போரிலும் லாபத்தைக்குவிக்கும் கொள்ளைக்கார கார்ப்பரேட்டுகள்!

இப்படிப்பட்ட லாபம் கொட்டும் இந்த சூழ்நிலையில் எந்த முதலாளியாவது போர்நிறுத்தத்தை தான் விரும்புவார்களா இல்லை போர்கள் இல்லா உலகைதான் விரும்புவார்களா?

0

போரிலும் லாபத்தைக்குவிக்கும் கொள்ளைக்கார கார்ப்பரேட்டுகள்!

ஷ்யா-நேட்டோ ஏகாதிபத்திய போட்டியினால் உக்ரேனுடன் ரஷ்யா பிப்ரவரி 2022 முதல் ஆக்கிரமிப்புப் போரை நடத்திவருகிறது. இப்போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவைக் கண்டிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டிலிருந்து எரிபொருள் இறக்குமதியை தடை செய்துள்ளன. இதனால் தன் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் தேக்கத்தை தவிர்ப்பதற்காகவும், உள்நாட்டு எண்ணெய் முதலாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் ரஷ்யா தள்ளுபடி விலைக்கு கச்சா எண்ணெய்யை விற்க முன்வந்துள்ளது.

இத்தகைய “நல்வாய்ப்பைப்” பயன்படுத்திக் கொண்ட ரிலையன்ஸ், நயாரா போன்ற தனியார் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. இந்த ஏற்றுமதியில் மூலம் கூடுதல் லாபத்தை ருசித்த இந்த கார்ப்பரேட் முதலைகள், தங்கள் உள்நாட்டுக்கான அளிப்பை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டு அதிக லாபம் தரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்துக் கொள்ளை லாபம் பார்க்கின்றன.

அதே சமயத்தில் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு ஆண்டுக்கான நிலையான விலையை நிர்ணயித்து அதே விலையில் அந்த ஆண்டு முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே வாங்கவேண்டியிருப்பதால் இத்தகைய தள்ளுபடி விலையில் வாங்கமுடிவதில்லை. ஆனால், பொதுவில் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா செய்கிறது என்று செய்தி மூலம் நாட்டு மக்களுக்காக மோடி அரசு தனது ‘எஜமானன்’ அமெரிக்காவையும் எதிர்க்கிறது என்ற போலி தோற்றம் பரப்பப்பட்டது. அப்படி ஏதும் நடக்கவில்லை எனத் தற்போது அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட உலகின் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த அம்பானிக்கு இந்த ரஷ்ய-உக்ரைன் போர் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த எரிபொருள் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் லாபத்தில் மூலம் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் அம்பானி வர வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

இதைப்போன்றே இந்தியாவில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறை அதானிக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஏனென்றால் தற்போது கிடைத்த தகவல்படி ஒன்றிய அரசின் ரூ.6000/- கோடி மதிப்பிலான நிலக்கரி சப்ளை செய்வதற்கான டெண்டர் அதானிக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

லாபத்தைக் குவிக்கும் இப்படிப்பட்ட போர்கள் நடப்பது அமெரிக்க-ஐரோப்பிய ஆயுத முதலாளிகளுக்கும் ஆயுத வியாபாரிகளுக்கும் கொண்டாட்டம் என்றால், எரிபொருள் ஏற்றுமதியின் மூலம் லாபம் பார்க்கும் இந்தத் தரகு முதலாளிகளுக்கும் ரஷ்ய-உக்ரைன் போர் ஒரு கொண்டாட்டம்தான். இப்படிப்பட்ட லாபம் கொட்டும் இந்த சூழ்நிலையில் எந்த முதலாளியாவது போர்நிறுத்தத்தை தான் விரும்புவார்களா இல்லை போர்கள் இல்லா உலகைதான் விரும்புவார்களா?

படிக்க:

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு யார் காரணம்? | வழக்கறிஞர் பாலன்
♦  அதானியின் எழுச்சி! இந்திய மக்களுக்கு வீழ்ச்சி!!

உலகத்தில் எந்த ஒரு பிரச்சினை நடந்தாலும் அதில் லாபம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இத்தகைய கார்ப்பரேட் முதலாளித்துவத்தை அழிக்காமல் பெரும்பான்மை மக்களுக்கான விடுதலை கிடைக்காது என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.

மனித குலத்திற்கே எதிரான ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை இந்த மண்ணிலிருந்து வீழ்த்துவோம்! உலக சமாதானத்தையும், சகோதர சகவாழ்வையும் குறிக்கோளாகக் கொண்டுள்ள சோசியலிச சமுதாயத்தை இப்பூவுலகில் சாதித்துக்காட்டுவோம்!

  • ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here