விநாயகரை வைத்து விஷம பிரச்சாரம்!
கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 07.09.2024 சனிக்கிழமை முதல் 09.09.2024 திங்கட்கிழமை வரை இந்து மக்கள் எழுச்சி விழாவை கொண்டாட அறைகூவி அழைத்துள்ளது இந்து முன்னணி பேரியக்கம்.
விநாயகர் சதுர்த்திக்காக இந்து முன்னணி போட்டுள்ள பிரசுரத்தில் தமிழக மக்களை மத ரீதியாக பிளவு படுத்தி இந்து மத வெறியேற்றும் விஷமத்தனம் நிரம்பியுள்ளது.
தமிழகத்திற்கு ஆபத்தாம்!
இந்து முன்னணி போட்டுள்ள பிரசுரத்தின் தலைப்பிலேயே “தமிழகத்திற்கு ஆபத்து : குறைந்து வரும் இந்து ஜனத்தொகை” என பீதியூட்டுகிறார்கள்.
அதாவது 1951இல் 88 % இருந்த இந்துக்கள் தற்போது 80 % தான் உள்ளனராம். அதே நேரத்தில் 8% மட்டுமே இருந்த முஸ்லிம்கள் தற்போது 15 % ஆகிவிட்டனர். இதுதான் எதிர்காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தல் என பீதியூட்டுகின்றனர்.
கருத்தரிக்கும் தன்மை குறைகிறதாம்!
இந்துக்களிடம் கருத்தரிக்கும் தன்மை குறைந்து வருகிறது என்று ஆய்வு தகவல் வந்துள்ளதாக புலம்புகிறது இந்து முன்னணி.
பெண்கள் தமிழகத்தைப் பொறுத்தவரை படித்து உயர்கல்வியை முடித்து பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். உயர்கல்விக்கு போக முடியாதவர்கள் தொழிலாளர்களாக பல்வேறு துறைகளில் உழைத்து வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை பெண்கள் பல்வேறு துறைகளில் உள்ள முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களில் நிர்வாகிகளாக அதிகாரிகளாக ஊழியர்களாகவும் இருக்கின்றனர்.
குறிப்பாக ஐடி துறைகளிலோ அல்லது சேவை துறையில் விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட வேலைகளிலோ ஈடுபடுபவர்கள் தான் விரும்பும் போது கருத்தரிக்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர். இத்தனை ஆண்டுகளுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டோம் என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு வேலைக்கு சேரும் நிர்ப்பந்தமும் இருக்கவே செய்கிறது. இதற்கான தீர்வையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கடை விரித்துள்ளன.
கருமுட்டையை பாதுகாக்கும் மையங்கள்!
ஐடி நிறுவனங்கள் தமது பெண் ஊழியர்களிடம் “35 வயதுக்கு மேல் பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள்; அதுவரை உங்கள் ஆரோக்கியமான கருமுட்டையை பொருத்தமான வங்கியில் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொண்டு பின்னர் அதை கொண்டு தாயாகிக் கொள்ளுங்கள் “ என்று ஆலோசனை தருவதோடு, அதற்கான நிதியையும் தருகின்றனர்.
தர்மம் காக்க அதர்மம் அளிக்க உருவெடுத்திருக்கும் இந்து முன்னணியே கார்ப்பரேட் நிறுவனங்களிடம் போய் இந்து பெண்களின் தாய்மையை தடுக்கும் உரிமையை யார் தந்தது என சட்டையைப் பிடித்து இரண்டில் ஒன்று பார்க்கத் தயாரா? என்று நாம் தான் பிடித்து இழுக்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் உற்பத்தி பிரிவில் ஈடுபடும் பெண் தொழிலாளர்கள் 12 மணி நேரம் கடுமையாக உழைத்து சக்கையாக பிழிந்து எடுக்கப்பட்டு, உடல் ஆரோக்கியம் கெட்டு, நடை பிணமாக வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இவர்களால் ஒரு பிள்ளையைப் பெற்றே, வளர்க்கவே முடியாத நிலையில் கடன்காரர்களாகி தவிக்கின்றனர். கணவன் மனைவி என இருவருமே கடும் உழைப்பில் ஈடுபட்டு குடும்பமாகவே வாழ, நேரமே இல்லாமல் அல்லல்பட்டும் வருகின்றனர். இவர்களால் எப்படி இரண்டு மூன்று நான்கு என குழந்தைகளை பெற்று வளர்க்க முடியும்? இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறையானது குடும்பமாக வாழ அனுமதிக்கிறதா? குழந்தையை வளர்க்கும் பொறுப்பை வீட்டில் உள்ள தாத்தா, பாட்டிகள் செய்வதற்கு வாய்ப்பு உள்ளதா?
