ந்த வறட்சி தென் அமெரிக்க கண்டத்தை தானே பாதிக்கப் போகிறது!? இதனால் நமக்கென்ன சிக்கல் வந்துவிடப் போகிறது என்று நாம் அலட்சியப் படுத்த முடியாது. ஏனெனில் இதன் விளைவுகள் உலகையே அழிக்கும் சக்தி வாய்ந்தவை.

தென் அமெரிக்கா கண்டத்தின் வட பகுதியில் சுமார் 70 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அமேசான் காடுகளில் 39 ஆயிரம் கோடி மரங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகில் எந்த பகுதியிலும் இல்லாத மரங்கள் இங்கு காணப்படுகின்றன. 16 ஆயிரம் வகையான உயிரினங்கள் இங்கு வசிக்கின்றன.இவற்றில் ஏராளமானவை மனிதர்களால் அறியப்படாதவை. உலகில் அறியப்பட்ட பத்தில் ஒரு உயிரினம் அமேசான் மழைக்காடுகளில் உள்ளது. உலகின் பாதியளவு மழைக்காடுகள் கொண்ட அமேசான் மழைக்காடுகளின் பரப்பளவு 1.4 பில்லியன் (140 கோடி) ஏக்கர்கள் ஆகும்.

பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்ச் கயானா, ஈக்வடார் ஆகிய 9 நாடுகளில் பரந்து விரிந்து கிடக்கிறது அமேசான் காடுகள். இந்த காடுகளின் பெரும்பகுதி பிரேசில் நாட்டில் உள்ளது. இங்கு ஏராளமான வினோத பறவைகள், பூச்சி வகைகள், விலங்குகள், 200 வகையான கொசுக்கள்,  வவ்வால்கள், கொடிய விஷம் கொண்ட பாம்புகள் என நாம் இதுவரை பார்த்திராத இந்த காடுகளில் உலா வருகின்றன.

அமேசான் மழைக்காட்டில் 4,100 மைல் நீளம் கொண்ட அமேசான் ஆறு பாய்கிறது. அமேசான் ஆறு ஆயிரத்திற்கும் அதிகமான கிளையாறுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை.இத்தகைய பெருமைகளை கொண்ட அமேசான் ஆற்றிலும் காடுகளிலும் தற்போது கடும் வறட்சி  நிலவி வருகிறது. அமேசன் நதியின் சில பகுதிகளில் வெப்பம் 39⁰ செல்சியஸ் டிகிரியை தாண்டிவிட்டதால் ஏற்க்குறைய 150 டால்பின்களும், ஆயிரக்கணக்கான மீன்களும் இறந்துவிட்டன. விலங்குகள் அந்த நீரை உட்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன.

‘Nature Climate Change’ இதழில் வெளியாகியிருக்கும் புதிய ஆய்வுக் கட்டுரையின்படி, அமேசான் மழைக்காட்டில் முக்கால்வாசி, அதாவது 75% பகுதிகள் ‘Tipping Point’-ஐ எட்டிவிட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.  ஒரு காடு அதன் இயல்பு நிலைக்கு இயற்கையாகவே திரும்பும் திறனை இழக்கும் புள்ளியையே ‘Tipping Point’ என்கிறார்கள். 75 சதவிகித அமேசான் மழைக்காடுகள் வறட்சி, காட்டுத்தீ மற்றும் பிற மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தானாகவே மீளும் திறனை இழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறது புதிய ஆய்வு.

காற்றுமண்டலத்தில் இருக்கும் 15% கார்பன்-டை-ஆக்ஸைடு கூறுகளை அமேசான் மழைக்காடுகள் உறிஞ்சிக் கொள்வதன் மூலம் வளிமண்டளத்தில் கார்பனின் அளவை கட்டுக்குள் வைத்து புவி வெப்பமயமாதலை தாமதப்படுத்துகிறது. அமேசன் காடு பல்வேறு காரணங்களால் வேகமாக சுருங்கி வருவதால் அதன் கார்பனை தேக்கி வைக்கும் திறன் குறைகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஏற்கனவே மரங்களிலும் மண்ணிலும் தேக்கி வைக்கப்பட்டுள்ள கார்ட்பன்-டை-ஆக்ஸைடு கூறுகள் வளிமண்டலத்தில் கலந்து புவி வெப்பமயமாதல் வேகமெடுக்கும் அபாய நிலைக்கு தள்ளப்படுவோம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

அமேசான் காடுகளில் பூமிக்கு மேலேயும் கீழேயும் ஏறத்தாழ 250 பில்லியன் டன் அளவிலான கார்பன் கூறுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் அமேசான் காடுகளின் அளவு 17% குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இதே நிலை நீடித்தால் கார்பன் சேமிப்பு கிடங்காக விளங்கிவரும் அமேசான் காடுகள் நாளடைவில் கார்பன் விநியோக தளமாக மாறக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். அமேசானின் சில பகுதிகளில் கார்பன் டை ஆக்ஸைடு உமிழப்பட்டு வளிமண்டலத்தில் கலக்கத் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எல்-நினோ (பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வால் சில வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இயற்கை நிகழ்வு) அதீத பருவநிலை மாற்றம், காட்டு தீ, மனித காடழிப்பு செயல்கள் ஆகியவையே தற்போதைய வறட்சிக்கு காரணிகளாக இருக்கிறது. இதில் மற்ற காரணிகளுக்கு நேர்முகமாகவோ / மறைமுகமாகவோ காடழிப்பு நடவடிக்கைகள் துணைபுரிவதோடு தானும் பெரும்பங்காற்றுகிறது.

