மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்’ என்ற பழமொழி தமிழகத்தில் நிலவி வருவதை நாம் அறிவோம்.

சமீபத்தில் இந்திய ஒன்றிய பாசிச பாஜக அரசு பல்வேறு அரசு நிர்வாக துறைகளில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் போன்றவர்களை நியமனம் செய்ததை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பலை எழுந்தது.

தமிழகத்தை ஆண்டு வரும் திமுக இந்த கொல்லைப்புற வழியிலான நியமனத்தை எதிர்த்தது என்றாலும், தனது ஆட்சியின் கீழ் 2021 ஆம் ஆண்டு துவக்கம் முதலிலேயே பல்வேறு துறைகளில் முன்னாள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகளை நியமித்து வருவதை ஒரு போக்காக கொண்டு அந்த பழமொழியை தனது நடைமுறையாக கொண்டுள்ளது..

தற்போது தமிழக அரசில் 4 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளன. மொத்த அரசு பணியாளர்கள் 12 லட்சமாகும். இதில் குருப் C மற்றும் D இரண்டும் சேர்ந்து 70 சதவிகித பணியாளர்களைக் கொண்டதாகும்

ஏறத்தாழ 13 ஆண்டுகளாக குருப் D-ல் வேலைக்கு ஆள் எடுக்காததால் சுமார் 50 சதவிகித காலி பணி இடங்கள் உள்ளன. இன்றைக்கு பெரும்பாலான அரசு பள்ளிகளில் வாட்ச்மேன், தூய்மை பணியாளர்கள் கிடையாது. அரசு மருத்துவமனைகளிலும் தூய்மை பணியாளர் பற்றாக்குறைகள் அதிகம் உள்ளன. இது பாதுகாப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் கேடாகும். மேலும் தற்போது குருப் C பணி இடங்களையும் இதே பாணியில் அவுட் சோர்சிங் முறையில் நிரப்பி வருகிறது.

”அரசியலமைப்பு சட்டப்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யாமல், ஒப்பந்த முறையில் வெளி முகமை மூலம் ஆட்களை அரசு பணிகளில் நியமிப்பது சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும். இதை சமூக நீதியை பேசும் அரசு செய்யக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கை.” என்று தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் சார்பில் வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை குறிப்பாக குரூப் சி குரூப் டி ஆகிய பகுதிகளில் உள்ள பணியிடங்களை நிரப்பினால் பின்னால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை கணக்கில் கொண்டு அரசு நிர்வாகத்தின் செலவினங்களை குறைப்பது என்ற வகையில் இந்த நியமனங்கள் செய்யப்படுகின்றன.

இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் ஒப்பந்த முறையில் குறிப்பிட்ட காலத்திற்கு அதாவது தொழிற்சாலைகளில் பிக்சட் டேர்ம் எம்ப்ளாய்ஸ் (FTE) என்பதைப் போல அரசு நிர்வாக துறையிலும் இது போன்ற பிக்சட் டெர்ம் ஆபிஸர்ஸ் (FTO) நியமனம் நடக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னாள் கார்ப்பரேட் அதிகாரியாக பணியாற்றிய பி.டி. பழனிவேல் தியாகராஜன், ”அரசு வேலைகளில் தற்காலிகமாக பணியாற்றுபவர்கள் மிகக் குறைவாக 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், அதே வேலையில் நிரந்தர பணியாளர்கள் லட்சங்களில் சம்பளம் வாங்குகின்றனர். இது நியாயம் அல்ல. அதனால்தான், அவுட் சோர்சிங் மூலம் ஊழியர்களை நியமித்து அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கி இபிஎஃப், இஎஸ்ஐ ஆகியவற்றில் சேர்க்க வேண்டும் என்று கூறி அரசாணை கொண்டு வந்தோம். ஆனால் எதிர்கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. எல்லோரும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்று சட்ட மன்றத்திலேயே பேசியது மட்டுமின்றி அமுல்படுத்தவும் முயன்றார்.

இதற்காகவே ஒரு மனிதவள சீர்திருத்தக் குழுவை அமைத்தார். அதில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூவருடன் காக்னிசெண்ட் நிர்வாக இயக்குனர் லெட்சுமி நாராயணன், சந்திராதேவி தணிகாசலம் ஆகிய கார்ப்பரேட் பின்புலமுள்ளவர்களைக் கொண்டு ஆலோசனை பெற்றார். அரசின் குருப் D மற்றும் C ஆகிய நிலைகளில் அதிக அளவில் ஒப்பந்த பணியாளர்களை குறைந்த சம்பளத்திற்கு நியமிக்க பரிந்துரைகளையும் பெற்று செயல்பட இருந்த நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் தலையிட்டுப் போராடி இதனை தடுத்து நிறுத்தியது.

படிக்க:

♦ அனகாபுத்தூர் மக்களை ஆக்கிரமிப்பு என விரட்டும் திமுக அரசு!

♦ அதானி சேவையில் திமுக அரசின் போலீசு!

இவ்வாறு அரசு பணியில் ஒப்பந்த முறையில் ஊழியர்களை தேர்வு செய்கின்ற முறை பாசிச ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதாவது 2001-2006 காலகட்டத்திலேயே உருவானது என்ற போதிலும் அதற்கு பின்னர் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி இத்தகைய நியமனங்களை தடுத்து நிறுத்தினார்.

ஆனால் மீண்டும் பதவிக்கு வந்த அதிமுக இதே பாணியை கடைபிடிக்க துவங்கியது குறிப்பாக சத்துணவு பணியாளர்கள், சாலை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போன்ற கடும் உழைப்பில் ஈடுபடுகின்ற பணியாளர்களை தினக்கூலிமுறையில் ஒப்பந்த பணியாளர்களாக நியமித்தது.

தற்போது மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இத்தகைய கொல்லைப்புற வழி நியமனங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பெயரளவிலான சமூக நீதி ஆட்சி, பாசிச பாஜகவிற்கு எதிரான ஆட்சி என்று வாய் கிழிய பேசுவதாலேயே அதனை நாம் நம்பி ஏமாறக்கூடாது.

நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் பெருகியுள்ள நிலையில் கிடைத்த வேலை செய்து வாழ்க்கையை நடத்துவது என இளைஞர் பட்டாளம் நொந்து போய் கிடக்கிறது. இந்த நிலையில் நிரந்தர வேலைவாய்ப்புகளை அடியோடு ஒழித்துக் கட்டும் வகையில் அரசு பணி அனைத்தையும் அவுட்சோர்சிங் செய்யும் முறையில் நியமிக்கின்ற கொடூரமான இந்த திட்டங்களை எதிர்த்து குரல் கொடுப்பது மட்டுமின்றி போராடுகின்ற பணியாளர் சங்கங்களுடன் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி நீதியை நிலை நாட்ட வேண்டும்.

  • கணேசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here