பில்கிஸ் பானு வழக்கு: பார்ப்பனருக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி – அப்பட்டமாக அரங்கேறும் மனுநீதி!

பார்ப்பனன் கொலையே செய்தாலும் முடியை மட்டும் மழித்தால் போதும், அதற்கு மேல் எந்த தண்டனையும் கூடாது என்பதுதான் "மனுநீதி" சொல்லும் நீதி.

0
118

பில்கிஸ் பானு வழக்கு: பார்ப்பனருக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி – அப்பட்டமாக அரங்கேறும் மனுநீதி!


ரேந்திர மோடி முதல் முறையாக குஜராத்தின் முதல்வராக பொறுப்பேற்ற நான்கே மாதத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதனைத் தொடர்ந்து இந்திய வரலாறு காணாத வகையில் முஸ்லிம் இனப்படுகொலையும் திட்டமிட்டு நடந்தேறியது. எனில் இது தற்செயல் நிகழ்வாக இருக்க முடியுமா எனும் கேள்வி எழுகிறது அல்லவா?

‘சுதந்திர’ இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை!

2000 – க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட அந்த  சம்பவத்தில் நெஞ்சை பதைபதைக்க வைத்த பல்வேறு படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. அப்படியான ஒரு கொடூரம்தான் பில்கிஸ் பானு எனும் ஐந்து மாத கர்ப்பிணி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டதும் அவரது மூன்று வயது பெண் குழந்தை தாயின் கண்ணெதிரே கல்லில் அடித்து கொலை செய்யப்பட்டதும், மட்டுமல்லாமல் அப்பெண்ணின் உறவினர்கள் 14 பேர் படுகொலை செய்யப்பட்டதும் ஆகும்.

பில்கிஸ் பானு சுய நினைவை இழந்து மயங்கிய நிலையில், அவர் இறந்து விட்டதாக எண்ணி அடுத்து பல படுகொலைகளை நிகழ்த்தும் வெறியோடு அங்கிருந்து சென்றன வானரப் படைகள். அதிசயமாக தப்பிப் பிழைத்த பானு, தன் கண்ணெதிரே நடத்தப்பட்ட படுகொலைகளுக்கும் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கும் நீதிவேண்டி துணிச்சலுடன் தனது போராட்டத்தை துவங்கி ஆறு ஆண்டுகள் கடும் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இந்து வெறியர்களில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கச் செய்தார்.

இடையில் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்தித்த போதும் உறுதியுடன் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு இதை சாதித்தார். அப்படிப் போராடி கொடியவர்களுக்குத் தண்டனை பெற்று தந்த அவருக்கு பேரிடியாய் வந்தது அந்த செய்தி, அதாவது கிரிமினல் குற்றவாளிகள் அத்தனை பேரும்  நன்னடத்தை காரணமாக விடுதலை என்பதுதான் அது. பெரியத் தியாகிகள் போல, மாலை மரியாதையோடு இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டனர் அந்தக் கயவர்கள். இதை எதிர்பார்க்காத பில்கிஸ் பானு மீண்டும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அவர் மிகுந்த துயரிலும், மனச்சோர்விலும் உள்ளதாக அவரது கணவர் ரசூல் தெரிவித்தார். எப்படி அவரால்  தன் கண்முன்னே இவர்கள் சுதந்திரமாகத் திரிவதை சகித்துக்கொள்ள முடியும்?

பில்கிஸ் பானுவின் அறிக்கை இரண்டு நாள் கழித்து வெளியானது. “20 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் என்னை உலுக்கியது. என் நிம்மதியை குலைத்ததோடு மட்டுமின்றி, நீதியின் மீதான என் நம்பிக்கையையும் அசைத்து விட்டது. தயவு செய்து இந்த விடுதலை உத்தரவை திரும்பப் பெறுங்கள். நானும் எனது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள். எனது அமைதியையும் அச்சமற்ற வாழ்வையும் திருப்பிக் கொடுங்கள் என குஜராத் அரசிடம் வேண்டுகோள் வைக்கிறேன்” என குற்றமிழைத்த அரசிடமே கோரிக்கை வைக்கிறார். வேறென்ன செய்ய முடியும்?

குற்றவாளிகளின் விடுதலையில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள்!

75 – வது ‘சுதந்திர’ தினத்திற்கு முன்பாக, சிறைவாசிகளின் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் ஒன்றை அனுப்பியது. இதில் பாலியல் வல்லுறவு மற்றும் ஆயுள் தண்டனை குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது. குஜராத் அரசிலும் 2014- ல் இது போன்ற சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே 2014 கொள்கையின்படி அவர்கள் மன்னிப்பு பெற முடியாது. பின்பு எப்படி அவர்கள் உச்சநீதி மன்றத்தில் முன்கூட்டிய விடுதலை கோரி விண்ணப்பித்தனர் என்பது ஆச்சரியம்தான்.

இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நாளில் நடைமுறையில் இருந்த கொள்கையின் கீழ் முடிவெடுக்கலாம் என்று சூப்பராக ‘ஐடியா’  கொடுத்தது. அதன் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து ஆராய குழு அமைக்கவும் சொன்னது. இதற்கென அமைக்கப்பட்ட குழுவில் மாவட்ட நீதிபதி, சிறை கண்காணிப்பாளர், ஆளும் பாஜக – ஐ சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 8 பேர் இருந்தனர்.

