ஸ்ரீதர் வேம்புவின் ‘பாரத மாதா’ அழைப்பு: தேசபக்தி வேடத்தின் பின்னால் ஒளிந்துள்ள கார்ப்பரேட் சுரண்டல்!

ஸ்ரீதர் வேம்புவின் இந்த அழைப்பு என்பது இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களைத் தேசியவாத உணர்ச்சிகளில் ஆழ்த்தி, அவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காகக் குறைந்த கூலியில் சுரண்டுவதற்கான ஒரு வழியாகவே பார்க்கப்பட வேண்டும்.

1
தேசபக்தி வேடம்போடும் ஸ்ரீதர் வேம்பு

ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு இந்தியா திரும்பிய பிறகு, ஜோகோ (Zoho) நிறுவனத்தை தமிழ்நாட்டின் கிராமப்புறப் பகுதியிலிருந்து ஒரு உலகளாவிய மென்பொருள் (SaaS) நிறுவனமாக உருவாக்கினார். தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருநகரங்களில் மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அவர் தனது செயல் மூலம் நிரூபித்தார். கிராமப்புறங்களும் முன்னேற வேண்டும் என நினைத்த அந்த ‘மாமனிதரை’ ஒரே வார்த்தையில் சங்கி என்று கூறிவிட்டார்கள் கம்யூனிஸ்டுகள், சாரி ஆன்டி இந்தியன்கள்.

ஒரு மனிதர் இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப் போகிறேன் என்று சொன்னால் அதில் முதலாளித்துவ நலன் இருப்பதாக கூறுகிறார்கள் அவர்கள். அவர் அமெரிக்காவை விட்டு வந்ததற்கு அவரது விவாகரத்தும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். இப்படி மக்களுக்கு நல்லது நினைக்கும் தேசநலனை தன்நலனாக பார்க்கும் ‘மாமனிதரின்’ எண்ணத்தில் என்ன உள்ளது என்பதை பார்ப்போம்.

நேற்றைய இந்துதமிழ் திசை செய்தித்தாள் படிக்கும் போது “பாரத மாதாவிற்கு உங்கள் உங்களது திறமை தேவை. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்புவின் அழைப்பு” என்ற செய்தியை பார்க்க முடிந்தது. இது படிக்கும் பலருக்கு நல்ல விசயமாக தோன்றலாம். இந்தியாவின் வளர்ச்சிக்காக ஸ்ரீதர் வேம்பு பேசியுள்ளார் என சிலர் ஆதரிக்கவும் செய்யலாம். ஆனால் அதில் அடங்கியிருக்கும் உண்மை வேறு.

ஜோகோ (Zoho) நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு எழுதியுள்ள “திறந்த மடல்” சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. “பாரத மாதாவிற்கு உங்கள் திறமை தேவை” என்றும், அமெரிக்காவில் நிலவும் அரசியல் சூழலில் இந்தியர்கள் வெறும் “பார்வையாளர்களாகவே” இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த தேசபக்தி முழக்கங்களுக்குப் பின்னால் உள்ள வர்க்க நலன்களையும், ஏகாதிபத்திய சார்புகளையும் நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது.

சுதேசி மாயையும் ஏகாதிபத்திய சேவையும்

ஸ்ரீதர் வேம்பு தன்னை ஒரு சுதேசித் தொழில்முனைவோராகக் காட்டிக்கொண்டாலும், அவரது ஜோகோ நிறுவனம் அடிப்படையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்காகவே உழைக்கிறது. “பாரத மாதாவிற்குத் தேவை” என்று அவர் அழைக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியா வந்தாலும், அவர்கள் செய்யப்போகும் வேலை சர்வதேச முதலாளித்துவ சந்தைக்கானதுதான். இது மோடி அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைப் போலவே, அந்நிய மூலதனத்திற்குச் சேவை செய்யும் ஒரு தந்திரமான நடவடிக்கையே.

படிக்க:

ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ நிறுவனத்திற்கு அரசு மின்னஞ்சல் மாற்றத்தின் பின்னணி!

ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு வாழ்க்கை: சனாதனத்தின் பல்வேறு பரிமாணங்கள்!

இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் தவிக்கும் நிலையில், அமெரிக்காவிலிருந்து வல்லுநர்களை ஸ்ரீதர் வேம்பு அழைப்பது தேசத்தின் மீதான பற்றினால் அல்ல. சர்வதேச சந்தையில் நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்க, மலிவான விலையில் (குறைந்த கூலியில்) உயர் தொழில்நுட்ப உழைப்பு அவருக்குத் தேவைப்படுகிறது. இதையே அவர் “மிஷனரி ஆர்வத்துடன்” (Missionary zeal) பணியாற்றுங்கள் என்று தேசிய உணர்ச்சியின் மூலம் மூடி மறைக்கிறார்.

அஷ்னீர் குரோவரின் விமர்சனமும் எதார்த்த நிலையும்

இந்த அழைப்பை “டெலுலு” (Delulu – மாயை) என்று விமர்சித்துள்ள தொழில்முனைவோர் அஷ்னீர் குரோவர், இந்தியாவின் பொருளாதார யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 94 ஆக சரிந்துள்ளதையும், இந்தியாவில் நிலவும் 50 டிகிரி வெப்பத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது வெறும் காலநிலைப் பிரச்சனை மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு ‘குறைந்த கூலி’ நாடாக வைக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.

கட்டமைப்புச் சிக்கல்களும் அதிகார வர்க்கமும்

சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள ஒரு முக்கிய விமர்சனம் என்னவென்றால், இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை; ஆனால் இங்குள்ள கட்டமைப்பு மற்றும் கலாச்சாரச் சிக்கல்களே திறமையாளர்களைத் தடுத்து நிறுத்துகின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் சுயநலத்திற்காக தற்போதைய நிலையையே நீடிக்க விரும்புகிறார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீதர் வேம்புவின் இந்த அழைப்பு என்பது இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களைத் தேசியவாத உணர்ச்சிகளில் ஆழ்த்தி, அவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காகக் குறைந்த கூலியில் சுரண்டுவதற்கான ஒரு வழியாகவே பார்க்கப்பட வேண்டும். தேசபக்தி என்ற முகமூடிக்கு பின்னால் இருப்பது ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்குச் சேவை செய்யும் ‘தரகு முதலாளித்துவ’ மனப்பான்மைதான்.

  • நலன்

1 COMMENT

  1. ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்களை அழைத்து பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிமையாக அற்ப கூலிக்கு வேலையில் அமர்த்த ஸ்ரீதர் வேம்பு அறைக்கூவல் விடுக்கிறார் என்று இந்த கட்டுரை அமுல்படுத்துகிறது கட்டுரை ஆசிரியர் நலன் அவர்களுக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here