ரசிகர்கள் கொண்டாடும் பள்ளிச்சட்டம்பி திரைப்படம் கம்யூனிஸ்டுகளை போற்றுகிறது
எந்த ஒரு கருத்தும், கலை படைப்பும் ஒரு வர்க்கத்தால் ஆதரிக்கப்படுகிறது என்றால், அதற்கு எதிரான வர்க்கத்தால் அதே கருத்து / கலைப்படைப்பு வெறுக்கவும், தூற்றவும் பட வேண்டும்; இதுதானே உலக நியதி! நமக்கு பிடித்துள்ள இந்தப் படத்தை தினமலர் எப்படி பார்க்கிறது? அதையும் பார்ப்போம்.

ப்ரல் 15 ல் 2026-ல் வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே பத்து கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து நல்ல வசூலையும், வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றுள்ளது “பள்ளிச்ட்டம்பி” திரைப்படம்.

கதைக்களம்!

கேரளத்தில் 1957ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி முதன் முறையாக ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது

நிலப் பிரபுத்துவத்தால் பாதிக்கப்பட்ட கதாநாயகன் வளர்ந்து ஆளாகும் போது, அதே நிலப்பிரபு கனிமவளக் கொள்ளையை நடத்துவதற்காக அரச பயங்கரவாதத்தையும், குண்டர்களைக் கொண்ட தாக்குதல்களையும் ஒருசேர ஏவி, அப்பாவி மக்களை படுகொலை செய்வதையும், அதை படத்தின் ஹீரோ மக்களை திரட்டி முறியடிப்பதையும் மையமாக வைத்து படம் வந்துள்ளது.

படிக்க: இளைய தலைமுறையை காட்சி போதைக்குள் ஆழ்த்தும் சினிமாக்கள்!

கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக கிறிஸ்தவ மத போதகர்கள் செய்த பிரச்சாரத்தையும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக களம் கண்ட அரசியல் கட்சியாக காங்கிரசையும் முன்னிறுத்தி பீட் களம் சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையாக வாழ்ந்த மக்களை சாதி மதத்தின் பெயரால் பிளவு படுத்திய வரலாற்றை பிரச்சார நெடி ஏதும் இன்றி கதாபாத்திரங்களின் வழியாக விமர்சன பூர்வமாக பதிவு செய்கிறது. மொத்தத்தில் ஒரு சுவாரசியமான திரைப்படத்தை தந்துள்ளார் இயக்குனர் டி ஜே ஜோஸ் ஆண்டனி.

எந்த ஒரு கருத்தும், கலை படைப்பும் ஒரு வர்க்கத்தால் ஆதரிக்கப்படுகிறது என்றால், அதற்கு எதிரான வர்க்கத்தால் அதே கருத்து / கலைப்படைப்பு வெறுக்கவும், தூற்றவும் பட வேண்டும்; இதுதானே உலக நியதி! நமக்கு பிடித்துள்ள இந்தப் படத்தை தினமலர் எப்படி பார்க்கிறது? அதையும் பார்ப்போம்.

தினமலரின் வயிற்றெரிச்சல்! 

“கேரளா ஸ்டோரி”களை கொண்டாடும் அம்பிகளுக்கு பள்ளிச்சட்டம்பி நிச்சயம் ஆத்திரத்தை தான் தூண்டும். தினமலரின் விமர்சனத்திலும் அதுவே விரவி நிற்கிறது.

“சானியார் மலை கிராமத்தின் தேவாலயம் தனக்கு சொந்தமான நிலத்தை கம்யூனிஸ்ட் ஆட்சியில் இழக்க நேரிடும் என்பதால், தனக்காக சண்டை செய்ய கிருஷ்ண பிள்ளையை நியமிக்கிறது. திரை மறைவில் இருக்கும் சதியை கிருஷ்ணபிள்ளை உணர்ந்த பின் நடப்பது என்ன?

உண்மை சம்பவத்திற்கு கற்பனை பாத்திரங்களை புகுத்தி, மக்களின் தெய்வ நம்பிக்கை மற்றும் ஜாதி பிரிவினை கொண்டு திரைக்கதையை நகர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர் டிஜே ஜோஸ் ஆண்டனி. கிருஷ்ணபிள்ளையின் குழந்தைப் பருவம் பற்றிய தகவல்களை கதை நெடுகிலும் ஆங்காங்கே தூவி இருக்கிறது படத்தொகுப்பு!” என ஆரம்பிக்கிறது தினமலர்.

“தூவப்பட்ட காட்சிகளுக்கும், கிளைமாக்ஸ்சில் குஞ்சாம்பு நம்பியார் மீது கிருஷ்ணபிள்ளை ஈட்டி எறிவதற்குமான கடந்த கால தொடர்பை இணைத்த விதம் நம் நரம்புகளை புடைக்க வைக்கிறது. கயாடு லோஹரின் ‘ரெபெக்கா’ பாத்திரம் மனம் கவர்ந்தாலும் ‘காதல்’உள்ளிட்ட உணர்ச்சிகளுக்கான முகபாவங்கள் 1950 களுக்கு ஏற்ப இல்லை!” என அழுது வடிகிறது தினமலர்.

