதிப்பதை எதிர்த்து எங்களுடன் துணைநிற்க யாரும் இல்லையா? என கதறுகின்றனர். கையாலாகாத அரசை கண்டித்து போராடியும் வருகின்றனர்.

இப்படி இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படும் மீனவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இந்த வான்சாகத்தை வரவேற்கவா செய்வார்கள்?

நாம் பெருமிதப்பட என்ன உள்ளது?

இந்நிகழவைப்பற்றி அமைச்சர் மா.சுப்ரமணியன் மேடியாக்களிடம் விவரிக்கும்போது ஒரு விமானம் தஞ்சையிலிருந்து சென்னைக்கு 20 நிமிடத்தில் வந்த அதிவேக பாய்ச்சலை குறிப்பிட்டார். இது உலக நாடுகளுக்கு நம் வான் வலிமையை எடுத்துக்காட்டியுள்ளதாகவும் பெருமிதப்பட்டார்.

ஆனால், மீனவர்கள் தாக்கப்படும்போது இப்படி அதிவேகத்தில் சென்று, அத்துமீறும் இலங்கை கடற்படைக்கு தக்க பாடத்தை ஒருமுறையாவது புகட்டியுள்ளதா? தம்மை காக்க வராத படையின் சாகசத்தை எப்படி கொண்டாட முடியும்.

குமரியில் ஒக்கி புயல் அடித்தபோதும் நம்மிடம் விமானப்படை இருந்ததுதானே! அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீட்புப்பணிக்கு ஏவினாரா? இல்லையே. வானில் நிற்கும் ஹெலிகாப்டரிலிருந்து கயிறு கட்டி சறுக்குவதுபோல் இறங்கிய சாகசத்தை பார்த்தால், மூன்று நாட்களாகியும் யாரும் வராமல், வானை ஏக்கத்தோடு பார்த்து நீந்திகரைசேர போராடி, முடியாமல் மூழ்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கோபம்தானே கொப்பளிக்கும். நம்மை காக்க வர துப்பில்லை. சாகசம் ஒரு கேடா என்றுதானே கேட்பர்.

உண்மையிலேயே விமானப்படைக்கு துப்பிருந்தால் இந்த சாகசத்தை ராமேஸ்வரத்திலும், குமரியிலும் நடத்துங்கள். அம்மக்கள் துடைப்பத்தால் வரவேற்பர்.

வீரர்களே எது நாட்டுப்பற்று?

தனிப்பட்ட வீரர்கள் நாட்டுப்பற்றோடு படையில் சேர்ந்து கடும் பயிற்சியும் எடுத்து களத்திற்கு தயாராக நிற்கிறீர்கள். ஆனால், உங்கள் தலைமையோ இந்திய மக்களை காக்க உங்களை அனுப்ப தயாராக இல்லை. ஏன் மீட்புக்கு, உதவிக்கு போகக்கூடாது என்று நீங்களும் கேட்க உரிமையில்லை. சுனாமி வந்தபோதும்கூட இதுதான் நடந்தது.

நீங்கள் யாரின் நலனுக்காக படையில் இருக்கிறீர்கள்? கார்ப்பரேட்டுகள் நாட்டையே சூறையாடுவதையும், அதை உழைக்கும் மக்கள் எதிர்ப்பதையும், நம் மக்கள்மீதே காவி பாசிசம் படைகளை ஏவி தாக்குவதையும் பார்த்தும்கூடவா உங்களுக்கு புரியவில்லை. உம்மால் நாட்டுக்கு என்ன பயன் என்பதை தெரிந்துகொள்ள எம்மக்களிடம் வாருங்கள்.

உரிமை கேட்கும் உழைக்கும் மக்களான எங்களை நகர்ப்புற நக்சல், தீவிரவாதம், சீன சதி என முத்திரை குத்தி ஒடுக்க எத்தனிக்கும் மோடி தலைமையிலான காவி பாசிச கும்பலுக்கு கைக்கருவிகளாக முப்படையும் மாற்றப்படலாமா?

அக்னிவீர் திட்டம் உங்களை எப்படி அத்துக்கூலியாக்குகிறதோ அதே போல்தான் தொழிலாளர்கள் தினக்கூலிகளாகவும், ஒப்பந்த பணியாளர்களாகவும் அவதிப்படுகின்றனர். கார்ப்பரேட் பிடிக்குள் விவசாயிகளை தள்ளி காவு தர கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வென்றனர்.போராடும் நம் மக்களுடன் நில்லுங்கள். இதுதான் நாட்டுப்பற்று.

  • இளமாறன்

1 COMMENT

  1. வீண் ஜம்பம் அடித்து வான் சாகசம் என்ற பெயரில் வெற்றுக் கூச்சலிடுவதையும், ராமேஸ்வரம் மீனவர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொடூரமான முறையிலே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து சிறைத் தண்டனையும் கோடிக்கணக்கில் தண்டத் தொகையும் கட்டச் செய்யும் இழிசெயலையும்
    கண்டிக்க-தட்டிக் கேட்க-எதிர்த்து நிற்க, அப்பாவி ஏழை எளிய மீனவர்களைக் காப்பாற்ற வக்கற்ற ஒன்றிய – மாநில அரசுகளின் இழிவான சூழ்நிலையை ஒப்பிட்டு தோழர் கட்டுரை வடித்திருப்பது,
    பாராட்டிற்கு உரியது. வாழ்த்துக்கள் தோழரே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here