அரசு உதவித்தொகை வழங்குவதிலும் காவிப் பாசிஸ்டுகளின் சதி வேலை!
திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியின் முந்தைய லட்சுமி பந்தர் திட்டத்தின் கீழ் தாங்கள் முன்பு ரூ.1,500 பெற்றதாக அப்பகுதிப் பெண்கள் கூறுகின்றனர்.

மேற்கு வங்கத்தில் காவி இருள் சூழ்ந்து 5 மாதங்கள் ஆகின்றது. ஒரு மாநிலத்தை காவி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றால் அம்மாநிலத்தில் உள்ள மக்களின் நிலைமை என்ன ஆகும் என்பதற்கு ஏற்கனவே நம் கண்முன் உள்ள சான்று தான் அசாம், பீகார், ஒடிசா, ஹரியானா, மணிப்பூர், உத்திரபிரதேசம். இம்மாநிலங்களை பாஜகவுக்கு முன் – பாஜகவிற்கு பின் என்று பிரித்து பார்ப்பது அவசியம்.

இந்த பட்டியலில் புதிதாக இணைந்திருப்பது தான் மேற்கு வங்க மாநிலம். 1960 காலக்கட்டத்தில் வர்க்கப் போராட்டத்தில் முன்னேறியிருந்த மாநிலம் பிற்பாடு நாடாளுமன்ற இடதுசாரிகளால் 25 வருடத்திற்கு மேலாக ஆளப்பட்டது. அதன்பின் திரிணாமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜி 15 வருடம் அம்மாநிலத்தின் அதிகாரத்தை தன் கையில் வைத்திருந்தார். இந்தியாவின் போலி சுதந்திரத்திற்கு பிறகு மேற்கு வங்கம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை போன்று முதலாளித்துவ கும்பலால் சுரண்டப்பட்டு மக்கள் பொருளாதாரத்தில் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்பட்டது. வழக்கம் போல் மக்களிடம் கோபம் உருவாகும் போதெல்லாம் அதை தணிப்பதற்கு முதலாளித்துவம் புதியபுதிய மீட்பர்களை உருவாக்கி தனக்கு எதிராக மக்கள் திரும்பாதவாறு பார்த்துக் கொள்ளும். இப்போது முதலாளித்துவம் உருவாக்கியுள்ள மீட்பர் தான் பாஜகவின் சுவேந்து அதிகாரி.

மேற்கு வங்கம் தற்போது புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இதற்கு முன் ஆண்ட கட்சிகளுக்கும் இப்போது ஆளும் பாஜகவிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இதுநாள் வரை அங்கு வாழ்ந்த மக்களுக்குள் சாதிபேதம் உருவாக்கப்பட்டு செய்யப்பட்ட அரசியல், இனிமேல் மதவெறி அரசியலாக மாறும். மாறிக் கொண்டிருப்பதை தற்போதய சம்பவங்கள் உணர்த்துகின்றன. சகோதரத்துடன் பழகிய மக்கள் எதிரிகளாய் நிறுத்தப்படுவார்கள். உணவுச் சுதந்திரம் பறிபோகும். இதைத்தான் நாம் மேலேபார்த்தவாறு பாஜகவிற்கு முன் பாஜகவிற்கு பின் என்கிறோம்.

2026 மே 4 முதல் மே 7 வரை மேற்கு வங்கத்தில் குறைந்தது 8 மாவட்டங்களில் 34 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக APCR அமைப்பின் அறிக்கையை மேற்கோள்காட்டி Maktoob செய்தி வெளியிட்டது. கூச் பெஹார், பராசத், வடக்கு 24 பர்கானாஸ் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல், அவர்களின் வாழ்வாதாரங்களை குறிவைத்து வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது பாஜகவின் வானரக் கும்பல். இவைகுறித்து மிக நீண்ட தொகுப்பையே நம்மால் தரமுடியும். அந்தளவுக்கு அங்குள்ள சிறுபான்மையின மக்கள் கடுமையான தாக்குதலை உடலளவிலும் மனதளவிலும் எதிர்கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களும் விஷ்வஹிந்து பரிஷத் உள்ளிட்ட வானர கும்பல்களின் தாக்குதலுக்கு தப்பிக்கவில்லை.

