ந்தியாவை பார்ப்பன மேலாதிக்கத்தின் கீழ்,  கொடூரமான ஆரிய-பார்ப்பன சாம்ராஜ்யமாக மாற்ற, ஒரு நூற்றாண்டு காலமாக கனவு கண்டுவரும் ஆர்எஸ்எஸ், எப்போதும் ஒரு தேசபக்த இயக்கம் கிடையாது. மூன்று நூற்றாண்டுக் காலம் பிரிட்டன் இந்தியாவை ஆட்சி செய்த போது, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத இயக்கம் ஆர்எஸ்எஸ் மட்டுமே. இந்த தேசபக்தர்களின் குறளி வித்தைகளை நாம் அம்பலப்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும். ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் ஏவலாளியாக செயல்படுவதன் மூலம் அவர்களே தங்களின் தேசபக்த முகமூடியை கழட்டிக் கொள்ளும் நிகழ்வு தொடர்ந்து எதாவது ஒரு வழியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

1990-களில் அமல்படுத்தப்பட துவங்கிய தனியார்மயம், தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கும், அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கும் மறுகாலனியாக மாற்றுகின்ற திசையில் வேகமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறது. காங்கிரசு இந்த வேலையை திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்கவில்லை என்பதால் ‘இந்து தேசிய உணர்வை’ போர்த்திக் கொண்டு, ஏகாதிபத்திய அடிவருடிகளாகவும் கார்ப்பரேட் கொள்ளைக்கு துணை போகின்ற அடியார் படையாகவும் செயல்படுகின்ற ஆர்எஸ்எஸ், பாஜகவினரை தெரிவு செய்து 2014 முதல் இந்தியாவின் ஆட்சி கட்டிலில் அமர்த்தியுள்ளது  உலகை கட்டுப்படுத்தும் கார்ப்பரேட்டுகள்.

 

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், அதாவது ஆர்எஸ்எஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், அது அமுல்படுத்தி வரும் அரசியல் – பொருளாதாரக் கொள்கைகள் இந்த நாட்டின் உழைப்பாளி மக்களான விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்ஆகிய  அனைவரின் கடைசி சொட்டு ரத்தத்தையும், உறிஞ்சுகின்ற கொடூரமான மிருகத்தைப் போல செயல்பட்டு வருகிறது.

நாட்டின் பெரும்பான்மை மக்களின் உழைப்பை சுரண்டி, ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் உள்ள கார்ப்பரேட்டுகளுக்கும், இந்தியாவில் உள்ள தேசங்கடந்த தரகு முதலாளிகளுக்கும், படையல் வைப்பதில் ஆர்எஸ்எஸ் முன்னிலையில் உள்ளது.

ஆர்எஸ்எஸ் முன் வைக்கின்ற சுதேசி, தேசபக்தி என்ற முழக்கங்களும் சரி, இந்துக்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பஜனைகளும் சரி, அப்பட்டமான மோசடி என்பதை சமீபத்தில் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை தோலுரித்து காட்டிவிட்டது. ஆர்எஸ்எஸ் புரவலர்களில் ஒருவரான தேசங்கடந்த தரகு முதலாளி அதானி உலகின் முதல் நிலை பணக்காரராக மாறுவதற்கு ஆர்.எஸ்.எஸ்-சும், நாக்பூரில் உருவாக்கப்பட்ட அதிகார வர்க்கமும். நாட்டின் பிரதமரும் சேர்ந்து செய்த சதித் திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக அம்பலமாகி நாறி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் 2,000 இசுலாமியர்களை இனப்படுகொலை செய்து அதன் மூலமாக ‘சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்களின்’ பிரதிநிதியாக தன்னை ப்ரொமோட் செய்து கொண்ட மோடி மீண்டும் ஒரு முறை பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தினால் அம்பலப் படுத்தப்பட்டுள்ளார். இந்தியாவில் நிலவுகின்ற சட்டம், நீதித்துறை போன்றவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்-சால் மிரட்டப்பட்டும் விலைக்கு வாங்கப்பட்டும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி களால் நிரப்பப்பட்டும் ஒரு சார்பான, வர்க்க நீதி மட்டுமே நிலைநிறுத்தப்பட்டுள்ள சூழலில் இத்தகைய ஆவணப்படம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டை திவாலாக்கும் பொருளாதார பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதானியும், குஜராத் இனப்படுகொலை நடத்திய பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் கும்பலும், ஒரே சித்தாந்த அடிப்படை கொண்டவர்கள். எனவேதான் ஆர்எஸ்எஸ்-சும், அதானியும்  கொலைகார, கொள்ளைக்கார ‘அர்த்தநாரீஸ்வரர்கள்’ என்று குறிப்பிடுகிறோம்.

பங்கு சந்தை காட்டும் போலியான வளர்ச்சியும்!
உண்மைப் பொருளாதாரமும்!    

பங்கு விற்பனைகளையும், பங்கு சந்தை மோசடிகளையும் புரிந்துக் கொள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தாயகமான அமெரிக்காவிலிருந்து தொடங்குவோம். “பங்கு சந்தைகளின் அசாதாரணமான உயர்வு, முற்றிலுமாக ஒரு நாட்டின் உற்பத்தியில் இருந்து தொடர்பற்று இருக்கிறது” என்பதுதான் அமெரிக்க பொருளாதாரத்தின் மிக வெளிப்படையான ரகசியமாகும். ஒரு எடுத்துக் காட்டாக 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி குறித்த ஒரு ஆய்வானது 2016 க்கு முன்பு முந்தைய மூன்று ஆண்டுகளின் சராசரிக்கும் குறைவாகவே அதாவது 2013 ஆம் ஆண்டு அமெரிக்க உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி வெறும் 1.8 சதவீதம் மட்டுமே இருந்தது என்ற போதிலும் S&P-500 பங்கு குறியீடு 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருந்தது.

2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் மூன்று சதவீதத்திற்கும் கீழ் சுருங்கிய போதிலும் கூட, அமெரிக்காவில் இயங்கும் மூன்று பங்கு சந்தைகள் அதன் குறியீடுகளை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. அதே ஆண்டில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனமான மைக்ரோசாப்ட், நோக்கியாவின் செல்பேசி பிரிவை ஏழு பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியது. ஆனால் அதற்கு நேர் எதிராக உலகெங்கிலும் அதன் பணியாளர்கள் 18,000 பேரை வேலை நீக்கம் செய்தது.

அமெரிக்க பொருளாதாரத்தில் அதிகரித்து வந்த கார்ப்பரேட் லாபங்கள் மற்றும் பங்கு மதிப்புகள், பரந்த பெரும்பான்மை அமெரிக்க மக்களின் சமூக நிலைமைகளில் முன்னேற்றத்தை உருவாக்குவதற்கு பதிலாக பெரும் சரிவை உண்டாக்கியது. அது பற்றிய ஒரு ஆய்வு, பண வீக்கத்திற்கு ஏற்ப ஈடு கட்டப்பட்ட ஒரு சாதாரண அமெரிக்க குடும்பத்தின் நிகர மதிப்பு 2003 மற்றும் 2014-க்கு இடையில் 36 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்தது.

இந்த பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்ட அமெரிக்க மத்திய வங்கி அதாவது பெடரல் வங்கி அதன் வட்டி விகிதங்களை பூஜ்ஜியம் அளவிற்கு குறைத்தது என்ற போதிலும் அதன் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய முடியவில்லை என்று அப்போதைய ஆய்வுகள் தெரிவித்தன. குறிப்பாக அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், முதலீட்டு நிதி நிறுவனம் ஒன்றின் நிர்வாகியுமான ஜோன் பி ஹாஸ்மேன் இந்த வீழ்ச்சியை சுட்டிக் காட்டி விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்:

