சமீபத்தில் ஒன்பது வயதே ஆன சிறுமி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்
அவரைப் பிரிந்து வாடும் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து கனத்த இதயத்துடன் இந்த விழிப்புணர்வுப் பதிவை எழுதத் தொடங்குகிறேன்.
முதலில் சிறுவர் சிறுமியர்கள் தற்கொலை செய்து கொள்வார்களா?
வளர் இளம் பருவத்தில் பரீட்சை முடிவுகளில் தோற்றவர்கள் காதல் தோல்வி அடைந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வதை கேள்விப்பட்டிருக்கிறோம்
குழந்தைகள் என்று வர்ணிக்கப்படும் ஆரம்ப பள்ளி பருவத்தில் இருக்கும் வயதினரும் தற்கொலை செய்து கொள்வார்களா ? என்று ஆராய்ச்சி முடிவுகளைத் தேடியதில்
ஆம்.. அரிதாக சிறுவர் சிறுமியரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தெரிய வருகிறது.
ஏற்கனவே மனநலம் சார்ந்த பிரச்சனைகள் /நோய்கள் இருக்கும் குழந்தைகள் , கவனக்குறைபாடு இருக்கும் குழந்தைகள் , குடும்பத்தில் ஏற்கனவே மனநலம் சார்ந்த பிரச்சனை இருப்பதும் குடும்பத்தில் ஏற்கனவே சிலர் தற்கொலை முயற்சி செய்திருப்பதும் ஆபத்து காரணிகளாக இருக்கின்றன.
இத்துடன் பெற்றோர் ஆரோக்கியமான இணக்கமான உறவில் இல்லாமல் இருப்பது ,
ஒற்றை பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றோரில் ஒருவரோ இருவருமோ போதை வஸ்துகளுக்கு அடிமையாக இருப்பது, குழந்தையுடன் நேரம் செலவிடாமல் இருப்பது, எப்போதும் குழந்தையின் நெகடிவ் விசயங்களை மட்டும் பேசுவது பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் அன்பும் கதகதப்பும் கிடைக்காமல் வெறுப்புக்கும் ஒதுக்குதலுக்கும் உள்ளாகும் குழந்தைகள் அதிகமாக போன்களில் ஆன்லைன் சோசியல் மீடியாக்களை பார்க்கும் குழந்தைகளுக்கு அவர்கள் பார்க்கும் வீடியோக்களில் தெரிந்தோ தெரியாமாலோ தற்கொலை குறித்த தகவல்கள் பார்க்கக் கிடைக்கின்றன.
அந்த சூழ்நிலைகள் அவர்களுக்கு நேரும் போது அதை அவர்களும் முயற்சி செய்வதும் நடக்கலாம்.
மேலும் குழந்தை பருவத்தில் அளவுக்கு அதிகமாக ஓவர் எக்ஸ்போஸ் செய்து அவர்கள் திறனையோ அழகையோ அதிகமாக பொதுவெளிக்கு காட்டுவதால் அவர்களுக்கு அதனால் ஒரு போதை உருவாகிறது. அந்த போதையின் விளைவாக அது கிடைக்காத போது
மனத்தாழ்வு நிலை ஏற்படும் வாய்ப்பும் அதனால் தற்கொலை எண்ணங்களும் வரலாம்
சோசியல் மீடியாவில் தேவையற்ற பல விளம்பரங்கள் அழகு சார்ந்த விசயங்கள் ஒப்பனை சார்ந்த விசயங்கள் போன்றவற்றை பார்க்கும் போது அது தான் அழுகின் இலக்கணம் என்று கருதி தாழ்வு மனப்பான்மை கொள்ளும் நிலையும் தோன்றலாம்
சோசியல் மீடியாவில் கிடைக்கும் நண்பர்களை அதிகம் நம்பி சிக்கலான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு தேவையற்ற பல உளவியல் ரீதியான சிக்கல்களில் சிக்கவும் வாய்ப்புண்டு
தேவையற்ற விசயங்களில் கருத்து கூறி அல்லது ஈடுபட்டு ஆன்லைன் சைபர் புல்லியிங் எனும் ஆன்லைன் ஏச்சு பேச்சு கேலிக்கு உள்ளாகும் போது பலருக்கும் தற்கொலை எண்ணங்கள் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது
பள்ளிகளில் சக மாணவர்களுடன் ஏற்படும் வம்புகள் தகராறுகள் கேலிப்பேச்சுகள் போன்றவற்றால் ஏற்படும் மனத்தாழ்வு நிலை
இப்படியாக பல காரணங்களால் சிறுவர் சிறுமியரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்
ஆய்வுகளில் சிறுவர் சிறுமியர் தற்கொலை செய்து கொள்ள அதிகம் தேர்ந்தெடுக்கும் முறையாக இருப்பது “தூக்கில் தொங்குவது” என்பதை அறிந்து அதிர்ந்தேன்.
தற்கொலை செய்து கொள்ளும் குழந்தை பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்ளும் நாளன்று அதன் பெற்றோர்களுடன் சண்டை போட்டிருக்கும் கூடவே தான் உயிரை விடப்போவது குறித்து பேசியிருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்னொரு ஆய்வில் பெற்றோர்கள் ஏதேனும் ஒழுக்கம் சார்ந்த தண்டனைகள் வழங்கும் போது உடனடி நடவடிக்கையாக தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். குறிப்பாக அவர்கள் பார்த்து வந்த போனை பிடுங்கி வைக்கும் போதும்வீடியோ கேம்களை நிறுத்தும் போதும் இது நடந்துள்ளது.
மது, புகை, கூல் லிப், கஞ்சா போன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையாகாமல் வளர்த்து வர வேண்டும்.
நினைக்கும் போது தலை சுற்றுகிறது
சரி இதை தடுக்க தவிர்க்க வழிகள் என்ன?
தாய் தந்தை தங்களுக்குள் நல்ல உறவு நிலையை வைத்திருப்பது பிள்ளைகளுடன் நல்ல தொடர்பை எப்போதும் வைத்திருப்பதுஇ யன்றவரை நண்பன் போல அனைத்தையும் கலந்தாலோசித்து பேசுபவர்களாக இருப்பது நலம்.
இயன்றவரை சோசியல் மீடியா இன்றி போன் இன்றி அவர்களது நேரத்தை கழிக்க உதவுவது
சரியான மென்ட்டல் மெச்யூரிட்டி வரும் முன்னமே அதிக அளவு மீடியாவுக்கு எக்ஸ்போஸ் செய்வது சில நேரங்களில் பாதகமாக முடியலாம்
மனநலம் சார்ந்த கவனக்குறைபாடு சார்ந்த பிரச்சனைகளை கண்டறிந்து உடனே மனநல சிகிச்சை வழங்கிட வேண்டும்
குழந்தை – தற்கொலை எண்ணம் பற்றி கூறினாலோ தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினாலோ ஒரு போதும் கவனமின்றி இருக்கக்கூடாது
கவனத்துடன் பிள்ளைகளை வளர்ப்போம்
இந்த செய்திகளை அப்படியே கடந்து செல்லாமல் நம்மை செப்பனிட ஏற்படுத்திக் கொள்ளும் தருணங்களாக நமது பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை