சாதி வேறுபாடு பார்க்காமல் நோயுற்ற உடலை தொட்டும், கழிவுகளை, அழுகிய பாகங்களை சுத்தப்படுத்தவும் வேண்டிய மருத்துவத் தொழிலையே கேவலமானதாக ஆரம்பத்தில் ஒதுக்கி வைத்திருந்தனர் பார்ப்பனர்கள்.  பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு, அவர்களில் பலர் மருத்துவராக, உயர்ந்த சமூக அந்தஸ்து உள்ளவர்களாக, அதாவது கடவுளாலேயே முடியாததை மருத்துவர்கள் சாதிக்கும் திறனைப் பார்த்த பார்ப்பனர்கள் பின்னர் மருத்துவத் தொழிலை சொந்தமாக்கி கொள்ள முனைந்தனர். அதனால்தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு அவர்களுக்கு மட்டுமே தெரிந்த மொழியான சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்றெல்லாம் விதிகள் வைத்துக் கொண்டனர் . பின்னர் வந்த நீதி கட்சி ஆட்சியில்தான் 1916-இல் இவ்விதி ரத்து செய்யப்பட்டது. அது முதல் சாமானியர்களும் மருத்துவராகலாம் என்ற கனவு நிறைவேறி வந்தது, பார்ப்பனர்களுக்கும் இது உறுத்தலாகவே  இருந்து வந்தது.

திராவிட கட்சிகளின் ஆட்சியில்தான்  இந்தியாவிலேயே எந்த மாநிலத்தையும் விட மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும், மருத்துவர்களின் விகிதமும்,  மாவட்டம் தோறும் அரசு மருத்துவக்கல்லூரிகள், வார்டுகள் தோறும், கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்  என்று சிறந்த மருத்துவ கட்டமைப்பும் உள்ளது.  இதுதான் சவுக்கு சங்கர் கேட்கும்  தமிழகத்தின் ஸ்பெஷாலிட்டி.  12-ஆம் வகுப்பில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண் எடுத்து கட்-ஆப் அடிப்படையில் எந்தவித கோச்சிங் சென்டருக்கும் செல்லாமலேயே சாமானியர்களுக்கும் மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்து வந்தது. இதன் மூலம் மருத்துவராக விரும்பும் மாணவர்கள் வேதியியல், உயிரியல் போன்ற பாடப்பிரிவுகளில் ஆர்வத்துடன் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் போதும் என்ற நிலைதான் இருந்தது.  மருத்துவ படிப்பில் தனியார் கல்லூரிகளின் நுழைவு அதிக கட்டணம், ஆள்மாறாட்டம் போன்ற பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுத்தது.  ஆதலால் தனியார் மருத்துவக்கல்லூரிகளை முறைப்படுத்தவேண்டிய கோரிக்கையும் பரவலாக எழுந்தது.

இதையும் படியுங்கள்: ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை கொடும் கனவாக்கும் நீட் தேர்வு!

முந்தைய காங்கிரஸ் அரசால் தனியார் மருத்துவக் கல்லூரிகளை கட்டுப்படுத்துவது என்ற பெயரில் NEET தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.  அத்தேர்வுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தன. உச்சநீதிமன்றம் NEET தேர்வுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் பின்னர் வந்த பாஜக அரசு  உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தொடுத்து தேர்வுக்கு அனுமதிவாங்கியது. இச்சட்டத்தை அமல்படுத்தும்போது தனியார் கல்லூரிகளை ஒழுங்குபடுத்தும் பகுதிகளை நீக்கியும் வேண்டுமானால் மாநில அரசுகளே இத்தேர்வை நடத்திக் கொள்ளலாம், மாநில அரசுகளின் விருப்பப்படியே கேள்வித்தாள்களை வடிவமைத்துக் கொள்ளலாம் என்பதை மாற்றி,  ஒன்றிய அரசின் NCERT-தான்  தேர்வை நடத்தும் என்றும் கேள்வித்தாள்கள் CBSE சிலபஸ் அடிப்படையில்தான் இருக்கும் என்றும்  புதிய விதிகளை புகுத்தி  NEET என்ற புதிய தேர்வுமுறையை மாணவர்கள் மீது வலிந்து திணித்தது.  இதனால்  மாநில மற்றும் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்கள் கோச்சிங் சென்டர்களுக்குச் சென்று பல லட்சங்கள் செலவழிக்காமல் NEET தேர்வில் தேறமுடியாது என்ற நிலை உருவானது.

NEET என்னும் பலிபீடம் அமல்படுத்தப்பட்ட 2017-ஆம் ஆண்டிலேயே ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்து, மருத்துவராகும் இலட்சியத்துடன் பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் படித்து 1200-க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்த அனிதாவை “நீ மருத்துவராகும் தகுதியில்லாதவள்” என்று முதல் பலியாகக் காவுவாங்கியது . அது முதல் தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் அடுத்தடுத்ததாக இதுவரை  இருபதுக்கும் மேற்பட்டவர்களை NEET தேர்வு பலிவாங்கி இருக்கிறது. அந்தப் பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர்கள்தான் மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும்  அவரின் தந்தையும். தமிழ்நாடு தவிர ராஜஸ்தானில் NEET கோச்சிங் சென்டர்களின் நகரான  கோட்டாவில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது சமீபத்திய செய்திகளில் அம்பலமாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் கொடு! – ஆர்ப்பாட்டம்.

