பாசிச மோடி அரசினால் கொண்டு வரப்பட்ட நிதி ஆயோக்கில் உள்ளவர்களின் வர்க்கத் தன்மை மற்றும் அவர்களின் கண்ணோட்டம் ஆகியவை இரண்டும் கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு நெருக்கடிகளை சுமத்தியுள்ளது. இதற்கு நேர்மாறாக கோடீஸ்வர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டுவரை இந்தியாவில் 2.5 லட்சம் மில்லியனர்கள் இருந்தனர், இதுவே 2023 ஆம் ஆண்டில் 3,26,400 மில்லியனர்களாகவும் (1மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகாமாக சொத்துடையவர்கள்) 1,044 பேர் 100 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்துடையவர்களாகவும், 120 பேர் பில்லியனர்களாகவும் ( 1 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு) உயர்ந்தனர். இந்த ஒரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் நிதி ஆயோக்கின் திட்டங்களுக்கும் தொடர்பில்லாமல் இல்லை.

நிதி ஆயோக் என்பது நிதியை பிரித்துக் கொடுக்கும் அதிகாரம் கொண்டதல்ல. அதனால் இந்தக் கூட்டத்திற்கு போகாமல் இருப்பதால் சிக்கல் ஒன்றும் இல்லை என்றும், முன்னாள் தமிழ்ழகத்தை ஆண்ட பாசிச ஜெயா காலத்திலேயே இவ்வாறு நடந்துள்ளது என்றும் கூறுகிறது திமுக மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள்.

இதனை இந்தளவுக்கு சுருக்கிப் பார்ப்பது சரியான பார்வையல்ல. பாசிச பாஜகவின் பொருளாதாரக் கொள்கையை தீர்மானிக்கும் சிந்தனைக் குழாமான நிதி ஆயோக் தனது வழிகாட்டுதலை கொடுக்கிறது. இந்திய ஒன்றிய பாஜக அரசு அதனையே தனது வரவு செலவு அறிக்கையில் முன் வைக்கிறது.

இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா, தெலுங்கானா ஆகியவையும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

பட்ஜெட்டில் தமிழ்நாடு என்று பெயர் இல்லை என்று மட்டுமே இதனை பார்க்க முடியாது. ”நீங்கள் ஏன் தமிழகத்திற்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை என்ற கேள்வி கேட்டால், ஏற்கனவே நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் கூட சில மாநிலங்களின் பெயர் இல்லாமல் இருந்திருக்கிறது” என்று சாமர்த்தியமாக பதில் கூறுவதாக நினைத்துக்கொண்டு வரமிளகாயை அரைத்து தமிழகத்தின் தலையில் தடவிக் கொண்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

மத்திய பட்ஜெட்டிற்கு முக்கிய வருவாய் வரிகளின் மூலம் கிடைக்கின்றது என்பதால் அதனை சுருக்கமாக புரிந்து கொண்டால் புறக்கணிக்கப்படுகின்ற அம்சங்களை நாம் தெளிவுபடுத்தி விடலாம்.

அரசின் வருவாய் பலவகை என்றாலும், அவற்றுள் முக்கியமானது வரி வருவாய். அந்த வகையில், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின், வரிக் கொள்கை சட்டப்பிரிவு (Tax Policy Legislation) மற்றும் மத்திய எக்சைஸ் மற்றும் கஸ்டம்ஸ் வாரியத்தின், வருவாய் ஆய்வுப் பிரிவு (Tax Research Unit) ஆகியவை வரி வருவாய் தொடர்பான மதிப்பீடுகளை நிதியமைச்சகத்துக்குச் சமர்ப்பிக்கின்றன.

முந்தைய பதிவு:

நிதி ஆயோக்கை மாநிலங்கள் புறக்கணிக்கிறதா?மாநிலங்களை நிதி ஆயோக் புறக்கணிக்கிறதா? பாகம்-4   

இந்த நிலையில் இந்தியா சுதந்திரம் பெற்றதாக கூறப்பட்ட காலத்திலிருந்தே வருமானத்தை ஈட்டித் தருகின்ற முக்கியமான வரிகள் அனைத்தும் மத்திய அரசினால் வசூலிக்கப்படுகின்றது என்பதும், பெரிய அளவிற்கு வருமானம் வராத சில துறைகள் மட்டுமே மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன என்பதும் தான் நிலைமையாகும். இதனால் தான் மாநிலங்கள் தங்களின் தேவைக்கு இந்திய ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க வேண்டியுள்ளது.

2023-24 நிதியாண்டில் இந்தியா முழுவதும் வசூலான ஜி.எஸ்.டி ரூ 20.18 லட்சம் கோடியாகும். 2024 ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி கணக்கின்படி, பீகாரிடமிருந்து ரூ. 1,992 கோடியும், தமிழ்நாட்டிலிருந்து ரூ. 12,210 கோடியும் வசூலித்த மோடி அரசு, பட்ஜெட்டில் பீகாருக்கு ரூ. 37,500 கோடியையும், தமிழ்நாட்டிற்கு பூஜ்ஜியத்தையும் ஒதுக்கியுள்ளது. இந்த லட்சணத்தில் 24-25 ஆண்டுக்கான பட்ஜெட் 48 லட்சம் கோடிக்கு போடப்பட்டுள்ளதாக பீற்றுகிறார் பாசிச மோடி.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியே மாநிலங்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற நிதி கொள்கை தீர்மானிக்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து நேரடியாக இந்திய ஒன்றிய அரசு வசூல் செய்கின்ற நிதி வருவாயில் மாநிலங்களுக்கு எவ்வளவு ஒதுக்குவது; மாநிலங்களின் தேவை என்ன; மாநிலங்களுடைய வளர்ச்சி; மக்களுடைய கலாச்சாரம், பண்பாடு; அங்கு நடக்கின்ற பொருள் உற்பத்தி போன்றவை அனைத்தையும் கணக்கில் கொண்டு அதன் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதுதான் எதார்த்தமான தேவையாக உள்ளது.

