8931 நாட்கள் அரசு தலைமை பதவியில் இருந்து மோடி மக்களுக்குச் செய்த நன்மை என்ன?

எண்ணற்ற இஸ்லாமியப் பெண்களை - கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பாலியல் வல்லுறவுக்குள்ளாக காரணமாக இருந்தவர் அல்லவா மோடி? 'வினை ஒன்றுக்கு எதிர்வினை ஒன்று இருந்தே தீரும்' என்ற நியூட்டனின் தத்துவத்தைக் கேடாக உதிர்த்தவர் அல்லவா மோடி?

0
அரசு தலைமை பதவியில் 8931 நாட்கள் இருந்த மோடி. யாருக்கான சாதனை

கடந்த 2001 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவியேற்ற பிரதமர் மோடி 2014 வரையிலும் 12 ஆண்டுகள் 227 நாட்கள் அப்பதவியில் நீடித்தார். அக்காலத்தில் 4 முறை முதல்வராக பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும் முதல் முறையாக பிரதமரானார் மோடி. அதன் பின் நடந்த 2019, 2024 மக்களவைத் தேர்தல்களிலும் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அப்படிக் கூறுவதை விட ஆட்சியை அபகரித்துக் கொண்டது பாஜக என்பதே சரியானதாகும். அந்த வகையில் தற்போது வரை 8,931 நாட்களுக்கு மேல் பதவி வகித்து வரும் அவர், இந்தியாவில் நீண்ட காலம் பதவி வகித்த ஒரே தலைவர் என்ற ‘சாதனை’யைப் படைத்து விட்டதாக காவிக் கும்பல் கும்மாளம் போடுகிறது.

சிக்கிம் முன்னாள் முதல்வர் ‘பவன் குமார் சாம்லிங்கின்’ 8930 நாட்கள் சாதனையை மோடி முறியடித்து விட்டாராம். கிரிக்கெட்விளையாட்டில், ‘கபில்தேவ் சாதனையை சச்சின் டெண்டுல்கர் முறியடித்தார்; சச்சின் டெண்டுல்கர் சாதனையை டோனி முறியடித்தார்…’ என்று விளம்பரப்படுத்துவது போல் மோடியின் நீண்ட பதவிக்
காலத்தை சாதனையாக காண்பிக்கிறது பாசிச சங்பரிவார் கும்பல்.

ஆனால் மோடி சாதித்துக் கிழித்தது என்ன? என்பதுதான் கேள்வி!

ராஜ்நாத் சிங் இப்படி கூறுகிறார்: “குஜராத் முதல்வராக அவரது (மோடியின்) அசைக்க முடியாத அர்ப்பணிப்பில் இருந்து பிரதமராக அவரது அர்ப்பணிப்புள்ள தலைமை வரை அவரது வாழ்க்கை தொடர்ச்சியான சேவை பயணமாக இருந்துள்ளது. நாட்டின் தலைவராக 8931 நாட்கள் தலைமை பதவியில் இருந்த இந்த தருணம், தேசத்திற்கு முதலிடம் தரும் ஆட்சி முறை, செயலில் நேர்மை, மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அயராது சேவை செய்வதில் அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது”.

அமித் ஷா இப்படி கூறுகிறார்: “பல தசாப்த கால சேவை ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது. ஏழைகளுக்கு உரிமைகளை வழங்குவது, வளர்ச்சியில் புதிய மைல் கற்கள் அமைப்பு, உலகளாவிய தளங்களில் தேசத்தின் பெருமையை உயர்த்துவது என எதுவாக இருந்தாலும் மோடி சகாப்தம் இந்தியாவை அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றி உள்ளது”. இது நீதிபதி லோயா கொலை வழக்கிலிருந்து தப்பித்த அமித்ஷா வின் கூற்று.

பாசிச பாஜக அமைச்சரவையில் மோடிக்கு அடுத்த நிலையில் உள்ள ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகிய இருவரின் மேற்கண்ட துதி பாடல்களில் எள்ளின் முனையளவேனும் உண்மை இருக்க முடியுமா?    இல்லை…!    உறுதியாக இல்லை…!

மோடி குஜராத் முதல்வராக இருந்த பொழுது 2002-ல் சங்கிகளின் திட்டமிடப்பட்ட கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை ஒட்டி இஸ்லாமியர்கள் மீது பொய்க் குற்றம் சுமத்தி குஜராத்தில் இஸ்லாமியருக்கு எதிரான இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விட்டவர் அல்லவா மோடி. சுமார் 2000 இஸ்லாமியர்களைக் கொன்று புதைத்தவர் அல்லவா மோடி? எண்ணற்ற இஸ்லாமியப் பெண்களை – கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பாலியல் வல்லுறவுக்குள்ளாகக் காரணமாக இருந்தவர் அல்லவா மோடி? ‘வினை ஒன்றுக்கு எதிர்வினை ஒன்று இருந்தே தீரும்’ என்ற நியூட்டனின் தத்துவத்தை கேடாக உதிர்த்தவர் அல்லவா மோடி?

படிக்க:

கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக நிலக்கரி உள்ளிட்ட சுரங்கங்கள் சட்ட திருத்தம்! ஆர்எஸ்எஸ் மோடியின் சாதனை!

குஜராத் இனப்படுகொலை 2002! குற்றவாளிகள் தப்பி விட்டனர்! எதிர்த்து போராடியவர்கள் ஒடுக்கப் படுகின்றனர்!