அமேசான் காடு அழிக்கப்படுவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் கால்நடை வளர்ப்பு, சோயா உற்பத்தி, காட்டுத்தீ மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவையே தற்போது முதன்மையான காரணங்களாக இருக்கின்றன. கடந்த 2001-2020 வரையிலான 20 ஆண்டுகளில் 13.4 கோடி ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அமேசான் காடுகளில்  9% என்றும் இது பிரான்ஸ் நாட்டின் ஒட்டுமொத்த பரப்பளவிற்கு நிகரானது  என்றும் 2020ம் ஆண்டு RAISG நிறுவனம் வெளியிட்ட தனது ஆய்வுகுறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக அமேசானின் 60% காடுகளை கொண்டுள்ள பிரேசிலில் வறண்ட காலங்களில் (May-September) விளைநிலங்களுக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு / ஏற்படுத்தப்பட்டு பரவி குறிப்பிடத்தக்க அளவு காட்டை அழிக்கிறது. தீ எரிந்து முடிந்தவுடன் அந்த இடம் கால்நடை வளர்ப்புக்காக  பயன்படுத்த படுகிறது. பின் பெருநிறுவனங்கள் சோயா (கால்நடை தீவனம் தயாரிப்பதற்காக) பயிரிடுவதற்காக அந்த நிலங்களை கால்நடை வளர்ப்போரிடம் இருந்து வாங்கிக் கொள்கின்றனர். பின் கால்நடை வளர்ப்போர் புதிய நிலங்களை தேடி மேலும் காட்டை அழிக்கின்றனர்.  இந்த சுழற்சி தொடர்சியாக பன்மடங்கு பெருகி வருகிறது. காடு அழிவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அனைத்து காரணங்களுக்கும் மூலமாய் கால்நடை வளர்ப்பு இருக்கிறது.

இதையும் படியுங்கள்: 

உலகமயமாக்கலுக்கு பின் உள்நாட்டு தேவைக்கான உற்பத்தி என்பது மாறி   ஏற்றுமதி வணிகத்துக்கான உற்பத்தியாக உற்பத்தியின் நோக்கம் மாறியுள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகளவில் பிரேசில் முன்னிலை வகிக்கிறது. கடந்த சில வருடங்களாக மாட்டிறைச்சி ஏற்றுமதியை பிரேசில் கணிசமாக அதிகரித்துள்ளது. மாட்டிறைச்சியோடு தோல் ஏற்றுமதியும் அதிகரித்து வருவது கால்நடை வளர்ப்பையும் அதற்காக காட்டை அழிப்பதையும் தீவிரப்படுத்துகிறது. கடந்த 2009ம் ஆண்டு கிரீன்பீஸ் அமைப்பு மற்றும் சூழலியல் போராளிகள் உலகின் முன்னணி நிறுவனங்களான Nike, Walmart, Prada போன்றவை காடழிப்பை மறைமுகமாக ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டி அதனை அம்பலப்படுத்தும் விதமாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதன் விளைவாக சட்டவிரோதமாக காடழிப்பு செய்யப்பட்ட இடங்களில் இருந்து கால்நடைகளையும், மூலப்பொருட்களையும் கொள்முதல் செய்யமாட்டோம் என பெரு நிறுவனங்கள் பிரேசில் அரசுடன் இரு ஒப்பந்தங்கள் போட்டன. இந்த முன்னெடுப்பு அப்போது பெரும் வரவேற்ப்பை பெற்றது. ஆனால் பிறகு படிப்படியாக சட்டபூர்வமாக வளர்க்கப்பட்ட கால்நடைகளுடன் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வளர்க்கப்பட்ட கால்நடைகள்  சட்ட விரோதமாக கலக்கப்பட்டு பெரு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது. நாளடைவில் இந்த சட்டவிரோத கலப்பே ஒரு தனி தொழிலாக மாறியுள்ளது.

ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது அதற்கான தேவை, அதற்கு தேவைபடும் இயற்கை வளங்கள், அவை மீண்டும் உற்பத்தியாவதற்கான கால அவகாசம், அதனால் ஏற்படக்கூடிய சுற்றுசூழல் பாதிப்புகள். அதனால் சமூகத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் போன்ற அனைத்து அம்சங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இலாபம் ஒன்றயே நவீன கார்ப்பரேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒருபுறம் காலநிலை மாற்றமும் உலக வெப்பமயமாதலும் உலகை பேரழிவிற்குள்ளாக்கும் என்ற விஞ்ஞானிகளின் எச்சரிக்கை கலக்கத்தைக் கொடுத்தாலும், வியாபார போட்டியில் பிந்தங்கி இலாபத்தை குறைத்துக் கொள்வோமோ!? என்ற தயக்கத்தால் தொண்டயில் சிக்கிய முள் போல மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன முதலாளித்துவ நாடுகள்.

இலாப நோக்கத்தை கைவிட்டால் முதலாளித்துவ உற்பத்தி முறை தொடர்ந்து நீடிக்க முடியாது. கைவிடாவிட்டால் மனித சமூகமே இவ்வுலகத்தில் நீடிக்க முடியாது என்ற கட்டத்திற்கு வந்து விட்டோம். இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய மனித சமுதாயத்தை உந்தித் தள்ளுகிறது அமேசான் வறட்சி.

  • தாமோதரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here