பணக்காரனுக்கு பணத்தை சேர்க்கும் சுதந்திரத்தை பாதுகாத்தால்தான், அது பொங்கி வழிந்து ஏழைகளுக்கு போய் சேரும் என்பதுதான் அமெரிக்க முதலாளித்துவத்தின் நம்பிக்கை ஆகும். இதனைத் தான் பொருளாதார நிபுணர்கள் ‘கீழே கசியும் கோட்பாடு’ (Trickle down policy) என்று அழைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் இந்த பொருளாதாரக் கொள்கையை அமெரிக்க முதலாளித்துவ பொருளாதார வல்லுநர் ஜான் கென்னத் கால் பிரையித் கடுமையாக விமர்சித்தார்.

இந்த கீழே கசியும் கோட்பாட்டை விமர்சித்த அவர் இந்த கோட்பாடு “குதிரைக்கு போதுமான அளவிற்கு ஓட்ஸ் தானியத்தை ஊட்டி விட்டால் அது குடல் வழியாக கடந்து வெளியேறும் பொழுது சில தானியங்கள் குருவிகளுக்கு உணவாக கிடைக்கும்” என்று கூறுவதைப் போல உள்ளது. அதாவது குதிரைக்கு அதிகமாக ஊட்டினால் அது போடும் சாணி மூலம் குருவிகளுக்கு கிடைத்துவிடும் என்பது போல தான் இந்த கீழே கசியும் கோட்பாடு உள்ளது என்று விமர்சித்தார்.  பணக்காரர்களிடம் பெருகும் பணப்பெருக்கம் ஏழைகளுக்கு நல்லது என்பது ஒரு ஏமாற்று வித்தை என்றார். “எக்கனாமிக்ஸ் ஆஃப் இன்னோசென்ட் பிராடு” என்ற நூல் மூலமாக இதனை அம்பலப்படுத்தினார்..

1995 முதல் 2000 வரை நிகழ்ந்த ‘டாட்காம் குமிழி’ என்பது ‘டாட்காம்’ என்ற பெயரில் அம்பலமான, இணைய அடிப்படையிலான வணிகங்களில் ‘ஊகங்களால் ஏற்பட்ட பங்குச் சந்தை குமிழி’ ஆகும்.  இணைய பயன்பாடு அதிகரித்தவுடன் அதில் பங்கு சந்தை சூதாடிகளான முதலீட்டாளர்கள், தங்களது  முதலீடுகளை குவிக்க துவங்கினர். கொஞ்சம் கொஞ்சமாக பங்குகளின் மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் பங்குகளுக்கு அதிகபட்ச மதிப்பு வந்தவுடன் பங்குகளை சந்தையில் விற்கத் துவங்கினர். இதனால் பங்குகளின் மதிப்பு குறைந்து ஊதிப் பெருக்கப்பட்ட குமிழி வெடித்தது. அதன் விளைவாக பல நிறுவனங்கள் திவால் ஆனது. அப்போது சுமார் 5 லட்சம் ட்ரில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டது.

அதுபோலவே 2000 ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் பிரபலமான வீட்டு வசதி கடன் அட்டை மூலமாக உருவாக்கப்பட்ட குமிழியும் இதே போன்ற ஒரு நெருக்கடியை சந்தித்ததன் விளைவுதான் 2008-ல் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஆகும். அது பற்றி ஏற்கனவே விரிவாக புதிய ஜனநாயகத்தில் எழுதி உள்ளோம்.

இந்த வகையில் பங்கு சந்தைகளின் அசாதாரணமான உயர்வு முற்றிலும் பொருள் உற்பத்தியுடன் தொடர்பில்லாமல் தனியே வேறொரு மதிப்பை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதுதான் அமெரிக்க பொருளாதாரத்தின் வெளிப்படையான ரகசியம்.

புதிய தாராளவாதமும்!
பங்கு சந்தை மோசடிகளும்!

