SKM மாநில செயற்பாட்டுக் குழு அறிக்கை!

0

06.07.2022 அன்று நடைபெற்ற மாநிலச் செயற்பாட்டு குழு கூட்டத்தின் அறிக்கை.

ஜூலை 3 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் எஸ்கேஎம்-இன் அகில இந்திய அளவிலான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல முக்கிய போராட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். அங்கு எடுக்கப்பட்ட முடிவுகளைத் தமிழ்நாட்டில் எவ்வாறு சிறப்பாக அமல்படுத்துவது என்பது பற்றி விவாதிக்க தமிழ்நாடு எஸ்கேஎம்-இன் மாநிலச் செயற்பாட்டு குழு கூட்டம் சென்னையில் 06.07.2022 அன்று அவசர கூட்டமாக நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளாவன :

1. ஒன்றிய அரசு MSP கோரிக்கைக்கான குழு அமைப்பது உள்ளிட்ட, ஒத்துக்கொண்ட கோரிக்கைகளை அமல்படுத்த மறுக்கும் துரோகத்தை எதிர்க்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கும் நாளான ஜூலை 18 முதல் ஜூலை 31 வரை, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கண்டன கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும். நிறைவு நாளான ஜூலை 31 அன்று காலை 11 மணிக்கு அனைத்து மாவட்ட, வட்ட, ஒன்றிய தலைநகரங்களில் சாலை மறியல் நடத்தப்பட வேண்டும்.

இதற்கான பிரச்சாரம் மாவட்ட அளவில் போஸ்டர்கள் போட்டும், வாகனங்கள் மூலமாகவும் வலுவாக நடத்தப்பட வேண்டும். போஸ்டர் மாநில அளவில் வடிவமைக்கப்பட்டு அனுப்பப்படும்.

2. அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து ஆகஸ்டு 7 முதல் 14 வரை நாடு முழுவதும் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற அறைகூவலுக்கேற்ப, தமிழ்நாட்டிலும் மாவட்ட அளவில் அரங்க கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். முன்னாள் இராணுவத்தினர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் பெருமளவுக்கு அணிதிரட்டப்பட வேண்டும். எஸ்கேஎம்-இன் அகில இந்திய தலைமை, முன்னாள் இராணுவத்தினர் சங்கத்திடம் பேசியிருப்பதன் அடிப்படையில், அவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதாக கூறியுள்ளனர். எனவே மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முன்னாள் இராணுவத்தினர் அமைப்புகளை அணுகி போராட்டத்தில் பங்கேற்க செய்யுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.

3. லக்கிம்பூர்கேரி விவசாயிகளின் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனி இன்னும் பதவியில் இருப்பதைக் கண்டித்து, 75வது சுதந்திரதின ஆண்டு விழாவின்போது – ஆகஸ்டு 18, 19, 20 ஆகிய நாட்களில் லக்கிம்பூர்கேரியில் 75 மணி நேர தர்ணா நடத்தப்படும் என்ற முடிவை அடுத்து தமிழ்நாட்டிலிருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மாசிலாமணி) & (சண்முகம்) தலா 5 பேரும், வி.தொ.ச. (பெரியசாமி) & (அமிர்தலிங்கம்) தலா 5 பேரும், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் (பசுமை வளவன்) 2, வாழ்க விவசாயி இயக்கம் (கே.பாலகிருஷ்ணன்) 2, காவிரி டெல்டா பாசனதாரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (இளங்கீரன்) 3, மக்கள் அதிகாரம் (காளியப்பன்) 5, தற்சார்பு விவசாயிகள் சங்கம் (பொன்னையன்) 3, அகில இந்திய மகா சபை (சந்திரமோகன்) 3, AIKKMS (போஸ்) 3 – என மாநிலச் செயற்பாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் அமைப்பினரின் வருகையை உறுதி செய்துள்ளனர்.

மற்ற அமைப்பு தோழர்களும் தங்கள் அமைப்புகள் சார்பாக எத்தனை பேர் கலந்து கொள்ள முடியும் என்ற தகவலைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4. நிதி : SKM தமிழ்நாடு அமைப்புக்கென்று நிதி ஆதாரம் எதுவும் இல்லை என்பதைக் கணக்கில் கொண்டு, வங்கி கணக்கு ஒன்று அமைப்பு பெயரில் ஆரம்பிப்பது என்றும், அதை இயக்குபவர்கள் தோழர்கள் கே.பாலகிருஷ்ணன், இளங்கீரன், பசுமை வளவன் ஆகிய 3 பேரில் யாராவது இருவர் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கே.பாலகிருஷ்ணன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
SKM தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here