அமைதி ஆர்ப்பாட்டங்களின் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வரும் ரணில் – ராஜபக்சே கும்பலின் பாசிசத்திற்கு எதிராவோம்.

சி.கா. செந்திவேல்
பு.ஜ.மா.லெ கட்சியின் பொதுச்செயலாளர் கண்டனம்.
**********
ரணில் – ராஜபக்ச ஒப்பந்த ஆட்சியை தூக்கியெறிவோம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை உடனே நீக்கு, மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பை உருவாக்கு, விலை உயர்வு மற்றும் தாங்க முடியாத வரிச்சுமையை நீக்கு போன்ற நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நேற்றைய தினம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் கலைஞர்கள் பொது சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் நடாத்திய ஆர்ப்பாட்ட பேரணியின் மீது காட்டுமிராண்டி தாக்குதலை போலீஸார் மேற்கொண்ட தையும் துரத்தித் துரத்திச் சென்று தாக்குதல் நடாத்தி, 12 பேரை கைதுச் செய்து இழுத்து சென்றதையும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியற் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் மிக வன்மையாகக் கண்டிப்பதாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் ஒன்று கூடும் உரிமை, கருத்து வெளியிடும் உரிமை, ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை, என்பவற்றை மதியாது சர்வாதிகார போக்கில் ஆட்சி தரப்பினர் நடந்துக்கொள்வது அவர்களின் உண்மை முகத்தை தொடர்ந்தும் வெளிப்படுத்தி நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் விருப்பம் இல்லாது 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைய செயற்கையான முறையில் அதிகாரத்தை பெற்றுள்ள ரணில்- ராஜபக்சே முகாமின் உத்தரவுகளுக்கு அமைய சற்றும் சிந்திக்காது துரித கதியில் செயல்படும் போலீஸ் உயரதிகாரிகள் எதிர்காலத்தில் மக்களின் முன் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களாக உள்ளனர் என்றும். நேற்றைய ஆர்ப்பாட்டப் பேரணியில் கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர் வசந்த முதலிகே மற்றும் சமூக செயற்பாட்டாளர் சிந்தக ராஜபக்ச உட்பட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என கட்சி வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கீழ்த்தர, மக்கள் விரோத அரசாங்க முறையை தூக்கி எறிய மக்கள் வீதிக்கு வர வேண்டும் என அறைகூவல் விடுப்பதோடு தேசிய ஜனநாயக வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்ப முற்போக்கு, ஜனநாயக, இடதுசாரி, தேசபக்த சக்திகள் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் குழு சார்பாக, பொதுச்செயலாளர்
சி.கா செந்திவேல்
புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here