இந்தியாவில் புதிய தாராளவாதக் கொள்கை என்ற மறுகாலனியாக்க கொள்கை அமல்படுத்த துவங்கியது முதல், அமெரிக்காவில் திவாலான மேற்கண்ட பாணியிலான பொருளாதாரக் கொள்கையை, அதாவது கார்ப்பரேட்டுகளை எவ்வித கட்டுப்பாடும் இன்றி நாட்டின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள், வங்கிகள், தொலைதொடர்பு, இன்சூரன்ஸ், ராணுவம் உள்ளிட்டு அனைத்து துறைகளிலும் சூறையாடுவதற்கு அனுமதி கொடுத்ததன் மூலம் செயற்கையாக வளர்ச்சிப்பாதையில் முன்னேறிக் கொண்டிருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கினர்.

 

இந்த அந்நிய முதலீடுகளும் சரி, பங்கு சந்தை மூலமாக நிறுவனங்களை கைப்பற்றுகின்ற முயற்சிகளும் சரி, உற்பத்தியில் மூலதனத்தை இறக்கிவிட்டு பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பதிலாக, ஒரு சில ஊகவணிக சூதாடிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மக்களின் கையில் உள்ள சேமிப்பு பணம் அனைத்தையும் வாரிக் கொண்டு போகும் மோசடித்தனம் தான் ‘வளர்ச்சி’ என்று ஏமாற்றப்பட்டது.

நிதி மூலதனத்தின் ஆகக்கேடான வடிவத்தில் இருந்து பிறக்கின்ற பாசிசமானது, இது போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகளின் சொத்துக்கள்; வளர்ச்சி அடைவதற்கும், ஒருவேளை சில சிக்கல்களினால்  வீழ்ச்சி அடையும் போது, அந்த பாதிப்புகளை அந்த நாட்டில் உள்ள மக்களின் தலையில் கட்டுவதற்கும்,உதவுகின்ற “ஜனநாயகமற்ற பாசிச வழிமுறைகள்”. ஆகும்.

ஹிண்டன்பர்க் அறிக்கையும்!
அதானி குழும மோசடிகளும்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற முதலீடுகளை ஆராய்ச்சி செய்கின்ற நிறுவனமானது, ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அதானி குழுமத்தை பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாக இரண்டு வருட காலம் அதானி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரிகள் மற்றும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்தி இறுதியில் அந்த அறிக்கையை வெளியிட்டது.

‘அதானி மற்றும் அவரது குழுமம் கார்ப்பரேட் வரலாற்றில், குறுகிய காலத்தில் உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற மிகப்பெரிய இடத்திற்கு திடீரென்று எப்படி வளர்ந்தார்?’ என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்ட அந்த அறிக்கை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து சேர்த்துள்ளதாக கூறியுள்ளது என்ற போதிலும், முக்கியமாக  அதானி குழுமத்திற்கு உட்பட்ட ஏழு முக்கிய நிறுவனங்களின் பங்கு விலை இந்த மூன்று ஆண்டு காலத்தில் சராசரியாக 819 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதான் அதானியின் சொத்துக்கள் திடீர் வளர்ச்சி கண்ட இரகசியம். இந்த முக்கியமான பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்கள் அனைத்தும் கணிசமான கடன்களை பெற்றுள்ளன. கடன்களுக்காக தங்கள் சொந்த குழும உறுப்பினர்களால் செயற்கையாக அதிகப்படுத்தப்பட்ட பங்குகளை அடகு வைத்து மூலதனத்தை திரட்டியுள்ளன.. இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த குழுவையும் ஆபத்தான நிதி நிலைக்குள் தள்ளியுள்ளது.

கௌதம் அதானின் இளைய சகோதரர் ராஜேஷ் அதானி 2004-2005 ஆம் ஆண்டில், செயற்கையாக வருவாயை உருவாக்குவதற்காக போலியான நிறுவனங்களை பயன்படுத்தி, வைர வர்த்தகத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் குற்றம் சாட்டியுள்ளது. போலி மற்றும் வரி மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ராஜேஷ் அதானி குறைந்தது இரண்டு முறை கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த மோசடி மன்னன் தான் அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றார்.

