அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான சட்டப்பேரவை தீர்மானம்: மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக நிற்கும் அக்மார்க் சங்கிகள் எச் ராஜா, அண்ணாமலை உள்ளிட்டோர் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு ஆதரவாகவே நிற்பார்கள்.

3

துரை அருகே உள்ள அரிட்டா‌ப்பட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனம் அமைக்க உள்ள டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மூலம் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான மனநிலையை கொண்டுள்ளது நிரூபணம் ஆகியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்கா அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 11 ஊர்கள் அடங்கிய பகுதியில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு அலை உருவானது.

இந்த சுரங்கம் அமைவதற்கு எதிராக அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம், தெற்கு தெரு, நரசிங்கம்பட்டி, புலிப்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளரிப்பட்டி, கிடாரிப்பட்டி, அமூர், சென்னகரம்பட்டி, கம்பூர், கேசம்பட்டி, கருங்காலப்பட்டி, அய்யாப்பட்டி, கச்சிராயன்பட்டி மற்றும் தும்பைப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில் டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கவிருந்தது கொலைகார நிறுவனமான ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜின்க் நிறுவனம் ஆகும். ஸ்டெர்லைட் ஆரம்பித்த தொடக்க காலத்தில் விழிப்புணர்வு இல்லாதிருந்த மக்கள் தற்போது ஸ்டெர்லைட் போராட்டம் மூலம் அனுபவம் பெற்று தொடக்கத்திலேயே பலமான எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கியுள்ளார்கள்.

ஸ்டெர்லைட்டில் விட்டதை டங்க்ஸ்டன் சுரங்கம் மூலம் பிடிக்க நினைக்கும் வேதாந்தா நிறுவனத்திற்கு பக்கபலமாய் நின்றது ஒன்றிய பாஜக. ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக நிற்கும் அக்மார்க் சங்கிகள் எச் ராஜா, அண்ணாமலை உள்ளிட்டோர் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு ஆதரவாகவே நிற்பார்கள். ஆனால் மக்களின் பலமான எதிர்ப்பின் காரணமாக நவ துவாரங்களையும் மூடிக் கொண்டுள்ளார்கள்.

அரிட்டாப்பட்டியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. அது மட்டுமல்லாமல் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி கல்வெட்டுகள், சமணப்படுகைகள் என தமிழர் பண்பாட்டை தாங்கி நிற்கும் பகுதியாகவும் அரிட்டாப்பட்டி உள்ளது. இவையெல்லாம் ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என மாநிலத்தின் தனித்துவத்தை அழிக்க நினைக்கும் பாசிச பாஜகவிற்கு ஒரு பொருட்டே இல்லை என்பதே உண்மை.


படிக்க: டங்ஸ்டன் வெட்ட வரும், வேதாந்தாவை விரட்டி அடிப்போம்!


கார்ப்பரேட்டுகள் கனிம வளங்களை எல்லையின்றி சுரண்டுவதற்கு ஏற்ப கொண்டு வரப்பட்டது தான் கனிம வளங்கள் திருத்தச் சட்டம் 2023 (The mines and minerals (development and regulation) amendment Bill 2023) ஜூலை 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு ஜூலை 28 அன்று நிறைவேற்றப்பட்டது. இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் இதை நிறைவேற்றியது அன்று மிருக பலத்துடன் இருந்த பாசிச பாஜக.

இன்று அரிட்டாபட்டியில் வேதாந்தா நுழைவதற்கு காரணமாக இருப்பதும் இந்த சட்ட திருத்தம் தான் இனிமேல் கனிமவள கொள்ளைக்கும் இதுவே காரணமாக இருக்க போகிறது. ஆனால் மக்கள் போராட்டத்தின் முன் அனைத்தும் மரித்துப் போகும் என்பதே ஸ்டெர்லைட் போராட்டம் அரசுக்கு தந்திருக்கும் அனுபவம்.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் கார்ப்பரேட் பக்கம் நின்றது திமுக அரசு. திமுக ஐடி விங்கோ முதலீடுகள் வராமல் போகும், தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் என்றெல்லாம் போராடும் தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தையும் குற்றவாளிகள் போல் சித்தரித்தது. இந்த செயலானது கார்ப்பரேட் கட்சியான திமுகவின் இயல்பு என்று பார்த்தாலும் இன்று டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு கொண்டு போனதும் “நான் உயிரோடு இருக்கும் வரை இத்திட்டத்தினை அமல்படுத்த விட மாட்டேன்” என்று முதல்வர் மு க ஸ்டாலின் கூறியதற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததுதான் முதன்மையான காரணம். ஆகையால் அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானம் மக்களின் வெற்றியே!