சரி, தற்போதைய பிரச்சினைக்கு வருவோம். பாஜக  தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு தேர்தல் வாக்குறுதியான அன்னபூர்ணா யோஜனா தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கும் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1.90 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு இவற்றில், 1.56 கோடி பெண்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் தனது மதவெறி புத்தியை காட்டியுள்ளது பாசிச பாஜக.

படிக்க: மேற்கு வங்கம்: 33 லட்சம் பேரின் வாக்குரிமையைப் பறித்த SIR! 

மாநிலத்தில் அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் ஒன்றான புனிசோலில் உள்ள பெண்கள், மாநில அரசின் பெண்கள் சமூக நலத் திட்டமான அன்னபூர்ணா யோஜனாவின் பலன்களிலிருந்து தாங்கள் விலக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  “புனிசோலில் 20 பகுதிகள் உள்ளன, அங்கு 25 முதல் 60 வயதுக்குட்பட்ட சுமார் 9,000 பெண்கள் வசிக்கின்றனர். அன்னபூர்ணா யோஜனா திட்டத்திற்கு சுமார் 8,000 பெண்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு முறைகளிலும் விண்ணப்பித்துள்ளனர், ஆனால் அவர்களில் சுமார் 500 பேருக்கு மட்டுமே நிதியுதவி கிடைத்திருக்கலாம்” என்று அக்கிராமத்தின் சுகாதாரப் பணியாளரான குலாம் காஜா கூறுகிறார்.

சனிக்கிழமை (அக்டோபர் 10, 2026) அன்று, ‘தி வயர்’ பத்திரிக்கை புனிசோலுக்கு சென்று, பல பகுதிகளில் உள்ள பெண்களிடம் பேசியது. அவர்கள் புனிசோல் பஞ்சாயத்து மற்றும் ஓண்டா வட்டார அலுவலகத்தை பலமுறை அணுகியதாகவும், ஆனால் திருப்திகரமான விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறினர். அவர்களில் சிலர், அதிகாரிகள் தங்களைப் புறக்கணித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினர். “அரசாங்கத்திடம் கேட்டபோது நாங்கள் படிவங்களைச் சமர்ப்பித்தோம். பின்னர், ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு எங்களிடம் கூறப்பட்டது, அதையும் நாங்கள் செய்தோம். ஆனாலும், எங்களுக்கு ஒரு பைசா கூட பணம் வரவில்லை,” என்று இந்த கிராமத்தின் ஹன்ஸ்டாபாத் பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசிகளான ரோஷ்னா பீபி மொண்டல், ஜரினா பீபி மல்லிக், சோலேமா காதுன் மற்றும் லத்தீஃபன் பீபி ஆகியோர் கூறினர்.

திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியின் முந்தைய லட்சுமி பந்தர் திட்டத்தின் கீழ் தாங்கள் முன்பு ரூ.1,500 பெற்றதாக அப்பகுதிப் பெண்கள் கூறுகின்றனர். தற்போதைய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு ரூ.3,000 உதவித்தொகையை அறிவித்துள்ள நிலையில், ஏன் பணம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிய விரும்புகிறார்கள். “எங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் சிக்கல் இருந்ததா? யாரும் எங்களுக்கு எதுவும் சொல்லவில்லை. நாங்கள் முஸ்லிம்கள் என்பதால் எங்களுக்குப் பணம் கிடைக்காதா?” என்று அவர்கள் கேட்டனர்.

படிக்க: மேற்கு வங்க மாணவர்களின் உணவிலிருந்து முட்டையை பிடுங்கும் பாஜக அரசு!

இதே பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் கடந்த காலத்தில் வேறொரு பிரச்சினையையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். புனிசோல் கிராமத்தில் சுமார் 8,000 தகுதியான வாக்காளர்கள், SIR வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் பெண்கள். வாக்காளர் பட்டியலில் “தர்க்கரீதியான முரண்பாடு” இருப்பதாகக் கூறி, தாங்கள் உண்மையான குடிமக்கள்தான் என்பதை நிரூபிக்க விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இதுகுறித்து தி வயர் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, கிராம மக்கள் தங்களது ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். அதிகாரிகள் ஆய்வு செய்து, தகுதியான வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்தனர். இதனால் அவர்கள் வாக்களிக்க முடிந்தது.