ஏன் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கின்றனர்?
இந்து முன்னணி சொல்கிறது பெரும்பான்மையான இந்து குடும்பங்களில் எல்லா வசதிகள் இருந்தும் ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்கின்றனராம்.
சங்கிகள் சொல்வதில் துளியளவாவது உண்மை உள்ளதா? காவி பாசிஸ்டுகளின் மேல்மட்ட நடுமட்ட ஜி-களிடம் வேண்டுமென்றால் அனைத்து வசதிகளும் இருக்கக்கூடும். ஆனால், இந்து முன்னணியின் அடிமட்ட தொண்டர்களிடம் கூட அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளதாக நிரூபிக்க முடியுமா?
படிக்க:
♦ கலவரத்தின் தொடக்கப்புள்ளி விநாயகர் சதுர்த்தி!
♦ மக்களுக்கு எச்சரிக்கை: காவிகள் உருவாக்கும் கலவர பிள்ளையார்!
எதார்த்தம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ள ஆகப்பெரும்பான்மையான இந்துக்கள் வேலை தேடி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் செல்லும்போது அவர்களை நிரந்தர தொழிலாளியாக ஆக்கி உத்தரவாதமான சம்பளம் கொடுத்து வாழ வைக்க யாரும் தயார் இல்லை. மோடியின் திட்டமோ முப்படைக்கும் கான்ட்ராக்ட் கூலிகள் போதும் என்பதுதான். மூன்றாண்டுகளுக்குப் பிறகு அக்னிவீர்கள் கார்ப்பரேட்டுகளிடம் தான் வேலை கேட்டு கையேந்த வேண்டும்.
அங்கும் மோடி FTE, FTC உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தி பணி நிரந்தரத்தை ஒழித்துக் கட்டி வருகிறார். விதிவிலக்காக நிரந்தர தொழிலாளியாக இருப்பவர்களும் கூட தமது வருமானத்தில் குடும்பத் தேவையை நிறைவேற்ற முடியாமல் கடனுக்கு பொருட்களை வாங்கி விட்டு இ எம் ஐ கட்டவே அல்லல்படுகின்றனர்.
இந்துக்களுக்காக உருகும் இந்து முன்னணியே தமிழகத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை பணி நிரந்தரம் செய்யவும் எட்டு மணி நேர வேலையை உத்திரவாதம் செய்யவும் அந்த வேலைக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக நிர்ணயம் செய்யவும் போராட தயாரா? இந்தக் கேள்வியை விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம் என வீட்டிற்கு வந்து பிரசுரம் கொடுத்து கூப்பிடும் சங்கிகளிடம் உரத்துக் கேட்க வேண்டும்.
தொழிலாளர்கள் வேர்வை சிந்தி உருவாக்கித் தரும் லாபத்தில் அவர்களுக்குரிய பங்கை போனஸ் என்ற பெயரில் குறைந்தது ஆண்டுக்கு 10 லட்சம் என்ற அளவில் வாங்கித் தர துப்பு உள்ளதா? அல்லது உங்கள் 10 அடி பிள்ளையார் வாங்கித் தருவாரா? என்று நாக்கை பிடுங்கிக் கொள்ளும்படி கேட்கவும்.
வடமாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வருபவர்களில் ஆகப்பெரும்பான்மையினர் இந்துக்கள் தான். அவர்களை கொத்தடிமைகளைப் போல நடத்தி கொடூரமாக ஒடுக்கி வருவதற்கு முடிவு கட்ட வாருங்களேன் கரம் கோர்ப்போம் என்று பாஜக தொழிற்சங்கமான BMS-ஐ நிறுத்தி கேட்க வேண்டும்.
இப்படி இந்து தொழிலாளர்களை கொடூரமாக சுரண்டி அவர்கள் குடும்பமாகவே வாழ முடியாத படி கணவன், மனைவி, பிள்ளைகள் என அனைவரையும் பிரித்து கொள்ளை லாபத்தை குவித்து வரும் கார்ப்பரேட் முதலாளிகளை பார்த்து சுண்டு விரலை நீட்ட கூட துப்பு கெட்டது தான் காவி கும்பல்.
தமது எஜமானவர்களாக கார்ப்பரேட்டுகள் கொழுக்க வேண்டும் என்றால் நமக்கு உண்மை புரிந்து விடக்கூடாது. நமது முன்னேற்றத்தை தடுக்கும் எதிரிகள் யார் என்று நாம் கண்டு கொண்டு விடக்கூடாது. அதற்காகத்தான் இந்துக்களுக்கு ஆபத்து என்று கதையளந்து முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் நமது எதிரிகளாக காட்டி ஏய்க்க பார்க்கிறது. தொழிலாளர்களே, இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
மக்கள்தொகை குறையாமல் தடுப்பது எப்படி?
நாமே அதற்கும் கூட ஆலோசனைகளையும் தரலாம். தமிழகத்தில் உள்ள இந்துக்கள் இஸ்லாமிய நாடான வளைகுடாக்களுக்கு வேலைக்கு போவதை உடனே நிறுத்தியாக வேண்டும். அதேபோல கிறிஸ்தவ நாடான அமெரிக்காவிற்கு படிக்கப் போவது, வேலைக்கு போவது, அங்கேயே கிரீன் கார்டு வாங்கி செட்டில் ஆவது உள்ளிட்டவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும்.
“தமிழகத்தில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே உலகம் முழுக்க பிழைப்புத் தேடி சென்றுள்ள இந்துக்களே தமிழகத்திற்கு திரும்பி வாருங்கள்|” என அழைக்க வேண்டும். அப்படி அழைப்பதற்கு தயாரா இந்து முன்னணி வானரங்களே!
இந்துக்களை மட்டுமா திருப்பி அழைப்பது?
போதாது. தமிழரின் கடவுள்களும்தான் நாடு கடந்து, கடல் கடந்து உலகம் முழுக்க பரவியுள்ளனர். எனவே அப்படி பரவியுள்ள தமிழர்களின் கடவுள்களையும் திரும்ப அழைக்க வேண்டும். அந்த கடவுள்களுக்கு பூஜை செய்ய சென்ற அக்ரகாரத்து ஐயர்வாள்களையும் திரும்பி வருமாறு அழைக்க வேண்டும். இதையெல்லாம் செய்யும் போது தமிழகத்தில் இந்துக்களின் எண்ணிக்கை சற்றே அதிகரிக்கும். “காவிகளே தயார் தானே ” என உசுப்புங்கள்.
இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களிலும் தமிழர்கள் பரவி வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக மும்பையின் தாராவி பகுதி தமிழர்களால் நிரம்பி வழிகிறது. எனவே இந்து முன்னணி கும்பல் உடனடியாக மும்பைக்குச் சென்று தமிழர்களை மொத்தமாக ரயிலில் ஏற்றியும், கப்பலில் ஏற்றியும், பேருந்தில் ஏற்றியும், லாரியில் ஏற்றியும் கொண்டுவந்து தமிழகத்தில் இறக்கி விட்டால் தமிழகத்தில் உள்ள இந்துக்கள் எண்ணிக்கையை கூட்டி விடலாம். என்று மும்பைக்கு புறப்பட உத்தேசம்? பதில் சொல்ல முடியுமா? என பக்கத்து மெஷினில் வேலை செய்யும் சங்கியிடம் விசாரித்துப் பாருங்களேன்.
ஜக்கிக்கு ஜாக்கியாக இருக்கலாமா?
