பேரா.பிரதாப் பட்நாயக்
தமிழில்: சிந்தன்
Neo-Liberalism and Anti-Inflationary Policy


முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகள் அனைத்துமே,  பணவீக்கம் அதிகரிக்கும் சூழ்நிலையை எதிர் கொள்வதற்காக, வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளார்கள்; அல்லது விரைவில் உயர்த்த இருக்கிறார்கள். பெருந்தொற்றினால் ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீள்வதற்கே, உலக பொருளாதாரம் திணறுகிறது. அது தேக்க நிலையை நோக்கியும், அதிக வேலை இழப்புகளை நோக்கியும் சரிந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், உலக பொருளாதாரத்தை முன்னோக்கி உந்துவதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவின் பார்வை

அதேநேரத்தில், உலகின் பல நாடுகளுடைய மத்திய வங்கிகளுக்கும், தர அளவுகோலாக அமைந்துள்ள அமெரிக்க நாட்டின் மத்திய வங்கி, வேறு விதமாக பேசியுள்ளது. வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடிய உத்தரவுகள், உண்மைப் பொருளாதாரத்தின் மீது குறைவான தாக்கத்தையோ அல்லது குறுகிய கால பாதிப்பையோ மட்டுமே ஏற்படுத்தும்; பொருளாதார மீட்சியை அது பெரிதாக பாதிக்காது என்று கூறுகிறது. அவர்களின் இந்தப் பார்வை, அடிப்படையிலேயே குறைபாடான பின்வரும் காரணியால் உருவானது.

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோமி பவுல் குறிப்பிடும்போது, அமெரிக்கா தற்போது எதிர்கொள்ளும் பண வீக்கத்தை ஏற்படுத்துவது, பண ஊதியத்தால் ஏற்படும் அழுத்தமே என்கிறார். அதாவது மக்கள் பண வீக்கத்தை எதிர் கொண்டுள்ளார்கள்; எனவே வட்டி விகிதத்தை உயர்த்துவதால், மக்களுக்கு பணவீக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறோம்; அது பண ஊதிய அழுத்தத்திற்கு முடிவுகட்டி, பண வீக்கத்தை குறைத்துவிடும். இவ்வாறு நாம் மாற்றியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளும், எதிர்பார்க்கப்படும் விலை என்ற வரம்பிற்குள்ளேயே நடக்கின்ற காரணத்தினால், உண்மையான விலை என்ற வரம்பினில், அதாவது, உண்மை பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் அரிதாகவே மந்தநிலையினை ஏற்படுத்தும். மேலே சொன்ன மொத்த வாதமும் தவறு என்பது, ஒரு எளிய உண்மையோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடுகிறது. உழைக்கும் மக்கள் பெறக்கூடிய பண ஊதியம், பண வீக்கத்திற்கு பின் தவழ்ந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் உண்மை ஊதியம் குறைவதன் காரணமாக அவர்கள் தவித்து வருகிறார்கள். எனவே, அமெரிக்காவில், பண ஊதியம் ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாகவே, பண வீக்கம் ஏற்படுவதாக சொல்வது முற்றிலும் தவறு ஆகும்.

போர் காரணமா?

பண வீக்கத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படும் மற்றும் ஒரு பொதுவான காரணமும், இதைப் போலத்தான் அமைந்துள்ளது. அதாவது, ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரின் காரணமாக பல்வேறு சரக்குகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உலக சந்தையில் எண்ணெய் மற்றும் உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை உருவாகியுள்ளது என்கிறார்கள். இந்த விளக்கமும் மனநிறைவினைக் கொடுப்பதாக இல்லை. போரின் காரணமாக பற்றாக்குறை உருவாகக்கூடும் என்றாலும், இதுவரை அப்படிப்பட்ட பற்றாக்குறை எதுவும் உருவாகவில்லை. போரின் காரணமாக, உலகச் சந்தையில் மேலே குறிப்பிட்ட சரக்குகளின் வரத்து குறைந்திருப்பதனை எடுத்துக்காட்டும் விபரங்கள் ஏதும் இல்லை. எனவே, அமெரிக்காவின் சூழலை உதாரணமாகக் கொண்டு  பார்க்கும்போது, போரின் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறையே பண வீக்கத்திற்கு காரணம் என்பதும் தவறான வாதமே ஆகும்.

