1985 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் துகள்களை (பாலிமர்) சேகரித்தும், இறக்குமதி செய்தும் விற்பனை செய்கின்ற நிறுவனமாக செயல்பட்டு வந்த அதானி கம்பெனி, 1988 ஆம் ஆண்டு அதானி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை துவங்கி அதானி குழுமமாக உருவானது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அதானி குழுமம் விவசாயம், வீட்டு சமையல் பொருட்கள், தொழில்துறை, சுரங்கங்கள், ரயில்வே, விமான போக்குவரத்து, மின் உற்பத்தி, எரிசக்தி, துறைமுகங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் என அனைத்து துறைகளிலும் கால் பதித்துள்ளது.

2001 ஆம் ஆண்டு குஜராத்தில் முதல்வரான நரேந்திர மோடியுடன் இணைந்து கொண்ட அதானி ஆர்எஸ்எஸ்-மோடியின் குஜராத் வன்முறைக்கு எதிராக முணுமுணுத்த இந்திய தொழில்களின் கூட்டமைப்புக்கு (CII) போட்டியாக ஒன்றை உருவாக்க போவதாக அறிவித்ததன் மூலம் பிரபலமானார்.

2014-ல் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 8.42  பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மோடியின் ஆட்சியின் 8 ஆண்டுக்கால இடைவெளியிலேயே 2022 ஆம் ஆண்டு 206 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.  இன்றைய தேதியில் அவரது சொத்து மதிப்பு 1,617 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

அதானி என்ற தரகு முதலாளி, படிப்படியாக தேசங்கடந்த தரகு முதலாளியாக மாறி ஆஸ்திரேலியாவின் லிங்க் எனர்ஜி நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள சுரங்கங்களையும், இந்தோனேசியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள், ரயில்வே போக்குவரத்துகளையும், மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக இஸ்ரேலில் உள்ள ஹைபா போன்ற துறைமுகங்களையும், ஆப்பிரிக்காவில் உள்ள விமான நிலையங்கள், கனிம சுரங்கங்களையும் கட்டுப்படுத்த துவங்கிய போது திடீரென்று பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்ற ’நல்ல முதலாளி’ என்று அவரை உச்சி முகந்தார்கள்.

30-35 ஆண்டுகளுக்கு முன்பு பொதுத்துறை நிறுவனத்திலோ அல்லது தனியார் நிறுவனத்திலோ தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்த ஒரு தொழிலாளி தற்போது தான் ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருப்பார். இந்த 30-35 ஆண்டுகளில் அவர் தனது இரத்தம், வியர்வையை சிந்தி சம்பாதித்த தொகை, ஓய்வு மூலம் அவர் பெறப்போகின்ற தொகை ஆகியவற்றை சேர்த்தால் அதிகபட்சம் ஒரு கோடிக்கு மேல் செல்லாது.

சரி தொழிலாளர்களின் நிலைமை தான் இவ்வாறு இருக்கிறது என்று எடுத்துக் கொண்டால் தனக்கென்று குறைந்தபட்சம் சில ஏக்கர்கள் நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயத்தை செய்து வருகின்ற விவசாயிகள் கடந்த 30-35 ஆண்டுகளில் தனது வயல்களில் நெல் அல்லது கோதுமை, காய்கறிப் பயிர்கள், நவதானியங்கள் அல்லது பணப்பயிர்கள் உள்ளிட்டு எதனை பயிர் செய்திருந்தாலும் அதிகபட்சம் அவர்களது வருமானம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தாண்டி இருக்காது

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நிலைமை தான் இப்படி இருக்கிறது என்று எடுத்துக் கொண்டால் சொந்தமாக தொழில் நடத்துகின்ற பிசினஸ்மேன்கள் என்று அழைத்துக் கொள்ளும் வர்த்தகர்களின் நிலைமையை கணக்கில் எடுத்துக் கொண்டால் 30-35 ஆண்டுகளாக எந்த பிசினஸ் செய்திருந்தாலும் அவர் அதிகபட்சம் 1-2 கோடிகளைத் தாண்டி சொந்த சொத்து உள்ளவராக ஒருபோதும் மாறி இருக்கவே முடியாது.  இதுவும் கூட விதிவிலக்குகள் தான்.

