1947 ஆகஸ்ட் 15 பெற்ற சுதந்திரத்தை போலியானது என்று வரையறுத்து உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டத்தை நடத்துவதற்கு மக்களை அணி திரட்டி வருகின்றன மார்க்சிய லெனினிய இயக்கங்கள்.
இந்தியாவில் பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்ற கம்யூனிச அமைப்புகள், இந்தியாவின் சமுதாய பொருளாதார கட்டமைப்பை புரிந்து கொள்வதிலேயே தவறிழைத்ததன் காரணமாக இந்தியாவில் புரட்சி தள்ளி போடப்பட்டு கொண்டே செல்கிறது.
இந்தியாவில் பிரிட்டன் காலனியாதிக்கத்தின் போது ரஷ்ய புரட்சியின் விளைவாக உருவெடுத்த இந்திய கம்யூனிச இயக்கம் 1925 ஆம் ஆண்டு துவங்கியது. கம்யூனிச இயக்கம் துவங்கிய காலத்திலிருந்து இந்தியாவின் சமூக பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்து அதற்கு பொருத்தமான கட்சி திட்டத்தை வகுத்து மக்களை புரட்சிக்கு அணிதிரட்டுவதில் தவறிழைத்தது.
1925 இல் உருவான இந்திய பொதுவுடைமைக் கட்சி, 1964-ளில் உருவான இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவை இந்தியாவின் சமுதாய, பொருளாதார நிலைமைகளை தவறாக அவதானித்து நிலவுகின்ற சமூக அமைப்பிற்குள்ளேயே மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று கருதினார்கள்.
”இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் தொடக்கக் காலத்தில் இருந்தே இந்தியப் புரட்சி எந்தப் பாதையை மேற்கொள்வது, ரஷ்யப் பாதையா, சீனப் பாதையா என்கிற அரசியல், சித்தாந்த விவாதங்கள் நடந்து வந்திருக்கின்றன. இந்தியாவின் சமூகப் பொருளாதார, அரசியல் நிலைமைகளையும் ரஷ்யா மற்றும் சீனத்தின் புரட்சிக்கு முந்திய நிலைமைகளையும் ஒப்பீடு செய்து புரட்சிப் பாதையைத் தெரிவு செய்வதற்கான வாதப்பிரதிவாதங்களை பல ஆண்டுகளாக ஒருபுறம் நடத்திக் கொண்டிருந்தபோதே, மறுபுறம் காந்திய காங்கிரசைச் சார்ந்து செயல்படும் சந்தர்ப்பவாதப் பாதையையே தொடர்ந்து போலி கம்யூனிஸ்டுகள் பின்பற்றி வந்தார்கள்.
1940-களின் பிற்பகுதியில் சீனப் பாதையை மேற்கொள்வதாகக் கருதி நடந்த மாபெரும் தெலுங்கானா உழவர் புரட்சிக்குப் போலி கம்யூனிஸ்டு தலைவர்கள் துரோகமிழைத்தனர். 1950-களின் ஆரம்பத்தில் ரஷ்யப் புரட்சிப் பாதையை மேற்கொள்வதாகக் கருதி நடத்திய பொதுவேலைநிறுத்தங்களும் நகர்ப்புற எழுச்சிகளும் கடுமையாக ஒடுக்கப்பட்டன. இரண்டு முயற்சிகளுமே கம்யூனிச இயக்கத்துக்குப் பெரும் பின்னடைவையும் பேரிழப்பையும் கொண்டு வந்தன.
