அரசியல் பொருளாதாரக் குறிப்புக்கள் : நாடு கொள்ளை போனால் ‘ஒரு பழைய பொற்காலம்’ மீண்டு வருமாம்!


ஜூன்3, 2022 : உத்திரப் பிரதேச மாநிலத்தில் அரசாங்க முதலீட்டாளர் உச்சி மாநாடு நடந்தது. தொழில்துறை அமைச்சர் நந்தகோபால் நந்தா ஒரே நேரத்தில் மேடையிலிருந்த பிரதமர் மோடிக்கும், முதல்வர் யோகிக்கும் பூமாலை பாமாலை சூட்டினார். 80000 கோடி மதிப்புள்ள நாற்றுக்கணக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மசூதிகள் எல்லாம் பழைய ‘பொற்காலத்தில்’ கோயில்களாக இருந்தவை; அவற்றை மீட்டேத் தீருவோம் என்று வழக்காடியும், வீதிச் சண்டை போட்டும் நாட்டைக் கலவரபூமியாக்க சங்கிகளின் குரங்குப் படைகள் கொட்டமடிக்கின்றன; ஆனால் இதுவல்லவோ வளர்ச்சி என்று உ.பி. மாடலை சந்தடிசாக்கில் முன்தள்ளி வரவேற்றார் நந்தகோபால். “இது காசி – மதுராவின் உத்தரப்பிரதேசம். சமாஜ்வாதி கட்சியின் சைஃபை, இந்திரா குடும்பத்தின் அமேதி என்று மக்கள் சொல்லமாட்டார்கள்; இனி, காசி – மதுராவின் பூமி என்று மட்டுமே சொல்வார்கள்” என்று பிரசங்கம் செய்தார்.

ஜூன் 4, 2022 : அதே இடத்தில் அதானி தன் பேச்சை ஜெட் வேகத்தில் டெலிவரி செய்தார். முந்தைய நாளின் அரசு அறிவிப்பைப் போலவே 70,000 கோடி மூலதனம், 30,000 பேருக்கு வேலை என்று அறிவித்தார். “செய்தித் தொடர்பு, பசுமை மின்சாரம், தண்ணீர் – விவசாய திட்டங்கள், டேட்டா சென்டர் வணிகம் ஆகியவற்றை நான் ஏற்கனவே தொடங்கிவிட்டேன்; இனி சாலை – போக்குவரத்து – உள்கட்டுமான வசதிகள்; அதற்கடுத்து கடற்படைப் பாதுகாப்புத் துறைகளில் போர்த்தளவாடக் கருவிகள். இத்திட்டமே முதன்முதல் மிகப்பெரிய தனியார் திட்டம்…” என்று அடுக்கடுக்காக ‘குஷி’ப்படுத்தினார் அதானி. திட்டம் தெற்காசியாவிலேயே மிகப்பெரியது என்று ‘உலகத்தின் தாலி அறுப்புத் திட்டத்தை’ தன் டிரேட் மார்க் சிரிப்போடு அறிவித்தார்.

மேலே சொல்லப்பட்ட 80,000 கோடி திட்டம்; 70,000 கோடி திட்டம் எல்லாம் ஒன்றா, ஒன்று சேர 1,50,000 கோடித் திட்டச் செலவுகளா தெரியாது. எல்லாம் தண்ணீர்-பால் எடைகட்டும் டீக்கடைக்காரர் மோடியின் திட்டமாக இருக்கவே இருக்காது; கங்கை நீரில் குடம் குடமாய்ப் பாலை ஊற்றும் போலிச்சாமியார் யோகியின் திட்டமாக இருக்கவே அதிகம் வாய்ப்புண்டு. உ.பிக்கு என்று சொல்லப்படும் திட்டங்களின் பலாபலன் அத்தனையும் அதானி கஜனாவுக்கே என்பது மட்டும் நிச்சயம். – பிரதமர், முதல்வர் சாட்சியாக.

