அன்பார்ந்த வாசகர் தோழர்களே!
புதிய ஜனநாயகம் மாத இதழ் நாற்பதாவது ஆண்டை நோக்கி தனது பயணத்தை தொடர்கிறது. ஆளும் வர்க்கத்தின் பல்வேறு அடக்குமுறைகள், போலீசு குண்டர்களின் மிரட்டல்கள், ரவுடிகள்- பொறுக்கிகளின் தாக்குதல்கள், அரசியல் பிழைப்புவாதிகளின் வசவுகள், இடது- வலது திருத்தல்வாத கம்யூனிஸ்ட்களின் அவதூறுகள் அனைத்தையும் முறியடித்து புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுகின்ற மக்கள் இயக்கமாக செயல்படுகிறது புதிய ஜனநாயகம்.
மார்க்சிய லெனினிய அடிப்படை நிலைப்பாடுகளை கைவிட்டு சாகச மனநிலையில் 30 நாட்களில் புரட்சி செய்வதற்கு கிளம்பிய போலி புரட்சியாளர்கள் முதல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களை நேரடியாக சந்திக்காமலேயே அறைக்குள் அமர்ந்து கொண்டு ஆளும் வர்க்கத்திற்கு எதிராக முண்டா தட்டுகின்ற ‘ஹைடெக் கம்யூனிஸ்டுகள்’ வரை கம்யூனிசத்தின் பெயரால் பல்வேறு வண்ணங்களில் மக்களை குழப்பியடிக்கின்ற போக்குகளை தோலுரித்து வெளி வருகிறது புதிய ஜனநாயகம்.
நாற்பதாவது ஆண்டை நோக்கிய தனது பயணத்தில் ஜனவரி 2025 முதல் புதிய பொலிவுடன் வெளிவருகிறது என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
வாசகர்களை தோழர்களாக்கி சமூக ரீதியாக செயல்படுவதற்கு தூண்டுகின்ற வகையில் கேள்வி- பதில் என்ற பக்கத்தை மீண்டும் கொண்டு வருகிறோம்.
ஏற்கனவே எமது அரசியல் ஏட்டில் இந்த தலைப்பின் கீழ் வாசகர்களுடன் நேரடியாக உரையாடி வந்தது மட்டுமின்றி அவர்களின் தேசியம், இனப் பிரச்சனைகள், ஏகாதிபத்தியம், பார்ப்பனியம், பாசிசம், கம்யூனிச இயக்கத்தில் நிலவுகின்ற பல்வேறு வகையான போக்குகள் உள்ளிட்டு உலக அரசியல் முதல் உள்நாட்டு அரசியல் வரை அனைத்தின் மீதும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்திருக்கிறோம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அத்தகைய முயற்சியில் புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு ஈடுபட்டுள்ளது என்பதை பொறுப்புடனும், இடையில் இத்தகைய முயற்சியை கைவிட்டதற்கு சுயவிமர்சனத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே புதிய ஜனநாயகம் மெயிலுக்கோ புதிய ஜனநாயகம் தினசரி பக்கத்திற்கோ அல்லது மக்கள் அதிகாரம் இணையதளத்திற்கோ தங்களது கேள்விகளை அனுப்பி வைக்கவும். அதற்கான பதிலை அடுத்தடுத்த இதழ்களில் கொண்டு வருகிறோம்.
பல்வேறு மாற்றுக்கருத்துகள், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூக அமைப்பில் ஒத்த புரிதலுடன் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக களமாடுவதற்கு இத்தகைய செயல்பாட்டில் தங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகிறோம்.
புரட்சிகர வாழ்த்துக்கள்.
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
(மா. லெ)
புதிய ஜனநாயகம் ஜனவரி இதழில் தலையங்க கட்டுரையில் பெண்கள் மீதான அனைத்து வகையான தாக்குதல்களுக்கும் முடிவு கட்ட தற்காலிக தீர்வாக ஆயுதம் ஏந்தும் உரிமை வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.
இது சரிதானா?
இதுவரை இப்படி எங்கும் எழுதப்பட்டதில்லையே?!
தோழர் உங்கள் கேள்வி புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயகம் 40 ஆண்டுகளாக அரசியல் பொருளாதாரம் பண்பாடு மொழி கலாச்சாரம் தேசிய இனம் மாநில உரிமை மக்கள் நலன் போன்றவற்றை மார்க்சிய லெனிய அரசியல் சித்தாந்த ஆயுதமாக புதிய ஜனநாயகம் பத்திரிகையை கொண்டு வந்த ஆசிரியர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!
தொழிலாளர்களால் கடந்த காலங்களை போல வீரியம் மிக்க போராட்டங்களை நடத்துவதில்லையே. ஏன்? என்ன காரணத்தால் விவசாயிகள் போல் ஒன்றுதிரள முடியவில்லை? தொழிற்சங்கங்கள் கூட்டுபேர உரிமையை மட்டும் நடத்துவதினாலா?
சிவகாமு, கரூர்.