நாற்பதாம் ஆண்டில் புதிய ஜனநாயகம்.
அரங்கக் கூட்டம்.
நாள்: 02-08-2025.
இடம்: சுமங்கலி மஹால்.
அருண் ஹோட்டல்,
திருச்சி.
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
புதிய ஜனநாயகம் மார்க்சிய லெனினிய அரசியலை ஏந்தி கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் உழைக்கும் மக்கள் மத்தியிலும், அரசியல் முன்னணியாளர்கள் மத்தியிலும் அறிமுகமாகியுள்ளது என்பதை அறிவீர்கள்.
1985 ஆம் ஆண்டு புதிய ஜனநாயகத்தின் முதல் இதழ் வெளிவந்த காலத்திலிருந்து 2025 ஏப்ரல் வரையிலான 40 ஆண்டு காலத்தில் புதிய ஜனநாயகம் இதழில் எழுதப்படுகின்ற கட்டுரைகள் தமிழகத்தின் அரசியல் முன்னணியாளர்களுக்கும், புதிய தலைமுறையாக அரசியலுக்கு வரும் பாட்டாளி வர்க்கத்தினருக்கும் மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிக்கும் அரசியல் கண்ணோட்டத்தை உருவாக்கியது என்றால் மிகையில்லை என்றே கருதுகிறோம்.
உழைக்கும் மக்கள் மத்தியில் அரசியல் உணர்வை உருவாக்குவதற்கு பதிலாக அவர்களின் அரசியல் உணர்வை மழுங்கடிக்கின்ற அரசியல் கிசுகிசு பத்திரிகைகள், முதலாளித்துவ நச்சுக் கருத்துக்களை பரப்புகின்ற சந்தைப் பத்திரிகைகள் மத்தியில் உலக அரசியல் துவங்கி உள்நாட்டு அரசியல் வரை பல்வேறு நிகழ்ச்சி போக்குகளில் மீது பாட்டாளி வர்க்கத்தின் கண்ணோட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை எளிய முறையில் கொண்டு செல்கிறது புதிய ஜனநாயகம்.

நாடாளுமன்ற, சட்டமன்ற பாதைக்கு வெளியில் புரட்சிக்கு மக்களை அணி திரட்டுகின்ற மகத்தான மக்கள் இயக்கமாக தனது இலக்கில் முன்னேறி வருகிறது புதிய ஜனநாயகம். ஒரு புரட்சிகர பத்திரிக்கை என்ற வகையில் தத்துவவாதியாகவும், கிளர்ச்சியாளனாகவும், பிரச்சாரகனாகவும், சிறந்த அமைப்பாளனாகவும் புதிய ஜனநாயகம் திகழ்கிறது. இதனாலேயே கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக வெளிவருகிறது.
இந்திய ஒன்றியத்தை ஆண்ட தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி முதல் தற்போது ஆண்டு வருகின்ற பாசிச பயங்கரவாத கும்பலான ஆர்எஸ்எஸ் பாஜக வரை; தமிழகத்தில் திமுக துவங்கி அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, விஜயகாந்த் துவங்கிய தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், தற்போது விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் வரை அவர்களின் அரசியல் என்ன என்பதைப் பற்றியும் அவர்களின் வர்க்க சார்பு பற்றியும், அது உழைக்கும் மக்களுக்கு என்ன வகையில் சேவை செய்கிறது அல்லது அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்பதையெல்லாம் எடுத்துக் கூறி புதிய அரசியல் கண்ணோட்டத்தை உருவாக்கி வருகிறது புதிய ஜனநாயகம்.
கடந்த 40 ஆண்டுகளில் ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், பாசிசம், நிதி மூலதனம் ஏகபோகம், போலி ஜனநாயகம், கார்ப்பரேட் கொள்ளை, ஏகாதிபத்திய அடிவருடி தன்னார்வ குழுக்கள், ஜனநாயக கூட்டரசு போன்ற எளிய உழைக்கும் மக்களுக்கு பரிச்சயம் இல்லாத அரசியல் சொற்றொடர்களை மீண்டும், மீண்டும் கொண்டு சென்றதன் மூலம் அவர்களின் அரசியல் சித்தாந்த புரிதல் மட்டத்தை உயர்த்தி பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் மேலாண்மையை நிலைநாட்டி வருகிறது புதிய ஜனநாயகம்.
