மோடியின் புதிய (அதானி) இந்தியா!

மோடியின் ஆட்சியில், துணி வியாபாரம் செய்வதை விடவும் துறைமுகங்கள் அமைப்பது எளிதாக இருக்கிறது அக்குழந்தைக்கு. அந்த குழந்தை பெயர் கெளதம் சாந்திலால் அதானி.

0
57

திரொளி மங்கிய மாலை நேரம். பழவேற்காட்டின் முகத்துவாரத்தின் கரையில் அமர்ந்து நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன். திமிலை மட்டும் வெளியே வைத்து, தண்ணீரை கிழித்துக் கொண்டு முகத்துவாரம் நோக்கி வந்து கொண்டிருந்தது சுறாக்கள். ஆற்று நீரும், கடல் நீரும் கலக்கும் இடத்தில் உள்ள வெப்பநிலை தான் அவைகள் குஞ்சு பொறிப்பதற்கு ஏற்ற வெப்பநிலை என்பதால் குறிப்பிட்ட காலத்துக்கு இவை இங்கு வருமென நண்பன் கூறினான். கடல் வாழ் உயிரினங்களுக்கு முகத்துவாரம் ஓர் வாழ்வாதாரம். கண்கள் சுறாவின் மீது இருந்தாலும், மாலையின் மீது கவிந்து வந்த இருள் அதை மங்கச் செய்தது. கிளம்பிய பின்னர் ஒருமுறை கடலை பார்த்தேன். கடைசியாக ஒரு முறை இந்த இடத்தில் நின்று பார்த்துக் கொள் என்றது உள்மனம்…

பழவேற்காடு முகத்துவாரம்

1962 ஜூன் 06-ஆம் தேதியில் அகமதாபாத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு இந்த பழவேற்காடு பகுதியில் துறைமுகம் கட்ட வேண்டுமென்று ஆசை வந்துவிட்டது. அவருடைய அப்பாவை போல துணி வியாபாரம் செய்ய பிடிக்கவில்லை. மோடியின் ஆட்சியில், துணி வியாபாரம் செய்வதை விடவும் துறைமுகங்கள் அமைப்பது எளிதாக இருக்கிறது அக்குழந்தைக்கு. அந்த குழந்தை பெயர் கெளதம் சாந்திலால் அதானி.

அதனால் இனிமேல் இது அதானியின் நிலம். அதானி விரும்பிய நிலம். பண்ணையார் தன் வீட்டு வேலைகாரனின் மனைவி மீது ஆசைப்பட்டு விட்டால் அந்த பெண்ணுக்கு என்ன கதியோ, அதே கதி தான் பழவேற்காடு மீனவ கிராம மக்களுக்கும், பழவேற்காட்டை சுற்றியுள்ள மக்களுக்கும். ஆசைப்பட்டிருப்பவர் லோக்கல் பண்ணையாராக இருந்தால் கூட பரவாயில்லை. உலக பணக்காரர். அதுவும் நம் நாட்டின் பிரதமரையே நண்பராக வாய்த்திருக்கும் மகா சன்னிதானம். அவர் ஆசைப்பட்ட பின்னர் அவர் கோடு வரைந்த இடத்தை அவருக்கு தாரை வார்த்து கொடுத்துவிடவேண்டும். செத்துப்போவதைக் காட்டிலும், பெட்டி படுக்கைகளுடன் சொந்த நாட்டில் அகதியாய் திரியும் ஒரு நல்வாய்ப்பை வேண்டுமானால் பிரதமர் நமக்கு வழங்கலாம்.

அதானி காட்டுப்பள்ளி துறைமுகம்

நட்புக்கு நாடே சொந்தம் – மோடி

குஜராத் இசுலாமியர்களை மோடி முன்னின்று நரவேட்டையாடியதை உலகமே கண்டித்த போது, அவரை ஆதரித்தவர் அதானி. அதற்கு நன்றி விசுவாசமாக மோடி அதானிக்கு உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடமளிக்க செய்ததோடு, அதில் முன்னிலை பெற வைத்துள்ளார். முதலிடத்துக்கு கொண்டு செல்ல, ஊண் உறக்கமின்றி போராடுகிறார்.

படிக்க:

♦  அதானிக்கு காவு கொடுக்கப்பட்ட காட்டுப்பள்ளியின் கதை !
♦  அதானியின் எழுச்சி! இந்திய மக்களுக்கு வீழ்ச்சி!!