அரசாங்க முதலீட்டாளர் உச்சி மாநாடு – உ.பி

அன்றைய (4.6.2022) அதானியின் முத்திரை வாக்கியங்கள் இரண்டு; “ஒன்று : ”இன்றைய உத்தரப்பிரதேசமே நாளைய இந்தியா”. இரண்டாவது: “பிரதமர் நரேந்திரமோடி(ஜி) ஒரு புதிய இந்தியாவை உருவாக்குகிறார். “பழைய பொற்காலத்தை மறுபடி நிறுவிக் காட்டுவதற்காக”. தொடர்ந்து அதானி மேடையிலிருந்து பேசியதெல்லாம் மோடி புகழ்ப்பாமாலை மட்டுமே. “80 லட்சம் கோடி இலக்கோடு குஜராத்தில் தொடங்கியதிலிருந்து, உங்களை அருகே இருந்து பார்த்துவருகிறேன் மோடி(ஜி) அவர்களே! அன்று கொள்கை அறிவித்தீர்கள், குஜராத் மாடலை உருவாக்கினீர்கள்; பிறகு அதையே உ.பிக்கு விரிவாக்கி இன்று நாடு முழுக்கப் பரப்பிவிட்டீர்கள். எத்தனைப் பெரிய மாற்றம் இந்தியாவில்?”
ஒரு பரம, பரப்பிரம்ம ரகசியத்தை உடைத்து விளக்கினார் அதானி. தனது கார்ப்பரேட் திட்டமும் ஆர்.எஸ்.எஸ். திட்டமும் பொருந்திப் போவதைத்தான் தன் மொழியில் அவர் விளக்கினார். அதே நேரம் பா.ஜ.க என்ற ஒரு கட்சிக்கான ஆள் தான் அல்ல என்பதையும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வேறு ஒரு பேட்டியில் அவர் தெளிவாகவே பேசியவர்தான் அதானி. வர்க்கத்தைப் பற்றி சூட்சுமமாக அல்ல, எதார்த்தமாகவே, பருண்மையாகவே விளங்கி வைத்திருக்கிறார் அதானி.

இதே வேகத்தில் அதானியின் பெரும் வேக வளர்ச்சியை இங்கே பார்த்து வைப்போம். ஜூன் 2022 உத்தரப் பிரதேசக் கொண்டாட்டத்துக்கு ஆறு மாதம் முன்னால் (3.12.2021) இந்தியாவின் கடன் தரும் நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி (SBI), அதானிக் குழுமான NBFC-யின் கரம் (அதன் மூலதன தனியார் நிறுவனம்) இரண்டும் கைகோர்த்து நாட்டின் விவசாயிகளுக்குக் கடன்தரப் போவதாக ஒப்பந்தச் செய்தி வெளியானது. பண்ணை உற்பத்தி விரிவாக்கம் பற்றி – விவசாய டிராக்டர் அறுவடைக் கருவி போன்ற கருவிகளைக் கொடுத்து விவசாயச் செயல்திறனைப் பெருக்கப் போவதாக S B I அறிக்கை விவாதித்தது. விவசாயத்துறை எந்திரமயமாக்கலை ஒட்டி கிராமங்களைத் தத்தெடுத்து ஊக்குவிப்பது, ஆற்றங்கரைப் பின்னிலத்தில் உட்பகுதி விவசாயிகளைக் குறிவைத்து வணிகத்தை நடத்தப் போவதாகவும் ஸ்டேட் வங்கி விவரித்தது.

