வரலாற்றறிவு துளியுமின்றி கம்யூனிஸ்ட்டுகளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் ‘1967 தாளடி’ நாவல்.

தமிழ் எழுத்தாளர்களில் சிலர் இருக்கிறார்கள். கம்யூனிச இயக்கத்தைக் கொச்சைப் படுத்தி எழுதினால்தான் நல்ல எழுத்தாளர் என்று நினைத்துக் கொள்கின்றனர். அல்லது அப்படி எழுதி தம் அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றனர். குறிப்பாக ‘சில’ பார்ப்பன, பார்ப்பனச் சாய்வுடைய சூத்திர, எலைட் தலித் எழுத்தாளர்கள் இப்படியாக எழுதுவதை தொடர் வாசிப்பில் கண்டுணரலாம். அப்படியே போகிற போக்கில் திராவிட இயக்கத்தையும் பகடி செய்வது இவர்களுக்குப் பொழுதுபோக்கு. தலித் கதையாடல்களை இவர்கள் தீட்டுக் கழித்து ‘நாங்கள்லாம் அவங்க வீட்டுக்குள்ள சகஜமாப் போவோம். அவங்க வீட்டுச் சாப்பாட்டைக்கூடச் சாப்பிடுவோம்’ என தீண்டுதலின் பெருமிதத்தை எழுதிக் காட்டுவார்கள்.

அந்த வரிசையில் தன்னுடைய ‘1967 தாளடி’ நாவலின் மூலம் தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறார் சீனிவாசன் நடராஜன். கவிஞர் அப்துல் ரகுமான் தன்னுடைய ‘சுட்டு விரல்’ கவிதைத் தொகுப்பின் தொடக்கத்தில் ‘இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் யாரையும் குறிப்பிடுவன அல்ல என்ற பொய்யின் கீழ் ஒளிந்து கொள்ள விரும்பவில்லை. ஒவ்வொரு கவிதையின் கீழ் குறிக்கப்பட்டிருக்கும் தேதி, அந்தக் கவிதை யாரைச் சுட்டுகின்றன என்பதைச் சொல்லும்’ எனத் துணிச்சலாக எழுதியிருப்பார். கீழ் வெண்மணிப் படுகொலையை, அந்நிலத்தின் போராட்டத்தை விவரிக்க ‘தாளடி’யை எழுதியிருக்கும் சீனிவாசன் நடராஜன் ‘இந்நாவலில் வரும் பெயர்களும், சம்பவங்களும் கற்பனையே; எவரையும் குறிப்பிடுவன அல்ல’ என எழுதுகிறார். இதன் பொருட்டே 1968க்குப் பதிலாக ‘1967 தாளடி’ என நாவலுக்குப் பெயரிட்டிருக்கிறார். ஆனால், இதில் வரும் ‘கீழவெளி’ எனும் ஊர் கற்பனையாக இருக்கலாம். இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு, செங்கொடி இயக்கம், ராமையா, ஆய்மழை மைனர், வலிவலம் தேசிகர் எல்லாம் கற்பனையல்லவே!

‘இன்றிரவு இயேசு பிறக்கிறார்’ எனும் சங்கேதச் சொற்றொடர் தாங்கிய துண்டுப் பிரசுரம் டிசம்பர் 24-1967 அன்று இரிஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடுவின் வீட்டில் தோழர் தியாகுவால் இரகசியமாக ஒட்டப்படுகிறது. தஞ்சையிலிருந்து நாகைவரை கோயில், ஹோட்டல், ரயில், பிளாட்பார்ம், வயல், கூட்டம் எனப் பல்வேறு இடங்களிலும் பல்வேறு ஊர்களிலும், அந்த ஒரே நாளில் ‘இன்றிரவு இயேசு பிறக்கிறார்’ பலதரப்பட்ட மனிதர்களாலும் இரகசியமாக உச்சரிக்கப்படுகிறது; தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிறது. அதாவது இயேசு பிறக்கும் டிசம்பர் 25க்கு முன்னதாக டிசம்பர் 24 இரவுக்குள் அப்பகுதியிலிருக்கும் கோபாலகிருஷ்ண நாயுடு, சாமியார் (மடாதிபதி?), ஆய்மழை மைனர் ஆகிய மூவரையும் அழித்தொழிப்பது என கம்யூனிஸ்ட் கட்சியின் ரகசிய இயக்கம் ஒன்று முடிவெடுக்கிறது. அதன்படியே செய்யும்போது கோபாலகிருஷ்ண நாயுடு தப்பித்து விடுகிறார். மற்ற இருவரும் கொல்லப்படுகின்றனர். ராமையாவின் குடிசையில் ஒளிந்திருந்த 44 பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் யாராலோ தீவைத்துக் கொளுத்தப்படுகின்றனர். ராமையாவால் முன்னமே கோபால கிருஷ்ண நாயுடுவின் வீட்டில் வேலைக்கு அனுப்பப்பட்ட மூன்று பேர் காத்திருந்து பின்னர் நாயுடுவைக் கொன்று பழிக்குப் பழி தீர்க்கின்றனர். இதுதான் நாவல்.