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையத்தை நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் இந்துக்கள் மட்டும் மகா சிவராத்திரிக்கு வாருங்கள் என்றெல்லாம் அழைப்பதில்லை. காசிருப்பவர்கள் எல்லாம் வாருங்கள் என்று தான் டிக்கெட் போட்டு விற்பனை செய்து கல்லா கட்டுகிறார்.
தமிழகத்தில் பிற மதத்தினர் குவிந்து கூத்தடிப்பதை கண்டு கொதிக்காமல், ஜனாதிபதி முதல் பிரதமர் வரை, ஆளுநர் முதல் அதிகாரிகள் வரை எப்படி ஐக்கியமாக முடிகிறது? ஜக்கியை ஜாக்கி போட்டு தூக்கி நிறுத்தி இருப்பது RSS தானே.
இனிமேல் தமிழகத்தில் உள்ள இந்து பண்டிகைகளை கொண்டாட, இந்து கோயில்களில் வழிபட, இந்துக்கள் மட்டும் தான் வர வேண்டும். இதை மீறுபவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என ஜக்கியை எச்சரிக்க தயாரா? ஈஷா யோகா மையத்தில் இந்துக்கள் மட்டுமே தங்க வேண்டும் என ரெய்டு நடத்துவதற்கு திராணி உள்ளதா? மறுத்தால் கர சேவைக்கு களமிறங்கலாம் வாருங்கள் என காவிகளை கூப்பிடுங்கள்.
விழித்துக் கொள்ளுங்கள் இந்துக்களே!
நம் நாட்டை சூறையாடி வரும் கார்ப்பரேட் எஜமானர்களில் ஆகப்பெருமான்மையினர் இந்துக்கள் தான். கோவை பொறுத்தவரை நாயுடுக்களாகவோ கவுண்டர்களாகவோ செட்டியார்களாகவோ இருந்தாலும் இந்துக்களுக்காக பொங்குவதற்கு சங்கிகள் தயார் இல்லை. கார்ப்பரேட் அடிவருடி கொள்கையை முன்னெடுத்து வரும் மோடி அமித்ஷா தலைமையிலான பாசிச பாஜக அரசானது பிற அனைத்து வர்க்கத்தினரையும் கொடூரமாக நசுக்கவே துணை நின்று வருகிறது. ஆனால் வானரக் கூட்டங்களை மேய்க்கும் உயர்மட்ட தலைமையினர் இதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தான் இருக்கின்றனர். தொழிலாளர்களும் சிறு முதலாளிகளும் பட்டு வரும் துன்பங்கள் கண்ணிலையே தெரிவதில்லை. இந்துக்களுக்கு எல்லாம் கிடைத்து விடுகிறது என்று நாக்கூசாமல் புளுகிக்கொண்டு, கல்லாகட்டி கலவரம் நடத்த பிள்ளையாரை கையில் எடுக்கிறது இந்து முன்னணி கூட்டம்.
தமிழகமும், ஒட்டுமொத்த இந்தியாவும் கார்ப்பரேட் கொள்ளைக்கே! இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் கார்ப்பரேட்டுகளின் நவீன கொத்தடிமைகளே என்றுதான் மோடி அரசு சர்வாதிகாரம் செய்து வருகிறது.
இதை ஏற்க மறுத்து போராடாமல் நமக்குள் அடித்துக்கொண்டு நாசமாய் போக வேண்டும் என்று தான் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று பிளவுபடுத்த பார்க்கிறது காவி கும்பல்.
இப்படி ரத்தம் குடிக்கும் ஓநாய்கள் ஆகிவரும் காவி பாசிஸ்டுகளை தெருவிற்குள் கால் பதிக்க விடாமல் விரட்டி அடியுங்கள். உங்களுக்கு பிள்ளையாரை பிடிக்கும் என்றால் கோவிலில் சென்று கும்பிடுங்கள். ஆர் எஸ் எஸ் காலிகள் நடுத்தெருவில் வைக்கும் பத்தடி பிள்ளையாரை புறக்கணியுங்கள்.
இளமாறன்.