இந்தி எந்த பிரச்சனைக்கான தீர்வு?
இந்தியாவுக்கு ஒரு பொது மொழி தேவை என்ற கருத்தில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மத்திய அரசு வெளியிடும் ஆணைகள், அறிக்கைகள் மற்றும் செய்திகள் அனைத்து மக்களையும் சென்று சேர வேண்டும் என்றால், அவற்றை அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு மொழியில் வெளியிட்டாக வேண்டும். அந்த வகையில் ஒரு பொது மொழி கட்டாயம் தேவை. மேலும், பல்வேறு மொழிகளை பேசுபவர்கள், இணைந்து பணியாற்றும் போது, அவர்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், உரையாடவும் ஒரு பொது மொழி தேவைப்படுகிறது.
நம் முன் என்ன சிக்கல்கள் இருக்கிறது என்பதை தெளிவாக வரையறுத்தால்தான் அதற்கான தீர்வுகளை எட்ட முடியும். இந்தியாவுக்குள் ஒரு பொது மொழி தேவை என்பது ஒரு பிரச்சனை. அதே போல், பிற நாடுகளோடு தொடர்பு கொள்ள ஒரு பொது மொழி வேண்டும் என்ற இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. ஆகவே, நம் முன்னால் இரண்டு சிக்கல்கள் இருக்கிறது.
- இந்தியாவுக்குள் ஒரு பொது மொழி வேண்டும்
- உலக நாடுகளுக்குள் ஒரு பொது மொழி வேண்டும்
உலக நாடுகளுக்கான பொது மொழியாக ஆங்கிலம் வலுவான இடத்தை பிடித்து விட்டது. காரணம், அந்த மொழியில் ஏராளமான நூல்கள் மற்றும் தகவல்கள் தினமும் எழுதப்பட்டு வருகிறது. அறிவியல் நூல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே எழுதப்படுகிறது. ஆகவே உலகின் மற்ற நாடுகளோடு போட்டி போட, ஆங்கில அறிவும் அவசியம் என்றாகி விட்டது. இதை, இந்தி வேண்டும் என்று சொல்பவர்களும் மறுக்கவில்லை. அதனால்தான் இந்தி பேசுகிற மாநிலங்களிலும் ஆங்கிலம் கட்டாயப்பாடமாக இருக்கிறது.
இந்தி பேசுகிற மாநிலங்களிலும் ஆங்கிலம் கற்கிறார்கள், நாமும் ஆங்கிலம் கற்கிறோம் எனும் போது, இந்தியாவுக்குள் ஒரு பொது மொழி வேண்டும் என்ற பிரச்சனைக்கான தீர்வு எளிதாகி விடுகிறதே! ஆங்கிலம்தானே அந்த பொது மொழியாக இருக்க முடியும்? ஆனால் இங்குதான் புதிதாக ஒரு பிரச்னையை கிளப்புகிறார்கள். உலக நாடுகளோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் இருக்கட்டும், ஆனால் இந்தியாவுக்குள் தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்பதே இந்தியை ஆதரிப்பவர்களின் நிலைப்பாடு! இரண்டு சிக்கல்களுக்கு ஒரு தீர்வு இருக்கும் போது, எதற்காக தனித்தனியாக இரண்டு தீர்வுகள்?
இந்த நிலைப்பாட்டை அறிஞர் அண்ணா மிக எளிமையாக விளக்கியிருக்கிறார். மேலை நாடுகளில், வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வீட்டுக்குள் நுழைய, கதவில் சிறிதாக ஒரு கதவு வைத்திருப்பார்கள்.
“பெரிய நாய் நுழைவதற்கு பெரிய கதவு, சின்ன நாய் நுழைய சின்ன கதவு என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ, அது போலத்தான் பிற நாடுகளோடு தொடர்பு கொள்ள ஒரு மொழி, பிற மாநிலங்களோடு தொடர்பு கொள்ள மற்றொரு மொழி என்பது” – அறிஞர் அண்ணா
இந்தி பேசும் மாநிலங்களிலும் ஆங்கிலம் கட்டாயப்பாடமாக இருக்கும் போது, அவர்களால் ஏன் நம்மோடு ஆங்கிலத்தில் உரையாட முடியாது? எதற்காக இன்னொரு இணைப்பு மொழி? பள்ளியில் ஆங்கிலம் படித்தாலும் அவர்களால் நம்மோடு ஆங்கிலத்தில் உரையாட முடியாது என்றால், பள்ளியில் இந்தி படித்து விட்டு நம்மால் மட்டும் எப்படி இந்தியில் உரையாட முடியும்?
