நேற்று காலை பிரதமர் மோடி டெல்லி கோட்டைக் கொத்தளத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் திருச்சியில் ரயில் நிலைய வளாகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தது போலீசு படை. மக்கள் அதிகாரத்தின் முற்றுகைப் போராட்டத்தைக் காரணம் காட்டி, ரயில் நிலையத்தின் வாயிலை மறித்து நின்றது.

பொகாசஸ் உளவு நிறுவனத்தின் மூலம் உளவு பார்த்தது போதாது என்று திருச்சியில் நேரடி உளவுகளின் மூலம் போராடுபவர்களின் தகவல்களை திரட்டிக் கொண்டு இருந்தது. ஆங்காங்கே சாதாரண உடையில் மத்திய, மாநில உளவுப் பிரிவு, கியூ பிரிவு போலீசார் அந்தப் பகுதியையே தங்களது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்திருந்தனர்.. வருவோர் போவோரை சோதனை என்ற பெயரில் மிரட்டியபடி இருந்த நிலையில் மக்களுக்கான சுதந்திரம் நடமாடும் உரிமைகள் கூட இல்லாமல் அங்கு பல்லிளித்துக் கொண்டிருந்தது.

சுதந்திரத்தின் மானத்தை போலீசு வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில், லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தில் மோடியே பதவி விலகு என்ற பதாகை, மோடிக்கு வாழ்த்துச் செய்தியாக லண்டன் வாழ் இந்திய மக்கள் தொங்க விட்டிருந்தனர். ஏற்கனவே சர்வதேச ஊடங்கள் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து காறித் துப்பிய நிலையில், இந்த ‘சுதந்திர’ தினத்தில் லண்டன் வாழ் மக்களும் சிறப்பாக கரியைப் பூசியுள்ளனர் மோடி முகத்தில்.

இப்படிப்பட்ட ‘சுதந்திர தின’ சம்பவங்கள் நடந்து கொண்டிருந்த் நிலையில், ரயில் நிலையத்திற்குச் சற்றே தள்ளியுள்ள ஒரு மைதானத்தில் தட்டி தயாரிப்பது போன்ற முற்றுகைக்கான ஏற்பாட்டு வேலைகளைத் தொண்டர்கள் செய்து கொண்டிருந்தனர். போராட்டம் மக்களின் கவனத்தை பெற ஆரம்பித்தது.

காலை முதலே பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என குடும்ப சகிதமாக தோழர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என கூட ஆரம்பித்தனர். நேரம் செல்லச் செல்ல சாரை சாரையாக போராட்ட திடலுக்கு சுமார் ஆயிரம் பேர் வரை திரண்டனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை போராட்ட மைதானத்தில் நங்கூரமிட்டபடி நின்றிருந்தனர். இள வயது தோழர் ஒருவர், முற்றுகைக்கான பிரசுரத்தை பரபரப்பாக தோழர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் சளைக்காமல் விநியோகித்துக் கொண்டிருந்தார்.

சரியாக காலை 11.00 மணிக்கு, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு தோழர்களின் பறையிசை விண்ணதிர முழங்க, அதனூடே அந்த இசையினைக் கிழித்து எழுந்தது, தோழர்களின் முழக்கம், “யாருக்கடா சுதந்திரம், கார்ப்பரேட்டுக்கள் கொள்ளையடிக்க ஆகஸ்டு 15 சுதந்திரம்.” என போலிச் சுதந்திரத்தின் அவலங்களை திரை கிழித்தது.