ஆனால் கௌதம் அதானியோ 30-35 ஆண்டுகளில் இந்தியாவில் முதல் வரிசை பணக்காரராக மாறியது மட்டுமின்றி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றார்.

கௌதம் அதானி திடீரென இவ்வாறு வளர்ந்ததற்கும், அவருக்கும் இந்திய ஒன்றியத்தின் பிரதமாரான மோடிக்கும் உள்ள தொடர்பு; அவருக்கும் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு உள்ள தொடர்பு போன்றவற்றுக்கும் எந்த விதமான உள் நோக்கமோ, மோசடிளோ இல்லை என்பதை நம்பச் சொல்கின்றனர் ஆர்எஸ்எஸ் பாஜகவின் ஊது குழல்களான கோடி மீடியாக்கள்.

ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் முதல் முறையாக அதானி அம்பலமானபோது பல்லாயிரம் கோடிகளை பங்கு சந்தையில் இழந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.  தற்போது ஹிண்டன்பர்க் இரண்டாவது முறையாக செபியின் இயக்குனரான மாதபி பூரி புச் அதானியின் நலனுக்காக செயல்பட்டார் என்று அம்பலப்படுத்தியவுடன் பங்கு சந்தையில் அவரது பங்குகள் வீழ்ச்சி அடையவில்லை என்பதாலேயே ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று குதூகலிக்கிறது இந்து தமிழ் திசை நாளேடு.

கடந்த இரண்டு நாட்களாக பங்கு சந்தையில் ஒட்டுமொத்தமாக வீழ்ச்சி இல்லை என்றாலும் அதானி குழுமங்களின் பங்கு சந்தை 5 முதல் 6 சதவீதம் (சுமார் 56,000 கோடி) வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதைத்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் வந்த ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மை தன்மையை விசாரிப்பதற்கு செபியை நியமித்தனர். செபியின் இயக்குனருக்கும் அதானிக்கும் உள்ள உறவை விசாரிப்பதற்கு யாரை நியமிப்பார்கள் என்று தெரியவில்லை. ’வேலிக்கு ஓணான் சாட்சி’ என்பதை போல திருடர்கள் கையில் சாவியை கொடுத்துவிட்டு உண்மையை வெளிப்படுத்துவார்கள் என்று ஏமாந்து காத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு அமெரிக்காவின் பங்கு சந்தை சூதாடியான ஜார்ஜ் சோரஸ் நிதி உதவி அளிக்கின்றார் என்றும், அவர் இந்தியாவின் பங்கு சந்தையை வீழ்ச்சி அடைய செய்வதற்கும், இந்தியாவில் ஆளுகின்ற கட்சியை தூக்கி எறிந்து தனக்கு விசுவாசமான கட்சியை கொண்டு வருவதற்கு உதவி செய்கின்றார் என்றும், அவரது கையாள்தான் ராகுல் காந்தி என்று  பகிரங்கமாக குற்றம் சுமத்துகின்றார் ஆர்எஸ்எஸ்காரரும், பாஜகவின் வழக்கறிஞருமான திருவாளர் ரவி ஷங்கர் பிரசாத்.

இவ்வாறு தரகு முதலாளிகள், அரசியல் கட்சிகளின் ஊழல்கள் அம்பலமாகின்ற போது ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டு, ஊழல்களை மறைப்பதில் போட்டி போட்டு போடுவது பற்றி ஏற்கனவே இந்த கட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது என்பதை 2015 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டு இருந்தது புதிய ஜனநாயகம் உள்ளிட்ட அமைப்புகள்.