அதானியின் மைத்துனரான சமீர் ஓரா, வைர வர்த்தக ஊழலின் தலைவன் என்று டி ஆர் ஐ குற்றம் சுமத்தியுள்ளது. இத்தகைய ஊழல் பெருச்சாளிதான் அதானி குழுமத்தின் ஆஸ்திரேலிய பிரிவின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதானியின் மற்றொரு சகோதரரான வினோத் அதானி பண மோசடி வரி செலுத்துவோர்களின் நிதிகளை திருடுவது, ஊழல் உள்ளிட்ட கிரிமினல் குற்ற செயல்களில் 17 பில்லியன் அமெரிக்க டாலரை மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இவர்தான் அதானி ஆயில், கேஸ், எரிசக்தி, கிரீன் எனர்ஜி போன்ற துறைகளில் பல மோசடிகள் மூலமாக சொத்துக்களை வாங்கி குவித்த உத்தமர். வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்க உதவிய நிர்வாக இயக்குனர்.

அதானியின் சகோதரர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மூலம் உருவாக்கப்பட்ட 38 போலி நிறுவனங்கள் மொரிஷியஸ் தீவில் செயல்பட்டு வந்ததை ஹிண்டன்பர்க் கண்டறிந்தது. இந்த மோசடிகள் தொடர்பாக 88 கேள்விகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதற்கு பதில் அளித்த அதானி குழுமம் 413 பக்க பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கைகளின் மூலம் முதலீட்டாளர்களை நம்பிக்கை கொள்ள செய்ய முடியவில்லை. மாறாக அதானி குழுமத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் தமது பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யவும் அல்லது விலக்கிக் கொள்ளவும் துவங்கினர். இதனால் அந்த நிறுவனம் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து 146 பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது மொத்த சொத்து மதிப்பில் 60% வீழ்ந்து, 26 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வெளியில் அதானியிடம் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் ஹிண்டன் பர்க் அறிக்கை வெளியானவுடன் கூச்சலிட்டனர். அதில் குறிப்பாக ஜார்ஜ் சோரஸ் போன்ற பங்கு சந்தை மோசடி பேர்வழிகள், இது பற்றி கூச்சலிட்டு அதானியை விமர்சிக்க துவங்கியவுடன் ‘ஜார்ஜ் சோரஸ் ஒரு மோசடி பேர்வழி, அதானி குழுமத்தில் எந்த சிக்கலும் இல்லை’ என்று எஜமான விசுவாசத்துடன் சத்தியம் செய்ய துவங்கியது இந்திய நிதி அமைச்சகம்.

இந்த ஜார்ஜ் சோரஸ் உலக பங்கு சந்தையில் ஒரு பில்லியனர் முதலீட்டாளர் மற்றும் ஊக வணிப சூதாடி. அவர் மோடி-அதானி மோசடி பற்றி நேரடியாக பேசாமல், “இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தும் பின்னடைவு இருந்து வருகிறது. அங்கு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திரமோடி ஒரு இந்திய தேசியவாத அரசை உருவாக்கி அரை தன்னாட்சி முஸ்லிம் பிராந்தியமான காஷ்மீரில் தண்டனை நடவடிக்கைகளை திணிக்கிறார். மேலும் அச்சுறுத்துகிறார். மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என கருதுகிறார். இவை இரண்டும் நாகரிகத்தின் உயிர் வாழ்வை அச்சுறுத்தும் இரட்டை சவால்கள்” என்று கூறியுள்ளார். இது போன்ற சர்வாதிகார அரசாங்கங்கள் மற்றும் காலநிலை நெருக்கடியை எதிர்த்து போராடுவதற்காக உலகளாவிய பல்கலைக்கழகத்தை தொடங்கி ஒரு பில்லியன் டாலர் செலவழிக்க போவதாகவும் கூறியுள்ளார். மோசடிகளுக்கே மோடியை பிடிக்கவில்லை!