NEET தேர்வின் முதல் பலியான அனிதாவின் மரணத்தின் போது அப்போதைய மகஇக பொதுச்செயலாளர் மருதையன் பேசி வெளியிட்ட வீடியோவில் NEET தேர்வின் ஆழ அகலத்தையும், அதன் நோக்கத்தையும், விளைவுகளையும் தெளிவாக விளக்கியிருந்தோம். NEET தேர்வின் மூலம் பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்பதையும்,  NEET கோச்சிங் சென்டர்களின் பகல் கொள்ளைக்கு வழிவகுக்கும்  என்றும்,  NEET-ல் தேறினால்தான் ஒருவர் மருத்துவராக முடியும் என்றால்  பிறகு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருந்தோம்.  நாம் சொன்னதைப்போலவே NEET கோச்சிங் என்பது சுமார் ஒரு லட்சம் கோடிகள் பணம் புழங்கும் ஒரு வியாபாரம் ஆகிவிட்டது.  NEET தேர்வுக்கு முன்பிருந்ததை விட  தனியார் கல்லூரிகளில் பல மடங்கு  கட்டணக்கொள்ளையும், ஆள்மாறாட்ட முறைகேடுகளும் அதிகரித்து உள்ளது. இது தவிர NEET தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 70 மதிப்பெண்கள் எடுத்தால்கூட பணமிருந்தால் மருத்துவம் படிக்கமுடியும் என்ற அவலமும்  அம்பலமாகியுள்ளது. மாணவர்களின் தரத்தை உறுதி செய்வதற்காகவே NEET தேர்வை  அமல்படுத்தினோம் என்று கூறிக்கொண்டவர்கள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?  இதுதான் தரமா?  பணம் இருந்துவிட்டால்  தரம் தன்னால் வந்துவிடுமா?

எல்லாத் துறைகளிலும் குறிப்பாக மருத்துவத்துறையில் தமக்கு போட்டியாக சூத்திரர்களும் பஞ்சமர்களும் வருகிறார்கள் என்று மனதுக்குள் கருவிக் கொண்டிருந்த பார்ப்பனர்களுக்கு  மருத்துவக்கல்லூரிகளில்  சேர சமஸ்கிருதம் தேர்ச்சி என்பதற்கு பதிலாக NEET-ல் தேர்ச்சி  என்ற  முறை தமக்கான ஆபத்பாந்தவனாக அரவணைத்துக் கொண்டனர். அதனால்தான் அனிதா மரணத்தின் போது “ஏன் டாக்டர் படிப்புதான் படிக்கணுமா ? இந்த நர்சிங், லேப்டெக்னீசியன் போன்ற படிப்புகள் படிக்கக்கூடாதா? என்று நக்கலாகக்கேட்டனர். தற்போது அதே கேள்வியைத்தான் சீமான், சவுக்கு சங்கர் போன்ற துரோகிகளும், அரசியல் ப்ரோக்கர்களும் கேட்டு ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் சதித்தனத்தை நியாயப்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் NEET தேர்வுக்கு ஒப்புதல் அளித்த அதிமுக அடிமைகளும் எகத்தாளம் பேசிக்கொண்டு திரிகின்றனர்.

NEET தேர்வை ரத்து செய்வோம் என்று ஆட்சிக்கு வந்த திமுக வெறும் சட்டப்போராட்டத்தின் மூலமாகவே  தமிழகத்திற்கு விலக்கு பெறமுடியும் என்று மக்களை மாயையில் ஆழ்த்த முயற்சிக்கிறது. NEET ரத்து செய்ய வேண்டுமானால் அதற்கு முதற்படியாக இந்திராகாந்தி காலத்தில் பொதுப்பட்டியலுக்கு போன கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.  அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்துக்கு மட்டும் NEET-லிருந்து விலக்கு என்பது பலவீனமான வாதமாகும்.  அதை முன்வைத்து சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் ஒவ்வொரு ஆண்டும் NEET பலியைத் தடுக்கமுடியாது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, அரசு பள்ளிகளில் NEET கோச்சிங் என்பதெல்லாம் மறைமுகமாக NEET-டை ஏற்றுக்கொண்டதாகத்தான் அர்த்தம் கொடுப்பவை. இவற்றையே சுட்டிக்காட்டி நாளை நீதிமன்றத் தீர்ப்புகள் வரலாம். ஆகவே முதலில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதுதான்  NEET-டை ரத்து செய்வதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும்.

இருக்கும் மாநில உரிமைகளையும் ஒவ்வொன்றாக பறித்து மத்தியில் குவிக்கும் பாசிச பாஜகவின் ஆட்சியில் இது சாத்தியமா என்று கேள்வி கண்டிப்பாக வரும்.  ஆம் சாத்தியமே!  அன்று மக்கள் அதிகாரமும்,  இடதுசாரிகளும், முற்போக்காளர்களும் எழுப்பிய கேள்விகளை இன்று பயாசுதீன்களும், அம்மாசியப்பன் ராமசாமிகளும்  கேட்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்தக் கேள்விகளை இந்தி எதிர்ப்பு போராட்டம் போல, ஜல்லிக்கட்டு போராட்டம் போல,  ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் போல பெருவாரியான மக்கள் கேட்கும்போது எப்பேர்பட்ட அரசாக இருந்தாலும் மக்களின் குரலுக்கு அடிபணிந்துதான் ஆக வேண்டும். அதுதான் வரலாற்றின் விதி.  அத்தகைய மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதே NEET-டை ரத்து செய்வது மட்டுமின்றி  பாசிஸ்டுகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கும் தீர்வு.    அதற்காக மக்களிடம் செல்வோம், மக்களை அணியப்படுத்துவோம்.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here