ஏன் 1950 க்கு ஏற்பத்தான் எடுக்க வேண்டும்? 2020ல் உள்ள ரசிகர்கள் ரசிக்கும்படி எடுத்திருப்பதில் என்ன குறைச்சல்? என்று தினமலரை பார்த்து நமக்கு கேட்கத் தோன்றுகிறது.

”டோவினோ தாமஸ் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் இக்காலத்து மசாலா பட பாணியில் இருப்பது கதை களத்திற்கு அன்னியப்பட்டு நிற்கிறது. ‘131 நிமிடங்களில் பாடல்கள் மற்றும் சண்டைகள் தலையீடு குறைவு’ என்றாலும் இவ்வாய்ப்பில் சுவாரஸ்யம் கூட்ட…” தவறிவிட்டனராம்.

ஆனால் எதார்த்தத்தில் கதை சுவாரசியமாகவே செல்கிறது. சண்டை காட்சிகளும் கூட இன்றைய ரசிகர்களை ஈர்க்கும் படியே உள்ளன. உண்மையில் இப்படம் மலையாளத்தையும் கடந்து பல மாநிலங்களில் உள்ள ரசிகர்களையும் ஈர்க்கிறது என்பது தான் தினமலருக்கு பிரச்சனையே.

“கேரளத்தில் இன்று பெரும்பான்மை நடுத்தர மக்கள் அனுபவிக்கும் நிலம் எத்தகைய சதிகளை கடந்து அவர்கள் வசம் வந்தது என்கிற உணர்ச்சிகரமான வரலாற்றை இந்த அளவிற்கு சுமாராக புனைவில் சொல்லி இருக்க கூடாது” என்கிறது தினமலர். வர்க்க போராட்டத்தை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தினமலருக்கு என்னே ஒரு அக்கறை! புல்லரிக்கிறது.

ஆனால் “சினிஉலகம்” படத்தில் சில விமர்சனங்களை முன் வைத்தாலும் கூட பாராட்டவே செய்கிறது.

“நடிகர்களைப் பொறுத்தவரை டோமினோ தாமஸ் முழு படத்தையும் தோளில் தாங்குகிறார். தோற்றத்திலும் கம்பீரத்தை காட்டும் டோவினோ ஆக்சன் காட்சிகளில் பொறி பறக்க விடுகிறார். கயாடு லோகர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். ஒரு மாஸ் ஆக்சன் படம் என்று பார்ப்பவர்களை படம் கவரும். ஜேக் பிஜேயின் பாடல்கள், பின்னணி இசை சிறப்பு. பிஜோ டாமியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. ஸ்ரீஜித் சாரங்கில் படத்தொகுப்பு கச்சிதம்” என்கிறது.

வில்லனாக வந்துள்ள ஹீரோ!

இப்படத்தில் பிரித்விராஜ் வில்லனாக நடித்துள்ளார். இவருக்கு அழுத்தமான கதாபாத்திரம்தான் என்றாலும் குறைவான காட்சிகளில் தான் வருகிறார். நடிப்பும் மிரட்டல் ஆகவே உள்ளது. அவருக்கான வாய்ப்பு இரண்டாம் பாகத்தில் இருக்கக்கூடும்.

முன்னணி கதாநாயகர்கள் ஆன டோவினோ தாமஸும், பிரித்விராஜ்-ம் ஒரு கம்யூனிஸ்ட் ஆதரவு திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து இருப்பதை நாம் வரவேற்க வேண்டும்; கொண்டாடவும் வேண்டும்.

உயர்த்திப் பிடிக்கப்பட்ட பண்புகள்!

இப்படத்தில் கதாநாயகன் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறான். தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடியின மக்களுக்காக பரிந்து பேசுகிறான்; சமத்துவத்தை அமுல்படுத்துகிறான்.

திரைக்கதையின் ஊடாக கிறிஸ்தவ மத போதகர்களின் தவறான கண்ணோட்டத்தையும், கம்யூனிஸ்ட் கட்சியினரின் வர்க்கப்பற்றையும், கனிம வள கொள்ளையர்கள் அரசை, அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதையும் நன்றாகவே மனதில் பதிய வைத்து விட்டது.

அரசு என்பது ஆளும் வர்க்கத்துக்கான – நிலப்பிரபுக்கள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கான ஒரு வன்முறை கருவி என்பதை திரைப்படமும் அம்பலப்படுத்துகிறது. போகிற போக்கில் இந்தியாவில் உருவான முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை கலைப்பதை நோக்கி அடி எடுத்து வைத்து கலவரங்களைத் திட்டமிட்டே நடத்தியது குறித்தும் விமர்சனமாக பதிவு செய்கிறது பள்ளிச்சட்டம்பி திரைப்படம். அதாவது புனைவு கதைக்கு பின்னால் வரலாற்று உண்மைகள் மிளிர்கின்றன.