ஆறு மாதம் முன்னால் விவசாயத்துறை, ஆறே மாதத்துக்குப் பின்னால் உ.பி மாடலில் தொழில் துறையில் தன் பங்கு என்று அதானி பாய்ந்து செல்வது எந்த மந்திரத்தாலும் நடந்துவிடவில்லை. மோடியோடு 15 ஆண்டு அரசியல் நட்பு காரணம் என்பது வெளியே தெரிந்த ஒரு ரகசியம். ஆளும் வர்க்கமான அதானியின் அரசியல் பின்னணி ஆர்.எஸ்.எஸ். – பாஜக மோடி என்பதும் வெளிப்படையான ரகசியமாக வந்துவிட்டது. அதானி வளர்ச்சியைச் சுருக்கமாக வணிக மொழியில் “கடனையே எரிபொருளாக்கி சாம்ராச்சியத்தை விரிவுபடுத்துகிறார் அதானி”, என்கிறார்கள். டாட்டா, பிர்லா போல ‘ஆதி’ பணக்காரர்கள் அல்ல, ‘பூர்வீக’ பணக்காரர்கள் அல்ல என்று அவர்கள் சொல்கிறார்கள்.

படிப்பைத் தூக்கிக் கடாசிவிட்டு வைர வியாபாரம், பிளாஸ்டிக் என்று 1988-ல் துழாவிக்கொண்டிருந்த அதானி 1990களில் ஒரு துறைமுகத்தை வாங்கி “ஓம்’ போடுகிறார்; இப்போது தமிழக, மகாராட்டிர, மேற்கு வங்கத் துறைமுகங்கள் என்று 10 விரல்களுக்கும் 10 மோதிரம் போட்டது போல துறைமுகங்கள். துறைமுகங்கள் வழியாக நிலக்கரி, திரவ எரிவாயு, பனை எண்ணெய் ஆகியவை வந்து நிரம்புகின்றன. மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி சப்ளை செய்யத் தொடங்கி விரிவாகி சுரங்கத் தொழிலில் கைவைக்கிறார் ; மெல்லக் காலை ஊன்றி சொந்தமாகவே மின்னுற்பத்தி தொடங்குகிறார்; இந்தியா– இந்தோனேசியாவில் கூட எதிர்ப்பு தொடங்குவதையும், ஆஸ்திரேலியாவில் கார்பன் (கரி) எதிர்ப்பு பெருகி “வெளியே போ அதானியே ” என்று எதிர்ப்பலை வலுத்துப் பெரிதாவதையும் பார்த்து , தூய ஆற்றல் (எரிசக்தி) சுற்றுச் சூழலுக்கே என் ஓட்டு என்று சூரிய சக்தி(Solar) உற்பத்திக்கு ஆதரவான மந்திரத்தையும் ஓதுகிறார். கடன் வாங்கி, மோடி ஆதரவோடு அதற்கான எதிர்காலத் திட்டத்தையும் அறிவிக்கிறார்.

விவசாயம், உணவு உற்பத்தி, சமையல் எரிவாயு மற்றும் கணிப்பியல் திட்டம் சார்ந்த முதலீடுகளிலும் இறங்கி விமான நிலையங்கள், தானிய சேமிப்புக் கிட்டங்கிகள் – குளிர் பதனப் பேழைகள், “டேட்டா” மையங்கள், மிக அண்மையில் ஊடக (மீடியா) வணிகம் என்று இப்படியாக நகர்ந்து சிமெண்ட் உற்பத்திக்காக “ஹோல்சிம்” (Holcim Swiss) கட்டுமானப் பன்னோக்குக் கம்பனியை ரூபாய் 82,000 கோடி விலை கொடுத்து வாங்கி உள்கட்டுமானத் தொழில் துறையிலும் இறங்கினார். அதன் பிறகு ஹைட்ரஜன் உற்பத்தியிலும் பறந்துகொண்டிருக்கிறார்.

