பணவீக்க எதிர்ப்பு கொள்கையும், நவ தாராளமயமும்! | முதல் பாகம்
தொடர்ச்சி…
நிதித்துறையில் தலையீடு
அக்டோபர் புரட்சியின் காலத்தில், உலகப் பெருமந்தத்தின் மத்தியில் நின்றுகொண்டு எழுதிய ஜான் மேனார்ட் கீன்ஸ் இந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலைமையை நன்றாக அறிந்திருந்தார். எனவே, அமைப்பினை ‘பாதுகாக்கும் தன்னுடைய இலக்கை எட்டுவதற்கு, “முதலீட்டை சமூகமயப்படுத்த வேண்டும்” என்று அவரால் பெயரிடப்பட்ட திட்டத்தை செயலாக்க விரும்பினார். அதை செய்வதற்கு, பொருத்தமான பணக் கொள்கையும், அதோடு நிதித்துறையில் அரசின் தலையீடும் அவசியமாகும். மேலும் இந்த இரண்டுமே ஒட்டுமொத்த சமூகத்தின் தேவைகளுக்கும், நிதி சார்ந்த நலன்களுக்கும் உட்பட்டதாக இருக்கவும் வேண்டும்.
இப்படிப்பட்ட சிந்தனை நிலவிய சூழலில், உலகப் போருக்கு பிறகு புதிதாக விடுதலையடைந்த நாடுகள் பல புதுமையான நிதிக் கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்த அமைப்புகளில், பெரிய எண்ணிக்கையில் வேலையின்மை நிலவியது எனினும், செயல்பாடுகளை குறைத்துக்கொள்ளாமலே, ஊக நடவடிக்கைகள் மீது நேரடியான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டன. இந்தியாவை உதாரணமாகக் கொண்டால், நீண்டகால முதலீட்டிற்கான நிதியினை சிறப்பு நிதி நிறுவனங்கள் வழங்கின. இந்த நிதிக்கான வட்டி, குறுகிய கால கடன்களுக்கு வங்கிகள் நிர்ணயித்த வட்டி விகிதங்களை விடவும் பொதுவாக குறைவாக இருந்தது. ஊக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு, வெறுமனே வட்டி விகிதம் (மற்றும் இருப்பு விகிதம் போன்ற பாரம்பரிய கருவிகள்) மட்டுமல்லாது, வேறு பல கருவிகளும் வங்கிகளால் பயன்படுத்தப்பட்டன. நேரடியான கட்டுப்பாட்டிற்கான அத்தகைய கருவிகளில் ஒன்று, ஊக நடவடிக்கையின் தாக்கம் இருக்கும் குறிப்பான துறைகளுக்கு கடன் வாய்ப்புகளை முறைப்படுத்துவது ஆகும். “தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கட்டுப்பாடுகள்” என்று அவை அறியப்பட்டன. பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், நிதி மற்றும் பணம் சார்ந்த நடவடிக்கைகளாக மட்டுமே அமையவில்லை. “சரக்குகள் வழங்கலில் தலையீடு செய்வதன்” மூலமாக, (ரேசன் கடைகள் போன்ற) பொது விநியோக திட்ட அமைப்புகளை ஏற்படுத்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்தினார்கள். இவை அனைத்துமே முதலீட்டை உறுதி செய்தன. உற்பத்தியும், வேலைவாய்ப்புகளும் – ஊக வணிகர்களுடைய நடவடிக்கையினால் பாதிக்காத விதத்தில் – தள்ளி நிறுத்தப்பட்டன.
நிதித் துறையில் தாராளமயம்
உலக வங்கியும், சர்வதேச நிதியமும் அவைகளுக்கு விசுவாசமான நவ தாராளமய பொருளாதார அறிஞர்களும் மேற்சொன்ன ஏற்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்கள். இந்த நிதி ஏற்பாடுகளை “நிதி சார்ந்த அடக்குமுறை” என்று பெயரிட்டு அழைத்ததுடன், அந்த அமைப்புகளில் “தாராளமய” நடவடிக்கைகளை அமலாக்க வேண்டும் என விரும்பினார்கள். எனவே, நிதிச் சந்தைகளின் மீது மேற்கொள்ளப்பட்ட நேரடி தலையீடுகள் அனைத்துமே தவிர்க்கப்பட்டன. இன்னமும் கூட அவர்கள், உணவு தானிய விநியோகத்தில் இப்போதும் தொடரக்கூடிய பொது விநியோக (ரேசன் கடைகள்) ஏற்பாட்டினை கைவிட்டு விட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். மோடி அரசாங்கம் நிறைவேற்றிய மோசமான 3 (வேளாண்) சட்டங்கள் அந்த இலக்கை நோக்கியதாகவே இருந்தன. பொது விநியோக அமைப்பையும், ரேசன் அமைப்புகளையும் கைவிடச் செய்வதில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், நவதாராளமய ‘சீர்திருத்தங்களின்’ பெயரால் ‘நிதி தாராளமய’ ஏற்பாடுகளை சுமத்திவிட்டார்கள்.