நாட்டின் முதலிடத்தை பிடித்த அதானி!
வளர்ந்த ‘வளர்ச்சிப் பாதை’!

மோடி ஆட்சிக்கு வந்த பிறகான மிகக்  குறுகிய காலத்தில் உலகில் இரண்டாவது பெரிய பணக்காரனாகவும், நாட்டின் முதல் பணக்காரனாகவும் மாறிய திருவாளர் கௌதம் அதானி திடீரென்று தற்போது 26 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

கௌதம் அதானி உள்ளிட்ட தேசக்கடந்த தரகு முதலாளிகள் பங்கு சந்தை மூலமாக பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தியதை வைத்துக் கொண்டு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்வதாக செயற்கையாக. ஊதிப் பெருக்கினார்கள். குமிழியை போல் திடீரென்று ஊதிப் பெருக்கப்பட்ட இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்வதாக பித்தலாட்டம் புரிந்ததையும் அதானி குழுமத்தின் வீழ்ச்சி பறைசாற்றியுள்ளது.

பங்கு சந்தை, ஊக வணிகம் போன்ற சொல்லாடல்களின் உண்மையான பொருளை புரிந்து கொள்ள முடியாதவர்கள் இன்று அதானியின் வீழ்ச்சியை கண்டவுடன் முதலாளித்துவ பொருளாதாரத்தின் யோக்கியதை சந்தி சிரிப்பதை கண்டு புரிந்து கொள்ள துவங்கியுள்ளனர்.

அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சி அடையத் துவங்கியவுடன் அதானி பொறி கலங்கி நிற்கவில்லை. மாறாக “சவால்களை கையாள்வதில் இருந்து எனது சிலிர்ப்பை பெறுகின்றேன் அவை பெரிதாக இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று திருவாய் மலர்ந்தார்.

செயற்கையாக பொருளாதாரக் குமிழிகளின் மூலமாக உருவாக்கப்படும் கார்ப்பரேட் நிறுவன பங்கு பத்திரங்கள் மற்றும் அதன் சொத்துக்கள், அவற்றின் உள்ளார்ந்த மதிப்புகளை விட மிக அதிகமான மதிப்புகளில் வர்த்தகம் செய்யப்படும்.. இந்த நீர்க்குமிழி பொருளாதாரத்தை வைத்துக்கொண்டுதான் அதானி குழுமம் இந்திய மக்களையும் உலக முதலீட்டாளர்களையும் தொடர்ச்சியாக ஏய்த்து வந்துள்ளது.

அரசாங்கத்திற்கு முதலீட்டாளர்களின் வணிகம் பற்றி ஆய்வு செய்வதற்கோ கண்காணிப்பதற்கோ எந்த உரிமையும் கிடையாது என்ற கூச்சல் போட்டு (Government has no business to do business) ‘தனியார்மயமே ஜெயதே’ என்று நாட்டின் பிரதமர் மோடி தலைமையில் மார்த்தட்டிக் கொண்டவர்கள் அனைவரும் அதானி குழுமங்கள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தவுடன் அரசாங்கத்திடம் இந்தியன் வங்கி மற்றும் எல்ஐசி ஆகியவற்றின் மூலம் பங்குகளை வாங்கி தூக்கி நிறுத்துவதற்கு கெஞ்சி கூத்தாடினர்.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகள், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்த பிறகு 77 ஆயிரம் கோடியில் இருந்து 53 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. சுமார் 23 ஆயிரத்து 500 கோடியை எல்ஐசி இழந்துள்ளது. அப்படி இருந்தும் எல்ஐசி மீண்டும் ரூபாய் 300 கோடியை அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளது

மக்களின் சேமிப்புகளை பங்கு சந்தை சூதாட்டத்தில் இறக்கி விடுவதற்கு மக்களிடம் எந்த அனுமதியும் பெறாமல் தானே முடிவு செய்து அதன் நிறுவன தலைவர்கள் பல லட்சம் கோடிகளை கொட்டி அழுததுதான் பாசிசத்தின் அடையாளமாகும்.