படிக்க:
♦ புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
புதிய ஜனநாயகத்தின் ஆசிரியர் குழு முன்வைத்த அரசியல் கட்டுரைகள் அனைத்தையும் ஒரு சிலரைத் தவிர தங்களது சொந்த கருத்துகளாக ஏற்றுக்கொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகள் அனைத்திலும் கொண்டு சென்ற புரட்சிகர இயக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் தனது நன்றியை புதிய ஜனநாயகம் தெரிவித்துக் கொள்கிறது.
உலகை சூறையாடி வருகின்ற அமெரிக்க மேல்நிலை வல்லரசு மூர்க்கத்தனமாக பல்வேறு நாடுகளின் மீதும், உலகப் பொருளாதாரத்தின் மீதும் பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகிறது. தற்போதைய சூழலில் வர்த்தக ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இதற்கு எதிராக பல்துருவ உலக ஒழுங்கு ஒன்றை உருவாக்குவதாக கூறிக் கொண்டு, ’சிவப்புப் போர்வை’யின் கீழ் மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகின்ற முன்னாள் சோசலிச நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றின் உலக மேலாதிக்கப் போட்டியை அம்பலப்படுத்தி பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைக்க வேண்டும்.
அது மட்டுமின்றி புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவதற்கு நாடாளுமன்ற சரணடைவுப் பாதை அல்லது ஆயுதத்தை மட்டுமே முன்னிறுத்தும் குழு சாகசப் பாதை ஆகிய போக்குகள் எதுவும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு முன்னேற்றத்தை கொடுக்காது என்பதை அரசியல் ரீதியாக புரியவைத்து, அரசியல் போராட்டங்களையும், அரசியல் கிளர்ச்சிகளையும், அரசியல் வேலை நிறுத்தங்களையும் கொண்டு செல்வதன் மூலம் மக்களை புரட்சிகர அரசியல் பாதைக்கு பயிற்றுவிக்கின்ற வகையில் செயல்பட வேண்டும் என்ற கடமையுடன் செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம்.
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் பயணத்தில் தடைக்கல்லாக மாறி நிற்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த வேண்டியதையும் கணக்கில் கொண்டு செயல்பட்டு வருகிறது புதிய ஜனநாயகம்.
இத்தகையப் பாதையில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகின்ற புதிய ஜனநாயகம் 40 ஆண்டுகளை கடந்து தங்கள் பேராதரவுடன் முன்னேறி வருகிறது. தங்களது ஆதரவையும், ஆலோசனைகளையும் ஏற்பது மட்டுமின்றி மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையை வழிகாட்டும் கொள்கையாக ஏந்தி புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிக்கின்ற வரை சமரசமின்றி முன்னேறி செல்வோம் என்றும் உறுதியளிக்கின்றோம்.
வாசகராக மட்டுமின்றி மக்களை புரட்சிக்கு அணிதிரட்டுகின்ற வகையில் அமைப்பாகவும் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறது புதிய ஜனநாயகம்.
ஆதரவு தாரீர்!
வளர்ச்சி நிதி தாரீர்!!
தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வீர்!
தோழமையுடன்,
புதிய ஜனநாயகம். (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)








40-ஆம் ஆண்டின் பயணப்படும் நமது ஆசானாய் விளங்கும் மார்க்சிய-லெனினிய ஏடாம் “புதிய ஜனநாயகம்” மென்மேலும் வளர்ச்சியுற்று அணிகளுக்கும் மக்களுக்கும் புரட்சிகர சிந்தனைகளை வளர்த்தெடுத்து பரப்பிட இந்நாளில் புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
1985-ம் ஆண்டில் புரட்சிகர ஏடு துவங்க பெற்று மிகப்பெரிய வீச்சினை தமிழ்நாட்டில் உருவாக்கிய போது அவ்விதழை வளர்ப்பதிலும் பரப்புவதிலும் துவக்க காலம் முதல் பங்கெடுத்தவன் என்ற முறையில் மீண்டும் எனது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்வில் பங்கேற்க இயலாமல் போனமைக்குப் பெரிதும் வருந்துகிறேன்.