சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடையில் தமிழ் பாடுவதற்கு தீட்சிதர் பார்ப்பனர் கும்பலால் தடைவிதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

2000 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பாக மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்தது.

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் மற்றும் திராவிடர் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகள் இணைந்து தொடர்ந்து போராடியதன் விளைவாக 2008 ஆம் ஆண்டு தமிழகத்தை ஆட்சி செய்த திமுக சிற்றம்பல மேடையில் தமிழ் பாடும் உரிமையை நிலைநாட்டுகின்ற வகையில் அரசாணையை பிறப்பித்தது.

பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தேவாரம், திருவாசகம் 2008 மார்ச் 3- ஆம் தேதியன்று சிற்றம்பல மேடையில் தோழர் இராவணன், தோழர் சண்முகம் தலைமையில், மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளின் தோழர்களால் ஒலிக்கப்பட்டது. அன்று முதல் ஆறுமுகசாமி என்ற சிவனடியார் மூலம் அவரது மறைவு வரை தொடர்ந்து தமிழ் ஒலித்து வந்தது.

2020 ஆம் ஆண்டு ஆம் ஆண்டு கொரானா துவங்கிய பிறகு இதையே ஒரு காரணம் காட்டி சிற்றம்பல மேடையில் தமிழைப் பாடுவதற்கு, தேவாரம், திருவாசகம் இசைப்பதற்கு தீட்சிதர் பார்ப்பனக் கூட்டம் தடைவிதித்து கொட்டம் அடித்து வந்தது.

பிப்ரவரி 13ம் தேதியன்று தமிழில் பாடச் சென்ற பெண் பக்தரான லட்சுமி சாதியை சொல்லி இழிவுபடுத்த பட்டதுடன், தீட்சிதர் பார்ப்பனர் குண்டர்களால் தாக்கப்பட்டு மேடையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.சிற்றம்பல மேடையில் தமிழ் பாடுவதற்கு அரசாணை இருக்கும் நிலையில் தமிழில் பாட தடை விதிக்கும் தீட்சிதர் பார்ப்பனக் கும்பலுக்கு எதிராக மக்கள் அதிகாரம் உடனே களத்தில் இறங்கியது சிதம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ் முழங்கவும், தெற்கு வாசலில் முப்பாட்டன் நந்தன் நுழைந்த காரணத்தினால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தீண்டாமை சுவரை அகற்ற கோரியும், சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு சிறப்பு சட்டம் இயற்றக் கோரியும், கோவிலுக்குள் நடக்கும் பல்வேறு சட்டவிரோத, கிரிமினல் குற்றச் செயல்களை விசாரிப்பதற்கு தனியே ஒரு ஆணையம் அமைப்பதற்கு கோரிக்கை விடுத்தும் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டது

அதன்படி கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்களும், சிதம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான உழைக்கும் மக்களும், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், மக்கள் கலை இலக்கியக கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களும், ஜனநாயக சக்திகளும் மக்கள் அதிகாரத்தினால் ஒன்றிணைக்கப்பட்டு 23.02.2022 அன்று சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் சிதம்பரம் மக்கள் மத்தியிலும், தமிழகத்திலுள்ள பார்ப்பன பாசிச எதிர்ப்பு சக்திகள் மத்தியிலும் உடனடியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு- புதுச்சேரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here