டந்த மார்ச் 20 ந்தேதி காஷ்மீர் பத்திரிகையாளர் இர்ஃபான் மெஹ்ராஜ் NGO மூலம் பயங்கரவாதத்திற்கு நிதி பெற்றுக் கொடுத்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்பாக, காஷ்மீர் மனித உரிமை செயற்பாட்டாளர் குர்ரம் பர்வேஸ் இதே வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் பல்வேறு பத்திரிகையாளர்களை அலைக்கழித்த தேசிய புலனாய்வு முகமை தற்போது ஒரு பத்திரிகையாளரை பயங்கரவாத வழக்கில் கைது  செய்துள்ளது. இதனை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், ஐநா சிறப்பு அறிக்கையாளர் மேரி லாலர் உள்ளிட்டவர்களும் பத்திரிகையாளரை விடுவிக்க கோரியுள்ளனர்.

பத்திரிகையாளர்கள் மீது ஊபா வழக்கு அதீதமாக தொடரப்படுவது, கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளது எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா. மேலும், அரசை கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுவது தொடர் வழக்கமாக மாறியுள்ளது. ஆசிஃப் சுல்தான், சஜாத் குல், பகத் ஷா என இது தொடர்கிறது. ஊடக சுதந்திரம் காஷ்மீரில் அரித்தெடுக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, இளம் பத்திரிகையாளர் சன்னா இர்ஷாத் மட்டூ தனக்கு அளிக்கப்பட்ட புலிட்சர் விருதைப் பெற, அமெரிக்கா செல்லவிருந்தது தடுக்கப்பட்டது. இது போல் எண்ணற்ற காஷ்மீர் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க, பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டது. கேரவன் பத்திரிகையை சேர்ந்த சாகின் டான்ட்ரே 2019ஆம் ஆண்டு காஷ்மீர் சிறப்பு சட்டம் 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நடத்தப்பட்ட ஊடகங்கள் மீதான தாக்குதலை ஓர் அறிக்கையாக தயார் செய்து வெளியிட்டிருந்தார்‌. அவர் காஷ்மீரை விட்டு வெளியேற காஷ்மீர் நெருக்கடி தந்தது. அவர் தனக்கு விடுக்கப்பட்ட தாக்குதல், எச்சரிக்கை குறித்து கேரவன் பத்திரிக்கையில் விரிவாக எழுதியுள்ளார்.

இதையும் படியுங்கள்: கொரோனா அவலங்களை படம் பிடித்து காட்டிய சன்னா‌ இர்ஷாத்! புலிட்சர் விருது வழங்கும் விழாவிற்கு செல்வதை தடுத்த பாசிச மோடி அரசு!

காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் மீதான சட்டவிரோத தாக்குதல், 1990 முதலே  நடைபெற்று வந்துள்ளது. எனினும் மோடி ஆட்சியின் சிறப்பு என்னவெனில், சட்டத்தின் பெயரிலேயே இணைய வேகம் குறைப்பு, பத்திரிகைகள் மீது ரெய்டு, விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்துவது, அலைகழிப்பது என தொடர்ந்து நடந்தேறி வருகிறது. இவை குறித்து காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர் அனுராதா பாசின் கடந்த மார்ச் 7ந்தேதி நியுயார்க் டைம்ஸ் இதழில் “இந்தியாவின் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான மோடியின் இறுதித் தாக்குதல் தொடங்கிவிட்டது” என்று கட்டுரை எழுதியிருந்தார். அதில் காஷ்மீரில், ஊடகங்கள் ஒடுக்கப்பட, காஷ்மீர் அரசால் 2020 ஆம் கொண்டு வரப்பட்ட பத்திரிகை விதிகள் இருந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். அந்த விதிகள் “போலி செய்திகள், திருட்டு மற்றும் நெறிமுறையற்ற அல்லது தேச விரோதம்” ஆகியவற்றை கண்காணிப்பது என்ற பெயரில் அதிகார வர்க்கத்தின் கொடுங்கரங்களுக்குள் காஷ்மீர் ஊடகங்கள் கொண்டு செல்லப்பட்டுவிட்டன என்கிறார்.