”இவர்கள் இப்போது ஒரு புது அரசியல் கலாச்சாரத்தை பரப்பி வருகிறார்கள். இவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் புகார்கள் வந்தால், அவை அரசியல் அவதூறுகள் என்றும், தண்டிக்கப்பட்டால் அவ்வாறு செய்வது அரசியல் சதிகள்; சூழ்ச்சிகள்; அரசியல் பழிவாங்குதல்கள் என்றும் கூறி கூலிப்படையை வைத்து போராட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள்.

அம்பானி, அதானி, மிட்டல், பிர்லா, டாட்டா ஜின்டால் போன்ற பெரும் தரகு முதலாளிகளோ அரசு பொது சொத்துக்களை கொள்ளையடித்து பலவித மோசடிகளில் ஈடுபட்டும், பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் கருப்பு பணத்தை அந்நிய நாட்டு வங்கிகளில் குவித்து வைத்து ஹவாலா மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். சட்ட முறைப்படியான நடவடிக்கைகள் எடுத்தால் முதலீடுகளை முடக்கி விடுவதாக மிரட்டுகிறார்கள்”. (கட்டமைப்பு நெருக்கடி குறித்த ஆவணம்)

படிக்க:

♦  ஹிண்டன்பர்க் இரண்டாம் அறிக்கை: செபியின் தலைவர்- அதானி- மோடி கும்பலின் மோசடி அம்பலம்!

 பங்கு சந்தையில் 32 லட்சம் கோடி இழப்பு! யாருக்கு லாபம்?

நாட்டின் சொத்துக்களை சூறையாடி கொழுத்துக் கொண்டுள்ள தேசங்கடந்த தரகு முதலாளிகளின் ஊழல்களை அம்பலப்படுத்தினால் பாஜகவின் அண்ணாமலை முதல் ரவி ஷங்கர் வரையிலான அரசியல் கட்சி தலைவர்களுக்கு வியர்கின்றது; அவர்களின் ஆதரவு ஊடகங்களுக்கோ மனம் பதைபதைக்கின்றது.

30-35 ஆண்டுகளில் சொந்த வாழ்க்கையில் அதிகபட்சம் ஒரு வீடு, தனது வாரிசுகளுக்கு கல்வி மற்றும் திருமணம் போன்றவற்றை தவிர வேறு எதையுமே சிந்தித்துப் பார்க்க முடியாத கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளிகள் கொண்ட நாட்டில் பல லட்சம் கோடி ரூபாய்களை சுருட்டிய ஒரு தொழிலதிபரை பற்றி நாடு முழுவதும் விவாதம் நடப்பதில்லை.

தனது வீட்டு சமையல் எண்ணெய் முதல் தான் பயன்படுத்துகின்ற அனைத்து பொருள்களிலும், தான் பயன்படுத்துகின்ற போக்குவரத்தையும், தான் பயன்படுத்துகின்ற மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அனைத்தையும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களையும் கட்டுப்படுத்துகின்ற தரகு முதலாளி கடைந்தெடுத்த அயோக்கியன் என்பது பகிரங்கமாக அம்பலமான பிறகும், அதனை வெளியில் எடுத்துச் செல்வதற்கு செய்திகள் கிடைத்த பிறகும், பாட்டாளி வர்க்கம் மௌனமாக வேடிக்கை பார்க்கின்ற மனநிலையை உருவாக்குவதில் பாசிச பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பது தான் அவமானகரமான சூழலாகும். ஆனால் இதனை இப்படியே அனுமதிக்கக் கூடாது.

”தேசத்தின் சொத்துக்களை சூறையாடிய அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்! அதானியின் மோசடிகளுக்கு துணை நின்ற செபியின் மாதபி பூரி புச் முதல் அதிகார வர்க்கம் அனைவரையும் கைது செய்து சிறையிலடை! அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்!” என்று இயக்கத்தை நடத்தி பொதுமக்களில் மௌனத்தை உடைக்க வேண்டியது பாட்டாளி வர்க்கத்தின் பொறுப்பாகும்.

  • மாசாணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here