இதை நவீன உத்தியில் சொல்ல முயன்றிருக்கிறார் சீனிவாசன் நடராஜன். ஆனால், அது அவ்வளவாகக் கைவரவில்லை. ‘வாராணசி’ நாவலில் பா.வெங்கடேசன், பிரெஞ்ச் புகைப்படக் கலைஞன் ஒருவன், காசி மயானக் கரையில் இரவு நேரத்தில் நிர்வாணப் புகைப்படம் எடுப்பதைப் பற்றிச் சித்தரித்திருப்பார். அவ்வளவு நேர்த்தியான நடை அது. அதை அடியொற்றி, ஒரு ஓவியன் பெண்ணொருத்தியை நிர்வாணமாக வரைவதில் நாவல் தொடங்குகிறது. ஆனால், அப்பெண் கித்தானில் இருந்து பின்னொரு நாளில் பேசுவதாக வரும் மொழி அழகாக இருக்கிறது. ‘தெரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது? எனக்கு எல்லாமும் தெரிந்தே இருக்கிறது. அவன் என்னைப் புணர்வதற்குத்தான் அழைத்து வருகிறான் என்று நம்பி மகிழ்வுற்றிருந்தேன். பின்னாட்களில் என் ஆழ்ந்த உறக்கத்தைக் கோருவான் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. கனவுகள் இல்லா என் உறக்கம் அவனுக்குத் தேவையாய் இருப்பதில்லை. என் கனவுகளை உடல் மொழியால், முகக் குறிப்பால் திருட நினைக்கிறான்.’ இங்கு எல்லோருமே பெண்ணின் கனவுகளையும் கண்காணிக்கும் மனிதர்களாகத்தானே இருக்கிறார்கள். சுயமான கனவில் திளைக்கும் உரிமைகூட பெண்ணுக்கு இல்லை என்பது ஆகப் பெரும் துயரம்தான்.

‘நிர்வாண ஓவியமாக வரையப்படுகிற பெண் தோலால் ஆன ஆசனத்தில் ஒருக்களித்துப் படுத்துக் கொள்வாள். மிகப் பிரம்மாண்டமான அரங்கம் அது. ஐம்பது அடி உயரம் இருக்கும். அதீத ஒலியின் காரணமாக வௌவால் மிரண்டு வெளியே பறக்கும்’. இக்காட்சியை விவரிக்கும்போது நம் கண்முன்னே வௌவால் மிரட்சியாய்ப் பறக்கும் உணர்வை அடைய முடிகிறது. இதேபோல, குளத்தில் பெண்ணொருத்தில் குளிக்கும் காட்சி. நாரைகளும் கொக்குகளும் விரும்பிக் கேட்க ஆடுகிறாள். நீர் மலர்கள், பறவைகள், மீன்கள் ஆட வானம் வெட்கப்பட, மண்டபம் ஆட, மரம் செடி கொடி ஆட…நாவலின் தொடக்கத்தில் வரும் இத்தகைய காட்சிகளால், அதன் பயணத்தை நாம் எதிர்பார்ப்புடன் அணுக முடிகிறது. ஆனால், அதன் பின்னர் நாவல் வேறு கருத்துருவாக்கங்களுக்குச் சென்று விடுகிறது. (கித்தான் பேசுவது, வரையப்பட்ட ஓவியப் பெண் அதிலிருந்து வெளியேறி கதை சொல்வது எல்லாம் ‘பட்டி விக்கிரமாதித்தியன்’ காலத்திலேயே வந்து விட்டது.)

இந்த நாவல் மூன்று கருத்தாக்கங்களை உருவாக்க முயற்சிக்கிறது. அவை மூன்றுமே உழைக்கும் மக்களுக்கு எதிரானவை என்பது மிக முக்கியமானது. இத்தகைய கருத்தாக்கங்கள் இலக்கியத் தளத்தில், வாசிப்புலகில் எந்த மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என்பதைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. இந்நாவல் முன் வைக்கும் மூன்று திரிபுக் கருத்தாக்கங்கள்.