ஆனால் இத்தகைய தேவைகளை இந்திய ஒன்றிய அரசு எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. பல்வேறு மாநிலங்களில் உள்ள பொருளாதார அடிப்படைகள் மற்றும் இந்திய தேசியத்துடன் ஒத்துப் போகின்ற தன்மை, தரகு முதலாளிகள், கார்ப்பரேட்டுகளின் நலன் ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாரபட்சமாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவ்வாறு பீகாருக்கோ, குஜராத்துக்கோ அதிகமான நிதி ஒதுக்கப்பட்டாலும் அந்த நிதியும் அந்தந்த மாநிலத்தில் உள்ள விவசாயிகள், தொழிலாளிகள் என பெரும்பான்மை மக்களுக்கு கிடைப்பதில்லை.

இந்த ஏற்றத் தாழ்வான பங்கீடு குறித்து ”மற்ற எல்லாத் தோட்டங்களையும் விட, அதிக பலன் தருவது பணத்தோட்டம். ஒரு போகம், இரு போகமல்ல, பலமுறை உண்டு. விளைவு!! விதை தூவிவிட்டு, காலம் என்ற நீரைப்பாய்ச்சி, சட்டம் என்ற வேலியை அமைத்து, அஜாக்கிரதை என்ற களையைப் பறித்துவிட்டு பார்! அந்த தோட்டத்தின் விளைவு போல, வேறு எந்த தோட்டத்திலும் கிடையாது! ஆயிரம், ஆறு ஆயிரமாகும்; பிறகு அதுவே பத்துமாகும்’’ – என தனது பொருளாதர சிந்தனை குறித்த நூலான பணத்தோட்டத்தில் குறிப்பிடுகிறார் திமுகவின் தலைவரான அண்ணா.

அன்றைய காலகட்டத்தில் ஒரே நாடு என்ற கோரிக்கையிலான இந்திய தேசியம், வட இந்திய முதலாளிகளுக்கு நாடு முழுவதும் தொழில் துவங்குவதற்கு வாய்ப்பு வசதியை உருவாக்கி கொடுத்தது என்பது தான் அண்ணாவின் விமர்சனம். பின்னாளில் அவர் மாநிலங்களின் உரிமை, திராவிட நாடு கோரிக்கைகளை கைவிட்டு இந்திய தேசியத்துடன் சமரசமாகி போனார் என்பது தனிக் கதை.

மாநிலங்களை பாரபட்சமாக நடத்துகின்ற வேலை காங்கிரஸ் காலத்திலேயே துவங்கி விட்டது என்ற போதிலும், தற்போதைய பாசிச பாஜகவின் ஆட்சியில், ”ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி!’ என்ற திசையில் ஒற்றை சர்வாதிகாரத்தின் கீழ், பாசிச சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு செல்லப்படுவதால் மாநிலங்களுக்கு நிதி தேவைகளை முறையாக ஒதுக்கீடு செய்யாமல், பிச்சை போடுகின்ற மனோபாவத்திலேயே இந்திய ஒன்றிய அரசு உள்ளது என்பதன் வெளிப்பாடுதான் பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணிக்கின்ற அம்சமாகும்.

எனவே, இந்திய ஒன்றிய அரசு என்பது நாட்டின் விவசாயிகள், தொழிலாளிகள் உள்ளிட்ட பெரும்பான்மை மக்கள் மக்களின் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்துகின்ற வரையில் ஒன்றியமாக நீடிக்கும் என்பதும், அதனை உத்திரவாதப்படுத்த போது அதை நீடிப்பதற்கான தகுதியை இழந்து விடும் என்பது தான் வரலாற்றின் நிகழ்ச்சி போக்குகள் பல்வேறு நாடுகளில் உணர்த்துகின்ற உண்மையாகும்.

”தமிழகத்திலிருந்து வரியை இந்திய ஒன்றிய அரசுக்கு கட்டாதே” என்று நாங்கள் பிரச்சாரம் செய்யலாமா என்று நாடாளுமன்றத்திலேயே கேள்வி எழுப்பினார் திமுகவின் எம்பியான தயாநிதி மாறன்.

அனைத்து அதிகாரங்களையும் மேலும் மேலும் குவித்துக் கொண்டு மாநிலங்களை தனது அடிமைகளாக கருதுகின்ற மனோபாவத்தில், ஆர்எஸ்எஸ் பாஜக கொடுமைகளை இழைக்கின்ற வரையில் இது போன்ற நியாயமான கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாது.

இதிலிருந்து நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கவில்லை என்பதும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளையும், நிதி தேவைகளையும் இந்திய ஒன்றிய அரசான பாசிச பாஜக தான் புறக்கணித்து வருகிறது என்பதையும், இது மாநிலங்களுக்கு மத்தியில் வேறுபாட்டை அதிகரிப்பது மட்டுமல்ல, ஏழைகள், பணக்காரர்கள் என  இரு துருவ ஏற்றத் தாழ்வை அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதுதான் மக்களிடையே நாம் கொண்டு செல்ல வேண்டிய செய்தியாகும்.

  • செல்லப்பன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here