முற்றுகைப் போராட்டத்தை மக்கள் அதிகாரத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் தலைமை தாங்கினார். “ஒட்டுமொத்த நாட்டையும், நாட்டின் சொத்துக்களையும், கார்ப்பரேட்டுக்களுக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது மோடி கும்பல். உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களாக, மனித உரிமைச் செயல்பாட்டாளர்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளோரை, பொய் வழக்கில் சிறையில் தள்ளி ஆண்டுக்கணக்கில் சித்திரவரை செய்து வருகிறது. அதில் மலைவாழ் – பழங்குடி மக்கள் உரிமைகளுக்காகப் போராடிய ஸ்டேன்ஸ் சாமிக்கு மருத்துவ உதவியை மறுத்து சிறையிலேயே படுகொலை செய்தது. இப்படிப்பட்ட நாட்டில் இந்த சுதந்திரம் யாருக்கானது? இன்று நாடே மிகப் பெரும் அபாயத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது அதைத் தடுக்கவில்லை என்றால்  அடக்குமுறைகளின் அடுத்த குறி நாமாவோம்” என எச்சரிக்கை விடுத்து மக்களை போராட அறைகூவினார்.

மக்கள் அதிகாரத்தின் முற்றுகைப் போராட்டத்தை ஆதரித்தும், வாழ்த்தியும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், சமூக நீதிப் பேரவை, திராவிடர் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள், ஆதரவாளர்கள், தோழமை அமைப்பினர் பேசினர்.

அதில் பேசிய பலரும், ஆக-15 சுதந்திர தினத்தன்று இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய ஒரு அவலமான நிலையில் தான் நாடே இருக்கிறது. அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். மாறாக, சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்றனர்.

அனைத்து ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் தோழர் சம்சுதீன், “போராடும் அமைப்புத் தோழர்கள், ஜனநாயக உணர்வாளர்களை, ஆண்டி இந்தியன், அர்பன் நக்சல் என்று அவதூறு செய்கிறது பாஜக கும்பல். உரிமைக்காகப் போராடுபவர்களை, நக்சல் என்று சொன்னால், அதற்காகப் பயப்பட மாட்டோம். மக்கள் உரிமைகளைக் காக்கும் நான் நக்சல் தான் என்பதில் பெருமை கொள்வோம்,” என்றார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் வாஞ்சிநாதன் தனது உரையில், “எந்தவொரு மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பதற்கும் நீண்ட நெடிய போராட்டம் அவசியம். ஸ்டெர்லைட் போராட்டம் உட்பட பல போராட்டங்களை நாம் சொல்லலாம். இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது நிறைவேறியுள்ளது என்றால், அதற்காக, வீதி வீதியாக பிரச்சாரம் செய்து, பல்வேறு முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் ஆதரவைத் திரட்டி, சட்ட ரீதியாகவும், மக்கள் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி சாதித்திருக்கிறோம். அப்படிப்பட்ட மக்கள் போராட்டங்கள் மூலம் தான் நாம் கார்ப்பரேட் காவி பாசிசத்தை ஒழித்து, உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்.” என்றார்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன், “தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டு இருக்கின்ற உரிமைகளும் பறிபோகும் நிலையில் தொழிலாளர்கள் மேலும் மேலும் கொத்தடிமைகளாக மாறும் நாட்டில் தொழிலாளருக்கு மட்டும் ஏது சுதந்திரம்? மோடி அரசு கொண்டு வரும் என்.ஐ.ஏ. உள்ளிட்ட அமைப்புக்களால், போலிசாருக்கும் வேலை இல்லாத சூழல் இருக்கிறது. எனவே, நீங்களும் இங்கே வந்து நிற்க வேண்டியவர்கள் தான். அதற்கான நேரம் விரைவில் வரும். இந்தப் போராட்டம் உங்களுக்காகவும் சேர்த்துத் தான்.” என தொழிலாளி வர்க்கம் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.

புரட்சிகர மாணவ இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அன்பு, “மோடியின் ஆட்சியில் மாணவர்களுக்கு மட்டும் ஏது சுதந்திரம். தனது மதவெறி, மூடநம்பிக்கைகளையும், பகுத்தறிவு குறித்த அவதூறுகளையும் மெல்ல மெல்லப்  பாடங்களாக்கி புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கார்ப்பரேட் அடிமைகளைத் தயாரிக்கும் வகையில் கல்வி மாற்றப்பட்டு வருகிறது. உண்மையான சுதந்திரம், உரிமை பெற வேண்டும் எனில் கார்ப்பரேட்- காவி பாசிசத்தை அடித்து நொறுக்கும் போது மட்டுமே முடியும்.” என்றார்.

நிறைவுரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, “இந்தப் படங்களில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட அறிவுஜீவிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், மோடியைக் கொல்ல சதி செய்ததாக பொய்யான செய்தியைப் பரப்பி, தேசத்துரோக வழக்கில் அவர்களை சிறையில் அடைத்து, மருத்துவ காரணங்களுக்குக் கூட பிணை மறுத்து, சிறையிலேயே சித்திரவதைச் செய்து வருகிறது. பிரிட்டி கால ரௌலட் சட்டம் தான் இந்த தேசதுரோக சட்டம். இவர்கள் மட்டுமல்ல, ஸ்டெர்லைட் பிரச்சினையில் போராடியதற்காக, பிரசுரம் கொடுத்ததற்காக நமது தோழர்கள் மீது அதே வழக்கு உள்ளது. எனவே, எங்கோ உள்ள அறிவுத்துறையினர் மட்டுமல்ல. நாளை ஒவ்வொருவரும் நமக்கான உரிமைகளைக் கேட்கும் போது நமக்கும் அதே நிலை தான். எனவே, இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் போது மட்டுமே அவற்றை வீழ்த்த முடியும். அதற்காக ஒவ்வொருவரும் வீதியில் இறாங்க வேண்டும்.” என மக்களை அறைகூவி அழைத்தார்.

அதன் பின், ரயில் நிலையத்தை நோக்கி பேரணியாக நகர்ந்தது. தோழர்களது முழக்கங்கள் தெறிக்க முன்னேறிய பேரணி, ரயில் நிலையத்தை முற்றுகை இட்டது. முன்னதாக ரயில் நிலைய வாயிலை தடுப்பரண்களைப் போட்டு முற்றிலுமாக போலிசு அடைத்திருந்ததது. போலிசு தடுத்ததால், தள்ளு முள்ளூ ஏற்பட்டு தோழர்கள் அனைவரையும் கைது செய்தது.

கைதான தோழர்களை, ஒரே மண்டபத்தில் அடைத்து வைக்க எண்ணியிருந்தது போலிசு. ஆனால, கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகமானதால், அதற்குப் பிறகு,  ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்தது.

மண்டபத்தில் தோழர்கள் வழக்கமான் உற்சாகத்துடன், பாடல், நாடகம், உரை என கைது நிகழ்ச்சியை, அரங்க நிகழ்ச்சியாக போலிசாரின் செலவிலேயே சிறப்பாக நடத்தி முடித்தனர். மாலை 06.00 மணி வரை நிகழ்ச்சிக்கள் தொடர்ந்த வண்ணம் இருந்த்து. நிகழ்ச்சிகள் முடிவடைவதற்கு முன்பே தோழர்களை விடுவிப்பதாக போலீசு அறிவித்ததால், செலவின்றி அரங்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொடுத்த போலீசுக்கு நன்றி சொல்லி நிகழ்ச்சி முடிக்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மக்கள் திரள் போராட்டங்களை முடக்கி வைத்திருந்த ’கொரானா கிருமிகளுக்கு’ சவால் விடும் வகையில் போராட்டம் அமைந்திருந்தது.

ஆகஸ்டு சுதந்திரம், மக்களுக்கு அல்ல; அது கார்ப்பரேட்டுக்களுக்கே!

உண்மையான சுதந்திரம், கார்ப்பரேட் – காவி பாசிசத்தை ஒழிக்கும் போது மட்டுமல்ல! போலி ஜனநாயக அரசு கட்டமைப்பை அடித்து நொறுக்கும் போதுதான் உணர முடியும் என்பதற்கான அறைகூவலாக முற்றுகைப் போராட்டம் அமைந்தது.

 செய்தி தொகுப்பு

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுச்சேரி. 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here