
இந்தியாவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட காலம் (அதிக நாட்கள்) பதவியில் இருந்தவர்கள் வரிசையில் ஜவஹர்லால் நேருவை பின்னுக்குத் தள்ளி பாசிச மோடி முதல் இடத்திற்கு வந்துள்ளார்.
இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு இந்தியா 1950ல் ‘குடியரசு’ ஆனதற்கு பிறகு நடந்த தேர்தல்களில் ஜவஹர்லால் நேரு வெற்றி பெற்று மொத்தம் 4,398 நாட்கள் பிரதமராக பதவி வகித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2026 ஜூன் 10 அன்று, மோடி தொடர்ந்து பதவியில் இருந்த கால அளவு 4,399 நாட்களை எட்டியது. பாசிச மோடி இந்த ‘சாதனையை’ நிகழ்த்தியவுடன் குடியரசுத் தலைவர் திரவுபதிமுர்மு, துணை குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் மட்டுமின்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பல நாட்டு தலைவர்களும் வாழ்த்து கூறி உள்ளனர்.
திருவாளர் மோடி பிரதமராக மட்டுமின்றி குஜராத்தின் முதல்வராகவும் கூட மிக நீண்ட நாட்கள் இருந்து சாதனை படைத்துள்ளதாக பலர் பாராட்டுகின்றனர். இப்படி பலரும் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொழுது, நமக்கு, பாசிச மோடியின் வேறு சில ‘சாதனை’களும் மக்களின் வேதனைகளும் நினைவுக்கு வருகின்றன.
குஜராத்தின் முதலமைச்சர் ஆக அக்டோபர் 2001 ஆம் ஆண்டு மோடி பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஐந்தே மாதத்தில், அதாவது பிப்ரவரி 2022 -ல் குஜராத்தில் இந்து மத வெறியர்கள் நடத்திய கலவரத்தில் சுமார் 3000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்தில் பாஜக ஆர் எஸ் எஸ் -க்கும், ஏன், முதலமைச்சர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமித்ஷா -க்கும் இருந்த தொடர்புகள் குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த கொடூரமான குஜராத் கலவரத்தின் பயனாக அடுத்தடுத்து குஜராத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று மோடி மீண்டும் மீண்டும் முதலமைச்சராகி குஜராத்தில் மிக நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்தவர் என்ற சாதனையை படைத்தார்.
பாபர் மசூதியை இடித்த பிறகு நாடு முழுவதும் இந்து – முஸ்லிம் கலவரங்களை நிகழ்த்தி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றதன் மூலம் இந்தியாவில் பெரும் கட்சியாக பாஜக வளர்ந்தது. அதேபோல குஜராத்தில் மோடி முதலமைச்சரான பிறகு மாபெரும் கலவரத்தை நிகழ்த்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று ஒழித்ததன் மூலம் பாஜக தொடர்ந்து குஜராத்தில் ஆட்சியில் இருந்து கொண்டிருக்கிறது.
இந்த வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தப்பட்ட நிலையில், மோடி தான் பிரதமரான பிறகு பாஜகவின் செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். உலகமே அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் மாபெரும் கலவரங்களை நடத்துவது தேவையற்றது என்ற முடிவிற்கு வந்த மோடி, உள்ளூர் அளவிலான சிறுசிறு வன்முறைகளை – கலவரங்களை செய்வதன் மூலம் இந்து – முஸ்லிம் மக்களுக்கிடையே வெறுப்பை வளர்த்து பாஜகவின் ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை கண்டறிந்து அமல்படுத்தியதில் மாபெரும் ‘சாதனை’ செய்திருக்கிறார் மோடி.
2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகி நாட்டு மக்களின் நன்மைக்கு ஒரு சிறு துரும்பையும் கிள்ளிப் போடாத மோடி, அம்பானி – அதானி வகையறாக்களின் சொத்துக்களை பெருக்கி அவர்களை உலகப் பணக்காரர்களின் வரிசையில் அமரவைத்து ‘சாதனை’ படைத்துள்ளார்.
விஸ்வகுரு மோடி, ஒரு நாள் மாலையில், திடீரென 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து நாட்டின் பெரும்பான்மை மக்களை நடுத்தெருவில் பரிதவிக்க வைத்து ‘சாதனை’ செய்தார்.
பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் சிறு குறு தொழில்களை நடத்தி வரும் நடுத்தர மக்களுக்கும் எதிராக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை கொண்டு வந்து நாட்டில் உள்ள சிறுகுறு தொழில்களை ஒழிப்பதில் ‘சாதனை’ செய்தவர் மோடி.
