ூத்துக்குடி துப்பாக்கிச்சூடு!  சிபிஐ குற்றப்பத்திரிகை! பாசிச அடக்குமுறையின் இருவேறு வடிவங்கள்!

ந்தியாவின் மிகப்பெரும் காப்பர் உற்பத்தியாளனும், சுரங்கங்கள் மூலம் கனிமங்களை அகழ்ந்து எடுப்பதிலும், அதனை உருக்கி காசாக்குவதிலும் லாப வெறியுடன் அலையும் வேதாந்தா என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் 68 வயது கிழட்டு நரியான அனில் அகர்வால், தூத்துக்குடி மக்களின் மீது அடுத்த சுற்று தாக்குதலை சிபிஐ மூலம் தொடுத்துள்ளார்.

இந்தியாவின் உளவு அமைப்புகள் காங்கிரஸ் காலத்தில் சிபிஐ, மற்றும் ரா, ஐபி போன்றவை வலிந்து வழக்குகளை புனைவதிலும், போராடுகின்ற போராளிக் குழுக்கள் மத்தியில் ஊடுருவி அவர்களை சுக்குநூறாக உடைப்பதிலும் கைதேர்ந்தவர்கள்.

இதற்குப் பெயர் ‘டிப்ளமாட்டிக் பாலிஸி’ என்றும், “சாணக்கியத்தனம்” என்றும் ஆளும் வர்க்க அறிஞர்களும் அதன் ஆசனவாயாக செயல்படும் ஊடகங்களும் விதந்தோதி வருகின்றன.

2014 பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சிபிஐ க்கும் மேல் சூப்பர் அதிகாரம் கொண்ட என்ஐஏ என்ற உளவுப் படையை நிறுவி போராளி குழுக்கள் மற்றும் அரசுக்கு எதிராக லேசாக முணுமுணுப்புகள், அரசியல் சட்டத்தை பயன்படுத்தி கருத்து உரிமையை வெளிப்படுத்துபவர்கள், தங்களுக்கென்று சொந்தமாக அரசியல் கருத்தை வைத்துக்கொண்டு அதை நோக்கி மக்களை பிரச்சாரம் செய்து அணிதிரட்டுபவர்கள் போன்ற அனைவரையும் தேசத்துரோகிகள், பயங்கரவாதிகளாக சித்தரித்து கொடும் அடக்குமுறைக்கு உள்ளாக்குகின்ற உளவுப் படையாக என்ஐஏ உருவாகியுள்ளது.

நாஜிகளின் ஜெர்மனியில் ஹிட்லரின் கொலைகார கொஸ்டபோ படையை போல இந்தியாவில் என்ஐஏ களமிறங்கியுள்ளது.

படிக்க:

♦  தூத்துக்குடி: ஸ்டெர்லைட் கொலைகார நிறுவனம் மீண்டும் செயல்பட துடிப்பது ஏன்?

♦  சிறப்பு சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை அகற்று!

தான் என்ன உண்ண வேண்டும் என்ற முடிவெடுக்கும் உரிமை முதல் தனது மண்ணில் எந்த கம்பெனி நிறுவப்பட வேண்டும் என்பதை முடிவெடுக்கும் உரிமை வரை அனைத்தையும் கண்காணிக்கும் கங்காணி கூட்டமாக என்ஐஏவை உருவாகியுள்ளது. எனவே அதற்குப் போட்டியாக பாரம்பரிய மரபுரிமை கொண்ட சிபிஐயும் கொலைகார உளவு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள 30 லட்சம் மக்களின் சுற்றுச்சூழலை அழித்து, மண்ணை மலடாக்கி, நீரை விஷமாக்கி, காற்றை சுவாசிக்க தகுதியில்லாத வாயுவாக மாற்றி கொடுமை செய்துவரும் கொலைகார ஸ்டெர்லைட் நிறுவனத்தை 2019 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போராடி இழுத்து மூடினர்.

100 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தை கலெக்டர் அலுவலக முற்றுகை அறிவிப்பை பயன்படுத்திக் கொண்டு ஆளும்வர்க்கத்தின் கைத்தடிகள், போலீஸ் குண்டர்கள் திட்டமிட்டு பல இடங்களில் பொதுச் சொத்துகளின் மீது தாக்குதல்களையும், வாகனங்களை கொளுத்தியும், மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பொருத்தமான சூழலை உருவாக்கினர். இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரமாக உள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த அன்று காலை முதல் மதியம் வரை என்னென்ன நடந்தது என்பதை தனது கேமராக்களிலும், வீடியோ பதிவுகளிலும், செல்போன்களிலும் பதிவு செய்துகொண்ட ஊடகவியலாளர்கள் தனது எஜமானர்களின் மிரட்டலுக்கும், போலீஸ் கும்பலின் அச்சுறுத்தலுக்கும் பயந்து உண்மையை வாய் திறக்காமல் உள்ளனர்.

தூத்துக்குடி மக்கள் 101 பேர் மீது மீது  சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. போலீஸின் விசாரணை முறை சிபிஐ முதற்கொண்டு என்ஐஏ வரை எப்படி இருக்கும் என்பதற்கு ராஜீவ் காந்தி படுகொலையை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவினர் ஒவ்வொருவராக அம்பலப்படுத்துவது வெளிவந்து சந்தி சிரித்து நாறுகிறது.

பெரும்பான்மை மக்கள் எழுதப்படிக்கத் தெரியாத காலத்தில் பேப்பரில் மை தடவி அச்சடித்து வெளியிட்டால் அது தான் உண்மை என்று புரிந்து கொள்வார்கள்.

அதுபோல சிபிஐ, என்ஐஏ போன்ற உளவு நிறுவனங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டாலே அதை உண்மை என்று ஆளும் வர்க்கத்தின் ஆசனவாய்களும் முதலாளித்துவ எடுபுடி கூலி எழுத்தாளர்களும் வழிமொழிந்து வருகின்றனர்.

“உண்மை உறங்கிக் கொண்டிருக்கும்போது, பொய் ஊர்வலமாக போய்க் கொண்டிருக்கும்” என்று ஒரு பழமொழியை கூறுவார்கள். அதுபோல போராடிய மக்களின் உண்மை உறங்கவில்லை. ஆனால் நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

பொய்யான சிபிஐ புனைந்த குற்றப்பத்திரிக்கை நீதிமன்றங்களில் ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது..

இந்த சமகால அநீதியைக் கண்டு நாம் கொதித்து எழவில்லை என்றால் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக போராடுகிறோம் என்பதெல்லாம் வெறும் வாய்ச்சவடாலாகத்தான் முடியும்.

திமுக உள்ளிட்ட ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளை நம்பி கார்ப்பரேட்டுகளை வீழ்த்த முடியும் என்பது பகல்கனவு. அவர்களைப் பயன்படுத்தி தற்காலிகமாக ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமே தவிர மக்கள் எழுச்சியின் மூலம் மட்டுமே வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களை நிரந்தரமாக இழுத்து மூடவும், அவை ஏவி விடுகின்ற பாசிசத்தை வீழ்த்தவும் முடியும்.

  • திருச்செங்கோடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here