1950-களின் மத்தியில், குருச்சேவ் கும்பல் சோவியத் ஒன்றியத்தின் கட்சி மற்றும் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, இந்தியா போன்ற நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய முதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவமற்ற, அமைதி வழிப் பாதையிலேயே சோசலிச சமுதாயத்தை அமைக்கும் திருத்தல்வாதம் முன்வைக்கப்பட்டது. இதை எதிர்ப்பதாகவும் மாவோ தலைமையிலான சீனத்தின் புரட்சிகர நிலைப்பாடுகளை ஆதரிப்பதாகவும் நாடகமாடிக் கொண்டு உருவான போலி மார்க்சிஸ்ட் கட்சி, பிறகு தானும் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்தில் மூழ்கி அரசு அதிகாரத்தில் பங்கேற்றது நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியை எதிர்த்து ஒடுக்குவது என்ற நிகழ்ச்சிப் போக்கில் அது புரட்சிப் பம்மாத்துக்களைக் கைவிட்டு, இன்னொரு திருத்தல்வாதக் கட்சியாகத் தன்னை அக்கட்சி அடையாளங்காட்டியது
ஆனாலும், இந்தியப் புரட்சிப் பாதை, ரஷ்யப் புரட்சிப் பாணியிலானதோ சீனப் புரட்சிப் பாணியிலானதோ அல்ல; இரண்டும் இணைந்த, இந்திய நிலைமைகளுக்கான புதிய பாணியிலானது. அதாவது கிராமப்புறங்களில் கொரில்லாப் போராட்டங்களும் நகர்ப்புறங்களில் ஆயுதந்தாங்கிய எழுச்சிகளும் கொண்டது என்று ஆரம்பத்தில் புரட்சிச் சவடால் அடித்தது. பின்னாளில், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராடுவது என்று மாற்றிக் கொண்டது. இவ்வாறு தான் கண்டுபிடித்ததாகப் பம்மாத்து செய்த “இந்தியப் புரட்சிப் பாதையை” போலி மார்க்சிஸ்ட் கட்சி மேலும் பருண்மையாக்கி, செயல்படுத்த ஒருபோதும் முயன்றதில்லை. இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கூட்டணி அரசுகளைத் தேர்தல்கள் மூலம் அமைப்பதே இலட்சியமாக இறுதியில் மாற்றிக் கொண்டு, இரு போலி கம்யூனிஸ்டு கட்சிகளிடையே நிலவிய பெயரளவிலான வேறுபாடுகளையும் நீக்கிக் கொண்டு விட்டது.”
ஆனால் இந்தியாவின் சமுதாய பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்து ஆயுதந்தாங்கிய எழுச்சியின் மூலமாகவே புரட்சியை நடத்த முடியும்; அது புதிய ஜனநாயக புரட்சியாக, சோசலிசத்திற்கு ஒரு இடைகட்டமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை முன்வைத்த மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் அதனை நிறைவேற்றுவதற்கு பொருத்தமான போர்தந்திரங்களையும், செயல் தந்திரங்களையும் வகுப்பதில் தவறிழைத்தது.
”போலி மார்க்சிஸ்ட் கட்சிக்குள் இருந்தபோதும், அதிலிருந்து வெளியேறிய பிறகும் மார்க்சிய-லெனினியப் புரட்சியாளர்கள் நடத்திய அரசியல் சித்தாந்தப் போராட்டங்கள் இந்தியப் புரட்சிப் பாதை ரஷ்யப் பாதையா, சீனப் பாதையா என்ற விவாதத்துக்கு முடிவு கட்டுவதாகவும், சீனப் பாதையே பொருத்தமானதென்று நிலைநாட்டுவதாகவும் அமைந்தது. புரட்சிக்கு முந்தைய சீனத்தைப் போலவே இந்தியாவும் ஏற்றத்தாழ்வான, பின்தங்கிய சமுதாய பொருளாதார அமைப்பு கொண்ட அரை காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடு என்பதால் இந்தியப் புரட்சியின் கட்டம், தன்மை, சாரம், எதிரிகள், வர்க்க சேர்க்கை, வர்க்க முரண்பாடுகள் ஆகியவற்றில் ஒத்ததாக உள்ளது. இதனால் மாவோவின் நீண்டகால மக்கள் யுத்தப்பாதையே இந்தியாவுக்குப் பொருத்தமானது என்று கொள்ளப்பட்டது.
படிக்க:
♦ ஆகஸ்டு 15: கார்ப்பரேட்டுகள் காலடியில் சுதந்திரம்.
♦ ஆகஸ்டு 15 சுதந்திரம் யாருக்காக? மக்கள் அதிகாரம் திருச்சி ரயில் நிலையம் முற்றுகை!
மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையின் போதனைகளைக் கிரகிப்பதும், புரட்சி வெற்றிபெற்ற நாடுகளின் அனுபவங்களைத் தொகுத்துக் கற்பதும் அவற்றை இந்திய நிலைமைகளுக்குப் பொருத்தி புரட்சிப் பாதையை வகுத்து வழிநடத்துவதும் சரியானதுதான். இதன் பொருள் அந்நாடுகளின் நிலைமைகளோடு இந்திய நிலைமைகளை ஒப்பீடு செய்வதும் இணையான முடிவுகள் எடுப்பதும் அல்ல. அப்படி செய்வது மார்க்சிய-லெனினிய அணுகுமுறைக்கும் செயல்முறைக்கும் மாறானது, எதிரானது. உண்மையில் முதலாளியச் சிந்தனை முறையாகும். மார்க்சியம் என்பது உயிரோட்டமானது; காலத்தாலும் இடத்தாலும் பருண்மையான நிலைமைகளாலும் வளர்ந்து கொண்டேயிருக்கும். இந்த உண்மையைக் காண மறுத்து இந்தியப் புரட்சிப் பாதையும், வளர்ச்சிப் போக்கும் சீனப் பாதையின் மறுபிரதியாகவே இருக்கும் என்ற தவ றான பார்வையும், சீனப் புரட்சியோடு ஒப்பீடு செய்து, இணையான முடிவுகள் எடுக்கும் தவறான அணுகுமுறையும் செயல்முறையும் அடங்கிய “நோய்” மார்க்சிய- லெனினிய இயக்கத்தின் ஆரம்ப நிலையிலேயே தொற்றிக்கொண்டது.”
சீன நிலைமைகளின் சாதகமான அம்சம், “ஆயுதந்தாங்கிய புரட்சி, ஆயுதந்தாங்கிய எதிர்ப்புரட்சியுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது” என்று ஸ்டாலினும், மாவோவும் கூறினர். ஆனால், 1960-களின் இறுதியிலேயே, புரட்சிப் படையோ, புரட்சிப் போரோ இல்லாதபோதே, அவ்வாறான நிலைமை இந்தியாவில் நிலவுவதாக சாருமஜூம்தார் தலைமையிலான இடது சந்தர்ப்பவாதிகள் கற்பித்துக் கொண்டனர். நீண்டகால மக்கள் யுத்தப் பாதையை மேற்கொண்ட சீனப் புரட்சியில், ஆயுதப் போராட்டமே முதன்மையான போராட்ட வடிவமாகவும், ஆயுதந்தாங்கிய படையே முதன்மையான அமைப்பு வடிவமாகவும் ஆரம்பம் முதலே அமைந்தது; புரட்சியின் முதற்கட்டத்தில் கொரில்லாப் போர்முறையே முதன்மையாகவும், இரண்டாவது கட்டத்தில் கொரில்லாப் போர்முறையும் கிரமமான போர்முறையும் சமநிலையிலும், மூன்றாவது கட்டத்தில் கிரமமான போர்முறை முதன்மையாகவும், கொரில்லாப் போர்முறை இரண்டாம் நிலையிலும் இருந்தன. சொந்தமான படைகளைக் கொண்ட யுத்தப் பிரபுக்களிடையே அரசியல் அதிகாரத்துக்கான போர்கள் எப்போதும் நிலவின. ஆயுதந்தாங்கிய படைகளைக் கொண்டிராத, போர்களில் ஈடுபடாத வர்க்கங்களோ, கட்சிகளோ பெரும்பாலும் இல்லை, இதிலிருந்து “துப்பாக்கிக் குழாயில் இருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்றார், மாவோ.
சீனப் புரட்சியின் ஆரம்பக் காலகட்டத்தில் மையப்படுத்தப்பட்ட அரசு எந்திரம் கிடையாது, யுத்தப் பிரபுக்களிடையே பிளவுபட்ட, போரிட்டுக் கொண்டிருந்த வட்டார, பிராந்திய அரசு அதிகாரங்கள் நிலவின; ஜனநாயக அரசு அமைப்புகள் கிடையாது: அரசியலும் போரும் இணைந்தே இருந்தன. நாடாளுமன்ற அரசியல் அமைப்புகளும், சீர்திருத்தவாத நடவடிக்கைகளும் கிடையாது. இந்த நிலைமைகளுக்கு மாறாக, இந்தியாவில் காலனிய காலத்திலேயே (விக்டோரிய சாசனத்தின் மூலம்) கிராமம் முதல் நாடு தழுவிய அளவு மையப்படுத்தப்பட்ட அரசு அதிகார அமைப்புகளும் நிறுவப்பட்டன. பின்னர் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளூராட்சி அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் சீர்திருத்தவாத நடவடிக்கைகளும் இருந்து வந்தன. நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியின் போது, தொடர்ந்து மார்க்சிய-லெனினிய அமைப்பு துவங்கப்பட்டபோதோ கிரமமான கட்சி அமைப்பு, படை, ஐக்கிய முன்னணி ஆகிய புரட்சிக்கான மூன்று முக்கிய ஆயுதங்களைப் பெற்றிருக்கவில்லை.
(தொடரும்…)
மருது பாண்டியன்.