அகண்ட பாரத கட்சிக்கு வந்த ‘சத்திய சோதனை’!

கத்தார் அரசின் வெளியுறவுத்துறை “முஸ்லிம் மக்களின் மனது புண்படும் வகையில் இந்தியாவை ஆளும்கட்சியான பாஜகவினர் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்திய அரசு பொது மன்னிப்புக் கோர வேண்டும்” என்று கோரியது.

அகண்ட பாரத கட்சிக்கு வந்த ‘சத்திய சோதனை’!

தொலைக்காட்சி விவாதத்தில் ‘முகமது நபி’ குறித்து தனது முஸ்லிம் வெறுப்பைக் கக்கிய பாஜக நுபுர் ஷர்மாவை இடைநீக்கம் செய்தும், அவரது கருத்தை ஆதரித்த நவீன்குமார் ஜிண்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலும் இருந்தும் நீக்கியுள்ளது ‘அகண்ட பாரதத்தை’ நிறுவும் கனவில் மிதக்கும் பாரதிய ஜனதா கட்சி.
நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாதமொன்றில் பார்ப்பனத் திமிர்த்தனத்துடன் நபிகள் குறித்து தெரிவித்த கருத்து பரவலாக கவனம் பெற்றதைத் தொடர்ந்து இஸ்லாமிய நாடுகள் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளது.

கத்தார் அரசின் வெளியுறவுத்துறை “முஸ்லிம் மக்களின் மனது புண்படும் வகையில் இந்தியாவை ஆளும்கட்சியான பாஜகவினர் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்திய அரசு பொது மன்னிப்புக் கோர வேண்டும்” என்று கோரியது. அதைத் தொடர்ந்து சவூதி அரேபியா, குவைத், ஈரான் எனப் பல நாடுகளும் இந்திய அரசு முஸ்லிம் வெறுப்பு கருத்துக்களை பேசியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளன.
குறிப்பாக, 57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட Organization of Islamic Countries (OIC) அமைப்பும் நுபுர் ஷர்மா பேச்சை கண்டித்தது மட்டும் அல்லாமல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் முஸ்லிம் வெறுப்பு நடவடிக்கைகளையும் கண்டித்துள்ளது.

கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்

இதுநாள் வரை மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட போதும், குடியுரிமை சட்டம் கொண்டுவந்தபோதும், ஹிஜாப் அணிந்த மாணவிகள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படாத போதும், பாபர் மசூதியைத் தொடர்ந்து காசி, மதுரா என தொடர்ச்சியாக மசூதிகள் குறிவைக்கும் பட்ட போதும் அமைதியாக இருந்த இஸ்லாமிய நாடுகள் தற்போது எதிர்வினை ஆற்றியுள்ளன.

இந்த எதிர்வினையை கண்டு அஞ்சிய பாஜக அந்தக் கருத்துக்களை பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும், மதங்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை ஏற்க முடியாது என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் முரண் நகை என்னவெனில் முஸ்லிம் வெறுப்பைக் கக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில் ஒவ்வொரு கூட்டத்திலும் அவுரங்கசீப்பை வம்புக்கு இழுக்கும் பிரதமர் மோடி, வங்கதேசத்திலிருந்து வந்த இஸ்லாமியர்கள் இந்தியாவின் எதிரிகள் எனப் பேசிய அமித்ஷா, இஸ்லாமியர் வீடுகளை குறிவைத்து இடிக்கும் பாஜக மாநில முதல்வர்கள், மசூதிகள் முன் காவிக்கொடி ஏற்றும் தொண்டர்கள் என மொத்த பாஜகவினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், பாஜக கட்சியையும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும்.

இன்னொரு புறம் இஸ்லாமிய வெறுப்பை வீர ஆவேசமாக பேசிய தங்கள் கட்சி, இஸ்லாமிய நாடுகள் கண்டித்த உடனே சொந்த கட்சியினரையே “Fringe elements” என்று கூறியதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தத்ததையும் பார்த்து வெகுண்டெழுந்த சங்கிகள் #shameonyoubjp என‌ ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். பாஜக தலைமையோ இஞ்சி தின்ன ‘அனுமார்’ போல் முழித்து வருகிறது.

  • திருமுருகன்

1 COMMENT

  1. அந்த பிஜேபிகாரன் என்ன சொன்னான் என்பதையும் சேர்த்து சொல்லியிருந்தால், புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். இப்பொழுது அதை தனியாக தேடவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here