கடந்த ஜனவரிமாதம் முன்வைக்கப்பட்ட, டிஜிட்டல் மீடியாக்களுக்கான தேசிய வழிகாட்டுதல்களுக்கு  உத்தேசிக்கப்பட்ட திருத்தங்கள் அனைத்தும், காஷ்மீருக்காக திணிக்கப்பட்டதைப் போலவே உள்ளது. அந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பிரதமரை விமர்சிக்கும் பிபிசி ஆவணப்படமான “இந்தியா: மோடி கேள்வி”க்கான இணைப்புகளைத் தடுக்குமாறு ஆன்லைன் தளங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டது. இந்திய வரிவருவாய்த் துறை  பிபிசி அலுவலகங்களில்  சோதனை நடத்தியது. ஊடகங்களில் விமர்சனக் குரல்களுக்கு அழுத்தம் கொடுக்க, இத்தகைய சோதனைகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் காஷ்மீர் மாடல் ஊடகக் கொள்கை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுவிட்டால் இந்திய ஊடகங்களின் சுதந்திரம் மட்டுமல்ல, ஜனநாயகமும் முடிவுக்கு வந்துவிடும் எனக் கூறினார். உடனே அவரை பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் பெற்று பேசுகிறார் என சங்கிகள் அவதூறு பரப்பத் தொடங்கிவிட்டனர். ஒன்றிய அமைச்சர் வரை அச்சுறுத்தம் வேலைகளில் இறங்கினர்.

இந்த அச்சுறுத்தலுக்கு பணியாத அனுராதா பாசின் “மோடி அரசின் அடக்குமுறை, ஊடகக் கொள்கைகள், காஷ்மீர் பத்திரிக்கைகளை அழித்து வருகின்றது, ஊடகங்களை அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயல்பட மிரட்டுகின்றன…பத்திரிகையாளர்கள் (கண்காணிக்கப்படுகிறார்கள்)… சாதகமான செய்திகளை உறுதிப்படுத்த ,ஊடகங்களுக்கு எதிராக அரசாங்க கருவிகள் (பயன்படுத்தப்படுகின்றன). வருமான வரி மீறல்கள் அல்லது பயங்கரவாதம் அல்லது பிரிவினைவாதம் போன்ற குற்றச்சாட்டுகளால் அச்சுறுத்தப்படுகிறது. பல முக்கிய பத்திரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்… பல பத்திரிகையாளர்கள் சுய தணிக்கை அல்லது வெறுமனே வெளியேறியுள்ளனர். கைதுகளுக்கு பயந்து சிலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்… குறைந்த பட்சம் 20 பேர் (பறக்க தடை பட்டியலில் உள்ளனர்)  நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காக… நாங்கள் பயத்தின்  கீழ் வேலை செய்கிறோம் என்று தி வயர் தளத்துக்கு அளித்த பேட்டியில் மீண்டும் கூறியுள்ளார்.

ஊடகங்களை அச்சுறுத்துவது என்பது மோடி- அமித்ஷா மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது மட்டும் அல்ல. பாஜக சட்டமன்ற உறுப்பினர் முதல் பாஜக நிர்வாகிகள் வரை எவர் குறித்தும் விமர்சனங்களை அனுமதிப்பதில்லை. அதற்கு சமீபத்திய உதாரணங்கள்.

சஞ்சய் ராணா என்ற 19 வயது இளம் பத்திரிகையாளர் ஒருவர், தான் வேலை செய்யும் மொராதாபாத் உஜலா  ஊடகத்துக்காக, உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த குலாப் தேவி என்ற சட்டமன்ற உறுப்பினரை பேட்டி காண்கிறார். அந்தப் பேட்டியின் போது அவர் சட்டமன்ற உறுப்பினரை நோக்கி “தாங்கள், தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை? என்றும் சாலை வசதிகள், குடிநீர் வசதி, கோயிலுக்கு சுற்றுச்சுவர் என கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லையே ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். பதில் அளித்த குலாப் தேவி கிராம மேம்பாட்டுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட தொடங்கியுள்ளன என்று கூறினார். இதை தொடர்ந்து அந்த இளம் பத்திரிக்கையாளர் அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி, “சட்டமன்ற உறுப்பினர் கூறுவது உண்மைதானா?” எனக் கேள்வி எழுப்பினார். கூடியிருந்த மக்கள் “இல்லை இல்லை” என பதில் அளித்தனர்

