போலிகளை அடையாளம் காண்போம் ! புறக்கணிப்போம் !

பு.ஜ.தொ.மு பெயரை பயன்படுத்த அருகதையற்றவர்களின் முகத்திரையை கிழித்தெறிவோம்!

அன்பார்ந்த தோழர்களே !

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் செவ்வணக்கத்தை உரித்தாக்குகிறோம். தோழர்களே, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்கிற தொழிற்சங்கம் புரட்சிகர அரசியலை மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்துடன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொழிலாளர்கள் மத்தியில் செயல்பட்டு வருகிறது. தற்போது நாடெங்கும் செலுத்தப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு எதிராகவும், பாசிச நடவடிக்கைக்கு எதிராகவும் தொழிலாளர்களை, அணிதிரட்டுகின்ற புரட்சிகர வேலையை செவ்வனே செய்து வருகிறது.

கடந்த 25 ஆண்டு காலமாக முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்தும், தொழிலாளர்களின் சங்கம் அமைக்கும் உரிமைமூலம் அவர்களின் பொருளாதாரக் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கூட்டுப் பேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதை சிறப்பாக செயல்படுத்துகின்ற தொழிற்சங்கமாக செயல்பட்டு வருகிறது.

அரசு இயந்திரத்தின் தொழிலாளர் விரோத போக்குகளை உடனுக்குடன் அம்பலப்படுத்துவது, அரசுக்கு எதிராக வர்க்க உணர்வோடு தொழிலாளர்கள் போராட வேண்டும் என்ற அடிப்படையில் நாம் செயல்பட்டு வருகிறோம்.

இச்சமயம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இருந்து வெளியேறிய பா.விஜயகுமார் தன்னுடன் சிறு குழுக்களை வைத்துக் கொண்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மொத்த சங்கமும் நான்தான் என காட்டுவதற்கு பு.ஜ.தொ.மு துவக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி வெள்ளி விழா கொண்டாடுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தின் பிற மாவட்டங்களான வேலூர், திருச்சி, கோவை, கரூர், நீலகிரி மற்றும் புதுச்சேரி மாநிலம் ஆகிய இடங்களில் இல்லாமல் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மணலியில் மட்டும் பெற்ற வெற்றியை மொத்த மாநிலத்திலும் பெற்ற வெற்றியாக சித்தரிக்க உள்நோக்கத்துடன் முயற்சிக்கிறார். அவர் வசிக்கின்ற பகுதியில் ஒட்டு மொத்த அரங்கையும், குத்தகைக்கு எடுத்ததை போல ஒரு நிகழ்ச்சியை நடத்துவதாக சமூக ஊடகத்தின் வாயிலாக அறிந்தோம். அவர் இப்படி நிகழ்ச்சி நடத்துவதற்கு தகுதியானவரா?

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, 25 ஆண்டு காலம் புரட்சிகர தொழிற்சங்கமாக வீறுநடை போட்டு கொண்டு இருக்கிறது என்றால் அது வெறும் விஜயகுமார் என்கின்ற ஒரு தனி நபரால் அல்ல ! இது முழுக்க முழுக்க ஒரு கூட்டுத்துவ சிந்தனை கொண்ட மார்க்சிய லெனினிய கோட்பாடுகளால் கட்டமைக்கப்பட்ட எஃகுறுதி கொண்ட முன்னணி படையாகும். பல நூறு தொழிலாளர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து, பல ஆயிரம் தொழிலாளர்கள் தங்களுடைய உழைப்பை செலுத்தி கட்டமைக்கப்பட்ட ஒரு புரட்சிகர தொழிற்சங்கத்திற்கு தனிநபர் உரிமை கோரமுடியுமா? ’ஒன்லி ஒன் அத்தாரிட்டி’ நான் தான் என்று இவர் நிகழ்ச்சி நடத்துவதன் பொருள் அதுதானே. பிழைப்புவாத கண்ணோட்டத்தில் இருக்கின்ற நபர்கள் கூட செய்யத்துணியாத இந்த செயலை விஜயகுமார் செய்யத்துணிந்ததன் காரணம் என்ன? இவ்வாறு செய்தாவது நான் தான் சங்கம் என நிறுவத்துடிக்கிறார்.