  1. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் 1960ன் கடைசிப் பகுதியில், செங்கொடி இயக்கத்தின் தீவிரவாதத்தால் பண்ணையார்கள் உயிருக்கு அஞ்சி வாழ்ந்தார்கள். அவர்கள் கையில் அதிகாரம் இல்லை. அவர்களால் விவசாயத்தை லாபகரமாக நடத்த முடியவில்லை. நிலச் சீர்த்திருத்தச் சட்டம், குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம், பண்ணை ஆள் பாதுகாப்புச் சட்டம், கீழத்தஞ்சை கூலி உயர்வுச் சட்டம் போன்றவற்றால் அவர்கள் எல்லாருமே பாதிக்கப்பட்டிருந்தார்கள். பண்ணையார்களுடன் சேர்ந்து மடமும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. செங்கொடி இயக்கத் தீவிரவாதிகள் பண்ணையார்களின் நிலங்களில் விளைந்திருக்கும் பயிர்களை எல்லாம் அறுக்க விடாமல் தீ வைத்துக் கொளுத்திப் பெரும் நாசத்தை ஏற்படுத்துவதால், பண்ணையார்கள் புரோநோட்டில் கையொப்பம் இட்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார்கள்.
  2. இரகசிய இயக்கமாக இருந்த நக்சலைட் பிரிவினர் 1967ல்-(ஆனால், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் எனப்படும் நக்சல்பாரி இயக்கம் உருவான வருடம் 1969) தஞ்சை மாவட்டம் முழுக்க ஊடுருவி விட்டனர். அப்பிரிவில் இரகசிய வேலை பார்த்த பெண்கள், இயக்கத்திற்காக தங்களை முழுதாக ஒப்புக் கொடுத்தார்கள். அது எதுவரை என்றால் பண்ணையார்களை வேவு பார்க்க, தினமும் அப்பண்ணையார்களுக்கு தம் உடலைக் கொடுத்து, தானும் அதில் சுகித்துக் கிடந்தார்கள் என்பதுவரை. இந்நாவலில் குறிப்பிடப்படும் செங்கொடி தீவிரவாத இயக்கப் பெண்கள் ஒவ்வொருவரும் உடலைக் காட்டி மயக்கித்தான் பண்ணையார்களையும், மடாதிபதிகளையும் அழித்தொழிக்கிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  3. கீழவெண்மணிப் படுகொலையை நடத்தியவர் கோபாலகிருஷ்ண நாயுடு அல்ல; ராமையாவின் குடிசை எரிக்கப்பட்டபோது கோபாலகிருஷ்ண நாயுடு, அந்தப் பகுதியிலேயே இல்லை; நாகப்பட்டினத்தில் இன்னொரு பண்ணையார் வீட்டில் பயந்து போய்த் தலைமறைவாக இருந்தார் என வரலாற்றையே திரிக்கப் பார்க்கிறது இந்நாவல்.

பண்ணையார்கள் பயந்து வாழ்ந்தார்களா? பண்ணைத் திமிருடன் வாழ்ந்தார்களா?

தோழர் சீனிவாச ராவ் அவர்களின் காத்திரமான போராட்டங்களால் சாணிப்பால், சவுக்கடி ஒழிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த தஞ்சை மாவட்டத்திலும் உள்ள பண்ணையார்கள் அடிமைத் தனத்திலிருந்தும், தீண்டாமைக் கொடுமையிலிருந்தும் தத்தம் பண்ணையாட்களை விடுவிக்க விரும்பவில்லை. ஒருபுறம் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘செங்கொடி இயக்கமும்’,இன்னொரு புறம் திராவிடர் கழகத்தின் ‘திராவிட விவசாய தொழிலாளர் சங்கமும்’ உழைக்கும் மக்களை அடிமைத் தனத்திலிருந்தும், தீண்டாமைக் கொடுமையிலிருந்தும் விடுவிக்கக் கடுமையாகப் போராடியது. மாபெரும் தலைவரான ஏ.ஜி.கஸ்தூரி ரங்கன் தலைமையில் செங்கொடி இயக்கம், பண்ணையார்களுக்கு எதிரான பல நூதனப் போராட்டங்களை நடத்தி வேலை நேரத்தை உறுதிப்படுத்தல், இழிவுச் சொல்லால் அழைக்கப்படாமல் மரியாதையுடன் நடத்தப்படுதல், சரியான கூலி உயர்வு, அடிமை வேலைகளை செய்யாமை என உரிமைக்கான போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டது.

ஆனால், நாவலில் சீனிவாசன் நடராஜன் முன்வைக்கும் மோசமான கருத்தாக்கம் வேறாக இருக்கிறது. //ராமையாவின் வருகைக்காக நான்கு இளைஞர்கள் அரிக்கேன் விளக்கோடு காத்திருக்கிறார்கள். ராமையா பேசி முடித்து கிளம்பச் சொன்னதும், கூடியிருந்தவர்கள் வெவ்வேறு வழிகளில் சென்று மறைகிறார்கள். அரிக்கேன் மண்ணெண்ணெய் வயலில் பரவ தீ கொழுந்து விட்டு எரிகிறது. ஆய்மழை மைனரின் வயல் அது. ‘பத்து மா’ எரிந்து போகிறது. கிட்டத்தட்ட 3 ஏக்கருக்கும் மேலான விளைச்சல். செங்கொடி இயக்கத்தினர் விளைந்த பயிரை (அது ஆகாத பண்ணையார் வீட்டுப் பயிராக இருந்தாலும்) எரித்ததாக ஒரு சம்பவம் கூட எங்கும் நடந்ததில்லை. பண்ணையார் பதுக்கி வைத்திருக்கும் நெல் மூட்டைகளை எடுத்து வந்து உழைத்த மக்களுக்குப் பகிர்ந்தளித்திருக்கிறார்கள். அதுதான் வரலாறு. இது கம்யூனிஸ்ட்டுகளைக் கொச்சைப்படுத்தும் அவதூறு.