அடுத்து, இவ்வழக்கை சிபிஐ(CBI) விசாரித்ததால், கைதிகளின் விடுதலை குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விஷயத்தில் மத்திய அரசு இதைத்தான் அழுத்தம் திருத்தமாக இப்பொழுதும் சொல்லி வருகிறது. ஆனால் குஜராத் கொலைக் குற்றவாளிகள் விடுதலை விஷயத்தை  மாநில அரசே முடிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இவர்களை விடுவிப்பதற்கான ஆலோசனை குழுவில் இருந்த இரண்டு பாஜக எம்எல்ஏக்களில் ஒருவரான சி.கே.ராவோல், “அவர்கள் பிராமணர்கள், தவறான நோக்கத்தின் அடிப்படையிலேயே அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் பொதுவாகவே அவர்கள் நல்ல பழக்கவழக்கம் கொண்டவர்கள் என்பதால் விடுவிக்க கோரி அரசுக்குப் பரிந்துரைத்தோம்” என்றார். எப்படி இருக்கிறது பாருங்கள் இவர்களின் நியாயம்?

இப்படியாக பல்வேறு தில்லுமுல்லுகள் செய்துதான் குற்றவாளிகள் தண்டனைக் குறைப்பைப் பெற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குற்றத்தின் தன்மை அடிப்படையில் முடிவெடுக்காமல் அவர்களின் பிறப்பின் அடிப்படையில் முடிவெடுத்து அதை அமலாக்கியும் உள்ளனர். விடுதலையின் சூட்சுமம் இப்போது புரிகிறதல்லவா? பார்ப்பனன் கொலையே செய்தாலும் முடியை மட்டும் மழித்தால் போதும், அதற்கு மேல் எந்த தண்டனையும் கூடாது என்பதுதான் “மனுநீதி” சொல்லும் நீதி.  ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்ற நீதியை மறுத்து முன்கூட்டியே விடுதலை என்ற அநீதியை இழைத்துள்ளது குஜராத்தின் பாஜக அரசு.


இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை: 11 கொலை குற்றவாளிகள் விடுதலை! பில்கிஸ் பானோவுக்கு இழைக்கப்பட்ட அநீதி!


அரசின் இந்த படுபாதக செயலுக்கு எதிராக காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா,   “குற்றவாளிகளின் விடுதலை சட்டவிரோதமானது. இதற்கு மோடியும், அமித்ஷாவும் பதில் சொல்ல வேண்டும்” என்றார். ராகுல்காந்தியும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். திரிணாமுல், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சியினரும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி சால்வி,  “இந்த வழக்கில் அரசாங்கத்துக்கு நிவாரணம் வழங்க அதிகாரம் உள்ளது. ஆனால் அப்படி செய்வதற்கு முன்பாக குற்றத்தின் தன்மை மற்றும் பாதிக்கப்பட்டவரின் நிலை குறித்தும் சிந்திக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட வரவேற்பை அவர்கள் ஏற்றுக் கொண்டதிலிருந்தே அவர்களுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் இருப்பதாக தெரியவில்லை” என்று கருத்து தெரிவிக்கிறார்.

இந்த அநியாய விடுதலைக்கு எதிராக இந்தியாவெங்கும் பல்வேறு இடங்களில் பெண்ணுரிமை, மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்துகின்றன. உச்சநீதி மன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. போராட்டங்களும், கண்டனங்களும் உச்சநீதி மன்றத்தை உலுக்குமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தக் கொடூரக் குற்றவாளிகள் விடுதலையான அதே வேளையில் ராஜீவ் கொலை வழக்கில் நேரடியாக தொடர்பே இல்லாத ஏழு பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள போதும் (அரிதாக பேரறிவாளன் பெரும் சட்டப் போராட்டம் நடத்தி இப்போதுதான் விடுதலை பெற்றார்) அவர்களை முன்கூட்டி விடுதலை செய்யச் சொன்னால், கூடவே கூடாது என வானத்துக்கும் பூமிக்குமாக குதிப்பது ஏன்? அவர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்பதாலா?

நேரடியாக பாலியல் வன்கொடுமையும் கொலைக் குற்றமும் நிரூபிக்கப்பட்ட பார்ப்பனர்களுக்கு முன்கூட்டியே விடுதலை என்பதும், ஒருவரின் கொலைக்கு தொடர்பே இல்லாத அல்லது மறைமுகமாக தெரியாமல் உதவி செய்தவர்களுக்கு அப்படியான விடுதலை தொடர்ந்து நிராகரிப்பு என்பதும்தான் இந்து மதவெறி பாசிஸ்டுகள் உருவாக்கும் புதிய மனுநீதி!

‘சுதந்திர’ தின உரையில் நரேந்திர மோடி, “நமது நடத்தை முறை, பண்பாடு, அன்றாட வாழ்க்கை ஆகியவற்றில் பெண்களை இழிவு படுத்தும், அவமானம் செய்யும் ஒவ்வொன்றையும் களைந்தெறிய நாம் உறுதி பூண வேண்டாமா?”  என நீட்டி முழக்கினார். அன்றைய தினத்தில்தான் பெண்களை இழிவு படுத்தும் விதமாக, பாலியல் வல்லுறவு  மற்றும் கொலைக் குற்றவாளிகள் குஜராத்தின் பாஜக அரசால் சுதந்திரமாக வெளியில் வந்தனர். எனில் சொல் ஒன்று செயல் ஒன்று என்ற இரட்டை வேடம் போடும் இந்த பாசிச ஓநாய்களை அம்பலப் படுத்தி முறியடிக்க வேண்டாமா?

இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்துக்களின் பெருவாரியான ஓட்டுகளை பொறுக்கவே இதை இவர்கள் செய்துள்ளார்கள். நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம், எங்களை யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என திமிரோடு திரிகிறார்கள் இந்த பாசிஸ்டுகள். இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு மாறாக மனுநீதியையும், ஜனநாயகத்துக்கு மாறாக பாசிசத்தையும் புகுத்த எத்தனிக்கும் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

ஆக்கம்: குரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here