“விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகிவிட்டது”.‌  கடந்த ஜுலை மாதம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வெளியிட்ட “விவசாயத்தின் மீதான சிறப்பு அறிக்கை” அப்படிதான் தெரிவிக்கிறது. கடந்த 2017-18 ஆண்டுக்கும் 2021-22 ஆண்டுக்கும் இடையில் குறிப்பிட்ட மாநிலங்களில் சில பயிர்களை விளைவித்தவர்கள் வருவாய் இரட்டிப்பாகி‌ உள்ளதாக தெரிவிக்கிறது அந்த அறிக்கை. மேலும் 2022-23 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்ற மோடியின் வாக்குறுதியுடன்‌ இணைத்தும் அறிவித்துள்ளது.

இந்த அறிக்கையை பற்றி செய்தி வெளியிட்ட எந்த ஊடகமும் அறிக்கை சொல்லும் விவரங்கள் குறித்தும்‌, அந்த ஆய்வு நடத்தப்பட்ட விதம் குறித்தும் ஆராயவில்லை. இந்த அறிக்கையும் முழுமையான கள ஆய்வு செய்து அளிக்கப்படவில்லை. அந்த அறிக்கையின் நோக்கம் மோடி அரசின் திட்டங்களை துதிபாடுவதகவே இருந்துள்ளது.

இன்னொருபுறம், பொருளாதார கணக்கெடுப்பு 2021-22 கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு மோடி அரசின் திட்டங்கள் துணை புரிந்துள்ளதாக கூறுகிறது. உண்மை நிலை என்ன?

சிதைந்து போயுள்ள
கிராமப்புற மக்களின் வாழ்வு!

இந்தியாவில் 2019-20 ஆம் ஆண்டு 35 பில்லியன் டாலர்களாக இருந்த விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி 2020-21 ஆம் ஆண்டு 42 பில்லியன் டாலர்களாகவும், 2021-22 ஆம் ஆண்டு 50 பில்லியன் டாலர்களாகவும் உயர்ந்துள்ளது. 2019-20ஆம் ஆண்டு 15 சதவீதமாக இருந்த  (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) விவசாயத் துறையின் பங்கு 2020-21 ஆம் ஆண்டு 16.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அரசின் அறிக்கைகள் கூறுகிறது.

இந்த விவரங்களை பார்க்கும்போது எவர் ஒருவரும் விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளிகளின் வருமானம் அதிகரித்திருக்கும் என நினைக்கக்கூடும்.  ஆனால், உண்மை வேறொன்றாக உள்ளது.

  1. விவசாயிகள் விளைபொருள் விலைக்கும், உற்பத்தி செய்த செலவுக்கும் உள்ள விகிதம் 2021-22 ஆண்டு மிகவும் மோசமாகியுள்ளது.
  2. விவசாய வேலையில் ஈடுபட்டு இருக்கும் தனிநபர்களின் வருமானம் 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது. அதற்கு பிறகான விவரம் கிடைக்கவில்லை.
  3. உண்மையான கிராமப்புற கூலி (அதாவது பணவீக்கத்தின் பாதிப்பை கழித்தது) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடக் குறைந்துள்ளது.
  4. வாழ்க்கை தேவைக்கான செலவை ஈடுகட்ட அதிகமான பெண்கள் ஊதியம் இல்லாமல் குடும்ப விவசாய வேலைகளில் பங்கெடுக்கின்றனர். குறைந்த கூலிதான் என்றபோதும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை நோக்கி அதிகம் பேர் வருகின்றனர்.
  5. கிராமப்புற மக்களின் உண்மை வருமானம் வீழ்ந்ததை உறுதிபடுத்தும் விதமாக, சாதாரண பொருட்களின் நுகர்வு குறைந்துள்ளது.