தமிழ்நாடு அரசு டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் போட்டாலும் மக்களின் தொடர் போராட்டத்தின் மூலமே வேதாந்தா முதலாளியையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக துணை நிற்கும் பாசிச பாஜகவையும் இம்மண்ணிலிருந்து துடைத்தெரிய முடியும்.

  • மாரிமுத்து

3 COMMENTS

  1. தோழர் மாரிமுத்துவின் கட்டுரை சிறப்பு! எத்தரணத்திலும் நாட்டில் மக்கள் ஒருவர் நடவடிக்கைகளை ஒன்றிய அரசோ அல்லது மாநில அரசு மேற்கொள்கின்ற பொழுது, மக்கள் திரளின் ஒன்றுபட்ட தீர்க்கமான போராட்டமே விடியலை தரும்! அந்த வகையில் சட்டமன்றத்தில் டங்ஸ்டன்
    தொடர்பான இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட – பாஜகவின் நைனார் நாகேந்திரன் உட்பட ஆதரித்து நிறைவேற்றப்பட – முழுமுதற் காரணமே மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அயிட்டாபட்டி சுற்றியுள்ள மக்களின் ஒன்று திரண்ட போராட்டமே காரணம்! இதனை தமிழ்நாட்டு பாஜக உணர்ந்ததால் தான், மக்கள் உணர்வுகளுக்கு தொடர்ச்சியாக நாம் மதிப்பு கொடுக்காமல், பயணிப்போமேயானால் தமிழ்நாட்டில் காவிக் கூட்டம் சுத்தமாக துடைத்தெறியப்படும் என்பதை நன்றாக உணர்ந்தே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனும் அவரது கட்சியின் பிற உறுப்பினர்களும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற ஒத்துழைப்பு நல்கினர் என்பதே உண்மை! இதில் அண்ணாமலையும், எச். ராஜாவும் மக்களுக்கு எதிரான கருத்துக்களை அறிவு கெட்ட தனமாக வெளிப்படுத்தி இருந்தாலும் அது ஒரு மனதான திருமணம் நிறைவேறியதன் மூலமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டும்! நான் மதுரையில் வசித்த காலத்தில் அரித்தாப்பட்டி உட்பட பல்வேறு வளங்கொழிக்கும் கிராமப் பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன். இப்படிப்பட்ட பகுதிகளை தேர்வு செய்து கார்ப்பரேட்டின் கை பானமான மோடி அரசு
    தாரை பார்க்க முனைந்து நிற்பதைக் கண்ணு றும்போது இவர்களை தனைக் கொண்டு அடித்து விரட்டலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது! கார்ப்பரேட்டுகளின் உறவினர்களான ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் மக்களின் இத்தகைய வீரம் செறிந்த போராட்டத்தின் காரணமாகவே இப்படிப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்து ஒரு மனதாக நிறைவேற்ற முன்வந்துள்ளது என்ற பேருண்மையையும்
    இணைத்தே கட்டுரையில் கருத்துக்களை முன் வைத்திருப்பது சாலச் சிறந்தது!! கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!

  2. தி மு க அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டேன் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளயது.
    ஆனால் இந்த கட்டுரையில் டங்ஸ்டன் சுரங்கம் நிறைவேற்றி விடுவேன் என்று வருகிறது. குழப்பத்தை ஏற்பாடுத்துகிறது. எழுத்து பிழை அதிகமாக உள்ளது.

  3. தி மு க அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டேன் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
    ஆனால் இந்த கட்டுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி விடுவேன் என்று வருகிறது. குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எழுத்து பிழை அதிகமாக உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here