வங்கதேசத்தை வஞ்சித்த அதானி – மோடி கும்பல்!

ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கமும், ஒரிசாவின் துறைமுகமும் மோடியின் செல்வாக்கால் அதானிக்கு சொந்தமாக்கப் பட்டவை.

0
வங்கதேசத்தின் முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டதன் பின்னணி இதுதான்

ந்தியப் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின் அடுத்த ஆண்டில் (2015) வங்காள தேசத்திற்கு பயணம் மேற்கொண்ட அவர், அந்த நாட்டின் மின்சாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உதவுவதாக உறுதியளித்தார். ஆஹா, அந்த நாட்டின் மீது மோடிக்குதான் எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா? எலி ஏன் அம்மணமாக ஓடியது என்று அடுத்த இரண்டே மாதங்களில் தெரிந்து விட்டது.

ஆம், அடுத்த இரண்டே மாதங்களில் அதானி குழுமம் வங்காள தேசத்தின் மின் மேம்பாட்டு வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஜார்க்கண்டில் உள்ள கோடா(Godda)வில் 1600 மெகாவாட் அனல் மின் நிலையத்தை அமைத்து, அங்கிருந்து வங்காளதேசத்திற்கு மின்சாரத்தை கொண்டு செல்லும் திட்டம்தான் அது!

அதானிக்கு சாதகமாக அனைத்தும் அரங்கேற்றப்பட்டது!

இந்தியாவில் அதிக நிலக்கரி இருப்பு உள்ள மாநிலமாக ஜார்க்கண்ட் உள்ளது. ஆனால் அதானியின் கோடா மின் உற்பத்தி நிலையத்துக்கு ஜார்க்கண்டில் உள்ள நிலக்கரி பயன்படுத்தப் படவில்லை. மாறாக  ஆஸ்திரேலியாவில் உள்ள அபோட்(Abbot) துறைமுகத்திலிருந்து ஒரிசாவின் தாம்ரா துறைமுகத்திற்கு கிட்டத்தட்ட 9000 கிலோ மீட்டர் கப்பலில் நிலக்கரி இறக்குமதி ஆகிறது.

ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கமும், ஒரிசாவின் துறைமுகமும் மோடியின் செல்வாக்கால் அதானிக்கு சொந்தமாக்கப் பட்டவை. ஒரிசாவில் இருந்து கோடாவுக்கு இதற்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக ரயில் பாதைகளில் 600 கிலோ மீட்டர் தூரம் ரயில் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. இந்த ரயில் பாதையை அமைக்க பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை அப்புறப்படுத்தி திட்டத்தை அமலாக்கியது ஒன்றிய அரசு.

கோடாவில் உற்பத்தியான மின்சாரம் அங்கிருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள வங்காள தேசத்தின்  பெரமராவுக்கு அனுப்பப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஒப்பந்தம் விதிமுறைகளை மீறி அதானிக்கு சாதகமாக ஏற்படுத்தப்பட்டதாக வங்கதேசத்தில் எதிர்ப்புகள் எழுந்த போதிலும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்து மின்சாரத்தின் விலை நிர்ணயம் மிக அதிகமாக இருப்பதாக சர்ச்சைகள் வெடித்தன.

அதானி எனும் தனியொரு முதலாளியின் நலனுக்காக ஒட்டுமொத்த நாட்டின் நலன் காவு கொடுக்கப் படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. நாட்டின் சராசரி மின்சார செலவை விட அதானியிடம் இருந்து வாங்கும் மின்சாரத்துக்கு 5 மடங்கு அதிகமாக செலுத்த வேண்டி இருந்தது. இதைவிட கொடுமை என்னவென்றால் அதானி ஆலையில் மின்சாரமே உற்பத்தி செய்யாவிட்டாலும் கூட, வருடாந்திர பராமரிப்பு கட்டணமாக 25 ஆண்டுகளுக்கு மொத்தமாக 450 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்பதுதான்.

நவம்பர் 2017 – ல் கையெழுத்திடப்பட்ட மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் மதிப்பு கூட்டு வரி(VAT) உள்ளிட்ட பிற வரிகள் தனித்தனியாக பட்டியலிடப்பட்டன. ஆனால் இதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே ஜூலை 2017 – ல் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அறிமுகப் படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வந்த பிறகு VAT, Octroi உள்ளிட்ட வரிகள் செல்லத்தக்கவை அல்ல. இருப்பினும் காலாவதியான வரிகள் எல்லாம் ஒப்பந்தத்தில் எதற்காக போடப்பட்டன என்ற கேள்வியும் எழுந்தது.

