பாரதிய ஜனதா கட்சி கொள்கை, நேர்மை கொண்ட, ஊழல் கறை படாத கட்சி என்று “பிராண்ட்” செய்யப்பட்டு மக்களிடையே அரசியல் வியாபாரத்தில் இறங்கியது.

ஏற்கனவே அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சியின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் மறுகாலனியாக்க தாக்குதல்கள் அனைத்தும் சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் மீது மிகப் பெரும் வெறுப்பை உருவாக்கியது.

இந்த சூழலை பயன்படுத்திக்கொண்ட பாரதிய ஜனதா கட்சி படித்தவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அறிவுத்துறையினர் மத்தியில் இந்தியாவை விடுவிக்க வந்த அல்லது இந்தியாவை மலர்ச்சிக்கு கொண்டு செல்ல வந்த தூதராக ஊடகங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் முன்னிறுத்தினர்.

ஆனால் நேர்மை, உண்மை, ஊழலற்ற ஆட்சி போன்றவற்றுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் சிறிதும் தொடர்பு இல்லை என்பதை சமீபத்திய தமிழகத்தில் அண்ணாமலை தலைமையிலான நான்காம் தர அரசியல் நடத்தும் கும்பல் செய்து வரும் நடவடிக்கைகள் நாட்டுமக்களுக்கு உண்மையை உணர்த்தியுள்ளது.

பிற கட்சிகளில் உள்ள பிரபலங்களின் குடும்ப உறுப்பினர்களை காசு கொடுத்து விலைக்கு வாங்குவது என்பதையே ‘பக்கா பிளான்’ ‘சாணக்கியத்தனம்’ ‘சூப்பர்’ என்றெல்லாம் விதந்து ஓதுகின்றனர் கார்ப்பரேட் எடுபிடி ஊடகங்கள்.

முதலாவதாக திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகன் குடும்பத்திலிருந்து அவரது பேரன் அன்பு கிரியை கட்சிக்கு இழுத்தனர். அடுத்து பாராளுமன்றத்தில் நீண்ட காலமாக திமுகவின் முன்னணி தலைவராக செயல்படுகின்ற திருச்சி சிவாவின் மகன் சூர்யா என்பவரை கட்சிக்கு இழுத்தனர். அந்த வரிசையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகனின் விவாகரத்து வாங்கிக் கொண்ட முதல் மனைவியை கட்சிக்கு இழுத்து உள்ளனர்.

இதையெல்லாம் அரசியல் நடவடிக்கைகள் போல ஊடக மாமாக்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எந்த நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சில கோடிகளுக்கு விலைக்கு வாங்குவதை போல எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் அவர்களை விலைக்கு வாங்குகின்ற ஈனத் தனமான செயலை திறமை என்றும், அருமை என்றும் புகழ்வது நரகலில் கையை வைத்த ஒருவன் அதை எடுத்து முகர்ந்து விட்டு ஆஹா, ஓஹோ என்பதைப்போல் அருவருப்பாக இருக்கிறது.

90களில் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகள் அரசியல் கட்சிகளின் கொள்கைகள், கோட்பாடுகள், விழுமியங்கள் ஆகியவற்றை முற்றாக ஒழித்துக்கட்டி புதிய இயல்பு நிலைமைக்கு தள்ளியது.

தேர்தல் கட்சிகள், தேர்தல் கட்டுமானங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு உறுப்புகளும் செயலிழந்து திவாலாகி, தோற்றுப்போய், எதிர்மறை சக்தியாக மாறி விட்டது என்பதையே நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இந்த சூழலில் பாரதிய ஜனதா கட்சி வேறு கட்சிகளில் ஆள் பிடிப்பது, கட்சிகளை பல கோடிக்கு பேரம் பேசி வாங்குவது, அல்லது வெற்றி பெற்ற எம்எல்ஏ, எம்பி களை விலைபேசி வாங்குவது போன்றவற்றை நேர்மையான அரசியல் என்று இன்னமும் யாராவது புரிந்து கொண்டிருந்தால் அதைவிட ஏமாளித்தனம் வேறு ஒன்றும் இல்லை.

தேர்தல் அரசியலில் இதுபோன்ற கேடுகெட்ட நடவடிக்கைகளை தூ என்று காரித்துப்பி நிராகரிப்பதற்கு பதிலாக அதை பல பக்கங்களில் செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்களின் யோக்கியதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  • சண் வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here