அதே பெண்கள் தான் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு உதவித் தொகை மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் புனிசோலில் உள்ள முஸ்லிம் பெண்களிடம் மட்டும் நின்றுவிடவில்லை. மேற்கு வங்கத்தின் ஜங்கல்மஹாலில் உள்ள பாங்குரா மாவட்டத்தின் பல பகுதிகளில், பட்டியல் பழங்குடியின (ST) சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் தங்களுக்கு அன்னபூர்ணா யோஜனாவின் பலன்கள் மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இப்பிரச்சினையை சரி செய்ய அக்டோபர் 7-ஆம் தேதி ராஜகாட்டா பகுதியில் பெண்கள் தூதுக்குழு அமைக்க முடிவு செய்தபோது, ​​பாஜக தொண்டர்கள் அவர்களை மிரட்டியதாக அப்பகுதியை சேர்ந்த பானுமதி சர்தார் குற்றம் சாட்டுகிறார்.

“அன்னபூர்ணா நிதி குறித்து நாங்கள் பஞ்சாயத்தையும் வட்டார அலுவலகத்தையும் மீண்டும் மீண்டும் அணுகினோம், ஆனால் யாரும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. நாங்கள் இப்போது பஞ்சாயத்து அலுவலகங்களில் தர்ணா போராட்டம் நடத்தத் தயாராகி வருகிறோம்,” என்று ராஜகரா பகுதியின் பிரோட்டி கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி சர்தார் மற்றும் பானுமதி சர்தார், மற்றும் ராவ்டோராவின் ஜிலிமிலியைச் சேர்ந்த நமிதா துடு மற்றும் கல்பனா சோரன் ஆகியோர் கூறுகின்றனர்.

படிக்க: கோரமண்டல் ரயில் விபத்தும், மேற்கு வங்க உழைக்கும் மக்களும்!

ஆர்.எஸ்.எஸ்  பார்ப்பன கும்பலை பொறுத்தவரையில் இந்தியாவில் வாழ தகுதியற்றவர்களாக இஸ்ளாமியர்களை கருதுகிறார்கள். அதற்கேற்பவே இந்துராஷ்டிர திட்டம் அமைத்துக் கொண்டு ஒவ்வொரு மாநிலமாக தேர்தலின் மூலம் கைப்பற்றிக் கொண்டு அத்திட்டத்தினை அமல்படுத்துகிறார்கள். அவர்கள் முதன்மை எதிரி என்றால் அடுத்து கிறிஸ்தவர்கள் தான்.  தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களை தங்களுக்கு சேவை செய்யக் கூடிய அடிமைகளாகவே கருதுகிறார்கள். அதனால் தான் சாதிய கட்டமைப்பை சிதையால் பாதுகாக்கின்ற வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கிறது ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கூட்டம்.

இஸ்லாமியர்கள், தலித்துக்கள், பழங்குடிகள் இவர்களின் அடிப்படை உரிமைகளை பறித்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்குவதுதான் அவர்களின் முதன்மைப் பணி அதனை மேற்கு வங்கத்தில் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதி தான் முதலில் வாக்குரிமை பறிப்பும், அடுத்து பெண்கள் உதவித்தொகை நிறுத்தும் வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்ற திட்டத்தை வைத்து தான் செயல்படுவார்கள். ஆகையால் மேற்குவங்க மக்கள் பாசிச  கும்பலின் பிரித்தாளும் சூழ்ச்சியை புரிந்துக் கொண்டு ஓரணியில் திரண்டால் தான் இக்கேடு கெட்ட கும்பலை வீழ்த்த முடியும்.

  • நந்தன்

ஆதாரம்:  திவயர் https://thewire.in/rights/first-their-names-now-their-money-muslim-adivasi-women-in-jangalmahal-fight-exclusion-from-annapurna-yojana

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here