பத்திரிக்கைச் செய்தி

 

எச்சரிக்கை ! பாசிசம் சூழ்கிறது

இன்று பி.எப்.ஐ. அமைப்பிற்கு தடை – நாளை பிற ஜனநாயக இயக்கங்களுக்கும் விரிவடையும் !

கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க பார்வையில் தேச விரோதிகள்! தீவிரவாதிகள்! வளர்ச்சிக்கு எதிரானவர்கள்! இந்து விரோதிகள்!

ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பைவிட உலகில் பயங்கரவாதம் இயக்கம் வேறு எதுவும் இல்லை. வர்ணாசிரம சனாதனத்தை இந்தியாவின் சட்டமாக்கி பெரும்பான்மை மக்களை தீண்டாமையில் வைத்து அடக்கி ஒடுக்கி, கார்ப்பரேட் முதலாளிகள் மேலும் மேலும் சுரண்டி கொழுக்க வைக்கும் கொள்கை உடைய ஒரு அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இந்த நாட்டின் குடிமக்களான மதசிறுபான்யைினரை தனிமைபடுத்தி நாஜி ஹிட்லரை போல் ஒரு இனப்படுகொலை நடத்தி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் பார்ப்பனீய இந்துத்வ கோட்பாடுடைய ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, காந்தியை சுட்டு கொன்றதற்காக தடை செய்யப்பட்ட அமைப்பு, இந்தியாவில் நடந்த அஜ்மீர் தர்கா, மாலேகான், மெக்கா மசூதி, சம்ஜுதா எக்ஸ்பிரஸ், ஆகிய குண்டுவெடிப்புகளில் பலர் கொலை செய்யபட்ட குற்றவாளி அமைப்பு, காந்தி பிறந்த நாளில் ஊர்வலம் போகலாம், பி.எப்.ஐ அமைப்பு தடை செய்யப்பட வேண்டுமா?

நாடு முழுவதும் பி.எப்.ஐ அமைப்பின் மீது என்.ஐ.ஏ அமலாக்கத்துறை மூலம் நடத்தப்பட்ட ரெய்டு, கைது நடவடிக்கை அதன்பிறகான ஐந்தாண்டு தடை என்பது பாசிசத்தின் கோர நடவடிக்கை. இது ஜனநாயக இயக்கங்களுக்கான ஓர் அச்சுறுத்தல், எச்சரிக்கை. இதை அனைவரும் எதிர்த்துப் போராட வேண்டும். இந்துக்கள் ஓட்டு விழாது என தேர்தல் அரசியலாக பார்க்காமல் பாசிச நடவடிக்கையை எதிர்ப்பது முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பி.எப்.ஐ. மீதான தடைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

தனது கார்ப்பரேட் நலன் சார்ந்த மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்கும் சமூக செயற்பாட்டாளர்களையும், மாநில உரிமைகளை மறுத்து, ஒரே இந்தியா என்ற பார்ப்பன மேலாதிக்க இந்து ராஷ்டிராவை நிறுவும் தனது திட்டத்திற்கு எதிராக உள்ளவர்களையும் தேசிய புலனாய்வு முகமை, மூலம் ஊபா சட்டத்தில் கைது செய்து விசாரணையின்றி சிறையில் அடைத்து வருகிறது. தற்போது ஊபா சட்டத்தின்படி இயக்கங்களை தடை செய்தும் வருகிறது. ஆங்கிலேய ஆட்சியை விட மோசமான இந்த செயலை அனுமதிக்க கூடாது.

இன்று இஸ்லாமியர்கள் மீது தொடங்கியுள்ள இந்த பயங்கரவாத தாக்குதல்கள் அடுத்தடுத்து கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள், பழங்குடிகள் என்ற அனைவரின் மீதும் வரிசையாக பாயக் காத்திருக்கிறது. இதுதான் பாசிசத்தின் பயங்கரவாத முகம். சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்திற்கு கல்லறை! போராடுபவர்களின் மீது அடக்குமுறை என்பதுதான் அதன் தாரக மந்திரம். ஆகவே, ஏறித் தாக்கி வரும் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என அறை கூவி அழைக்கிறோம்.

மாநில உரிமை மற்றும் மனித உரிமையை பறிக்கும் என்.ஐ.ஏ. ஊபா சட்டத்திற்கு எதிராகவும் பி.எப்.ஐ மீதான ரெய்டு கைது நடவடிக்கையை கண்டித்தும் கடலூர், திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று 28-9-2022 நடத்த இருந்த கண்டன ஆர்பாட்டத்தை போலீசின் அனுமதி மறுப்பாலும், தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டும் ஒத்தி வைக்கின்றோம். பங்கேற்க இருந்த பல்வேறு ஜனநாயக சக்திகளை கலந்து ஆலோசித்து அடுத்த தேதியை அறிவிக்கின்றோம்.

தோழமையுடன்

வழக்கறிஞர் சி.ராஜு
மாநிலப் பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here