ஒரு பண்ணையார் சொல்கிறார். ‘புதுசா வந்திருக்கிற சர்க்கார் நெல்லுக்கு விலை கொடுக்காது. தஞ்சை மாவட்டத்தில் விளையும் நெல் அரசாங்கத்திற்கே சொந்தமாம். நெல்லுக்கு விலையை அரசே தீர்மானிக்கும் என்கிறார்கள். பத்து மடங்கு குறைவான விலையை அரசு நிர்ணயிக்கப் போகிறது என்று செய்தி வருகிறது. உரமூட்டை விலை ஏறுது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துப் பார்த்தால் நம்மால் லாபகரமாக விவசாயம் செய்ய முடியாது.’ இன்னொரு பண்ணையாரின் குரல் இப்படி ஒலிக்கிறது. ‘ஒரு போகம் சாகுபடி பண்ணி அறுத்து வீட்டுக்கு வந்தாத்தான் போச்சுங்குற நிலைமைதான் இன்றைக்கு இங்க இருக்கு. நடுவுல வைக்கப்போரைக் கொளுத்தறது, வெளஞ்ச நெல்லக் கொளுத்தறதுன்னு ஆனதுக்கு அப்புறம் நஷ்டம் தலைக்கு மேல போயிடுச்சு. கடன் கழுத்துக்கு மேல இருக்கு. புரோ நோட்டு எழுதிக் கொடுத்தே காலம் ஓடிடும் போல இருக்கு’. என்னவோ கால் ஏக்கர் அரை ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளின் புலம்பலைப் போல பண்ணையார்கள் புலம்புவதாக எழுதியிருக்கிறார் நாவலாசிரியர். ஒவ்வொரு பண்ணையாரிடமும் இருந்தவை ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் என்பதையும், அவர்கள் ஒவ்வொருவரும் சிற்றரசர்களாய் சுகபோகத்துடன் வாழ்ந்து வந்தனர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் சீட்டாட்டம், குடி என்ற கொண்டாட்டங்களுடன் மட்டும் வாழ்ந்திடவில்லை பண்ணையார்கள். தம் பண்ணையில் வேலை செய்யும் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வது, யாரையும் கேள்வி கேட்பாரின்றி அடித்து உதைத்தல், அடிமையாக நடத்துதல் எனவாகத்தான் இருந்தனர்.

நாவலில் மாரியம்மாள் என்ற பெண் சொல்கிறார். ‘ஆபத்து பண்ணையாருவோகிட்ட இல்ல. நடுவுல வேல பாக்குறானுவளே நம்ம ஆளுவோ அவனுவோ கிட்டதான் இருக்கு. அதிகாரத்தக் கையில வெச்சுருக்கிறதா சொல்லுறவனுவோ கிட்ட என்னைக்கு அதிகாரம் இருந்திருக்கும்.’ ‘இருக்கிற காசு பணத்த வெச்சு வித்துட்டுப் போற ஐயாமாருங்க கிட்ட வூட்டையும் நிலைத்தையும் வாங்கிப் போடலாம்னு கணக்குப் போடுதுங்க’. பண்ணையார்கள் ஆபத்தில்லாதவர்கள் என்பதெல்லாம் அரிய கண்டுபிடிப்புத்தான். மேலும், பார்ப்பனர்கள் நிலத்தை விற்றுவிட்டு அக்ரஹாரங்களை விட்டு வெளியேறி தத்தம் சொந்த ஊர்களுக்கும், சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களுக்கும் இடம் பெயர்ந்தது 1980-க்குப் பிறகுதான். 60-களில் தஞ்சையில் எந்தப் பார்ப்பனர்களுக்கும் இப்படியொரு துயரம் நேர்ந்து விடவில்லை.

இரிஞ்சூரில் கோபாலகிருஷ்ண நாயுடு வீட்டுக் கதவில் ரகசியமாக ‘இன்றிரவு இயேசு பிறக்கிறார்’ என்ற துண்டுப் பிரசுரம் ஒட்டப்படுகிறது. இதைத் தெரிவிக்க மாமா கோவிந்த ராஜு நாயுடு வீட்டுக்குச் செல்கிறார் நாயுடு. அவர் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு அறிவுரை சொல்கிறார். ‘இருஞ்சியூர்ல ரா தங்காத. நாகபட்டினம் போயிரு. வேற வழியில் போ. வண்டியை விட்டு விட்டு பிளைமவுத் காரை எடுத்துக்க’ என்கிறார். நாயுடுவோ ‘வீட்டுல பொண்டு புள்ளைங்கல்லாம் இருக்குதுங்களே’ என்கிறார். நாயுடு யாருக்கும் பயப்படாத திமிரான ஆள் என்பதை சமகாலத்தில் வாழ்ந்த பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். அவருக்குப் பொழுதுபோக்கே பண்ணையாட்களைக் கட்டி வைத்து அடிப்பதுதான். மேலும், செங்கொடி இயக்கத்தை ஒழித்துவிட வேண்டுமென்று மூர்க்கமாக நடந்து கொண்டவர். கையில் துப்பாக்கியுடன் தானே ஜீப்பில் போய் கீழவெண்மணியைச் சுற்றி வளைத்து கொளுத்தச் சொல்லி 44 உயிர்களைக் கொன்ற கொலைகாரனை, பயந்த மனிதன் போல சித்தரிப்பதெல்லாம் புனைவுக்கே அநீதியானது. அப்புறம் நாயுடுவுக்கு பொண்டு புள்ளைங்கல்லாம் இருந்தார்கள் என்பது நாவலாசிரியர் சொல்லித்தான் நமக்குத் தெரிய வருகிறது. புனைவுக்காக அல்லது அண்ணன் குடும்பம் எனத் தடவிக் கொடுக்க வேண்டாம். ஏனெனில், இந்த சொற்றொடர் நாயுடுவின் மீதான பரிதாபத்தை இன்னும் கூட்டும் வாசகனுக்கு.

