1947 இல் இந்தியா பெற்ற போலி சுதந்திரம் நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள் மற்றும் புதிதாக வளர்ந்து வந்த தொழிலாளி வர்க்கம் ஆகியவற்றிற்கு சேவை செய்வதை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டிய தேவை இருந்தது.

இந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்டுகள் குறிப்பாக தற்போது இந்திய பொதுவுடைமைக் கட்சி என்று அழைக்கப்படும் சிபிஐ கட்சி இந்தியாவிற்கு பொருத்தமான திட்டம் என்று 1948 ஆம் ஆண்டு ஒரு திட்டத்தை முன் வைத்தது. இந்தத் திட்டம் சீனாவில் புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட சீன சமுதாயத்தை முன்னெடுத்துக் கொண்டு செல்வதில் தோழர் மாசேதுங்கால் முன்வைக்கப்பட்ட விவசாயத்திற்கு முன்னுரிமை, லேசுரக எந்திரங்களுக்கு இரண்டாம் முன்னுரிமை, கனரக இயந்திரங்களுக்கு மூன்றாம் முன்னுரிமை என்ற அடிப்படையிலான திட்டத்தை முன் வைத்தது. அப்போதைய கட்சியின் செயலரான P.T.ரணதிவே முன் வைத்த இந்த திட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் ’முன்னோடிகளாலேயே’ நிராகரிக்கப்பட்டது. ரணதிவே ’இடது சாகசவாதி’ என புறக்கணிக்கப்பட்டார்.

பிரிட்டன் காலனியாதிக்கத்திற்கு பிறகு அதிகாரத்திற்கு வந்த இந்திய தரகு அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் ஆகியவர்களின் சொத்துடமையை பாதுகாக்கின்ற வகையிலும் அவர்களுக்கு சேவை செய்கின்ற வகையிலும் பொருளாதாரக் கொள்கையை தீர்மானித்தது காங்கிரசு. அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட போது முன்வைக்கப்பட்ட அமைப்புதான் திட்ட கமிஷன்.

இந்திய திட்டக் கமிஷன் என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய ஒன்றிய அரசின் ஒரு அமைப்பாகும். இந்த திட்ட கமிஷனில் பிரதமர் தலைவராகவும், அவராலும் அமைச்சரவையாலும் தீர்மானிக்கப்படுகின்ற நபர்கள் துணைத் தலைவராகவும் கொண்டு செயல்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அதே சமயத்தில் அதன் நிரந்தர உறுப்பினர்கள் பொருளாதாரம், தொழிற்துறை, அறிவியல் மற்றும் பொது நிர்வாக வல்லுநர்களே நிரந்தர உறுப்பினர்களாகவும், முக்கிய அமைச்சகத்தின் அமைச்சர்கள் பகுதிநேர உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள்.

இந்த திட்டக் கமிஷனை அமுலுக்கு  கொண்டு வர 1950 மார்ச் 15-ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ”நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதனை பயன்படுத்த திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும்”. என்றும் முன் வைக்கப்பட்டது. இதன் மூலம் ஐந்தாண்டு திட்டங்கள் முன் வைக்கப்பட்டன.

முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951-ல் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டது ஆனால் இந்தியா பாகிஸ்தானின் போரால் 1965ல் தடைபட்டது. அடுத்த இரண்டாண்டுகள் வறட்சியும், நாணய மதிப்பிழப்பும், விலையேற்றமும், வளம் குன்றலும் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இடையூராகயிருந்தது. அடுத்து மூன்று ஆண்டுத் திட்டங்கள் 1966 முதல் 1969 வரை போடப்பட்டு, நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 1969ல் தொடங்கப்பட்டது.

1990-91ல் நிலையில்லாத, அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்த இந்திய ஒன்றிய அரசியலால் எட்டாவது ஐந்தாண்டுத்திட்டம் 1990-ல் தொடங்கப்படவில்லை. அதனால், 1990-91 மற்றும் 1991-92 ஆண்டுகளை ஆண்டுத் திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. 1992ல் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 12 வது ஐந்தாண்டு திட்ட காலம் வரை இந்த வகையிலேயே திட்டமிடும் பணி நீடித்தது.

முதல் எட்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் பொதுத்துறையில் கவனம் செலுத்தப்பட்டு அடிப்படை மற்றும் கனரக தொழிலில் முதலீடு செய்யப்பட்டது ஆனால் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து பொதுத் துறையில் கவனம் குறைக்கப்பட்டு, பொதுவான தேசிய வளர்ச்சியை நோக்கித் திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கால கட்டத்தில் தான் ஏகாதிபத்தியங்களினால் திணிக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட ,மறுகாலனியாக்க கொள்கைகள் நாட்டின் பெயரளவிலான சுயசார்பு பொருளாதார வளர்ச்சியை முற்றாக தடுக்க முயற்சித்தது என்பதே நிதர்சனமாகும்.

மேற்சொன்னவாறு விளக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு திட்டங்கள் மற்றும் திட்ட கமிஷனின் முதன்மை உறுப்பினர்கள் ஆகியோர்களின் வர்க்க கண்ணோட்டம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு சேவை செய்வதாக இல்லை, மாறாக ஆளும் வர்க்கமாக இருந்த தரகு முதலாளிகள் நிலப்பிரபுக்களின் அதிகாரத்திற்கும், அவர்களின் சொத்துடைமைக்கும் சேவை செய்வதாகவே இருந்தது.

அதே சமயத்தில் நாட்டின் கனிம வளங்களான இரும்பு எஃகு துறை, நிலக்கரி மற்றும் பல பலகையான தாது பொருட்கள் ஆகியவற்றை அகழ்ந்தெடுக்கும் சுரங்கங்கள், பிரம்மாண்டமான மின்சார நிலையங்கள் மற்றும் இராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை அனைத்தும் பொதுத்துறை என்ற பெயரில் அதிகார வர்க்க முதலாளித்துவத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டன.

இந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவைப்பட்ட பிரம்மாண்டமான மூலதனத்தை அரசாங்கமே தனது கஜானாவில் இருந்து எடுத்துக் கொடுத்து உருவாக்கியது. ஏனென்றால் அப்போதைய தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு தனியாக தொழில் துவங்கும் அளவிற்கு இல்லை என்ற காரணத்தினால் அரசாங்கம் மக்கள் வரிப்பணத்திலிருந்து நிதியை எடுத்து வழக்குகின்ற நிலையிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கங்களில் நலனை பாதுகாக்கின்ற வகையில் முன் வைக்கப்பட்ட பம்பாய் திட்டம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த திட்டத்தை முன் வைப்பதில் பெரும்பங்காற்றிய ஜே.ஆர்.டி. டாடா, ஜி.டி.பிர்லா, தாகுர்தாஸ், லால்பாய் போன்ற தரகு முதலாளிகளின் விருப்பத்தையே பம்பாய் திட்டம் பிரதிபலித்தது. அதன் பிறகு அதுவே திட்டக் கமிஷனில் பெரும் பங்காற்றியது.

  • செல்லப்பன்.

நிதி ஆயோக்கை மாநிலங்கள் புறக்கணிக்கிறதா? மாநிலங்களை நிதி ஆயோக் புறக்கணிக்கிறதா?

1 COMMENT

  1. நிதி ஆயோக்கிற்கும் திட்டக்குழுவிற்கும் இடையிலான வேறுபாட்டையும் மாநில உரிமைகளை புறக்கணிப்பது பற்றியும் விளக்கம் அருமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here