மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது

மாணவர்களின் தன்மைக்கேற்ப பயிற்றுவிக்கின்ற பேராசிரியர்கள் இந்த காலகட்டத்தில் ஏறக்குறைய அருகி விட்டனர்.

ஒரு பொருளை பிறர் ஏற்கச் செய்யும் வகையில் கற்றுக் கொடுப்பதற்கு அந்த பொருளின் மீது ஆழமான அறிவு தேவைப்படுகிறது.

பேராசிரியர் ஆல்பர்ட் அந்த வகையில் முன்னுதாரணமாக இருந்தார்.

பேராசிரியர் ஆல்பர்ட் ஆங்கில இலக்கிய வகுப்புகளில் தன்னுடைய ஆகச் சிறந்த கற்றறிவுடன் மேன்மையுறச் செய்வார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

மொழிப்பாட வகுப்புகளுக்கு Part II ஆங்கில வகுப்புகளுக்கு பொதுப்பிரிவிலிருந்து மாணவர்களும் ஆங்கில இலக்கிய மாணவர்களுமாகச் சேர்ந்து ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்டதொரு மாணவர்  கூட்டமாகிவிடும். அம்மாணவர்கள் அவருடைய சிறிய இயல்பான தோற்றம் கண்டு அவரைச் சற்றும் கண்டுகொள்ளாமல் உதாசீனப் படுத்துவது போல் நடந்து கொள்வர்.

ஒருநாள் மதியம் சரியான வெயில் நேரம்,  சார் வகுப்பில் நுழையும் பொழுது அந்தப் பொதுப்பிரிவு மாணவர்கள் சற்றும் அடங்காத் தன்மையுடன் ஆடிக் கொண்டும், ஒலிகளை எழுப்பிக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். ஆல்பர்ட் சார் அந்த அரவமெல்லாம் தானாக ஓயும் வரை அமைதியாக கவனித்துக் கொண்டே இருந்தார். அந்த மாணவர்கள் இந்தப் பேராசிரியரின் மேன்மேன்மையை அறியாதவர்களாய் இருந்தனர்.

கொஞ்சம் அமைதியான பிறகு அவரே ஆரம்பித்தார். அப்பொழுது பிரபலமாயிருந்த ‘இரு கோடுகள்’ என்ற சினிமா பற்றியதொரு விவாதத்தைத் துவக்கினார். அந்தக் கணமே முழு வகுப்பும் அவருடைய பேச்சைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினர். வகுப்பு அமைதியாயிற்று‌‌. பின்னர் அவர் தன்னுடைய வகுப்பைத் தொடங்கினார்.

அறிஞர் E M ஃபாஸ்டரின் கலை அனுபவம் இந்தப் படத்தோடு எப்படிப் பொருந்திவருகிறது என்று ஒப்பிட்டு விளக்கிக் கொண்டே போனார். கட்டுப்பாடற்று இருந்த அந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் அவரின் இலக்கிய உரைக்குக் கட்டுப்பட்டு அடங்கிப் போயினர். அதன் பிறகு ஒருபொழுதும் அவருடைய வகுப்புகளைக் கவனிக்கத் தவறியதே இல்லை. இலக்கிய மாணவனாக இருந்த என்னுடைய மனசை தன்னுடைய மந்திரச் சொற்களால் என்னைக் கட்டிப் போட்டு வைத்திருந்தார்.

நான் இறுதியாண்டு படிக்கும் பொழுது 1971-ல் பிரபல சரோட் இசைக்கலைஞனும், ஆங்கிலப் பேராசிரியருமான டாக்டர் ராஜிவ் தாரநாத் அவர்களை ஜமால் முகமது கல்லூரிக்கு அழைத்துவந்து பேராசிரியராக்கினார்.

அது ஒரு யுகம் ஒரு பொற்காலம். மேதைமைமிக்க பேராசிரியர்களாக விளங்கிய ஆல்பர்ட்,  தாரநாத்,  W P தாமஸ், ,சௌகத் அலி, லீனஸ் ஜோஸஃப், பஞ்சநாதன் ஆகிய பேராசிரியர்கள் அனைவரும் எந்நேரமும் மாணவர்களைத் தம் வசம் கட்டி வைத்திருந்தனர்.

எழுதியது முன்னாள் பேராசிரியர் திரு டேவிட் சிட்னி பேசில்.

அற்புதராஜ் சுந்தரம்
முகநூல் பகிர்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here