தனக்கு அமைப்பு முறை பொருந்தாது என புரட்சிகர தொழிற்சங்கத்தில் இருந்து விலகிய விஜயகுமார் தன் பெயருக்கு பின்னால், முன்னாள் மாநிலப் பொருளாளர், பு.ஜ.தொ.மு என போட்டுக்கொள்வதற்கு தகுதியுண்டா? தான் ’புரட்சிகர’வாதி என்று நிரூபிக்க விரும்பினால் தனியாக பெயர் வைத்து செயல்பட வேண்டும். அதைவிடுத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்கின்ற பெயரின் கீழ் மாநில ஒருங்கிணைப்பு குழு கண்ணுக்குத் தெரியாத வகையில் சிறிதாக அடைப்புக்குள் போட்டுக் கொண்டு குதூகலித்தாலும், விஜயகுமார் அதையும் போட்டுக்கொள்ளத் தயங்குவது ஏன்? இப்போது அதிலிருந்து வடக்கு மண்டலம் என்று ஒரு புதிதாக ஒரு கொம்பை போட்டுக் கொண்டு ஒரே அமைப்புக்கு மூன்று அடையாளங்களை கொடுத்த மாபெரும் போலி தொழிற்சங்கவாதி! அதாவது, மருவும் – கிருதாவும் வைத்துக் கொண்டு மாறுவேடம் போட்டு வருகிறார். இதுதான் இவரின் ‘புரட்சிகர’ செயல். இந்த அயோக்கியத்தனத்திற்கு வியாக்கியானம் எழுத சிலர் !

மேலும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இருந்து வெளியேறிய சிலரை மாநில ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் இவரால் அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்டவர்கள் இவருடன் இருந்த சில மாத காலங்களிலேயே சுயரூபம் தெரிந்து, வேறு ஒரு குரூப்புடன் சென்று விட்டார்கள். அங்கும் இங்கும் ஆட்களை பிடித்து வடக்கு மண்டலம் என்ற பெயரில் ஒரு வடையை சுட்டு இருக்கிறார். இப்படி ஒரு சந்தர்ப்பவாத, பிழைப்புவாதியாக செயல்பட்டு குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிற பா.விஜயகுமார் அணிக்கு எம்முடைய வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம். இப்படி தொழிலாளார் மத்தியில் குழப்பத்தை உருவாக்குகின்ற சீர்குலைவுவாத நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் தொழிலாளர்கள் மூலமாக அப்புறப்படுத்தப்படுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அந்த வகையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற அமைப்பு 1998 -ல் துவக்கப்பட்ட போது அதில் நிர்வாகியும், நிறுவனர்களில் ஒருவரான #தோழர்_முகுந்தன் அவர்களின் காணொளியின் மூலம் உண்மையை தொழிலாளர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம், முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் தற்போது நாட்டை சூழ்ந்துள்ள கார்ப்பரேட் – காவி பாசிசத்தையும் எதிர்த்து சமரசமின்றி போராடக் கூடிய புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தலைமைக்குழு (விஜயகுமார் வெளியேறுவதற்கு) முன்பு எடுக்கப்பட்ட முடிவின்படி 2021 -ம் ஆண்டில் முறையாக மாவட்ட மாநாடுகள் மற்றும் மாநில மாநாடு நடத்தி, மாநில நிர்வாக குழு, மாநில செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறோம். மேலும் பல்வேறு நிறுவனங்களில் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றி வருகிறோம். தொழிலாளி வர்க்கத்தின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதலையும், கார்ப்பரேட்டுகளுக்கு மோடி அரசாங்கம் சிவப்பு கம்பளம் விரிப்பதை அம்பலப்படுத்தியும், கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! ஜனநாயக கூட்டரசை நிறுவோம்! என்கிற மைய முழக்கத்தின் கீழ் உழைக்கும் மக்களை அணிதிரட்டுகின்ற வர்க்க அரசியலை முன் எடுக்கும் பு.ஜ.தொ.மு -வை ஆதரிப்போம்!

அதே சமயம் தொழிலாளர்களிடம் பிளவுவாத – கலைப்புவாத – சீர்குலைவுவாத நடவடிக்கைகளை கையாளும் போலி தொழிற்சங்கவாதிகளை அடையாளம் காண்போம்! புறக்கணிப்போம்!

நன்றி !

இவண்,

மாநில நிர்வாக குழு,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு – புதுச்சேரி

தொடர்புக்கு: 944444 2374.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here