டந்த ஒரு வாரத்திற்குள், அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று வங்கிகள் திவாலாகி விட்டன. முதலில் திவாலானது சிறிய அளவிலான மூலதனத்தைக் கொண்ட, சில்வர் கேட்  வங்கி.  இந்த வங்கி நிழல் பொருளாதாரமான க்ரிப்டோகரன்சி வர்த்தகத்துடன் தொடர்புடையது . அதற்கு அடுத்தபடியாக திவாலானது  சிலிகான் வேலி  வங்கி. மூன்றாவதாக திவாலான வங்கி   சுமார் 10.00 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட்  கொண்ட சிக்னேச்சர்  எனும் இன்னொரு வங்கி.

2008 ஆம் ஆண்டு மீள முடியாத, மீண்டு எழவே முடியாத நெருக்கடியில் சிக்கிய ஏகாதிபத்திய நிதி மூலதனம்; சொல்லிக் கொள்ளும் ஜனநாயக வழிமுறைகளை எல்லாம் தூக்கிப் புதை குழியில் புதைத்து விட்டு, அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்த பாசிச வெறியாட்டங்களின் மூலம் தற்காலிகமாக தனது மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறதே ஒழிய நிரந்தரமாக தீர்வு எதையும் காண அதனால் முடியாது.

காரல் மார்க்ஸ் சுட்டிக்காட்டிய படி; முதலாளித்துவ அமைப்பில் நெருக்கடி தவிர்க்க இயலாதது  உள்ளார்ந்தது என்பதும், ஒவ்வொரு 10-15 ஆண்டுகளுக்கொரு முறை நெருக்கடி முற்றி வெடிக்கும் என்ற அவதானிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது இந்த வங்கிகளின் திவால்.

19ஆம் நூற்றாண்டிலேயே முன் வைக்கப்பட்ட மார்க்சின் பொருளாதார ஆய்வுகள்,மீண்டுமொரு முறை உண்மை என நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. 2008க்கு பிறகு ஏற்பட்ட மீள முடியாத நெருக்கடியை, ஏகாதிபத்திய முதலாளித்துவ சமூக அமைப்பு,தனக்குள் நிலவுகின்ற உள்ளார்ந்த முரண்பாடுகளை சரி செய்து இத்தனை ஆண்டு காலம் தாக்குப் பிடித்து விடவில்லை.

விழுந்த முதல் விக்கெட்!

2008-ம் ஆண்டு நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்காவில் திவாலாகும் பெரிய வங்கி, சிலிகன் வேலி வங்கி தான். 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிப்படி அதன் சொத்து மதிப்பு 209 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அதன் கணக்கில் 1,743.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் டெபாசிட் செய்யப்பட்டிருந்தன. அமெரிக்காவின் 16-வது பெரிய வங்கியாக அது திகழ்ந்தது.

புத்தாக்க தொழில் செய்யும் ஸ்டார்ட் அப் என்று அழைக்கப்படும் 2,500-க்கும் மேற்பட்ட வென்சர் கேபிட்டல் நிறுவனங்களுக்கு வங்கி சேவைகளை இந்த சிலிகன் வேலி வங்கி வழங்கி வந்துள்ளது.

அமெரிக்காவில் நிலவுகின்ற பொருளாதார மந்த நிலை காரணமாக , சிலிக்கான் வங்கி உடனடி பாதிப்புக்குள்ளான  ‘ஸ்டார்ட் அப்’ களுக்கு அதிகம் கடன் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமின்றி தனது வங்கியில் செலுத்தப்பட்டுள்ள டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் வங்கியாக சிலிகான் வங்கி இருந்திருக்கிறது.

2008 பொருளாதார நெருக்கடியில் மிகவும் பாதிப்புக்கு உள்ளான ஜெ பி மோர்கன் மற்றும் வெல்ஸ் பார்கோ போன்ற மிகப்பெரிய வங்கிகளே சிலிகான் வங்கியில் டெபாசிட் செய்திருக்கின்றன என்பதிலிருந்து, இந்த வங்கி டெபாசிட்டுகளுக்கு கொடுக்கும் வட்டி விகிதம் மிக அதிகம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கடந்த ஓராண்டாக அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தை அதிகரித்துக்கொண்டே வந்தது. இவ்வாறு வட்டி அதிகரித்தால், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தரும் வங்கிகளில்  முதலீடு செய்திருக்கும் அரசு, தனியார் கடன் பத்திரங்களின்  மதிப்பு குறையும்.

இந்த வகையில் சிலிகான் வங்கியின் பத்திர முதலீடுகள் குறைந்து கொண்டே வந்தது.  இதனால் தனது பத்திரங்களை விற்க மார்க்கெட்டுக்கு  சென்ற சமயம் அங்கு அவைகளை வாங்க யாருமில்லை. மாறாக வங்கியில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் வைப்புத் தொகையை எடுக்க படையெடுத்ததால் வேறு வழியின்றி திவால் அறிவிப்பு வந்திருக்கிறது.( தலை சுற்றுகிறதா)

தற்போது திவால் நிலைமையை அறிவித்துள்ள  சிலிகான் வங்கியின் 11% டெபாசிட் மட்டுமே காப்பீடு  செய்யப்பட்டவை, என்பதால் அந்த தொகைக்கு மட்டுமே உத்தரவாதம் உள்ளது. மீதமுள்ள 89% டெபாசிட்தாரர்களுக்கு கடன் வசூல் அடிப்படையில் மட்டுமே அவர்கள் செலுத்திய பணம் கிடைக்கும்.