விவசாயிகள், தொழிலாளர்களின் வருமானம் குறைவது என்பது ஏதோ தற்செயலாக நிகழவில்லை; அது அரசு கொள்கையின் ஒரு பகுதி. விவசாயிகள், தொழிலாளர்கள் வருமானத்தை குறைப்பதே பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் அரசின் வழிமுறை. விவசாயத்திற்கான ஈடுபொருட்கள் விலை வீக்கம் 23 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு கரீஃப் சீசனுக்கு ஒன்றிய அரசு நெல்லுக்கு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலை முந்தைய ஆண்டைவிட 5.15 சதவீதம் மட்டுமே அதிகரித்து அறிவித்துள்ளது. இதை வைத்தே அரசு விவசாயிகள் வருமானத்தை சுருக்குவதை புரிந்துகொள்ள முடியும். இதுவே விவசாயிகளின் வருமானத்தை சுருக்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் கொடூரமான வழிமுறை. இதனால் விவசாயிகளின் வாழ்க்கை நாசமாகிறது.

ஆதாரம் : Aspects India’s Economy Issue, No. 78

தரைமட்டமாகிய
வாங்கும் சக்தி!

2019 முதலான கோவிட் பெருந்தொற்று காலத்தில் மற்ற துறைகள் அனைத்தும் லாக் டவுனில் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாய வேலைகள் தொடர்ந்து நடைபெற்றதன் காரணமாகவும், நகரங்களில் இருந்து மக்கள் கிராமங்களுக்கு திரும்பி இருந்த காரணத்தாலும் 2020-21 ஆம் ஆண்டு கிராமப்புற மக்களின் நுகர்வு குறிப்பிட்ட அளவு அதிகரித்தது. இதனை விவசாயிகள் வருமானம் அதிகரித்ததற்கான சான்றாக ஒன்றிய அரசு காட்ட முயற்சித்தது. ஆனால், அதிக அளவிலான மக்கள் மீண்டும் கிராமப்புறம்‌ நோக்கி வந்ததே அந்த வளர்ச்சிக்கு காரணம்.

தற்போது மீண்டும், 2021-22 ஆம் ஆண்டில் கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி கனிசமாக குறைந்துள்ளது.  ஹிந்துஸ்தான் யூனிலிவர் கம்பெனியின் ஆண்டறிக்கை தனிநபர் நுகரும் FMCG அளவு உலகிலேயே இந்தியாவில்தான் குறைவு என கூறுகிறது. அதிலும் இந்தியாவின் 60 சதவீத மக்கள் இருக்கும் கிராமப்புறம் நாட்டின் ஒட்டுமொத்த FMCG நுகர்வில் 30 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த அளவும் தற்போது குறைய தொடங்கியுள்ளது‌. (FMCG – Fast Moving Consumer Goods சோப், பேஸ்ட், பவுண்ட், ஷேம்பூ, பிஸ்கட், சமையல் எண்ணெய் போன்ற அன்றாடம் நுகரப்படும் பொருட்கள் தான் வேகமாக விற்கும் நுகர்பொருள் என்ற இந்த பட்டியலில் வரும்.)

ஜனவரி- மார்ச் 2022 காலாண்டில் மொத்த FMCG விற்பனை அளவு கடந்த ஆண்டு இதே காலத்தைவிட 5.3 சதவீதம் குறைந்துள்ளது. இதனால்  FMCG பொருட்கள் தயாரிக்கும் சிறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்கள் 15-20 % விலை உயர்வு மூலம் மட்டுமே தங்கள் விற்றுமுதலை (Turnover) பாதுகாத்துக் கொண்டுள்ளன.

2017-18 தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (NSS) ஆய்வின்படி பணவீக்கத்தை கழித்த மதிப்பை வைத்து பார்த்தால் 2011-12 ஆண்டைவிட குறைவாகவே குடும்பங்கள் நுகரும் செலவு செய்துள்ளனர். கிராமப்புற மக்களின் நிலை இதில் மிக மோசமாக உள்ளது. இதற்கு முன் 1960-களின்‌ மத்தியில் இப்படி நுகரும் செலவு குறைந்துள்ளது.