பொது மொழி வேண்டும் என்ற பிரச்னைக்கு எளிதான தீர்வு இருக்கும் போது, அவர்கள் இந்தியும் வேண்டும் என்ற வாதத்தில் இறுதியாக வந்து நிற்பது “என்ன இருந்தாலும் ஆங்கிலம் அந்நிய மொழி அல்லவா? இந்திதானே நமது மொழி. இந்தி பொது மொழியாக இருந்தால்தானே பெருமை” என்ற புள்ளியில்தான். ஆகவே, அவர்கள் பொது மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறுவது தங்களின் பெருமைக்காகத்தானே தவிர பிரச்சனைக்கான தீர்வாக அல்ல. இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு வேண்டுமானால் இந்தி பொது மொழி என்பது பெருமையாக இருக்கலாம். பிற மொழியினரை பொறுத்த வரை ஆங்கிலமும் வேற்று மொழிதான், இந்தியும் வேற்று மொழிதான். ஆங்கிலத்தையும் இந்தியையும் ஒரே தராசில் வைத்து எடை போட்டு, ஆங்கிலத்தில் அறிவியல் நூல்கள் அதிகம் இருப்பதை உணர்ந்து அதை தேர்வு செய்கிறோம் நாம்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 32 கோடி. மொத்த மக்கள் தொகை 121 கோடி.
மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆவணத்தின் லிங்க். 6ஆம் பக்கத்தில் பார்க்கவும் https://censusindia.gov.in/2011Census/C-16_25062018_NEW.pdf
அதாவது, இந்தி பேசுபவர்கள் 25%. பிற மொழியினர் 75%. யார் பெரும்பான்மை? இந்த 25 விழுக்காடு மக்களோடு தொடர்பு கொள்ள மீதம் இருக்கிற 75 விழுக்காடு மக்கள் இந்தி கற்க வேண்டுமா?
இந்தி படித்தால்தான் குறிப்பிட்ட சில அரசு பணிகள் கிடைக்குமானால் அந்த சட்டத்தை அல்லவா நாம் கேள்வி கேட்க வேண்டும்? இந்த நாட்டில் அனைத்து மொழிகளும் சமம், ஆனால் ஒரு மொழி மட்டும் உசத்தி என்பதை எப்படி ஏற்றுகொள்வது?
இந்தி படித்தால் வேலைவாய்ப்பு பெருகுமா?
2017ஆம் ஆண்டு, மத்திய அரசு Economic Survey என்ற பொருளாதாரம் குறித்த கணக்கெடுப்பு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து செல்பவர்கள் குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டது. அந்த அறிக்கை அரசு இணைய தளத்தில் இருக்கிறது. அதன் லிங்க் இதோ https://www.indiabudget.gov.in/budget2017-2018/es2016-17/echap12.pd
இந்த அறிக்கையின் படி, பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதில் முதலிடத்தில் இருப்பது உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான்.
அத்தனையும் இந்தி பேசும் மாநிலங்கள்!!
268ஆம் பக்கத்தில் இந்த தகவல் இருக்கிறது. எண்ணிக்கை மைனசில் செல்ல செல்ல, வெளிமாநிலங்களுக்கு செல்பவர்கள் அதிகம் என்று பொருள்
இந்த புள்ளிவிவரங்கள் மூலம், இந்தி பேசப்படுகிற மாநிலங்களில் இருந்துதான் அதிகமான எண்ணிக்கையில் வேலை தேடி மற்ற மாநிலங்களுக்கு செல்கிறார்கள் என்பது தெளிவா தெரிகிறது. இந்தி சோறு போடாது, உழைப்புதான் சோறு போடும் என்பது தெரிகிறது. இந்திக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது புரிகிறது
மூன்றாவதாக ஒரு மொழியை கற்பதில் என்ன பிரச்சனை?
அன்றாட வாழ்வில் பயன்படுத்தினால், எந்த ஒரு மொழியையும் இரண்டு மாதத்தில் கற்றுக்கொள்ளலாம். அன்றாட தேவைகளுக்கான சொற்களை இரண்டே நாட்களில் கூட கற்றுக்கொள்ளலாம். தேவை என்று வரும் போது மனித மூளை அசாத்திய வேகத்தில் வேலை செய்யும்.
ஆனால், பயன்பட போகிறதா இல்லையா என்று தெரியாமல் ஒரு மொழியை, அதுவும் பள்ளிப்பருவத்தில், கற்பது தேவையற்ற சுமையே. அந்த நேரத்தில் அவர்களை விளையாட அனுமதித்தால், அதுவே குழந்தைகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி.
தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தாமல் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகள் எளிதில் எந்த மொழியையும் கற்று கொள்வார்கள் என்று கூறுவது, புத்தகத்தின் வாயிலாக கற்றுக்கொள்வதற்கு பொருந்தாது. தினமும் பேச பயன்படுத்தும் மொழியை மட்டுமே குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்வார்கள்.
கல்லூரிப்படிப்பை முடித்து வேலையில் இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி. உங்களில் எத்தனை பேருக்கு கல்லூரி முடிக்கும் போது ஆங்கிலத்தில் சரளமாக பேச முடிந்தது? வேலையில் சேர்ந்து ஆங்கிலத்தில் கட்டாயம் பேசி ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது, சில மாதங்களில் எளிதாக பேச வந்துவிடுகிறது. ஆகவே, ஒரு மொழியை பள்ளியில் படித்தால் அந்த மொழியில் பேச வந்து விடும் என்பது தவறு.
தனியார் பள்ளிகளில் இந்தி
தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்கிறார்களே! தனியார் பள்ளிகளில் சேர முடியாத ஏழைக் குழந்தைகள் எப்படி இந்தி கற்பார்கள்? ஆகவே அரசு பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
சில தனியார் பள்ளிகளில் நீச்சல் கூடத்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். குதிரை ஏற்றமும் கற்றுக்கொடுக்கிறார்கள். ஏழைக்குழந்தைகள் நீச்சல் கற்க வேண்டாமா? ஆகவே அரசு பள்ளிகளில் நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பலாமே! இந்தி கற்றுக்கொள்வதை விட நீச்சல் கற்றுக்கொள்வது முக்கியமாயிற்றே! உயிரை காக்குமே!
அது ஏன் முடியாதென்றால், இருக்கிற நிதியை அதை விட முக்கியமான பாடங்களை கற்றுக்கொடுக்க செலவு செய்ய வேண்டும். நம்மிடம் எல்லையற்ற அளவு நிதி இருக்கிறதென்றால், எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கலாம். ஒரு நாளில் 24 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. ஒரு நாளில் பள்ளியில் மாணவர்கள் இவ்வளவு நேரம்தான் செலவிட முடியும் என்று இருக்கிறது. இருக்கிற நிதியில், கிடைக்கிற நேரத்தில் மாணவர்களின் அடிப்படை கல்விக்கு தேவையானதை மட்டும் கற்றுக்கொடுத்தால் போதுமானது. இந்தி மொழி அந்த அடிப்படை கல்வியில் வராது.
மூன்றாவது மொழியை கற்பதில் என்ன ஆபத்து இருக்கிறது?
பயன்படாமல் போனால் என்ன? ஒரு மொழியை கற்றுக்கொண்டால் குடியா மூழ்கிப் போய் விடும் என்ற கேள்வி எழலாம்.
முதலில் உத்திர பிரதேசத்தில் இந்த ஆண்டு (2020) பொதுத்தேர்வு தேர்வு முடிவுகளை பார்த்து விடுவோம். செய்தியின் லிங்க்:
https://www.thanthitv.com/News/India/2020/06/30091831/1481674/Uttar-Pradesh.vpf
மொத்தம் 7.95 இலட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி அடைந்தனர்! இந்தி பேசும் மாநிலத்திலேயே இத்தனை மாணவர்கள் இந்தியில் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.
அடுத்ததாக குஜராத் மாநில ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை பார்ப்போம்.
செய்தியின் லிங்க்:
இந்தி பாடத்தில் தேர்ச்சி அடைந்தவர்கள் 66.71 விழுக்காடு. தோல்வி அடைந்தவர்கள் 32.29 விழுக்காடு! அத்தனை மாணவர்களின் வாழ்விலும் ஒரு ஆண்டு வீண்! தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களில் பெரும் பகுதியினர் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர்!
தமிழ்நாட்டில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருக்காது என்று வைத்துக்கொள்வோம். சென்ற ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 9.7 இலட்சம். அதில் 5% மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி அடைகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, 48 ஆயிரத்து 500 மாணவர்கள் தோல்வி அடைவார்கள்.
அப்படி மாணவர்களின் ஒரு ஆண்டு படிப்பை பணயம் வைத்து படிக்கிற அளவுக்கு இந்தியில் என்ன இருக்கிறது? உயர்ந்த இலக்கியங்கள் இருக்கிறதா? அல்லது ஆங்கிலம் போல வேறு எந்த மொழியிலும் இல்லாத அறிவியல் புத்தகங்கள் இருக்கிறதா?
எதிர்காலத்துக்கு தேவைப்படுகிற கணக்கு, அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களையே அனைத்து மாணவர்களும் எளிதாக கற்று தேர்ச்சி அடையும் நிலையை நம் நாடு இன்னும் எட்டவில்லை. இந்த நிலையில் கூடுதலாக ஒரு சுமை தேவையா?
