திமுக அரசுக்கு சவால்!


சென்னையில் ஏரி, குளங்கள், மற்றும் ஆற்றின் கரைகளை ஆக்கிரமித்துள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் எடுக்க தயாரா?

சென்னை மயிலாப்பூர் அருகில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவை சார்ந்த 250 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அந்தப் பகுதியில் வசிக்கின்ற ரியல் எஸ்டேட் புரோக்கர், கட்டுமான தொழில் அதிபருமான ராஜீவ் ராய் என்ற பண திமிங்கிலம் மூலம் பொதுநல வழக்கு ஒன்று பதியப்பட்டது.
இந்த பொதுநல வழக்கை விசாரித்த, பொது மக்களின் வாழ்க்கையைப் பற்றி அறிவு இல்லாத, மக்களுடன் நேரடியாக எந்த தொடர்பும் இல்லாத அதிகாரவர்க்க மேட்டுக்குடி கும்பலால் இயக்கப்படும் நீதித்துறை எனப்படும் நீதிமன்றம் வீடுகளை இடிக்க ஏப்ரல் 29 அன்று உத்தரவிட்டது.

சென்னையை பொருத்தவரை மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்கள் பார்ப்பனக் கோட்டைகளான மாம்பலத்திலோ, நங்கநல்லூரிலோ, திருவல்லிக்கேணியிலோ, மடிப்பாக்கத்திலோ வீடுகட்டி வாழ வசதி இல்லாமல் உள்ளனர்.
அன்றாடம் சுமைப்பணி தொழில் முதல் காய்கறி விற்பனை உள்ளிட்ட தினக்கூலி தொழில் செய்யும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட சென்னையில் சொந்தமாக இல்லை.

கூவம் கரையோரம் வசிக்கும் உழைக்கும் மக்கள்

அவர்கள் குடியிருக்க ஆயிரக்கணக்கான ரூபாய் வாடகை செலுத்தும் வழி இல்லை என்கின்ற போது கூவம் நதிக்கரையில், பக்கிங்காம் கால்வாயின் மேலே உள்ள குடிசைகளிலும், ஒரு சில இடங்களில் குறைந்த வாடகைக்கு கிடைக்கின்ற பகுதிகளிலும் குடியிருக்க வேண்டிய அவலத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை ஆளுகின்ற அல்லது இதுவரை ஆண்ட அதிமுக, திமுக போன்ற கட்சிகள் எதுவாக இருந்தாலும் பெரும்பான்மை மக்களின் நலனில் இருந்து சிந்திப்பது கிடையாது. மாறாக மேட்டுக்குடிகள், ஐந்து நட்சத்திர உல்லாச விடுதிகளில் தங்குகின்ற பெரும் பணக்காரர்கள், அரசு பதவிகளில் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டுகின்ற அதிகாரிகள், பெரும் தொழில் அதிபர்கள் இவர்களின் மீது மட்டும் தனது வர்க்க பாசத்தை இந்த கட்சிகள் காட்டுவது தொடர்கதையாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக சமூகநீதி, திராவிட மாடல் என்று பேசக்கூடிய திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிலைமைகளில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்பது தேர்தல் அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

இரட்டையாட்சி முறை நடந்து வரும் நமது நாட்டில் ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை உண்மையிலேயே ஆட்சி செய்துவரும் அதிகார வர்க்கம், ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் மாறினாலும் தன்னுடைய அதிகார வர்க்க திமிர்த்தனங்களை, மேட்டுகுடி, மேல் சாதிகளின் நலனுக்கான ஆட்சி நடத்துவதில் இருந்து சிறிதும் பின் வாங்குவதில்லை.

ஒரு சில சீர்திருத்த நடவடிக்கைகள் தவிர நிலவுகின்ற ஆட்சி முறையை வைத்துக்கொண்டு ஒரு அணுவையும் அசைக்க முடியாது என்பதைத்தான் ராஜா அண்ணாமலைபுரம் மக்களின் வீடுகள் இடிப்பு மீண்டும் உணர்த்துகிறது.
தமிழகத்தை ஆளும் திமுகவிற்கு கார்ப்பரேட் கட்சி என்ற முகம்தான் பொருத்தமானது என்று அதன் தலைவர்கள் நினைக்கின்றனர் போலும். இந்தியாவில் உள்ள 100 பெரும் பணக்காரர்களின் 78 வது இடத்தைப் பெற்றுள்ள மாறன் வகையறாவின் பின்னணியில்தான் திமுக செயல்படுகிறது.

ராஜா அண்ணாமலைபுரம் வீடுகள் இடிக்கத் துவங்கும் போது துடிக்காத, எதையும் தாங்கும் இதயம் பல போராட்டங்களுக்குப் பிறகு மட்டுமே லேசாகத் திரும்பிப் பார்த்தது.
நாமும் பல பொதுநல வழக்குகளை போட வேண்டியுள்ளது. சென்னையில் ஏற்கனவே இருந்த ஏரிகளையும், ஆறுகளின் மீது உள்ள இடங்களையும் ஆக்கிரமித்து பல்கலைக்கழகங்களையும், ஐந்து நட்சத்திர விடுதிகளையும்,, ஷாப்பிங் மால்களையும் தியேட்டர்களையும், அரசு அலுவலகங்களையும் கட்டியுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் இடிப்பதற்கு பொருத்தமான ஒரு உத்தரவை நீதிபதிகள் போடும் வகையில் மக்கள் திரள் போராட்டங்களின் மூலம் நிர்பந்தத்தை ஏற்படுத்தவேண்டும் எனினும் அதை நம்பிக் கொண்டு அமைதியாக வாழ முடியாது.

ராஜா அண்ணாமலைபுரத்தில் இடிக்கப்படும் குடியிருப்புகள்

எனவே ஆக்கிரமிப்பை அகற்றுவது என்றால் முதலில் பூர்வீக சென்னையை ஆக்கிரமித்து உல்லாச ஊதாரி வாழ்க்கை வாழ்ந்து வரும் மேட்டுக்குடிகள், பெரும் பணக்காரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பெரும் தொழிலதிபர்கள், பாரிவேந்தர், ஜேப்பியார், ஏசி சண்முகம் போன்றவர்களின் ஆக்கிரமிப்புகள் துவங்கி அகற்றுவதற்கு திமுகவை நிர்பந்தித்து வீதிகளில் இறங்கிப் போராடுவோம்.

  • சண். வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here