படத்தில் உள்ள குறைகளை பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர். அப்படி குறைகள் இருக்கிறதுதான் என்றாலும் கூட, இப்படி ஒரு திரைப்படத்தை தயாரித்ததற்காகவும், இயக்கியதற்காகவும், நடித்ததற்காகவும், பல்வேறு கலைஞர்களின் பங்களிப்பிற்காகவும், இப்படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

  • இளமாறன்

2 COMMENTS

  1. திரைப்பட விமர்சனம் வரவேற்கத்தக்கது.
    ‘தினமலர்’ என்ற பத்திரிக்கை ‘தினமலம்’ என்றாகி வெகு காலம் ஆகிவிட்டது. சனாதனப் பார்ப்பனீயத்தை மிக மிக உயர்த்திப் பிடிக்கும் ‘முதல் தர’ கேடுகெட்ட தமிழ்ப் பத்திரிக்கை தினமலரே(மே)! எனவே அதனிடம் நாம் கூடுதலாக சிறந்த கண்ணோட்டத்தை எந்த ஒரு துறை சார்ந்தும் எதிர்பார்க்க முடியாது. 1960–களின் இறுதி ஆண்டுகளில் வந்த ‘துலாபாரம்’ என்ற மலையாள திரைப்படம் தமிழிலும் வெளிவந்த பொழுது நான் கல்லூரி மாணவன். அப்படத்தின் வெளிப்பாடுகள் நேரடியாக ‘கம்யூனிஸ்ட்’ என்ற வரையறையில் அமையாவிட்டாலும் தொழிலாளி, தொழிற்சங்கம் என்பதைப் பற்றிய புரிதலை – ஏழை மக்களின் கொடுந் துயரங்களை ஆழமாகவே உணர வைத்தது. அதே தருணத்தில் படத்தின் சாராம்சம் தொழிற்சங்கத்தில் ஈடுபட்டால் ‘தொழிலாளிகள் செத்து மடிவதைத் தவிர வேறு வழியில்லை; குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டு சாவதைத் தவிர வேறு வழியில்லை’ – என்ற கருத்தோட்டத்தையே தந்தது. ஆனால் கூட படம் பார்க்கும் ரசிகர்களை அக்காலத்தில் ‘துலாபாரம்’ கண்ணீர் வடிக்கச் செய்தது
    என்பதையும் மறுப்பதற்கு இல்லை. அப்படம் 5 மொழிகளில் வெளிவந்தது. ஐந்து மொழிகளிலும் சாரதா என்ற நடிகையே கதாநாயகி. அவளுடைய நடிப்பு ஈடிணையற்றதாக இருந்தது. மிக அண்மையில் முதுமை அடைந்து விட்ட அந்த நடிகையின் நேர்காணலை காண நேர்ந்தது. படத்தில் இளம் வயதில் நடித்த அந்த மிக முக்கிய கதாபாத்திரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ‘நடிக்கும் போது மட்டுமே இயக்குனர் சொல்லித் தரும் வகையில் நடிப்பேன்; ‘கட்’ என்று சொன்னவுடன் ஓய்வு கிடைக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் வெளியில் வந்து நடிகர் நடிகைகளுடன் ஜனரஞ்சகமாக ஜோக் அடித்து கும்மாளமடிப்பேன்; பிறகு மீண்டும் நடிக்க அழைக்கின்ற பொழுது வேகமாகச் சென்று நடிப்பேன்; ஆனால் இந்தக் காட்சிகள் எல்லாம் என் மனதில் எந்த ஒரு பாதிப்பையும், வலியையும் ஏற்படுத்தியதில்லை…’ என்ற பாணியில் அவர் விளக்குகின்ற பொழுது அப்படம் பார்த்த காலத்தில் ரசிகர்கள் என்ன காரணத்திற்காக கண்ணீர் வடித்தார்களோ அவற்றையே நடிகை சாரதா கொச்சைப்படுத்துகிறார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது. ஆம், நடிப்பு என்பது அவர்களுக்கு பணம் ஈட்டி தரும் ஒரு தொழில் மட்டுமே…! அதைக் கடந்து அவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது!

    அந்த வகையில் ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் கம்யூனிஸ்ட்டுகளை போற்றியும் மதவாத பிற்போக்குத்தனத்தை, சாதி மத வெறி கண்ணோட்டத்தை – நிலப்பிரபுத்துவ – கனிமவள கொள்ளை மற்றும் குண்டர்கள் ஆதிக்கம் – ‘அரசு’ யாருக்கானது என்பதனைப் பற்றி எல்லாம் ஓரளவு படம் திருப்திகரமாக எடுக்கப்பட்டு இருப்பதாக
    தோழர் இளமாறன் விவரித்திருப்பது – படத்தை நான் பார்க்காத நிலையிலும் – மனதுக்கு ஆறுதலாக உள்ளது; படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது!

    விமர்சனக் கட்டுரையின் முதல் பத்தி 6-வது வரியில் படத்தின் பெயரில் ‘ச’ என்ற எழுத்து இடையில் விடுபட்டுள்ளது. அதனைத் திருத்தம் செய்க.

    தோழர் இளமாறனுக்கு வாழ்த்துக்கள்!

  2. கட்டுரை ஆசிரியர்: இளமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here