இந்த வருமான சரிவு கடன் அளவையும் அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு விவசாயத்தில் ஈடுபடும் குடும்பங்கள் வருமானம் சராசரியாக ரூ.10,218 என்று இருந்துள்ளது. இதில் 40 சதவீதம் கூலி வேலைக்கு செல்வதன் மூலம் கிடைப்பது; 37 சதவீதம் பயிர்கள் மூலம் பெறுவது. கிராமப்புறங்களில் தனிநபர்‌ ஒருவரின் சராசரி நாள் வருமானம் ரூ.70 ஆக உள்ளது.‌ விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு பார்த்தால் 2011-12 ஆம் ஆண்டு ரூ.27 வருமானத்துக்கு சமம்.  விவசாயத்தில் ஈடுபடும் குடும்பங்களின் எண்ணிக்கை 2012-13-க்கும் 2018-19 க்கும் இடைப்பட்ட காலத்தில் குறையவில்லை. விவசாயம் நல்ல வருமானத்தை தருகிறது என்பதல்ல காரணம், போதிய வருமானம் ஈட்டும் வேறு வேலைகள் கிடைக்காமல் இருப்பதே அதற்கு காரணம்.

ஓரிடத்தில் எடுக்காமல்
மற்றொரு இடத்தில் சேராது!

நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வருமானமும்‌, வாங்கும் சக்தியும் குறைந்து கொண்டிருக்கும் இதே காலத்தில்‌ அம்பானி, அதானி போன்ற  கார்ப்பரேட்டுகளின்‌ வருமானமும், தனிநபர் செல்வமும் பெருமளவு உயர்ந்துள்ளது. பிரதமர் மோடியின் புரவலர், நண்பர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ஓராண்டில் இரட்டிப்பாகியுள்ளது. ஒரு நாள்‌ வருமானம் ரூ.1600 கோடியாக உயர்ந்துள்ளது. அவர் வசம் இருந்த நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; அவருடைய பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. துறைமுகங்களும் மின்‌ உற்பத்தி நிலையங்களும் அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளது. அவருடைய சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. உலகின் முதல் ஐந்து பணக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார். பிரதமர் மோடியின் துணையுடன் செல்வத்தை குவிக்கும் கேடுகெட்ட வழிகளை அம்பலப்படுத்தும் (NDTV) ஊடகங்களை வாங்குகிறார்.

கோடிக்கணக்கான மக்களின் அன்றாட உழைப்பின் பலன் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மாறாக, அவர்களின் உழைப்பில் உருவாக்கப்படும் செல்வம் அங்கிருந்து பறிக்கப்பட்டு வேறொரிடத்தில் கொடுக்கப்படுகிறது. இதனை மாற்றி அம்பானி, அதானி‌ போன்ற கார்ப்பரேட்டுகளிடம் பறித்து மக்களுக்கு கொடுக்காமல் இந்த ஏற்றத்தாழ்வை தீர்க்க முடியாது; மக்களின் வாழ்வை முன்னேற்ற முடியாது. பள்ளத்தை துர்க்க மேட்டில் இருக்கும் அளவுக்கு அதிகமான மண்ணை எடுப்பதுதான் இயற்கை நியதி.

அந்த வகையில் கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் வளத்தை தூக்கிக் கொடுக்கும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை தாக்கியெறிய வேண்டும். மறுகாலனியாக்கக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தும் கார்ப்பரேட்- காவி பாசிசத்தை வீழ்த்த வேண்டும். கார்ப்பரேட்டுகளில் மொத்த நாட்டையும் சூறையாடிக் கொழுக்கும் அம்பானி, அதானிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து மக்களின் வறுமையை போக்க வேண்டும்.

  • மதிவாணன்

புதிய ஜனநாயகம்(மா.லெ)
டிசம்பர் – ஜனவரி மாத இதழ்

படியுங்கள்
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here