இதே போன்ற நிலைமை தான் மற்ற இரண்டு வங்கிகளுக்கும். அமெரிக்காவில் வங்கிகள் திவால் அடைந்தால் அது உலகம் முழுவதும் உள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் உலக மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்கா, பொருளாதாரத்திலும் உலக பெரியண்ணன்தான்.

தற்போது ஏற்பட்டுள்ள அமெரிக்காவின் பொருளாதார மந்தம் உலகம் தழுவியது . இவ்வாறு பொருளாதார மந்த நிலையில் சிக்கிய பிரிட்டன் பிரதமர் தான் பதவியேற்ற ஒரே வாரத்தில்  பதவியை ராஜினாமா செய்து விட்டு,  விலகினார்.

அமெரிக்காவில் மிகப்பெரிய வங்கிகளில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார பாதிப்பானது, அமெரிக்க எஜமானர்களிடம் கடன் வாங்கியுள்ள, உலகம் முழுவதும் உள்ள நாடுகளைப் போலவே, இந்தியாவும் சேர்ந்தே பாதிக்கப்பட்டுள்ளதை நாம் அனுபவிக்க துவங்கியுள்ளோம்.

2008க்கு பிறகு ஏகாதிபத்திய முதலாளித்துவமும், உலகை விழுங்க வெறிகொண்டு அலையும் நிதி மூலதன ஏகபோகங்களும், வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறன. இதன் காரணமாக சர்வதேசரீதியில் மீண்டும் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளோம்.

இதையும் படியுங்கள்: வங்கிகளை சூறையாடும் கார்ப்பரேட் காவி கும்பல்

ஆனால் முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் பொருளாதார மந்தமா? இல்லவே இல்லை என்றனர்.  முதலில் அடித்து பேசிய இத்தகைய வல்லுநர்கள், பின்பு பாதிப்பு இலேசாக இருக்கும் என்று அரைகுறை உண்மையை பேசத் துவங்கினர்.

இன்று அடுத்தடுத்து மூன்று வங்கிகள் திவாலான பிறகும்  உண்மையை மறைக்க முடியுமா ? இன்றைய உலகம் பொருளாதார மந்த நிலைக்குள் சந்தேகத்திற்கிடமின்றி உழன்று கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் மீள முடியாத நிலைமைக்கும், பொருளாதார மந்தநிலையில் இருந்து மீட்சிக்கும், வட்டி உயர்வை ஏகாதிபத்திய முதலாளித்துவம் தீர்வாக முன் வைக்கின்றது.

அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இதனை தொடர்ந்து முயற்சிக்கிறது. இந்த தீர்வானது பொருளாதார ரீதியாக நிரூபிக்கப்படாத உண்மை . இருந்தாலும் எதையாவது செய்து மக்களின் கோபத்தை தணிக்க வேண்டுமே ! 1930 பெரு மந்த காலத்தில் வட்டியை குறைத்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் மூன்று முக்கிய வங்கிகள் அடுத்தடுத்து திவாலானதையொட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு வந்திருக்கிறது. திவாலாகிப் போன மூன்று வங்கிகளின் டெபாசிட் முழுவதற்கும் உத்திரவாதம் அளிக்கப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு எதுவும் கிடைக்காது. அதேபோல கடன் பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கும் எதுவும் கிடைக்காது.

அமெரிக்க அதிபர் பைடன், அமெரிக்க வங்கிகள் பாதுகாப்பாக உள்ளன என்று முதலீட்டாளர்களுக்கும் பங்கு வர்த்தக சூதாடிகளுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறார்.

ஆனால். கடன் பத்திரங்கள், பங்கு பத்திரங்களில் ஏற்பட்டுள்ள சிக்கலானது,  அமெரிக்க பொருளாதார மந்த நிலையின் துல்லியமான எடுத்துக்காட்டுகள் ஆகும். அடுத்தடுத்து ஒரே வாரத்தில் மூன்று வங்கிகளின் வீழ்ச்சி இதனை நிரூபித்துள்ளது. இந்த வரிசையில் மேலும் சில வங்கிகள் இதே நிலையை வந்தடைவது தவிர்க்கவியலாது.

உலகை சூறையாடுகின்ற ஏகாதிபத்திய நிதி மூலதனமும் நிதி மூலதன ஏகபோகங்களும் தற்காலிகமாக சில தீர்வுகளை முன்வைத்து தனது பொருளாதாரம் ஆட்டம் காணாமல் இருப்பதாக நடிக்கலாம். ஆனால், லாபம் ! லாபம்! மேலும் லாபம்! என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஏகாதிபத்திய முதலாளித்துவ சமூக அமைப்பு நீடிப்பதற்கு எந்த அருகதையும் இல்லை என்பதைப் போலவே, ஏகாதிபத்திய நிதி மூலதன பொருளாதாரம், அதனை உயர்த்திப் பிடிக்கின்ற அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளும் எந்த வகையிலும் பாதுகாப்பானது அல்ல.

மீண்டும் ஒரு பெரு மந்தத்தை நோக்கி ஏகாதிபத்திய பொருளாதார கட்டமைப்பு நகர்ந்து உள்ளது என்பதே, இந்த மூன்று வங்கிகளின் திவால் நமக்கு அறிவிக்கும் செய்தி. இந்த திவால் நிலையிலிருந்து மக்களின் சேமிப்புகளையும் பொதுத்துறை வங்கிகளையும் நிறுவனங்களையும் சூறையாடுகின்ற பாசிஸ்டுகளின் ஆட்சியின் கீழ் உள்ள இந்தியா தப்ப முடியாது என்பதே தற்போதுள்ள நிலைமையாகும்.

பா. மதிவதனி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here