ஜூலை 9 பொது வேலை நிறுத்த போராட்டம், தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கி முன்னேறட்டும்!

ஜூலை 9 நடக்க இருக்கின்ற வேலை நிறுத்த போராட்டங்கள் அரசியல் போராட்டங்களாக பரிணமிக்க வேண்டும்.

தொழிலாளர்களின் சொந்த கோரிக்கைகளுக்காக மட்டுமே போராடுகின்ற தொழிற்சங்கவாத அரசியல் போக்குகளை விட்டொழித்து தொழிலாளர்களின் அரசியல் அதிகாரத்தை பற்றி விவாதிக்க வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்.

தோழர் லெனின் காலத்தில் இருந்ததை காட்டிலும் ஏகாதிபத்திய நிதி மூலதனம் பல மடங்கு பல்கி பெருகி பல லட்சம் கோடிகளில் குவிந்து கிடக்கின்றது.

இந்த ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் குணாம்சமானது நாடுகளின் இறையாண்மை முதல் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்களின் உரிமைகள் வரை அனைத்தையும் தின்று செரிக்கின்ற காலகட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்.

முதலாளித்துவம் தோன்றிய காலத்திலிருந்து ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளாக தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் ஒவ்வொன்றாக பலி கொடுக்கப்பட்டு வருகிறது அல்லது விழுங்கப்பட்டு வருகிறது.

சுரண்டல், ஆதிக்கம் அதன் வழக்கமான வழிமுறைகளை தாண்டி ஒரு உச்சத்திற்கே சென்றுள்ளது என்று தான் நாம் அவதானிக்க முடியும். உலகை குளோபல் சவுத், குளோபல் நார்த் என்று இரண்டாக பிரித்து குளோபல் நார்த் பகுதிகளில் உள்ள ஐரோப்பிய, அமெரிக்க கண்டத்தின் கார்ப்பரேட் முதலாளித்துவம் குளோபல் சவுத் பகுதிகளில் உள்ள கனிம வளங்களை சூறையாடுவதும், அந்த நாட்டு மக்களை குறைந்த கூலிக்கு சுரண்டி, அவர்களது கூலி உழைப்பை மிக மலிவான விலைக்கு கொள்ளையடிக்கின்ற கொடூரமான மிருகமாக மாறியுள்ளது.

நாம் இந்த குளோபல் நார்த் மற்றும் குளோபல் சவுத் போன்ற குட்டி முதலாளித்துவ சக்திகளின் வரையறைகளை ஏற்கவில்லை என்றாலும் உலகை சூறையாடுகின்ற மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் குவிந்து கிடக்கின்ற கண்டங்களாக அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் இன்றைய கட்ட வளர்ச்சி கார்ப்பரேட் கொள்ளையாக மாறியுள்ளது என்பதை தான் வர்க்க ரீதியான முரண்பாடுகளாக பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். உலகில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு செல்வத்தை குவித்து கொண்டிருப்பவர்கள் ஒரு சில சதவீதத்திலும் செல்வத்தை அதாவது தனது உழைப்பு செல்வம் முதல் ஏகாதிபத்திய நிதி மூலதனம் உருவாக்குகின்ற பல்வேறு வகையான பொருட்களை வாங்குவதன் மூலம் தனது வருமானத்தை இழப்பது வரையிலான இரு துருவ ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை பற்றி அழுத்தமாக கூற வேண்டுமே தவிர குளோபல் நார்த், குளோபல் சவுத் போன்ற சொல்லாடல்களின் மூலம் நிதி மூலதனத்தின் கொடூரமான முகத்தை மறைக்கக் கூடாது என்றே கருதுகிறோம்.