படிக்க:
♦ விஸ்வ குரு மோடியின் ஆட்சியில், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ரூ.15 லட்சம் கோடி முறைகேடு!!
♦ எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த மக்களுக்கு அறிவுரை கூறிவிட்டு ஊர் சுற்றும் மோடி!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் குழந்தை குட்டிகளுடன் தங்கள் சொந்த ஊருக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்தே செல்வதை பார்த்து ரசித்து கொண்டு இருந்த மோடி கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் உலகிலேயே மிகவும் மோசமாக நடந்து கொண்ட பிரதமர் என்ற ‘சாதனை’யை செய்துள்ளார்.
நாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை அம்பானி, அதானி, டாடா போன்ற பெரு முதலாளிகளுக்கு தரைவார்ப்பதிலும் மோடி இணையற்ற ‘சாதனை’யை செய்து வருகிறார்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க போவதாக கூறிக்கொண்டு விவசாயத்தை கார்ப்பரேட்டுகளின் பிடியில் கொண்டு செல்வதற்கான வேலைகளில் ஈடுபட்டதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் திரண்டு வருட கணக்கில் போராடினர். அந்தப் போராட்டத்தை கண்டு அரண்டுபோன மோடி, போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு அதை இன்றுவரையிலும் நிறைவேற்றாமல் இழுத்தடித்து ‘சாதனை’ செய்து வருகிறார்.
வெள்ளையர்கள் ஆண்ட காலத்திலேயே தொழிலாளி வர்க்கத்தால் போராடி பெறப்பட்ட உரிமைகளை இல்லாது ஒழிக்கும் வகையில் அல்லது நீர்த்துப்போக செய்யும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு சட்டத்தொகுப்புகளாக மாற்றி மோடி ‘சாதனை’ செய்துள்ளார்.
பாஜகவினர் பற்ற வைத்த நெருப்பில் மணிப்பூர் மாநிலமே எரிந்து சாம்பலாகி கொண்டு இருந்த பொழுதும் அந்தப் பக்கம் திரும்பி கூட பார்க்காத மோடி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ‘சாதனை’ நிகழ்த்தினார்.
படிக்க:
♦ 8931 நாட்கள் அரசு தலைமை பதவியில் இருந்து மோடி மக்களுக்குச் செய்த நன்மை என்ன?
♦ சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு: மோடி அரசின் தோல்வியும் உழைக்கும் மக்களின் அவல நிலையும்!
இப்படிப்பட்ட உலக சுற்றுலாவின் போது இந்திய பிரதமர்களின் எவரும் சந்திக்காத வகையில் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் மாபெரும் கண்டனத்திற்கு உள்ளாகி ‘சாதனை’ படைத்துள்ளார் மோடி. மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிராக அந்த நாடுகளில் உள்ள பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோடிக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தின் முதல்வராக இருந்த பொழுது ஒரு தொலைக்காட்சியில் கரண்தாப்பருக்கு அளித்த பேட்டியின் போது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மைக்கை கழட்டி வைத்து விட்டு ஓடியதில் ‘சாதனை’ செய்தவர் மோடி.
அதே மோடி, இந்திய பிரதமராக அமெரிக்காவிற்கு சென்ற பொழுது பத்திரிக்கையாளரின் கேள்வியை எதிர்கொள்ள பயந்து “ஓ கடவுளே” என்று பதறி ஓடி இந்தியாவிற்கு தீராத அவமானத்தை தேடி தந்ததில் ‘சாதனை’ செய்துள்ளார்.
மோடிக்கு முன்பு வரை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தன. ஆனால் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, இந்திய புலனாய்வுத்துறை போன்ற துறைகளை தனது அடியாள் படையாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டி பாஜகவுடன் கூட்டணி சேர வைப்பது அல்லது எதிர்க்கட்சியில் உள்ளவர்களை மிரட்டி தனது கட்சியில் சேர்ப்பது அல்லது தனது கட்சிக்கு ஆதரவாக செயல்பட வைப்பது மூலமாக இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் பாஜகவின் ஆட்சியை நிறுவி மோடி ‘மாபெரும் சாதனை’யை நிகழ்த்தியுள்ளார்.
தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் முறையில் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தி அதாவது மோடி விரும்பும் நபர்தான் தேர்தல் ஆணையர் ஆகமுடியும் என்னும்படியாக மாற்றத்தை கொண்டு வந்து தேர்தல் ஆணையத்தையே தனது கைப்பாவை ஆக்குவதில் மோடி மற்றும் ஒரு ‘சாதனை’யை புரிந்துள்ளார்.
இப்படிக் தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக ஆக்கி மாபெரும் தேர்தல் தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதன் மூலம் மீண்டும் மீண்டும் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் வைத்திருப்பதில் மோடி மாபெரும் ‘சாதனை’ செய்து வருகிறார்.
நாட்டையே அம்பானி, அதானி போன்ற தேசம் கடந்த தரகு முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுப்பதற்கு ஏற்ற வகையில் பாசிச ஆட்சியை நடத்தி சாதனை படைத்து வரும் மோடி இந்த சேவையின் பிரதிபலனாக மாபெரும் தொகையை பல்வேறு வழிகளில் வசூலித்து உலகிலேயே பணக்கார கட்சியாக பாஜகவை கொண்டு வருவதிலும் மாபெரும் ‘சாதனை’ படைத்துள்ளார்.
பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் கீழே விழுந்து கொண்டிருக்க பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் உண்ண உணவு இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள உடையை அணிந்து கொண்டு, ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து உலகின் சுவையான காளான் உணவுகளை தினமும் சுவைத்து தனது தேக ஆரோக்கியத்தையும் தனது முகப்பொலிவையும் பராமரிப்பதில் ‘சாதனை’ செய்து கொண்டிருக்கிறார் மோடி.
தன்னை உயிரியல் ரீதியாக பிறக்காதவர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மோடி தன்னை விஸ்வகுரு என்றும் 56 இன்ச் மார்பளவு கொண்ட மாவீரன் என்றும் பறைசாற்றிக் கொள்கிறார்.
இப்படிப்பட்ட மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் -பிடம் அடிபணிந்து போவதில் மாபெரும் சாதனை செய்து கொண்டிருக்கிறார்.
படிக்க:
♦ மகளிருக்காக குடம் குடமாய் கண்ணீர் வடிக்கும் பாசிச மோடி??? பயங்கர நடிப்புடா சாமி!!!
இதுவரை இந்திய நாட்டின் வேறு எந்த பிரதமரும் எந்த நாட்டின் அதிபரிடமும் இவ்வளவு மானம் கெட்டத்தனமாக நடந்து கொண்டு இந்திய நாட்டின் நலன்களை காவு கொடுத்ததில்லை என்னும் அளவிற்கு ‘மாபெரும் சாதனை’யை மோடி செய்து கொண்டிருக்கிறார். இதுவரை இந்திய பிரதமர்களில் எவரும் பேசாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை கக்குவதில் மோடி ‘சாதனை’ செய்து இருக்கிறார்.
மாபெரும் வீரரும் உயிரியல் ரீதியாகப் பிறக்காத குழந்தையுமான, அதாவது, நேரடியாக கடவுளிடமிருந்து பூமிக்கு வந்தவரான திருவாளர் மோடி, தான் படிக்காத படிப்பை படித்ததாக கூறி வெளியிட்டப்பட்ட பட்டப்படிப்பிற்கான சான்றிதழ் போலியானது என்று பொதுவெளியில் பலரால் நிரூபிக்கப்பட்ட பின்பும் அதுகுறித்து வாயே திறக்காமல் இருப்பதில் ‘சாதனை’ செய்திருக்கிறார் மோடி.
மோடி குறித்து சங்கிகளின் புகழுரைகள் அனைத்தும் மோடி கல்லூரியில் படித்து வாங்கியதாக கூறப்படும் பட்டப்படிப்பு சான்றிதழுக்கு ஒப்பானது என்பதுதான் உண்மை.
மோடியின் உண்மையான ‘சாதனை’கள் என்பவை பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கண்ணீரையும் இஸ்லாமியர்களின் ரத்தத்தையும் ஆறாக பாய்ச்சி வளர்க்கப்பட்டவை.
மோடியின் ‘சாதனை’ தொடர்ந்து வளர்வது என்பது நாட்டின் – நாட்டு மக்களின் வாழ்க்கையை அழிப்பதுடன் நேரடியாக தொடர்புடையது என்பதை புரிந்து கொண்டு அதற்கு எதிராக வினையாற்ற வேண்டியது நாட்டை நேசிக்கும் அனைவரின் கடமை.
– குமரன்