மேலும் அதானிக்கு கூடுதல் சலுகையாக வங்காள தேசத்துடன் மின் ஒப்பந்தம் போடப்பட்டு 15 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2019-ல் கோடா மின் உற்பத்தித் திட்டம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (SEZ) கீழ் கொண்டுவரப்பட்டது. இதனால் அனைத்து இறக்குமதி வரிகளுக்கும் விலக்கு, நீண்டகால வருமான வரி விலக்கு உள்ளிட்ட பல சலுகைகளும் அதானி நிறுவனத்துக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. அதானிக்கும் மோடிக்கும் இடையே உள்ள நெருங்கிய உறவே இத்தனை சலுகைகளுக்கும் காரணம் என்பதை சொல்லத் தேவையில்லை.

மேலும் இந்த ஒப்பந்தமே மோடியின் அரசியல் செல்வாக்கின் காரணமாகவே ஏற்படுத்தப்பட்டது என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். உலக அளவில் அனல் மின் நிலையங்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைவதாக கவலைகள் எழுந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நிலக்கரி உபயோகிக்கும் பல மின் திட்டங்களை வங்கதேசம் ரத்து செய்ய முடிவு செய்த போதிலும், அதானியின் மின் திட்டத்தில் மட்டும் கை வைக்க முடியவில்லை.

அதானிக்கு வேட்டு வைக்குமா ஆட்சி மாற்றம்!

இந்த நிலையில்தான், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வங்கதேச தலைநகரான டாக்காவிலும் நாட்டின் இதர சில பகுதிகளிலும் அரசுக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் வெடித்தன. கலவரத்தை அடக்க முடியாத பிரதமர் ஷேக் ஹசீனா உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, தப்பி வந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அடுத்த இரண்டு நாட்களில் நோபல் பரிசு பெற்றவரும் நீண்ட காலமாகவே ஹசீனாவை விமர்சித்து வருபவரான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அங்கு அமைக்கப்பட்டது.

படிக்க:

இதையடுத்து அதானி நிறுவனத்தின் மின்சார ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கதேசம் முறைப்படி கோரிக்கை வைத்துள்ளது. பெர்லினைத் தளமாகக் கொண்டு இயங்கும் டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் பங்களாதேஷ் எனும் பொது சமூக அமைப்பானது அதானியுடன் வங்கதேச மின்வாரியம் போட்ட இந்த ஒப்பந்தமானது பாரபட்சமானது என சாடியுள்ளது.

உண்மையில் இந்த ஒப்பந்தம் வங்கதேசத்தில் இந்தியாவுக்கும், ஹசீனாவுக்கும் எதிரான உணர்வெழுச்சிக்கு வித்திட்டுள்ளது. இடைக்கால அரசின் தலைவரான யூனுஸ், அதானி குழுமத்துடனான இந்த ஒப்பந்தம் குறித்து கடுமையான விமர்சனங்கள் உள்ளன என்றார்.

ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்த ஒரு வாரம் கழித்து ஆகஸ்ட் 12 அன்று மோடி அரசாங்கம் எல்லை தாண்டி மின்சாரம் எடுத்துச் செல்வதற்கான ஏற்றுமதி வழிகாட்டுதல்களை திருத்தியது.

இதுவும் கூட வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் அதானிக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில்தான் அமைந்தது. ஆகஸ்ட் 27 ல் யூனுஸ் தலைமையிலான அரசு நிர்வாகத்தை  அணுகிய அதானி குழுமம், இதுவரை வழங்கப்பட்ட மின்சாரத்துக்கான 800 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை வழங்குமாறு கோரியது. புதிய நிர்வாகம், முந்தைய அரசின் தவறுதலான விலை உயர்ந்த மின் ஒப்பந்தத்தால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.

யூனுசின் தலைமை எரிசக்தி ஆலோசகர் முகமது கபீர் கான்,  தாங்கள் பொறுப்பேற்றதிலிருந்து கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.  மொத்தமாக 3.7 பில்லியன் டாலர்கள் கடனை செலுத்த வேண்டி உள்ளதாகவும், அதில் அதானிக்கு மட்டும் 492 மில்லியன் டாலர் வழங்க வேண்டியுள்ளது என்றும் கூறினார். ஆனால் அதானி கோரியது 800 மில்லியன் டாலர்கள். முரண்பாடு தொடர்கிறது.

 தொடரும்… 

  • குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here