தொழிலாளர்களுக்கு அவர்களின் நேச சக்தியான விவசாயிகளுடன் ஒன்றிணைந்து போராடுவது என்பது மட்டும் தான் ஒட்டுமொத்த மனித குலத்தின் விடுதலைக்கான வழிமுறை என்பதை உரக்கச் சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல! தொழிலாளர்களின் அன்றாட கோரிக்கைகளான ஊதிய உயர்வு; ஆண்டுக்கு ஒரு முறை போனஸ் உத்திரவாதப்படுத்துவது; பணியிட பாதுகாப்பு; ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை தாண்டி அவர்களின் அரசியல் அதிகாரத்திற்கான கோரிக்கையுடன் மேற்கண்ட அன்றாட பொருளாதார கோரிக்கைகள் ஒன்றிணைக்கப் பட வேண்டும்.

நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகள் இந்த போராட்டங்களை ஒன்றிணைத்தாலும் மையமான அரசியல் பிரச்சனையான கார்ப்பரேட் காவி பாசிசம் என்பதை முன்வைத்து அதற்கு எதிராக இன்றைய காலகட்டத்தில் ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர சக்திகள் ஒன்றிணைப்புடன் கூடிய ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை நிறுவுவதை நோக்கி தொழிலாளி வர்க்கத்தை பயிற்றுவிக்கின்ற வகையிலான முழக்கங்கள் முன்னிலைக்கு வரவில்லை. தேர்தல் அரசியலில் பாசிச பாஜகவை தோற்கடிப்பது என்ற வரம்பை தாண்டி தொழிற்சங்க கூட்டமைப்பு முன்வைத்துள்ள 17 அம்ச கோரிக்கைகளில் அரசியல் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்த வேண்டும். அதற்காக அரசியல் போராட்டங்கள், அரசியல் வேலை நிறுத்தங்கள் ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

படிக்க:

 புஜதொமு ஜூலை 9 வேலைநிறுத்த பிரச்சார இயக்கம்!!

 ஜூலை-9 பொது வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டக் களமாக்குவோம்!

புதிய தாரளவாத கொள்கைகள் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப்பட துவங்கியதிலிருந்து இந்தியாவில் உள்ள புரட்சிகர இயக்கங்களில் புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான தொழிற்சங்க அமைப்புகள் புரட்சிகர தொழிற்சங்கங்களை உருவாக்கி ‘ஆலைக்கு ஒரு சங்கம்’ என்ற முழக்கத்துடன் தொழிலாளர்களை அரசியல்படுத்துகின்ற பணியை தொடர்ச்சியாக செய்து வருகிறது.

இத்தகைய புரட்சிகர கடமையை செய்து கொண்டிருக்கும் போது பல்வேறு எதிர்ப் புரட்சி கருத்துகளையும், கலகப் பேர்வழிகளின் தாக்குதல்களையும் எதிர்த்து முறியடித்துக் கொண்டே தான் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னேறிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் ஜூலை 9 நடக்க இருக்கின்ற வேலை நிறுத்த போராட்டங்கள் அரசியல் போராட்டங்களாக பரிணமிக்க வேண்டும். அரசியல் வேலை நிறுத்தமாக தொழிலாளி வர்க்கத்தை ஒட்டுமொத்த நாட்டிற்கும் தலைமை தாங்கிக் கொண்டு செல்கின்ற சக்தியாக வளர்கின்ற தொழிலாளர்களின் நேசசக்தியான விவசாயிகளுடன் இணைந்து செயல்படுகின்ற போராட்டமாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

தொழிற்சங்க கூட்டமைப்புகள் முன்வைக்கின்ற 17 அம்ச கோரிக்கைகளில், “கார்ப்பரேட்டுகளின் மீது அதிக வரியைப் போடு” என்ற கோரிக்கையும், “நாட்டை கொள்ளையடிக்கின்ற செல்வந்தர்களுக்கு செல்வவரி போடு” என்ற கோரிக்கையும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். இவை அனைத்தையும் முன்னிலைப் படுத்துகின்ற வகையில் நாட்டின் மிகப்பெரும் அபாயமாக உருவெடுத்துள்ள கார்ப்பரேட் காவி பாசிசத்தை பற்றி தொழிலாளி வர்க்கத்திற்கு போதிக்க வேண்டும். இதன் மூலம் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தொழிலாளி வர்க்கத்தை பயிற்றுவிக்க வேண்டும்.

மருது பாண்டியன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here