கம்யூனிஸ்ட் கட்சி குறித்த வரலாற்றுப் புரிதலின்மையும், வன்மமும்..
நாவலில், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றம் வளர்ச்சி குறித்த வரலாற்றைத் தோழர் தியாகு அப்பகுதி மக்களிடம் வகுப்பெடுக்கும்போது சொல்வதாக எழுதப்பட்டிருக்கிறது. அது முழுதும் கட்டுரைத் தனமாக இருக்கிறது என்பது ஒருபுறம். உலக அளவில் தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதைப் பற்றிச் சொல்கிறார். ஆனால், மாபெரும் சாதனையான நிலப்பகிர்வு பற்றியோ, இரண்டே ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி கலைப்பு நடத்தப்பட்டதைப் பற்றியோ சொல்லவில்லை. மேலும், மார்க்சிய- லெனினியக் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு 1969 ஏப்ரல் 22. ஆனால், புனைவுக்காக 1967ம் ஆண்டில் தஞ்சைப் பகுதியில் அழித்தொழிப்பை எம்.எல்.கட்சி தீவிரமாகச் செயல்படுத்தியது எனச் சொல்வதெல்லாம் மாபெரும் பிழை.

தலைமறைவு இயக்கத்தில் இருக்கும் பெண்கள் முழுக்க தன் உடலைப் போகப் பொருளாக்கி, பண்ணையார்களை அழித்தொழிக்கிறார்கள் என்றும், அதில் சுகித்துக் கிடக்கிறார்கள் என்றும் கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறார் நாவலாசிரியர். பாப்பாத்தி எனும் இயக்கத்தில் இருக்கும் பெண், மைனரின் மாட்டுக் கொட்டகையில் கூளத்தின் நடுவே படுத்திருக்கிறாள். இவள்தான் வயலுக்குத் தீ வைத்திருப்பாளோ எனச் சந்தேகித்து தூக்கி வந்து நிர்வாணமாகக் கட்டி வைத்து அடிக்கும்போது வடிவேலு ‘மைனர்தான் இவள மாட்டுக் கொட்டகையில கொண்டாந்து உட்டுட்டுப் போனாருங்கய்யோ’ எனக் கதறுகிறான். இந்தப் பாப்பாத்தி மைனரைக் கண்காணிக்க கட்சியால் நியமிக்கப்படுகிறாள். ஆனால், அவள் தினமும் சாராயம் குடித்து அவனுடன் புணர்கிறாள். கம்யூனிஸ்ட் கட்சியைப் புரிதலில்லாத பண்ணையார்த்தனத்துடன் எழுதப்பட்ட பகுதி இப்படி நிறைய இருக்கிறது. சாமியார் ஒருவரை அழித்தொழிப்பதற்காகக் கட்சியால் அனுப்பப்படும் பெண்ணும் அவனுடன் புணர்ந்து அதன் மூலம் கொல்லச் செல்கிறாள்- கொல்ல முடியாமல் போக, ‘கட்டிலின் மேல் இருந்தவள், கழுத்தைக் கத்திக்கு இரையாக்கி, ‘இயக்கத்திற்காக எதையும் செய்வதற்குச் சபதம் ஏற்றவள், இயக்கத்துக்குத் தன் உயிரைத் தியாகம் செய்தாள்.’ அழித்தொழிப்பு என்றால் என்னவென்று நாவல் எழுதத் தொடங்கும் முன் கொஞ்சமாவது தேடிப் படித்திருந்தால் இப்படியெல்லாம் மனம் பிசகி எழுதத் தோன்றியிருக்காது.

ஓடும் ரயிலில் ஒரு எம்.ஏ.கோல்டு மெடலிஸ்ட் தன் படிப்பைப் பற்றிச் சொல்லி, சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆனதாகச் சொல்லி, கருணை வைங்க எனக் கெஞ்சுகிறார். மாணவர்களில் ஒருவன் கைக்குட்டையை விரித்து காசு வசூல் பண்ணி அந்த கோல்டு மெடலிஸ்ட்டிடம் கொடுக்கிறார். பெற்றுக் கொண்டவன் பேச ஆரம்பிக்கிறான்.

தோழர்களே புரட்சி செய்வோம்
முதலாளிகளிடமிருந்து இந்த நாட்டை விடுவிப்போம்
சாதிய வேறுபாடுகளைக் களைவோம்
பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்வோம்
நிலவுடைமைச் சமூகத்தை வேரோடு அழிப்போம்
நேருவின் பஞ்சசீலக் கொள்கையை எதிர்ப்போம்
புரட்சி ஓங்குக!’ எனக் கோஷம் போட்டு மயங்கிச் சரிகிறான். இப்படியொரு சித்தரிப்பு வருகிறது நாவலில். இது நாவலாசிரியரின் ஆகப்பெரும் வன்மத்தைக் காட்டுகிறது. பேருந்தில், ரயிலில் துண்டுப் பிரசுரம் கொடுத்து, பத்திரிகை விற்று, பிரச்சாரம் செய்யும் எந்தப் புரட்சிகரத் தோழரும் இப்படிப் பசிக்காகப் பிச்சையெடுத்ததாக ஒரு சம்பவம்கூட இல்லை. அவர்கள் பசியைச் செரித்துவிட்டு மக்களுக்காகக் களப்பணியாற்றி உயிரைத் தியாகம் செய்ய வந்தவர்கள். சமூக மாற்றம் என்பதை ஏட்டளவில் இல்லாமல் களமிறங்கி உருவாக்கிக் காட்டுவதற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்யும் புரட்சிகரத் தோழர்களிடம், நாவலாசிரியரை மன்னிப்புக் கோர வைக்கும் வரலாறு ஒருநாள்.