ஒரு ஆய்வாளர் கருத்துப்படி அம்பானிக்கும் அதானிக்கும் உள்ள வேறுபாடே அதானி மிகக் குறைந்த கால அளவில் மாபெரும் வீச்சானை வளர்ச்சியை இலக்கு வைக்கிறார் என்பதே ஆகும். இதை ஆங்கிலத்தில் எரி மீன் பாய்ச்சல் அல்லது விண்கல் பாய்ச்சல் என்கிறார்கள். அதானியின் பொன் மொழிகளில் சொல்வதானால், “நோட்டுக் கட்டுக்கள் மீது சுகமாகக் குந்தியிருக்கலாம், அல்லது வளர்ந்துகொண்டே போகலாம், ஆனால் நமக்கு வேண்டியது வேகமான வளர்ச்சி” மற்றும் “வணிகம் என்பதென்ன? தடைகளை, கடும் சிரமங்களை எதிர்கொண்டு வரவேற்பது, மாறுதல்களை – கொந்தளிப்பான நிலைமைகளைச் சந்தித்து நிர்வாகம் செய்வது” போன்றவைதான்.
அதானி நாட்டையே கொள்ளை அடிக்கிறார் – மோடிஜியோடு சேர்ந்து மந்திரம் சொல்கிறார், தன் மந்திரத்தை தானே உருவாக்கிக் கொள்கிறார் – கொள்ளை அடிக்கிறார். நம்பிக்கை, பங்கு மூலதனம், மறக்கவே கூடாது, அத்தனைக்கும் மேலாக கடன் – கடன் – கடன் – இவை அதானி என்ற தேசங்கடந்த இந்தியத் தரகுமுதலாளியின் கிரிமினல் கொள்ளைக்கான மூலதனம்.
அறிஞர் காரல் மார்க்ஸின் ‘மூலதனம்’ நூல் கூற்றுப்படி மூலதனம் பிறப்பு, வளர்ச்சி, பாய்ச்சல் எல்லாவற்றோடும் கிரிமினல் குற்றம், மோசடி, ஊழல், அரசியல் கொலைகள் அத்தனையும் அடக்கம். அந்த வாக்குக்கு ஏற்ப அதானி பொருளாதாரத்தைக் கணக்கிட்டுச் சொல்வதற்கேற்ப, அதில் கலந்து பரவியுள்ள கிரிமினல் + விசத்தன்மைக்கேற்ப, அதை அரசியலில் விளக்குகிறார் சொக்கத் தங்கம் மோடி.

’நாட்டின் வருங்காலத்துக்கு இன்றைய உள்கட்டுமான வளர்ச்சி ஆதாரம்’ என்று அதானி(ஜி) என்றோ சொல்லி செயலுக்குப் போய்விட்டதையே மோடி(ஜி) ‘கதி சக்தி’ (வேக சக்தி) என்று பார்ப்பன சமஸ்கிருத நெய் தடவிய அரசின் திட்டமாக அறிவித்தார். இது போலவே தான் சோலார் திட்டம், ஹைட்ரஜன் உற்பத்தித் திட்டம் எல்லாவற்றுக்கும் அதானி, அம்பானி, டாடா இத்யாதி இத்யாதி திட்டங்கள் வெளியேறிய பிறாகே அரசின் செயல்திட்டங்கள் நத்தை வேகத்தில் நாடாளுமன்றப் படிகளைத் தாண்டி உள்ளே சென்றன. கடைசியாக அரசுத் தரப்பில் இருந்து ஒருசில திட்டங்கள் அறிவிக்கப்படுவதற்குள் ‘ஹைட்ரஜன் தயாரிப்பை’ சீனா அறிவித்து நாலுகால் பாய்ச்சலில் போய்க்கொண்டிருக்கிறது. ((மார்ச் 28, 2022ல் அதற்கான நீண்ட காலத் திட்டத்தை (2021 – 2035) சீனா அறிவித்துவிட்டது. மார்ச் 8 அன்றைய செய்தியின் படி சூரியனுக்குள் ஆற்றல் எப்படி உருவாகிறதோ அதையே செயற்கைச் சூரியன் மூலமாக இவ்வுலகில் உருவாக்கியுள்ளது சீனா; அணு இணைப்பு ( HL– 2 M ) மூலம் நிலைத்த ஆற்றல் உருவாக்கிட முடியும் என்று அப்போது நிரூபித்துவிட்டது. பசு மாட்டின் ‘ஜல’த்திலிருந்தும் (மூத்திரம்), அதன் ‘சாண’த்திலிருந்தும் (மலம்) ஆற்றலை புராண வழிகளில் தேடும் மோடிஜி வகையறாக்களின் மூஞ்சிகள் தொங்கிப்போய்விட்டன என்பது தனிக் கதை.))