2014 குஜராத் கட்ச் வளைகுடாவில் துறைமுகம், ரூ 1 க்கு ஒரு சதுர மீட்டர் விற்றது முதல் , முந்த்ரா கிராமத்தில் 1200 ஏக்கர் மேய்ச்சல் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலம், 2014 மே 16 மோடி பிரதமரான அதே நாளில் ஒரிசா மாநிலத்தில் துறைமுகம் வாங்கியது, ராணுவ ட்ரோன் விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம், அதை வாங்க SBI மூலம் 6000 கோடி கடனுதவி, 05 விமான நிலையங்கள் பராமரிப்பு, ஜார்கண்ட் மாநிலத்தில் மின் உற்பத்திக்காக நிலம், இந்தியாவிலேயே முதன் முறையாக தனது நண்பனுக்காக அதை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்தது (பட்டியலிட்டது வெகுசில, கணக்கில் வராதது பெருமலை) என பல வேலைகளை முன்னின்று செய்து கொடுத்து அதானியை ஆசிய பணக்காரராக்கி பின் உலக பணக்காராராக்கியுள்ளார் நண்பர் மோடி.

2014 ல் பிரதமர் நாடாளுமன்ற தேர்தலின் போது அதானி நிறுவன விமானங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார், மோடி. பிரதமராக பதவியேற்க போகும் போதும் அதானியின் விமானத்திலேயே சென்று பிரதமராக முடிசூட்டிக்கொண்ட மோடி, இந்தியாவை அதானி நாடு, அம்பானி நாடு என இரண்டு பேருக்கும் பங்கு போட்டு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. குஜராத் அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரில் இருந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தை தன் பெயருக்கு மாற்றிக்கொண்ட மோடி, அதன் ஒரு முனைக்கு அம்பானி எண்ட் எனவும் மறுமுனைக்கு அதானி எண்ட் பெயர் வைத்தது நினைவிருக்கலாம். அது அம்பானி, நாடு அதானி நாடு என பங்கு பிரிப்பதற்கான முன்னோட்டமாக கூட இருக்கலாம்!

மோடியை கைக்குள் வைத்துக்கொண்டு அத்தனை வளங்களையும் விழுங்கி உலக பணக்காரராகி வருகிறார் அதானி. ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராடு வருகிறார்கள். STOPADANI என்கிற பெயரில் மக்கள் திரண்டு தொடர் இயக்கம் நடத்தி வருகிறார்கள். முந்த்ரா துறைமுக பகுதியில் சூழல் பாதிப்புகள், அதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் இன்றளவும் நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உலகிலேயே பெரிய சூரிய மின்சக்தி திட்டம் அமைப்பதாக கூறி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பறித்துக்கொண்டார் அதானி. வறட்சி மாவட்டமான இங்கு கன்மாய் மூலம் வருகின்ற தண்ணீரையும் தடுத்து, அவர்களின் மேய்ச்சல் நிலத்தை பிடிங்கிக் கொண்டு அவர்களை ஊரை விட்டே துரத்தியடிக்கிறது அதானி நிறுவனம். 2020-2022 கொரோனா காலகட்டத்தில் மக்கள் பிழைக்க வழியின்றி தவித்த வேளையில் தான் ஒரு நாளைக்கு 780 கோடி ரூபாய் லாபமீட்டினார். அதானியின் ஒவ்வொரு நிறுவனமும் கொடிய ஆக்டோபஸ் கரங்களாய் மக்களின் கழுத்தை இறுக்குகின்றது என்பதற்கு இதைவிடவும் தகுந்த சான்று தேவையில்லை.

நாளை மோடி இல்லையென்றாலும், வேறு ஒருவரை பிரதமராக்கி, அவரின் மூலமாக இந்த கொள்ளை தொடரும். அவர்களின் தேவையை நிறைவேற்றும் ஆள் தான் பிரதமராக இருக்க முடியும். தற்போது அதை மோடி சிறப்பாக திறம்பட செய்கிறார். அவர் செய்ய தவறும் பட்சத்தில், மக்கள் செல்வாக்கு இழக்கும் நிலையில் வேறொருவரை அவர்கள் பணியமர்த்திக் கொள்வர். ஆனால் நமக்கு? நமது வாழ்வு? கொலைகார ஸ்டெர்லைட்க்கு எதிராக சொந்த நாட்டு மக்களை குறிவைத்து சுட்டுக் கொன்றிருக்கிறார் அகர்வால். அதை தான் இனி எல்லா முதலாளியும் செய்வார்கள். அதானி கால் பதிக்கும் இடங்களில் எல்லாம் போராடும் மக்களுக்காக துப்பாக்கி முனைகள் குறிவைத்து காத்துக் கொண்டிருக்கிறது. எதை விடவும் மக்கள் போராட்டம் தான் வெல்லும் என்ற வரலாற்றை உரக்க சொல்லுவோம்.

செல்வா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here