கார்ப்பரேட்டுகள் என்பதே பாசிசத்தின் விளைபொருள் என்பதை பெருமை பொங்க கூறிய முசோலினி உயிருடன் இருந்திருந்தால் தனது இந்தியப் பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு பெருமிதம் அடைந்திருப்பார்.

மோடியின் இனப்படுகொலையை உலக அளவில் அம்பலமாக்கிய பிபிசி ஆவணம் தடை செய்யப்பட்டது மற்றும் பங்கு சந்தையில் குமிழி பொருளாதாரத்தின் மூலம் வளர்ச்சி என்று பொய் பித்தலாட்டங்கள் மூலம் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்து அதில் முதலீடு செய்தவர்களை திவால் ஆக்கிய அதானி குழுமத்தின் ஜனநாயக மறுப்பு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் கார்ப்பரேட்-காவி பாசிசத்தின் அடையாளமாகவும் குறியீடாகவும் நம் கண் முன்னே நிற்கிறது

நாட்டின் உப்பு சப்பு இல்லாத பிரச்சனைகளை எல்லாம் ஊதிப் பெருக்கும் மோடி பிடிக்குள் உள்ள கார்ப்பரேட் மைய ஊடகங்கள் அனைத்தும் அதானி குழுமத்தின் கட்டுக்கடங்காத ‘காளை வளர்ச்சி’ இந்த அளவிற்கு ‘காற்றடைத்த பலூன்’ போல வீழ்ச்சி அடைந்துள்ளது பற்றி வாயே திறக்கவில்லை.

அதுபோல முதலீட்டாளர்கள் பற்றி கண்காணித்து வரும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி மற்றும் இந்தியப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கி போன்றவை ஆர்.எஸ்.எஸ்-மோடி, அதானி கும்பலை பாதுகாக்கும் வகையில் அமைதி காத்து வருகின்றன.

இது போன்ற நெருக்கடிகளின் போது மக்களிடம் பொது விவாதம் நடத்துவதோ அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படும் எம்எல்ஏ, எம்பி உள்ளிட்டவர்களிடம் விவாதம் நடத்துவதோ இல்லை. மாறாக அதிகார வர்க்கம் நேரடியாக பொருளாதாரத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயக மரபுகளின் மீது எட்டி உதைத்துக் கொண்டே பாசிச சர்வாதிகாரத்தை மக்களின் தலையில் சுமத்துகின்றனர். இதுவே கார்ப்பரேட் பாசிசமாக வெளிப்படுகிறது.

இதற்கு சமகாலத்தில் மோடி குஜராத்தை ஆட்சி செய்த போது நடந்த இனப்படுகொலை குறித்த விபரங்களை லண்டன் பிபிசி மோடி கொஸ்டின் என்ற பெயரில் ஆவணப் படங்களை வெளியிட்டது. ஆவணப்படத்தை தடை செய்து ஜனநாயகத்தின் மீது பாசிச தாக்குதலை நடத்திய மோடி ஹிண்டன்பர்க் அறிக்கையின் மீது எந்த விதமான எதிர் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அன்னிய முதலீடுகளின் மூலமாகவே நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாக பீற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்- மோடியின் ஏகாதிபத்திய சேவை மறுகாலனியாக்க பாதையில் நூறு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டுள்ளது.

அதானியும் ஆர்.எஸ்.எஸ்-சும் ஒன்னு! என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை அறியாதவர்களின் வாயில் மண்ணு என்பதுதான் தற்போதைய புதுமொழி!

புதிய ஜனநாயகம் (மார்ச் இதழ் 2023)

  • நன்னிலம் சுப்புராயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here