பத்திரிக்கைச் செய்தி:

19.08.2022

ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கெதிராக தூத்துக்குடியில் நடந்த 100 நாள் போராட்டத்தில் அப்பாவி பொதுமக்களை கொடூரமாக சுட்டுக் கொன்றது தமிழ்நாடு காவல்துறை. நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக கூறிய அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அறிவித்தார்.

36 கட்டங்களாக நடைபெற்ற விசாரணையில் 1426 பேருக்கு சம்மன் அனுப்பியதில் 1048 பேர் நேரில் ஆஜர் ஆகி சாட்சியம் அளித்தனர்.1544 ஆவணங்கள் குறியீடு செய்யபட்டன. 3000 பக்கங்களில் 5 தொகுதிகளாக இறுதி விசாரணை அறிக்கை கடந்த மே 18ம் தேதி தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் சாரம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

நிராயுதபாணியான பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையை கண்டித்துள்ள ஆணையம், இதற்கு முன்பு தமிழ்நாடு கண்டிராத மிக மோசமான காவல் துறை நடவடிக்கைகளில் ஒன்று என்றும் கண்டித்துள்ளது. இதன் மூலம் மக்களுடைய கோரிக்கையும், போராட்டமும் மிகவும் சரியானது, உண்மையானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில், பொதுமக்கள் கூட்டத்தை கையாளுவதற்காக துப்பாக்கி சூடு நடத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யாருடைய உத்தரவும், துண்டுதலுமின்றி துப்பாக்கி சூடு நடந்துள்ளது. தப்பி ஓடிய மக்கள் மீது காவல் துறை துப்பாக்கி சுடு நடத்தியுள்ளது. தங்களுக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாமல் மண்டையில் பின் பக்க வழியாக தோட்டாக்கள் நுழைந்து முகத்தின் முன் பக்க வழியாக வெளியேறி மக்கள் இறந்துபோய் உள்ளனர்.

வெகு தொலைவில் இருந்த பொதுமக்களை கலெக்டர் வளாகத்தில் உள்ள பூங்காவில் மறைந்து இருந்து காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையாணைகளின் படி, கூட்டத்தை கலைக்க, போலீசார் எச்சரிக்கை செய்தல், தண்ணீர் பீச்சி அடித்தல், வானத்தை நோக்கி சுடுதல் போன்ற தடுப்பு நடவடிக்கை ஏதும் செய்யவில்லை.

அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கடுமையான அலட்சியத்துடன், தவறான முடிவுகளை எடுத்துள்ளார். போராட்டம் நடந்த தேதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருப்பதற்கு பதிலாக கோவில்பட்டியில் தங்கி இருந்து உள்ளார்.

மே-22 க்கு முந்தி நடந்த அமைதிக் குழு கூட்டத்திற்கு அவர் தலைமை ஏற்கவில்லை.. சப் கலெக்டர் M.S.பிரசாந்த் கூட்டத்தை கையாண்டுள்ளார். அந்த நேரத்தில் ஆட்சியர் வெங்கடேஷ் அவரது முகாம் அலுவலகத்தில் மிக வசதியாக இருந்துள்ளார்.

தூத்துக்குடி தாசில்தார்கள்

சேகர், கண்ணன், சந்திரன், ஆகியோரின் முழு செயலற்ற தன்மை,சோம்பல், கடமை தவறுதல், ஆகியவையே கலவரத்துக்கு காரணம். காவல் துறையினர் சுட்டு கொன்றதற்கு பின்பு தாசில்தாரின் உத்தரவுகளை பெற்றுள்ளனர். தாசில்தார்கள் இதற்கு உடந்தையாக இருந்து உள்ளனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறை துப்பாக்கி சூடு நடத்தியதாகக் கூறிய அதிமுக அரசாங்கத்தின் கூற்றை உறுதிபடுத்த எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 20,00,00/- லிருந்து 50,00,000/-ஆகவும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு 5,00,000/- லிருந்து 10,00,000/- ஆகவும் இழப்பீட்டை அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

துப்பாக்கி சூடு நடத்திய பின்பு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீ வைக்கும் 20 பேர் அடங்கிய நபர்களின் வீடியோ ஆதாரம் இருந்தும், இவர்களை மாநில காவல்துறையோ சிபிஐயோ அடையாளம் காண முயற்சிக்கவில்லை என்பது உள்ளிட்ட பல உண்மைகள் ஆதாரத்துடன் விளக்கி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, தூத்துக்குடி படுகொலையில் புதைந்து கிடந்த பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. பல்வேறு அழுத்தங்களைத் தாண்டி, உண்மைகளை வெளிக் கொண்டு வந்த நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களுக்கும், ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் மற்றும் ஆணைய குழுவினருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்கிய ஸ்டெர்லைட் படுகொலைக்கு உரிய நீதிகேட்டு, தமிழக அரசிற்கு கீழ் கண்ட கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

1) நீதிபதி. அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முழு அறிக்கையை உடனே தமிழக அரசு வெளியிட வேண்டும்.

2) அறிக்கையின் படியான குற்றவாளிகள் தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி கபில்குமார் சரத்கர், தூத்துக்குடி SP மகேந்திரன்,

உதவி SP லிங்க திருமாறன், மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள்,

2 சப் இன்ஸ்பெக்டர்கள், ஒரு தலைமை காவலர், 7காவலர்கள், மற்றும் இவர்களுக்கு துணை போன தாசில்தார்கள் மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்து, கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத துறை உயரதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3).வேதாந்தா மற்றும் சி.பி.ஐ கூட்டணியில் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் பொதுமக்கள் மீது குற்ற பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இந்த மோசடி குற்றப்பத்திரிக்கையை இரத்து செய்து இந்த வழக்கை மறு விசாரணைக்காக தமிழக அரசின் சிபிசிஐடி- க்கு மாற்ற வேண்டும்.

4) ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் ஸ்டெர்லைட் அதிகாரிகளின் தொடர்பு, எடப்பாடி மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகத்தின் தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும்.

5) இறந்தவர்களின் குடும்பத்திற்கு கமிஷனின் பரிந்துரைப்படி கூடுதல் இழப்பீடும், இறந்த கீழமுடிமன் ஜஸ்டின் குடும்பத்தாருக்கு இழப்பீடும், அவரது தாயாருக்கு அரசு வேலையும், அதே போல அடித்து சித்ரவதை செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் இறந்த தூத்துக்குடி பரத்ராஜ் குடும்பத்தாருக்கு இழப்பீடும், வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும் .

6) பொது மக்களை குற்றவாளிகளாகவும், சமுக விரோதிகளாகவும் அவதூறு செய்த அதிமுக, பிஜேபி, இந்து முன்னணி, அர்ஜுன் சம்பத், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here