வேற்று மாநிலத்தவரை அவர்கள் தாய்மொழியில் கற்க விடாமல் தடுக்கிறோமா?
தமிழகத்தில் எந்த மொழியையும் கற்பதற்கு தடை இல்லை. தமிழகத்தில் மொழிவாரி சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அவர்கள் தாய்மொழியில் கல்வி கற்கும் வசதி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
2016ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட மொழிவாரி சிறுபான்மையினருக்கான 52வது அறிக்கையில் இதை பற்றிய புள்ளிவிவரங்கள் இருக்கிறது. அறிக்கை அரசு வலைத்தளத்தில் இருக்கிறது. அதன் லிங்க்: http://www.minorityaffairs.gov.in/sites/default/files/2.%2052nd%20Report%20English.pdf
அறிக்கையின் 136ஆம் பக்கத்தில், தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மை மொழிகளுக்கான பள்ளிகளின் எண்ணிக்கை, மற்றும் அதில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரம் இருக்கிறது. அதில் தெலுங்கு, உருது, மலையாளம், கன்னடம், இந்தி, இவ்வளவு ஏன், குஜராத்தி மொழியில் கல்வி கற்பிக்கும் பள்ளிகள் கூட இருப்பதை காணலாம்.
ஓசூர் பகுதிகளில், பல அரசு பள்ளிகளில் தெலுங்கு மற்றும் கன்னட வழி கல்வி பயிற்றுவிக்க படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில், சில அரசு பள்ளிகள் மலையாளம் பயிற்றுவிக்க படுகிறது.
இது தவிர, புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் அவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க உதவி வழங்கப்படுகிறது. பெங்காலி, ஓடியா மொழிகளிலேயே அவர்களுக்கு பாட புத்தகம் வழங்கப்படுகிறது.
இந்த தகவல் தமிழக அரசு வெளியிட்ட கல்விக் கொள்கை ஆவணத்தில் இருக்கிறது. அதன் லிங்க்: https://cms.tn.gov.in/sites/default/files/documents/schooledu_e_pn_2016_17.pdf
இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, தமிழ்நாடு பாடநூல் நிறுவனமே இந்தியில் புத்தகங்களை அச்சடித்து வழங்குகிறது!
புத்தகத்தின் லிங்க்: http://tnschools.gov.in/media/textbooks/5th_Hindi_Final_19-03-19.pdf
இதில் இருந்தே தெளிவாகி இருக்கும். மாற்று மொழியினர் தங்கள் மொழியை கற்க தமிழகம் என்றுமே தடையாக இருந்ததில்லை. ஒரு படி மேலே போய் உதவி செய்து வருகிறது. ஆனால், திணிக்க நினைத்தால், எதிர்ப்பு கிளம்பும்!
நம்மை இந்த அளவுக்கு இந்தியை படிக்க சொல்லி வற்புறுத்துபவர்கள், அவர்கள் மாநிலங்களில் மொழிவாரி சிறுபான்மையினர் தங்கள் மொழியை கற்க என்ன வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போமா?
அதே மொழிவாரி சிறுபான்மையினருக்கான 52வது அறிக்கையில், 50ஆம் பக்கத்தில், உத்திர பிரதேசத்தின் இலட்சணத்தை காணலாம்.
எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை!! இதுதான் இந்தி பேசும் மாநிலங்களின் இரட்டை வேடம். இத்தனை ஆண்டுகளாக, பிற மாநிலங்கள் மூன்று மொழி கற்க வேண்டும் என்று சட்டம் போட்டவர்கள், தங்கள் மாநிலங்களில் இது வரை மற்ற மாநில மொழிகளை மூன்றாவது மொழியாக கற்க அனுமதித்தார்களா? இல்லை!
மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் தேர்வு செய்யலாம் என்ற புதிய உருட்டு
தற்போது மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்று சமரசம் செய்தது போல் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அது நடக்காது என்று தெரியும். ஒரு வகுப்பில், ஒரு மாணவன் மட்டும் பெங்காலி மொழி கற்க விரும்பினால், அந்த மாணவனுக்காக மட்டும் ஒரு ஆசிரியரை நியமிக்க முடியுமா? குறைந்த பட்சம் 20 மாணவர்கள் வேண்டும், 30 மாணவர்கள் வேண்டும் என்று புதிதாக ஒரு சட்டத்தை கொண்டு வருவார்கள். கடைசியில், அனைத்து மாணவர்களும் இந்தி மொழியையே கற்கும் நிலைமை வரும்.
மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் தேர்வு செய்ய தேவையான அளவு நிதியை ஓதுக்குவோம் என்று மத்திய அரசு கூறுமேயானால், அதை முதலில் ஒரு இந்தி பேசும் மாநிலத்திலோ, குஜராத்திலோ செயல் படுத்தி காட்டட்டும்.
அவர்கள் அதை செயல் படுத்த மாட்டார்கள் என்பதை கீழ்கண்ட செய்தியில் இருந்து புரிந்து கொள்ளலாம்
செய்தி லிங்க்:
குஜராத்தில் அடிப்படை கல்வியை கற்றுக்கொடுக்கவே தேவையான அளவு ஆசிரியர்கள் இல்லை. உபி, பிகார் மாநிலங்களில் இன்னும் மோசம். இரண்டு மொழிகளை கற்றுக்கொடுக்கவே நிதியை ஒதுக்காத அரசுகளா அத்தனை மொழிகளுக்கு நிதி ஒதுக்க போகிறது? இருக்கிற நிதி அனைத்தும் இந்தி சமஸ்கிருதத்துக்கே செலவிடப்படும்!
இந்தி பேசும் மாநிலங்களில், தென்னிந்திய மொழியை கற்க மாட்டார்கள். சமஸ்கிருதத்தையே விரும்புவார்கள். காரணம், இந்தி பேசுபவர்களுக்கு, சமஸ்கிருதம் படிப்பது எளிது. அவர்களுக்கு மூன்றாவது மொழி படிப்பது எளிதாகி விடும். ஆனால், தமிழகத்து மாணவர்களுக்கு சுமையாகி விடும்.
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி.
இந்தி பேசப்படும் மாநிலங்களில் சமஸ்கிருதம்.
இதுவே அவர்கள் திட்டம்.
பிற மொழிகளுக்கான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க தேவையான அளவு நிதியை மத்திய அரசு ஒதுக்காது என்பதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு.
செம்மொழிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் செலவிடப்பட்ட நிதி எவ்வளவு என்ற கேள்விக்கு, 3.2.2020 அன்று மக்களவையில் மத்திய அமைச்சர் பிரகலாத் சிங்க் படேல் அளித்த பதில் இது. மக்களவை வலைத்தளத்தில் இருக்கிறது. லிங்க் http://164.100.24.220/loksabhaquestions/annex/173/AU171.pdf
மூன்று ஆண்டுகளுக்கும் செலவிடப்பட்ட மொத்த தொகை
சமஸ்கிருதம் – 643.84 கோடி
தமிழ் – 22.94 கோடி
644 கோடிக்கும் 23 கோடிக்கும் இடையே கடலளவு தூரம் இருக்கிறது. இதுதான் இவர்கள் பிற மொழிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம். மத்திய அரசின் தமிழ் மொழி பாசமெல்லாம் பேச்சளவில் மட்டுமே… செயலில் இருக்காது என்பதை அமைச்சர் கொடுத்த இந்த புள்ளிவிவரத்தில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.
இந்தி திணிக்கப்படுவதின் உள்நோக்கம் என்ன?
- குறிப்பிட்ட அந்த நான்கு மாநிலங்களின் ஓட்டு! அந்த நான்கு மாநிலங்களில் இடங்களை அள்ளினால், மத்தியில் பெரும்பான்மை ஆட்சி அமைப்பது எளிது
- இந்தியா முழுக்க ஒற்றை கலாச்சாரம் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குறிக்கோள்.
- அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் எளிதாகி விடும்
- கல்வியை முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முதல் படி
கட்டுரைச் சுருக்கம்
- இந்தி பேசுபவர்களும் ஆங்கிலம் கற்பதால், ஆங்கிலம் பொது மொழியாக இருப்பதே எளிதான தீர்வு.
- இந்தி மொழிக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதற்கு இந்தி மொழி பேசும் மாநிலங்களின் பொருளாதார பின்னடைவே எடுத்துக்காட்டு
- புத்தகங்களில் படிப்பதன் மூலம் ஒரு மொழியை கற்றுக்கொள்ள முடியாது. அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்
- மூன்றாவது மொழி மாணவர்களுக்கு ஒரு தேவையற்ற சுமை. ஒரு ஆண்டு பின்தங்கும் ஆபத்து இருக்கிறது. இடைநிற்றல் அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது.
- தமிழகத்தில் பிற மொழியினர் அவர்கள் மொழியை கற்க வசதி இருக்கிறது.
- மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் கற்கலாம் என்பதை நடைமுறைப்படுத்துவது இயலாது.
நன்றி: Boothamblogs