“நிதி தாராளமயமாக்கல்” என்பது, பணக் கொள்கையின் ஒரு கருவியாக வட்டி விகிதங்கள் மீது வைக்கப்படும் பிரத்யேக நம்பிக்கையை குறிக்கிறது. மேலும் (ஏற்கனவே சொன்னதைப் போல) உலகத்தில் நிதியின் ஓட்டம் அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் வட்டி விகிதத்துடன் நேரடியாக பிணைக்கப்பட்டிருப்பதால், ஒரு நாட்டிற்கு இந்த விசயத்தில் அதிகமான வாய்ப்புகள் இல்லை. அரசாங்கத்தின் வருவாயும், அரசின் செலவினங்களும் “நிதிப் பொறுப்பு” என்ற பெயரால் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுவிட்டன. அதே பெயரினால், பணக்காரர்கள் மீது அதிக வரி சுமத்தி அரசாங்கம் தனது வருவாயை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அடைக்கப்பட்டுவிட்டன. எனவே, பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, வட்டி விகிதத்தை பயன்படுத்தினால் அது முதலீடு, உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியையும் நிர்ணயம் செய்வதாகவும் அமைந்திடும்.
முன்பு குறிப்பிட்டதையே இது மீண்டும் உணர்த்துகிறது. ஒரு குறிப்பிட்ட நாட்டின் உள்நாட்டு ஊக வணிகர்கள் கூட்டத்தினுடைய நடத்தை, அந்த நாட்டில் நிலவும் உற்பத்தியையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கிறது என்பது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட அமெரிக்க நாட்டில் உள்ள ஊக வணிகர்களின் நடத்தை, ஒவ்வொரு நாட்டிலும், அதாவது முழு உலக பொருளாதாரத்திலும், உற்பத்தியையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கிறது.
நவதாராளமய கட்டமைப்பு
ஒரு சில ஊக வணிகர்களுடைய விருப்பங்களின் அடிப்படையில், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள் நிர்ணயிக்கப்படுவதற்கு அனுமதிக்காது என்ற காரணத்திற்காக, நாம் முன்பு கொண்டிருந்த (dirigiste era) நிதிக் கட்டமைப்பினை புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் டாக்டர் கே.என். ராஜ் வியந்து பாராட்டினார். அந்த கட்டமைப்பு, நிதி தாராளமயமாக்கல் நடவடிக்கைகளால் துல்லியமாக தாக்கப்பட்டது. மேலும், அந்த நடவடிக்கைகளே ஒவ்வொரு நாட்டின் வேலை வாய்ப்பு நிலைமைகளும், ஒரு சில அமெரிக்க ஊக வணிகர்களின் விருப்பத்தை சார்ந்ததாக ஆக்கியது.
பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளில் ஒன்றாக, வட்டி விகிதங்களை அதிகப்படுத்துகிற சிந்தனையைக் குறித்து உலகெங்கிலும் ஏராளம் எழுதப்படுகிறது. நவதாராளமய கட்டமைப்பை மனதில் கொண்டு, வேலையின்மைக்கும் பண வீக்கத்துக்கும் நடுவில் சமரசம் தேடும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுப்பதாக, இந்த வாதங்கள் பொதுவாக அமைகின்றன. ஆனால், இந்த சமரசப் புள்ளிக்கான அவசியமே, நவதாராளமய கட்டமைப்பின் காரணமாக, அரசின் வசம் இருந்த பல விதமான கருவிகள் அகற்றப்பட்டதால் எழுவதுதானே. எனவே, நவதாராளமய கட்டமைப்பினையே மாற்றி அமைப்பதன் மூலம் நாம் சமரச சிந்தனைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதுதான் முக்கியமாக சொல்ல வேண்டியதாகும். அதுபோன்ற விவாதங்கள் மிக அரிதாகவே எழுகின்றன.
பேரா.பிரதாப் பட்நாயக்
தமிழில்: சிந்தன்
Neo-Liberalism and Anti-Inflationary Policy