அமெரிக்காவில் நிலவக்கூடிய பண வீக்கத்திற்கான காரணம், தன்னிச்சையாக அதிகரிக்கப்படும் லாப விகிதங்கள் காரணமாக, உண்மை ஊதிய உயர்வினை விடவும், விலைவாசி உயர்கிறது என்பதுதான். குறிப்பிட்ட ஒரு சரக்கிற்கு பற்றாக்குறை ஏற்படும்போதுதான் லாப விகிதம் உயர்த்தப்படும். ஆனால், இப்போது பண வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பல்வேறு பொருட்களின் மீதும், பற்றாக்குறைக்கான எந்த அழுத்தமும் இல்லை. பெருந்தொற்றின் காரணமாக, பொருட்கள் விநியோக சங்கிலியில் தடை ஏற்பட்டதால், குறைவாக விநியோகிக்கப்பட்ட சில பொருட்களின் மீதும் கூட, வழக்கத்திற்கும் கூடுதலான விலை ஏற்றப்பட்டது. அது நீடிக்கவும் செய்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்காவில் நிலவக்கூடிய பணவீக்கத்திற்கான காரணி, தன்னிச்சை போக்கில் லாபத்தை கூட்டிக் கொள்வதற்காக கொடுக்கப்படும் அழுத்தமே ஆகும். இது யூக நடைமுறையையே எடுத்துக்காட்டுகிறது.

லாப நோக்கமும் பண வீக்கமும்

யூக நடைமுறையானது, வணிகர்களிடமும் இடைத் தரகர்களிடமும் காணப்படும்; உற்பத்தியாளர்களிடம் அந்த நடைமுறை இருக்காது  என்று நினைக்கும் போக்கு பொதுவாக உள்ளது. ஆனால் அந்த நினைப்பிற்கு அடிப்படை ஏதும் இல்லை. பன்னாட்டு நிறுவனங்கள், விலைகளை நிர்ணயம் செய்கிற நடவடிக்கையில் யூக நடைமுறைக்கும் இடம் இருக்கிறது. உலகின் மிகப் பெரும் பொருளாதாரமான அமெரிக்காவை, யூக நடவடிக்கையால் தூண்டப்பட்ட பண வீக்கம் தாக்கி வருவதற்கான காரணம், இன்றுவரையிலும் அவர்கள் கடைப்பிடிக்கும் அதீத எளிமையான பணக் கொள்கையும், அதன் காரணமாக கடன் கிடைப்பது எளிதாக்கப்பட்டுள்ளதுமே ஆகும்.

“அளந்து தளர்வு தருதல்” என்ற பெயரில், அமெரிக்க நாட்டின் மத்திய வங்கி, பொருளாதாரத்திற்குள் பணத்தை தள்ளுகிறது. அதற்கு தோதாக குறுகியகால வட்டி விகிதங்களையும், நீண்ட கால வட்டி விகிதங்களையும் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக வைத்துள்ளது. இதன் காரணமாகவே தன்னிச்சையாக லாபத்தை உயர்த்திக்கொள்ளும் அழுத்தத்திற்கு சாதகமான விதத்தில் பணப் புழக்கத்தில் உயர்வினை  உருவாக்கியுள்ளது. மேலும், வரலாற்று ரீதியாக கடைப்பிடிக்கப்பட்ட பணக் கொள்கையின் காரணமாக ஏற்பட்டிருக்கும் இந்த பண வீக்கத்தை எதிர்கொள்வதற்கு நம்மிடம் இருக்கும் வழிமுறைகள் ஒன்று ‘நிதி சிக்கன நடவடிக்கை’ அல்லது (இப்போது மேற்கொள்வதைப் போல்) வட்டி விகிதங்களை உயர்த்துவது ஆகியவைதான். இந்த இரண்டுமே பொருளாதார மந்த நிலைமையையும், வேலை இழப்புகளையும் உருவாக்கும்.

மையமும், விளிம்பும்

இப்போது நாம் பிரச்சனையின் மையப் பொருளை நெருங்கிவிட்டோம். சமகால முதலாளித்துவத்திற்கு உட்பட்ட பொருளாதார ஏற்பாட்டில், அமெரிக்காவில் இருக்கும் சில ஊக வணிகர்களுடைய நடத்தையை முறியடிப்பதை ஒத்த முன்னெடுப்புகளுக்கு, அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் தாண்டி ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பெரும் எண்ணிக்கையில் வேலை இழப்புகள் நடக்க வேண்டும் (இதைச் சொல்லும்போதே அபத்தமாக இருக்கிறது). இந்த கருத்து, நவ தாராளமயத்தின் கீழ், எல்லைகளைத் தாண்டிப் பாய்கிற மூலதனம், குறிப்பாக நிதி மூலதனத்தின் காரணமாகவே எழுகிறது. ஏனென்றால், அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயரும்போது, உலகம் முழுவதுமே வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் (அப்படி செய்யாவிட்டால், விளிம்பில் இருக்கும் நாடுகளில் உள்ள நிதி மூலதனமானது, மையத்தில் இருக்கும் அமெரிக்காவை நோக்கி திரும்பிவிடும். அதனால் விளிம்பு நாடுகளின் செலவாணியின் டாலருக்கு நிகரான மதிப்பு சரியும்). வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்காவில் நடக்கும் ஊக நடவடிக்கைகளை நேரடியாக எதிர்கொள்ளாமல், நிதி ‘தாரளமயமாக்கல்’ என்ற வழிமுறையால் எதிர்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாகவே  உலகம் முழுவதும் மிகப்பெரும் வேலையின்மையை உருவாக்கப்படுகிறது. இது பகுத்தறிவின்மையின் உச்சம்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here