மேலும், இந்நாவலாசிரியருக்கு வரலாற்று நுண் அறிவும், பிழைபடாத பார்வையும் இல்லை என்பதை பல இடங்களில் காணலாம். 1969க்குப் பின் தொடங்கப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தில் 1967-லேயே ராசாங்கம் ஆயுதப் பயிற்சி எடுத்துத் திரும்புகிறான்! 1968 கீழவெண்மணிப் படுகொலைக்குப் பின்னர்தான், அப்பகுதியின் வெம்மையைக் குறைக்க அரசால் அனுப்பப்பட்ட லாஃப்டி (LAFTI) எனும் என்.ஜி.ஓதான் கிருஷ்ணாம்பாள் ஜெகந்நாதன். ஆனால், நாவலில் 1967லேயே ‘அந்த மதுரக்கார பொம்மனாட்டி வேற ‘நிலத்தை வாங்கிக்குறேன். பிரிச்சுக் குடுங்கன்னு போராட்டம்ல பன்றா. குன்னியூர் அய்யர்கிட்டச் சொல்லி இவளயெல்லாம் அடக்கி வைக்கணும்பா’ என்கிறார் ஒரு பண்ணையார். அதேபோல, நாவலில் 1967-ல் விவசாயக் கூலிகளின் துயரங்களைத் தீர்ப்பதற்கு சட்ட முன்மாதிரியை வகுத்து அரசிடம் கொடுக்கலாம் எனத் தீர்மானிக்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர். அது குறித்து சீனிவாசராவ், மணலி கந்தசாமி போன்ற மூத்த தோழர்களிடம் பேசலாம் எனவும் ஆலோசனை தெரிவிக்கிறார்கள். தோழர் சீனிவாசராவ் 1961-ல் மறைந்தார் என்பதைத் தெரிந்திருந்தால் இப்படி உளறாமல் இருந்திருக்கலாம்.

கீழவெண்மணிப் படுகொலையை நடத்தியது யார் என நாவல் பேசாதது ஏன்?
இந்த நாவலுக்கு முன் இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப் புனல்’,சோலை சுந்தரப் பெருமாளின் ‘செந்நெல்’, பாட்டாளியின் ‘கீழைத்தீ’, புலியூர் முருகேசனின் ‘உடல் ஆயுதம்’, மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ ஆகிய நாவல்களும், அப்பணசாமியின் ‘தென்பறை முதல் வெண்மணிவரை’, செ.சண்முக சுந்தரத்தின் ‘கீழ்வெண்மணி-அரைநூற்றாண்டுக் கொடுங்கனவு’ போன்ற ஆய்வு நூல்களும், அரசு ஆவணங்களும், படுகொலையை நேரில் பார்த்தவர்களும் கோபால கிருஷ்ண நாயுடுதான் 44 உயிர்களைத் தீயிட்டுக் கொளுத்திய கொலைகாரன் எனச் சொல்கின்றன. நீதிமன்றம் விட்டுவிட்டால் அது சரியானது ஆகிவிடாது. ஆனால், சீனிவாசன் நடராஜனால் மட்டும் அக்கொலைகாரன் பெயரை உச்சரிக்கக் கூட முடியவில்லை. அவ்வளவு வர்க்கப் பாசம் போல! அந்தப் படுகொலை நடந்ததைப் பற்றி நாவல் இப்படிப் பேசுகிறது. ’முத்தையன் வண்டியைப் பூட்டி இருஞ்சியூருக்கு விரைந்த போது, இருஞ்சியூர் கீழவெளி பற்றி எரிந்துகொண்டிருந்தது. தூரத்தில் இருந்தே அனுமானித்தவன் வண்டியை இழுத்து நிறுத்தி சீனிவாசம் பிள்ளையின் வீட்டை நோக்கி வண்டியை திருப்பினான். ‘பத்தடிக்கு எட்டடி குடிசைக்குள்ளே ஒரு ஆள் எட்டி உதைத்தால் திறந்து கொள்ளும் மூங்கில் கதவு குடிசையைச் சுற்றி, ஓடுவதற்கு வெட்டவெளி, பத்தடி தூரம் நடந்தால் பெரிய தாமரைக்குளம். இது எப்படி நடந்தது? நாலு பேர் நின்றாலே மூச்சு முட்டும் குடிசைக்குள்ளே முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் எப்படி வந்தார்கள்?” கோபாலகிருஷ்ண நாயுடு நாகபட்டினம் கப்பக்கார செட்டியார் வீட்டில் பத்திரமாக இருந்தார். அன்றைய நாளில், ஒரு வெறிபிடித்த மிருகமாய் தானே நேரில் நின்று பேயாட்டம் ஆடி குடிசைகளைக் கொளுத்திய கொலைகாரன், நாகபட்டினத்தில் ‘பத்திரமா’ இருந்ததாக எழுதுவதற்குக் காரணம் வர்க்கச் சார்பு மட்டுமே.