வேறு சில புதிய திட்டங்களை ஒன்றிய அரசு அறிவித்தாலும் அதில் முக்கிய ஒன்று : கார்பன் உமிழ்வை நீக்கி தன்ணீரில் இருந்து பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய மிகப்பெருமளவு எலக்டிரோலைர்சகள் (மின் பகுப்புக்கு உதவும் நீர்மப் பொருள்) தேவை. அவற்றை ‘சுத்திகரிப்பு நிலையங்களுக்கு’ தயாரித்து உதவ பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் (BPCL), பாபா அணு ஆய்வு மையத்தோடு ( BARC) இணைந்து ஈடுபடப்போகின்றன. அதாவது, தனியார் உற்பத்திக்கு உள்ளிடு பொருளை இவ்வாறு அரசுத்துறை தயாரித்துக் கொடுத்துவிட்டு அத்தனைத் திறமையையும் கார்ப்பரேட்டுக்களுக்குப் பறிகொடுக்க வேண்டியது தான். மிக எளிமையாகச் சொல்லவேண்டுமானால், ” சாமார்த்திய ரவுடி அங்கிளிடம் ஐஸ்கிரீமைப் பறிகொடுத்த குட்டி விரல் சூப்புகின்ற கதைதான் இது ! வெறும் திறமை மட்டுமல்ல, உற்பத்தி, நிலம், மற்றும் இறையாண்மையும் சேர்த்துப் பறி கொடுக்கவேண்டியது தான்.

விண்ணில் பாய்ந்து செல்லும் எரிகல் போல வேகமான உற்பத்திக் கொள்ளையில் முன்னேறுபவர் அதானி என்று பருந்துப் பார்வையில் பார்த்தோம். தேசங்கடந்த தொழில் கழகமாக இந்திய கார்ப்பரேட்டாக நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக, பார்ப்பன இந்துமதவெறிப் பாசிஸ்டுகளுடன் தெரிந்து அறிந்து உலா வருபவர் தான் அதானி என்பதையும் பார்த்தோம்.

படிக்க:

 5 மாநில தேர்தல்கள்: பற்றிப் படரும் பாசிசம் ’இந்து ராஷ்ட்டிரத்தின்’ முன்னறிவிப்பா?

 அக்னிபத் திட்டம்: 4 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் பக்கோடா விற்க வேண்டுமா?

இந்தச் சுரண்டலின் கீழ் மக்கள் ஒவ்வொரு நாளும் வதைபடுகிறார்கள். கார்ப்பரேட்டுகளும் காவிகளும் எவ்வாறு பரஸ்பரம் அஸ்திவாரங்களைப் பலப்படுத்தி வருகிறார்கள் என்பது உலகறிந்த ஒன்று. கார்ப்பரேட் அதானிக்கு தான் அடிப்பது கொள்ளை அல்ல, புதிய பாரதம் உருவாக்குவதற்கான சேவை; இதற்கு இவர் போடுகின்ற கூட்டு ‘ஒரு பழைய பொற்காலத்தை’ மீண்டும் படைக்க வெறியோடு அலையும் காவிகளோடு.

இவர்களைத் தூக்கி எறியாமல் மக்களுக்கு விடுதலை இல்லை, நிம்மதியும் இல்லை. மக்களது எதார்த்த அன்றாட வாழ்வில், கனவுகளில் கொள்ளி வைப்பவர்களை வாழ அனுமதிக்கக் கூடாது.

ஆதாரம் : தி ஒயர்.இன், பிசினஸ் இன்ஸைடர்.இன், மணி கன்ட்ரோல்.காம், டி எஃப் ஐ போஸ்ட், ஃபோரா நியூக்ளியர்.இன், எம்.எகனாமிக்டைம்ஸ்.காம், என்டிடிவி.காம் ( NDTV. Com ) .

கட்டுரை ஆக்கம் : இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here