பல நூற்றாண்டுகளாக விவசாயம் செய்து வருகின்ற மனித இனம், இயற்கையான வழிமுறைகளில் விளை நிலத்தையும், சுற்றுச்சூழலையும் சீர்குலைக்காமல் பயிர் செய்து வந்தது. ஆனால் எளிமையாக இருந்த போட்டி முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக மாறியதால், கடந்த சில பத்தாண்டுகளில் செயற்கையாக  விளைச்சலை அதிகரிக்கும் நோக்கோடு ரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தும் நிலை உருவானது. இதன் விளைவுகள் மிக மோசமாக உள்ளதை பல்வேறு ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.

சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த உணவு முறை ஆய்வாளர்களான ஸ்டேசி மால்கன், கேண்ட்ரா லீன் மற்றும் அன்னா லேப் ஆகியோர் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது ஆபத்தான தயாரிப்புகளை சந்தையில் விற்கும் நோக்கத்தில் தவறான பிரச்சாரங்களை செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் டாலர்களை செலவழிக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

கார்ப்பரேட்டுகளின் களவாணித்தனம்!

கார்ப்பரேட் பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் எவ்வாறு மக்களை ஏமாற்றியுள்ளன, தங்களுக்குச் சாதகமாக எப்படி தளர்வான விதிமுறைகளை வகுக்க வைத்துள்ளன என்றும், முன்பை விட மிக அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளை சந்தையில் எவ்வாறு விற்றுத் தீர்க்கின்றன என்பதையும், அவர்களது இந்த லாப வெறியானது மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் நமது உணவு முறை போன்றவற்றில் எத்தகைய அபாயத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் நாம் அறிய வேண்டியுள்ளது. மேலும் இத்தகைய கார்ப்பரேட்டுகளின் பொய்யான பிரச்சாரத்தை எதிர்கொள்வது மிக முக்கிய சவால்களில் ஒன்றாக உள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.

மான்சாண்டோ நிறுவனத்தின் மாபெரும் மோசடி!

அமெரிக்காவைச் சேர்ந்த வேளாண் இரசாயனம் மற்றும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் ஏகபோக நிறுவனமான மான்சாண்டோ, வியட்நாம் போரில் கொடிய இரசாயன ஆயுதங்களை அமெரிக்க இராணுவத்துக்கு தயாரித்து அளித்து ‘புகழ்’ பெற்றதாகும். இந்த நிறுவனம் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வாறு அறிவியல் அடிப்படையிலான உண்மைகளை மறைத்து,  தவறான தகவல்களை மக்களிடம் கொண்டு சென்று ஏமாற்றியது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

மான்சாண்டோவின் “ரவுண்டு அப்” எனும் பூச்சிக்கொல்லி மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டு, அதன் மூலமாக அந்த நிறுவனத்தின் ஆவணங்களைப் பெற்றதின் மூலம் இப்போது பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மான்சாண்டோ இதுவரை பல யுக்திகளைக் கையாண்டு, போலியான பிரச்சாரங்களைக் கட்டமைத்து தனது பொருட்களை சந்தைப்படுத்தி உள்ளது.

கிளைபோசேட்(Glyphosate) எனும் பாஸ்பரஸ் வகை இரசாயனம் புற்றுநோயை உருவாக்கக் கூடியது என்ற உண்மையைப் பேசிய, எழுதிய விஞ்ஞானிகளை மட்டம் தட்டி இழிவுபடுத்தும் வேலைகளை தனது கூலி ஆய்வாளர்களைக் கொண்டு செய்தது. மேலும் மான்சாண்டோவுக்கு  அதன் ரவுண்டப் (கிளைபோசேட் எனும் நச்சு கலந்த) என்னும் தயாரிப்புக்கு ஆதரவாக திரை மறைவில் பணியாற்றிய பல்கலைக்கழகங்கள், அறிவியல் நிறுவனங்கள் மற்றும் பேராசிரியர்கள் போன்ற கூட்டாளிகளுடன் கைகோர்த்து செய்த போலிப் பிரச்சாரங்களை அந்த ஆவணங்கள்  அம்பலமாக்கிக் காட்டியது.