மேலும், ‘இன்றிரவு இயேசு பிறக்கிறார்’ என்ற ரகசியத்தைப் பரிமாறிக் கொண்ட ஊர் மக்கள் முழுவதும் அன்றிரவு கோபாலகிருஷ்ண நாயுடு பண்ணையை அவர் சார்ந்தவர்களை அழித்தொழிப்பதற்கான முன்னேற்பாடுகளில் இருந்தனர் என கீழ்க்கண்டவாறு எழுதியிருப்பதன் மூலம், மக்களை முதல் குற்றவாளியாக்குகிறார். அன்பழகன் தன்னுடைய கொல்லம் பட்டறையில் அரிவாள் சுளுக்கி செய்து கொண்டிருக்கிறான். ஏற்கனவே ஐம்பது நூறுன்னு போயிருக்கு, இன்னிக்கி ராத்திரிக்குள்ள அம்பது அருவா இருபது முப்பது சுளுக்கி வேண்டும்.. எல்லாம் நல்லதுக்கான்னு தெரியல. நானும் பல வருசமா பாத்துட்டன். இப்படியே இருந்து என்ன பண்ணப் போறோம். நாமளும் இருந்தோம், தின்னோம், செத்தோம்னு இல்லாம நம்ம மக்களுக்கு, நம்ம சாமிக்கு ஏதாவது செஞ்சிட்டுப் போவோம்’. பாப்பா கோயில் சந்தை மேட்டுல 200 பேர் தயாராகிறார்களாம்’. கோபாலகிருஷ்ண நாயுடுவை தன்னுடைய நாவலின் வழியே கொலைக்குற்றவாளியாக்காமல் தப்புவித்த சீனிவாசன் நடராஜன் அவரின் அழித்தொழிப்பு வரலாற்றையும் தப்பும் தவறுமாக எழுதியிருக்கிறார். ராமையா மூன்று பேரை கோபாலகிருஷ்ண நாயுடுவின் வீடான ரெங்க விலாசில் வேலைக்குச் சேர்த்து விட்டிருக்கிறாராம். அவர்கள் காத்திருந்து ஒருநாள் கோபால கிருஷ்ண நாயுடுவைக் கொலை செய்கிறார்களாம். அப்படியானால், தமிழகத்தில் எம்.எல்.கட்சியால் அதிகாரபூர்வமாக நிகழ்த்தப்பட்ட அழித்தொழிப்பை யார் செய்தார்களாம்? சீனிவாசன் நடராஜன் அவர்களுக்கு பாட்டாளியின் ‘கீழைத்தீ’ நாவலைப் பரிந்துரைக்கிறேன். தயவுசெய்து அதைப் படித்துவிட்டு வந்தாவது இப்படியான உளறல்களை நிறுத்திக் கொள்ளுங்கள்.

அன்றைய கீழத்தஞ்சை முழுக்க ஒட்டுமொத்த தமிழ்நாட்டைப் போலவே மூடநம்பிக்கை மண்டிக்கிடந்தது என்பதுதான் வரலாறு. அத்தகைய இந்துமத மூடநம்பிக்கைகள் நாகையிலிருந்து தஞ்சைவரை அனைத்துக் கிராமங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது. அதனாலும், எளிய உழுகுடி மக்கள் பாதிக்கப்பட்டனர். அதை ஒழிக்க ஒருபுறம் திராவிட இயக்கம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் நடத்தியது. ஆனால், நாவல் அதைப் பற்றி ஒருவரிகூட பேசாமல், கிறிஸ்துவத்தை சீண்டிப் பார்க்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களாகிய ராமையா, முத்தையன், உட்படப் பலரும் தேவாலயப் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். பெயர் மாற்றம் செய்து கொள்ளப் பிரியப்படுகின்றனர். நாவலில் வாடிகனின் நீண்ட ஊழல் கதை சொல்லப்படுகிறது. ‘இன்றிரவு இயேசு பிறக்கிறார்’ என்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் ரகசிய சங்கேதக் குறியீடாக இருக்கிறது.

மேலும், நாவலில் லாஜிக் என்பதை எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். மனைவி சார்ந்திருக்கும் ரகசிய கம்யூனிஸ்ட் கட்சியைக் கரித்துக்கொட்டும் கணவன் அன்பழகன், அடுத்த காட்சியிலேயே அழித்தொழிப்பு வேலைகளுக்கு உதவுகிறான்! தேவூர் டெய்லர் கடை முன் ஆடிப் பாடிக்கொண்டிருக்கும் பெண், தோழர் தியாகுவைப் பார்த்ததும் சட்டென ஆட்டத்தை நிறுத்தி விட்டு, ‘லெனின் பற்றி சொல்லுங்க’ என்கிறாள்! யாருக்கும் பசி அதிகமானால் வயிறு உள்ளிழுத்து ஒட்டிப் போய்விடும் என்பதுதான் நாம் அறிந்தது. ஆனால், செல்வி எனும் சிறுமி பசியால் இருப்பதை இப்படி எழுதுகிறார் நாவலாசிரியர் ’செல்விக்கு வயிறு உப்பிக் கிடந்தது. கொஞ்ச நேரம் பசியில் அரற்றி விட்டு, வேலிப்பூவின் கவர்ச்சியில் பசியை மறந்து போய் இருந்தாள்.’ தலித் மக்களின் வாழ்வியலோ உரையாடலோ நாவலாசிரியருக்குச் சுத்தமாக வரவில்லை.