இதைத் தொடர்ந்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினரை கேட்டபோது, “இந்த கிராமங்களில் இல்லை வேறு கிராமங்களில்  தொடங்கப்பட்டு விட்டது” எனக் கூறினார் இதுவும் பொய் என்பது அந்த இளம் பத்திரிகையாளரின் கருத்து. இந்த பதில்களையும் கேள்விகளையும் உள்ளடக்கிய ஒரு காணொளியை தயாரித்து, தான் சார்ந்த ஊடகத்தில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து உத்திரப் பிரதேச போலீசால் சஞ்சய் ராணா கைது செய்யப்பட்டார். 30 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் ராணா, அவரது ஊடகத்தின் ஆசிரியரால் மீட்கப்பட்டார். ஆர்டிகள் 14 ஊடகத்திற்கு பேட்டி அளித்த சஞ்சய் ராணா தான் இடிந்து போய் உள்ளதாகவும் இனி இந்த நிருபர் பணியை தொடர முடியுமா? என்பது சந்தேகமே எனவும் மனம் உடைந்து தெரிவித்துள்ளார். ஒரு 19 வயது இளைஞன், சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை நோக்கி கேள்வி எழுப்பிய காரணத்திற்காக, சிறை வைக்கப்பட்டு, இனி ஊடகப் பணியிலேயே இருக்க போவதில்லை என அறிவித்திருப்பது, துடிப்பான மக்கள் நலன் சார்ந்த இளைஞர்கள்,  ஊடகப் பணியில் ஈடுபடுவதை நசுக்கும் வேலையை,  உத்திரப் பிரதேச போலீசு செய்துள்ளதை காட்டுகிறது.

கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் மதல் விருபக்ஷபா லஞ்சம் பெற்ற வழக்கு‌ ஒன்றில் தேடப்பட்டு வந்தார். அவருக்கு இடைக்கால பிணை வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்றம், கர்நாடகாவில் இயங்கும் 46 ஊடக நிறுவனங்கள் இந்த வழக்கு குறித்து செய்தி வெளியிட தடைவிதித்துள்ளது. பாஜகவினர் லஞ்சம், ஊழல் வழக்கில் சிக்கும் போது. அது குறித்து செய்தி வெளியிடுவதே குற்றமாகிறது.. அதனை கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினரை கேள்வி கேட்ட, இளம் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார்; இன்னொரு சட்டமன்ற உறுப்பினரின் லஞ்சம், ஊழலை பேச‌ ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இது இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை, அவை பாஜக ஆளும்‌ மாநிலங்கள், அவர்கள் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள்.

தமிழ்நாட்டிலோ கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களை, 200 ரூபாய் உ.பி என‌ அவதூறு செய்து கேவலப்படுத்துவது தொடங்கி, தனிப்பட்ட மிரட்டல் வரை செய்கிறது அண்ணாமலை, எச்.ராஜா கும்பல்.

இந்தியாவின் ஊடக சுதந்திரம் உலக அளவிலான பட்டியலில் 150 வது இடத்தில் தான் உள்ளது. ஊடகங்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் நடத்தப்படும் அடக்குமுறைகளைக் கண்டு சர்வதேச அளவில் ஆர்.எஸ்.எஸ்- பாஜக ஆட்சியின் மீது காறி‌ உமிழப்படுகின்றது. அதனை துடைத்துக் கொண்டு இந்தியா ஜனநாயகத்தின் தாயகம் எனப் பல்லிளிக்கிறது பாசிச மோடி அரசு. இந்த வெட்கங்கெட்ட, கொடூரமான பாசிஸ்டுகளை எதிர்கொள்ள ஜனநாயக ஊடகங்களிடையே பரந்த வலைப்பின்னலும் மக்களின் ஆதரவும் அவசியமாகிறது

  • சிவராமன்

புதிய ஜனநாயகம் (ஏப்ரல் மாத இதழ் 2023)

படியுங்கள்
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here