நியாயம் படைத்த – மனசாட்சி உள்ள குஜராத் மக்களைத் தட்டி எழுப்பிக்
கேளுங்கள். சங்கிகளைத் தவிர மோடியை எவர் பாராட்டுவர்? அப்போது இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய் குஜராத் திற்கே சென்று மோடியை கண்டித்த ‘வரலாறும்’ உண்டு. மோடி மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
உச்சநீதிமன்றமோ சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைத்து ‘விசாரணை’க்கு
உத்தரவிட்டது. போதிய ஆதாரங்கள் இல்லை என்று வழக்கு நிராகரிக்
கப்பட்டது. கிளீன் சிட் 2022-ல் உச்ச நீதிமன்றத்தால் அம் முடிவு சரிதான் என உறுதி செய்யப்பட்டது. குஜராத் முதல்வராக இருந்ததற்கு இதைவிட மோடியின் ‘சாதனை’யாக வேறு எதனை நாம் எடுத்துக் கூறி விட முடியும்?

இவர் 2014இல் பிரதமர் ஆனார். நாடு முழுமைக்கும் அறிவிக்கப்படாத அவசரநிலை இருந்து கொண்டே இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக – தலித் மக்களுக்கு எதிராக ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ பாசிசக் கும்பலால் கட்டவிழ்த்து விடப்பட்ட
கொடுமைகள் தான் எத்தனை? எத்தனை?

மசூதிகள் இடிப்பு, தேவாலயங்கள் இடிப்பு, இஸ்லாமியர் – தலித் வீடுகள் இடிப்பு, கும்பல் படுகொலைகளை வேடிக்கை பார்த்தது, கொரோனா ஊரடங்கு, பணம்திப்பு நீக்கம் என திடீர் தாக்குதல்களால் மக்களைத் தெருவில் நிறுத்தியது, மணிப்பூர் பற்றியெரிந்ததை வேடிக்கைப் பார்த்தது, பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுதல், காஷ்மீரில் சிறப்பு சட்டம் 302ஐ நீக்குதல், வஹ்ப் திருத்தச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், தொழிலாளர் – விவசாயிகள் நலன்கள் பறிக்கும் கொடும் சட்டங்கள், அதானி அம்பானி உட்பட கார்ப்பரேட்டுகள் நலன் பாதுகாக்கும் எண்ணற்ற சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்த்தல், தேர்தல் ஆணையர்கள் தேர்வுக் குழு திருத்தல் சட்டம், ஆர் எஸ் எஸ் உணர்வு படைத்தவர்களையே தேர்தல் ஆணையாளர்களாக நியமித்துக் கொண்டு தில்லுமுல்லு மோசடிகள் மூலம் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளல், நீதித்துறை, சிபிஐ, ஐடி, ஈடி – என அனைத்து துறைகளையும் காவிமயம் ஆக்கிக் கொண்டது, வெளியுறவு கொள்கைகளில் அமெரிக்காவின் ஏவல் நாயாக உருமாற்றிக் கொண்டது, அமெரிக்க இஸ்ரேல் போர் நடவடிக்கைகளுக்கு எதிராக வாய் திறக்க மறுப்பது, ட்ரம்பையும் நெதன்யாகுவையும் கட்டிப்பிடித்து ஆறத் தழுவுவது, ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கோமேனி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்காதது, சனாதன பார்ப்பனியத்தை இந்திய நாடு முழுமைக்கும் நிலைநிறுத்தச் செய்வது, தற்போதைய போரால் பெட்ரோல் – டீசல் – சிலிண்டர் விலை ஏற்றமும் திண்டாட்டமும் உருவாகக் காரணமாக இருத்தல், இந்திய நாட்டு உழைக்கும் மக்களின் வாழ்வை சூறையாடுவது… இப்படி மோடி பிரதமர் ஆன பின் ‘படைத்த சாதனைகளை’ப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.

படிக்க: இந்திய நாட்டின் இறையாண்மையை அமெரிக்காவின் காலடியில் வைத்த மோடி அரசு!

இந்த லட்சணத்தில் 8931 மோடியின் தலைமைப் பதவி நாட்களை எப்படி நாட்டுக்கான சாதனை நாட்களாக வரையறுக்க முடியும்? நிச்சயமாக முடியாது. அரசு பதவிக்கு வரும் முன் சில நூறு கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த தனது நண்பர் கவுதம் அதானியை இன்று பல லட்சம் கோடி ரூபாய்க்கு அதிபதியாக்கியதை வேண்டுமானால், மோடியின் ‘சாதனையாகக்’ கருதலாம்.

இந்திய நாடு அவரின் தலைமை பதவி வகித்துக் கொண்டிருக்கும் 8931 நாட்களையும் “கருப்பு நாட்களாகத் தான்” கடைப்பிடிக்க முடியுமே ஒழிய சாதனை நாட்களாக ஒருக்காலும் இந்திய நாட்டு மக்கள் ஏற்கவே மாட்டார்கள். ஏனெனில் இவை யாவும் முற்றிலும் உண்மை.

இந்திய நாட்டு உழைக்கும் மக்களின் உண்மையான விடுதலைக்கு ஜனநாயக இயக்கங்களும், புரட்சிகர இயக்கங்களும், இளைஞர், மாணவர் அமைப்புகளும் மக்களை அணி திரட்டி வீதியில் இறங்கி காவிக் கூட்டத்தை அப்புறப்படுத்துவதன் மூலம் மட்டுமே – மாற்று ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதன் மூலம் மட்டுமே விடியலைக் காண முடியும்.

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here