நாவலின் கதாபாத்திரத் தன்மைகளை நாம் எதிர்பார்க்காத கோணத்திலெல்லாம் அமைத்திருக்கிறார். தேவூரில் காப்பி ஹவுஸ் வைத்திருக்கும் வெங்கட்ரமணி ஐயர் ஒரு நல்ல சோசலிஷவாதி. சிலம்பு சுற்றுவார். ரகசிய இயக்கத்திற்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால், சாதி ஆட்களைத் தவிர வேறு யாரையும் படியேறி உள்ளே வர அனுமதிக்க மாட்டார். அவரின் நண்பரான சுகுமாரன் நாத்திகர். பெரியாரை நேசிப்பவர். ஆனால், தேவதாசி முறை ஒழிய வேண்டும் என்ற பெரியாரின் கருத்தில் உடன்பாடு இல்லாதவராம். கலையை அழிக்கக் கூடாது எனச் சொல்லும் இவர் சதிராட்டம் விரும்பிப் பார்க்கிறார். கலாஷேத்திராவின் உறுப்பினர். அதேபோல, பெரியாரையும் திராவிட இயக்கத்தையும், தி.மு.க.வையும் போகிற போக்கில் பல இடங்களில் வறட்டுப் பகடி செய்கிறார். மூன்றுபடி அரிசித் திட்டத்தை நக்கல் செய்கிறார்.

கடைசியாக, இந்நாவலாசிரியருக்கு எழுத்து முறை பல இடங்களில் கைநழுவிப் போகிறது. உரையாடலை எம்மொழி வழக்கில் தொடங்குகிறோமோ அம்மொழி வழக்கிலேயே முடிக்க வேண்டும் என்கிற அடிப்படை எழுத்துமுறை கைவராத இடங்கள் நிறைய உண்டு. ஒன்றிரண்டு மட்டும் பார்ப்போம்.

‘பெண்களின் கூட்டம் அதிகரித்தது. லயன்மேன் பீஸ்கட்டையைப் போட்டவுடன், லைட் மரத்துல குண்டு பல்பு மஞ்சள் நிறத்தில் எரியத் துவங்கியது. (‘மரத்தில்’ என வர வேண்டும். ‘துவங்கியது’ தவறு. ‘தொடங்கியது’ என்பதுதான் சரி)

முத்தையனும், அவனின் காதலி அல்லிக்குமான உரையாடலின் முதல் பகுதி. ‘உண்மையாகவே உங்களுக்கு என் மீது அன்பு இருக்கிறதா?’ என்று முகத்தைக் கோணினாள்.
‘இந்த உலகத்துல சிவபெருமானுக்கு அப்புறம், நான் கும்புடுற சாமி நீதான்’
‘சாமின்னா, வெச்சி அலங்காரம் பண்றதோட சரியாப் போச்சா?’
‘அப்படி இல்ல, எல்லாம் முறைப்படி நடக்கணுமுல்ல’
‘பொம்பள நானே.. வெட்கத்தை விட்டு கேக்குறேன். கூட்டிட்டுப் போயிடு” என்றாள் அல்லி
………

‘அப்பா விட்டுட்டுப் போன பள்ளத்தெரு குடிசையைத் தவிர, என்கிட்ட வேற என்ன இருக்கு அல்லி’
(அதன் தொடர்ச்சி இப்படி மாறுகிறது)
‘உன்னுடைய சிந்தனை, உழைப்பு, உறுதியான கொள்கைப் பிடிப்பு, நேர்மை போதாதா நாம் வாழ. வேறென்ன வேண்டும் சொல்’
‘இந்த மக்களின் விடுதலையை நாம் கண்ணால் பார்க்க வேண்டும் அல்லி’
‘இன்றைக்கு என்னை அழைத்துக்கொண்டு போய்விடு, பர்வதம் அத்தையின் இயக்க அலுவலகத்தில் என்னை விட்டுவிடு, அதன் பிறகு எது வந்தாலும், அவள் பார்த்துக் கொள்வாள்.

ஒடுக்கப்பட்ட மக்கள், இயக்கமாகி செங்கொடி ஏந்தி பண்ணையாதிக்கத்தை எதிர்கொண்ட வரலாற்றை, நூற்றுக்கணக்கானோர் களப்பலியாகி பண்ணையாதிக்கத்தை ஒழித்த வரலாற்றை, இவ்வளவு மலினமாக, கொச்சைப்படுத்தி எழுதிய இந்நாவலுக்கு ‘விடுதலைக் கலை இலக்கியப் பேரவை’ யின் ‘எழுச்சித் தமிழர் விருது
2020 வழங்கியது ஏற்புடையதல்ல. எந்தக் கோணத்தில் இந்த நாவலை சிறந்ததெனத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதே தெரியவில்லை.

முகநூல் பதிவு:

தோழர் புலியூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here