“விஷ வியாபாரிகள்” என்ற இந்த அறிக்கையானது எப்படி பூச்சிக்கொல்லி விற்பனையில் ஏகபோகம் வகிக்கும் மான்சாண்டோ நிறுவனம், ரவுண்டப் எனும் கிளைபோசேட் கலந்த பூச்சிக்கொல்லியானது, “சமையல் உப்பைப் போல பாதுகாப்பானது” என்ற கட்டுக்கதையை விளம்பரப்படுத்த பல பத்தாண்டுகளாக மில்லியன் கணக்கில் செலவிட்டுள்ளது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

பூச்சிக் கொல்லி நிறுவனங்களால் நிதி அளிக்கப்பட்ட “தவறான தகவல்களை உற்பத்தி செய்யும் தொழில்” எவ்வளவு பெரிய வணிகமாக மாறி உள்ளது என்பதையும் அந்த ஆவணங்கள் காட்டுகின்றன. இந்த ஆய்வில் 2015 முதல் 2020 காலகட்டத்தில் மொத்தம் 76 மில்லியன் டாலர் தொகையை இதற்காக மான்சாண்டோ செலவழித்தது தெரியவந்துள்ளது. மேலும் 6 தொழில் வர்த்தகக் குழுக்கள் அதே காலகட்டத்தில் 1.3 பில்லியனுக்கும் அதிகமாக செலவழித்து உள்ளதையும் ஆவணங்களில் இருந்து அறிய முடிந்தது. இதில் கிளைபோசேட் உள்ளிட்ட ரசாயனங்களை பாதுகாக்கும் முயற்சிகளும் அடங்கும்.

மான்சாண்டோவின் பூச்சி மற்றும் களைக்கொல்லிகள் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டு, கடும் நெருக்கடியை சந்தித்ததால், ஜெர்மனியின் பேயர் (Bayer) நிறுவனத்திடம் 10 பில்லியன் டாலர்களுக்கு நிறுவனம் கைமாறியது. பெயர்தான் மாறியுள்ளதே ஒழிய, தயாரிப்புகள் எதுவும் மாறவில்லை.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் அதிகரிப்பு!

இன்று அமெரிக்காவில் பயிரிடப்படும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் 98 சதவீதத்திற்கும் அதிகமானவை கிளைபோசேட்டுக்கு எதிராக தாங்கு திறன் பெற்றவையாக உள்ளன.

மரபணு மாற்றப்பட்ட சோளம் மற்றும் சோயாவை 1990களின் மத்தியில் அதிக அளவில் பயிரிட ஊக்குவிக்கப் பட்டது.

 

அமெரிக்கப் பண்ணைகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 300 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு பூச்சிக்கொல்லிகள் உபயோகப்படுத்தபடுகின்றன. இன்று உலகெங்கிலும் கிளைபோசேட் கலந்த பூச்சிக்கொல்லிகள் பரவலாக பயன்படுத்தப்படும் வேளாண் ரசாயனமாக உள்ளது.

விஷத்தை விற்பனை செய்யும் வித்தகர்கள்!

1984 ஆம் ஆண்டிலேயே கிளைபோசேட் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் விஞ்ஞானிகள் எச்சரித்தனர். மேலும் 2015 – ல் WHO வின் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமை (IARC)  கிளைபோசேட்டில் புற்றுநோய் உருவாவதற்கான சாத்தியக் கூறு அடங்கியுள்ளது என அறிவித்தது. சமீப ஆய்வில் கூட இந்த ரசாயனமானது எடை குறைந்த குழந்தைப் பிறப்பு, இனப்பெருக்க பாதிப்புகள் மற்றும் தீவிரமான உடல் நலக் கேடுகளை ஏற்படுத்த வல்லது என தெரியவந்துள்ளது.

ரவுண்டப் எனும் ஒரு தயாரிப்பை மட்டும் குறிப்பாக அறிக்கை சுட்டிக்காட்டினாலும், டஜன் கணக்கான பூச்சிக்கொல்லிகளில் இது ஒரு வகை மாதிரிதான். அறிவியல் பூர்வமாக அதன் தீய விளைவுகளை வெளிப்படுத்தும் ஆதாரங்களை மறுக்கவும், அத்தகைய பொருட்களை உற்பத்தி செய்யவும் இத்தகைய நிறுவனங்கள் தீவிரம் காட்டுகின்றன. உண்மையில் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட 85 வகையான பூச்சிக்கொல்லிகள் இன்றும் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளன.

2017 -18 ஒரு ஆண்டில் மட்டும் மிகவும் அபாயகரமானதாக கருதப்படும் ரசாயனங்களை கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லி தயாரிப்புகளை சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமை (EPA) அங்கீகரித்துள்ளது.  வேளாண் இரசாயனத் தொழில் துறையின் தவறான தகவல் மூலம் உலகளாவிய பூச்சிக்கொல்லிகள் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது. 1990 களின் உலகமயம் மூலமாக பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு உலக அளவில் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் என்ன நிலை?

நமது நாட்டில் 2022 நிதியாண்டில் மட்டும் பூச்சிக்கொல்லிகள் உற்பத்தியின் அளவு ஏறத்தாழ 3 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்தது. இதில் பேயர் கிராப் (மான்சாண்டோ) முன்னணி  இடத்தில் உள்ளது. இந்தியாவில் பூச்சிக்கொல்லி தொழில் கிட்டத்தட்ட 8000 கோடி மதிப்புடையதாக உள்ளது. எனவேதான் 2019 நிதியாண்டில் மட்டும் 7000 கோடிக்கு மேல் இந்தத் தொழிலில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேளாண் ரசாயனங்கள் ஏற்றுமதியில் இந்தியா உலகின் நான்காவது இடத்தில் உள்ளது. இங்கிருந்து அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.

விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், வளர்ந்து வரும் மக்கள் தொகையின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அவசியம் என சொல்லப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு சராசரி பயிர் விளைச்சலை அதிகரிக்க வைக்கும் அதேவேளையில், பூச்சிக்கொல்லிகளின் தனிநபர் நுகர்வும் அதிகரிக்கிறது. இப்படி அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் நேரடி உயிரிழப்புகளும், மறைமுக பாதிப்புகளும் அதிக அளவில் நிகழ்கின்றன.

சமீபத்திய உதாரணமாக 2017 – ல் மகாராஷ்டிராவின் யவத்மாலில் பருத்திப் பயிருக்கு பூச்சிக்கொல்லி தெளித்தபோது 22 பேர் உடனடி மரணம் அடைந்தனர். மேலும் 180 பேர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 2019ல் ஒடிசாவில் இதே போல 171 மரணங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து 2020 – ல் இந்திய ஒன்றிய அரசு 27 பூச்சிக் கொல்லிகளை தடை செய்வதாக அறிக்கை வெளியிட்டது. மூன்றாண்டுகள் கடந்த நிலையிலும் அது இன்னும் சட்டமாக்கப் படாமல் வரைவறிக்கையாகவே உள்ளது.

பக்க விளைவுகள் பயமுறுத்துகின்றன!

பல கோடி டன்கள் அளவிலான இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் பூமிப்பரப்பில் தூவப்பட்டுள்ளன. அவை விளைநிலங்கள் மட்டுமின்றி வனப் பகுதிகள், நீர்நிலைகள், காற்றுப்பரப்புகள் போன்றவற்றையும் மாசுபடுத்தி உள்ளன. மகரந்த சேர்க்கையை அழித்தும், பல்லுயிர் பெருக்கத்தைத் தடுத்தும், மேலும் மனிதர்களுக்குள்ளும் இந்த நச்சுக்கள் ஊடுருவியுள்ளன. நம்மில் 90 சதத்துக்கு அதிகமானவர்களிடம் கண்டறியக்கூடிய அளவில் பூச்சிக் கொல்லிகள் உள்ளன என்றால் நம்ப முடிகிறதா?

இந்த இரசாயனங்கள் பலவகை புற்று நோய்களை உருவாக்க வல்லவையாகவும், உடலின் ஹார்மோன்களை பாதித்து பல்வேறு நோய்களை உருவாக்கும் வகையிலும் உள்ளன. கருவுறுதலை சீர்குலைத்தும், குழந்தைகளின் மூளையை பாதித்தும், பார்க்கின்சன், மனச்சிதைவு, அல்சைமர் போன்ற நோய்களை ஏற்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன. மேலும் அனைத்து பெட்ரோ கெமிக்கல்களைப் போலவே இவையும் நமது கால நிலைகளையும் கடுமையாக பாதிக்கின்றன.

இப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் கிளைபோசேட் மீது அதிக கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்ற ஆலோசனையில் உள்ளனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்மொழிவானது பூச்சிக் கொல்லிப் பயன்பாட்டை பாதியாகக் குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால் இத்தகைய பொது சுகாதார நடவடிக்கைகளை கார்ப்பரேட் லாபியானது, தனது தந்திரமான மற்றும் மோசடியான நடவடிக்கைகள் மூலமாக முறியடிக்கும் அபாயகரமான சூழல்தான் நிலவுகிறது.

இயற்கையைப் பாதுகாப்பதே இதற்கான தீர்வு!

கார்ப்பரேட்டுகளின் இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை விதைக்கும் வேலையை நாம் செய்ய வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை இயற்றி, கார்ப்பரேட்டுகளுக்கு கைக்கூலியாக செயல்படும் காவி அரசையும் அகற்ற வேண்டும். இதன் மூலம்தான் நம்மையும் நமது மண் வளத்தையும் மீட்டெடுத்து ஆரோக்கியமான பூமியை உறுதி செய்ய முடியும்.

கடந்த 50 ஆண்டுகளில் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. இது விவசாய செலவினங்களை அதிகரித்ததோடு, விளை நிலத்தையும், சுற்றுச்சூழலையும், மனித ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. தமிழகத்தில் நம்மாழ்வார் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும், விடாப்பிடியாக இயற்கை வழி வேளாண்மையை நடைமுறைப் படுத்திக் காட்டியுள்ளார். எனவே அதைப் படிப்படியாக நடைமுறைப்படுத்துவதே இதற்கான தீர்வாக இருக்க முடியும்.

  • குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here