டந்த செவ்வாயன்று, மோடி அரசாங்கம் “பாரத்” என்ற ஹிந்தி வார்த்தையை நாட்டின் ஒரே பெயராக மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக வதந்திகள் பரவத்தொடங்கிய அதே சமயத்தில் “இந்தியா” என்பதன் பயன்பாட்டை அதிகாரப்பூர்வமாகவும் நிறுத்தியது. G20 அழைப்பிதழ்களில் “பாரதத்தின் ஜனாதிபதி” (President of Bharat) என்று குறிப்பிடப்பட்டிருந்ததும், மோடியின் அடிவருடியான டைம்ஸ்நவ் (Times Now) சேனலும் இந்தியாவின் பெயர் மாற்றம் பற்றிய வதந்தியை கிளப்பியது.

குறிப்பிடத்தக்க வகையில் இந்தியாவின் பெயரை மாற்றும் வதந்தியைச் சுற்றி முழு ஊடக உரையாடலையும் மையப்படுத்த இந்த ஒரு சிறு திசைதிருப்பல் போதுமானதாக இருந்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஊடகங்களும் மணிப்பூர் உள்நாட்டுப் போரிலிருந்து வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் வரை அனைத்தையும் விட்டுவிட்டு இந்தியாவின் பெயர் மாற்றம், காலனித்துவ நீக்கம், இந்துத்துவா பற்றிய உரையாடல்களைக் கட்டமைத்தன.

ஆனால் வார இறுதிக்குள் பாஜக, தான் தூண்டிவிட்ட நெருப்பை அணைக்க முயன்றது. வியாழனன்று, பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சர்களை இந்த பெயர்மாற்ற விவாதத்தில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தியதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் கசிந்தன.

இந்த ஒரு சம்பவம் மோடி காலத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றை எடுத்துக்காட்டியது: அது ஊடகங்களுக்கு இத்தகைய தீனிகளை போடுவதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த நிகழ்ச்சிநிரலைத் தீர்மானிக்கும்  பாஜகவின் திறமை. வெகுஜன அரசியலில் இது ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் – ஆனால் நாட்டின் விவாதப்பொருளைத் தீர்மானிக்கும் இவ்விடயத்தில் எதிர்க்கட்சிகளால் பாஜகவை நெருங்கக்கூட முடியாது.

“பாரத் எதிர் இந்தியா” வதந்திகள் இந்த நிகழ்வுக்கு ஒரு உதாரணம் மட்டுமே. கடந்த சில மாதங்களாக, பாஜகவால் நன்கு திட்டமிடப்பட்ட திசையிலேயே நாடெங்கும் செய்திகள் சுழன்றடித்தது. பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வு, நேருவுக்கு ஆங்கிலேயர்களால் பரிசாக வழங்கப்பட்ட செங்கோல் பற்றிய கற்பனையான கதை மற்றும் சமீபத்தில் முடிந்த G20 உச்சிமாநாடு பற்றிய விவாதங்கள் இதில் அடங்கும். பெரும்பாலான G20 நாடுகளில் அதன் உச்சிமாநாடு என்பது குறைந்தபட்ச முக்கியத்துவம் கொண்ட ஒரு நிகழ்வாகும். ஆனால் இந்தியாவில் மோடி அரசாங்கம் அதை ஒரு பிரம்மாண்டமான செய்தியாக்கியது. செய்தி சேனல்கள் மக்களுக்கு சல்லிக்காசுக்குப் பயன்படாத இந்த நிகழ்வை மூச்சுவிடாமல் ஒளிபரப்பின.

செங்கோல், பாரத்தா இந்தியாவா என்ற அற்பத்தனமான வாதங்களுக்கும் நவீன இந்தியாவின் ஆட்சிக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோல் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து தொலைக்காட்சிகளில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் கூட அரிதாகவே அரசின் கொள்கையாக உருப்பெற்றுள்ளது. உதாரணமாக, பொதுசிவில் சட்டத்தைப் பொறுத்தவரை, ஊடகங்களில் தீவிரமான விவாதங்களுக்குப்பிறகு, பாஜக மூத்த தலைவர்கள் எதிர்காலத்தில் அத்தகைய கொள்கை நடவடிக்கை இருக்காது என்று ஊடக நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

மோடி அரசின் இந்த அசாதாரண நிர்வாகபாணி எதை விளக்குகிறது? இதற்கு பதிலின் ஒரு பகுதியாக இன்றைய ஊடக சூழல் உள்ளது. சமூகம் தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தகவல்களால் நிரப்பப்படுகிறது. ஆளுங்கட்சியைப் பொறுத்தவரை, இந்தச் சூழலைப் பயன்படுத்தித் தனக்குச் சாதகமாக தோன்றும் தகவல்களை மக்களிடம் சேர்ப்பது நல்ல உத்தியாக இருக்கிறது. அமைதியான காலங்களில், தவறான செய்திகள் அல்லது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு செல்வது ஆபத்தாக முடியும். ஆனால் வெள்ளமெனப்பாயும் தகவல்களாலும், அடுத்தடுத்து கிளப்பப்படும் செய்திப் புயல்களாலும் தாக்குதல்களுக்கு வாக்காளர்கள் உள்ளாவதால் அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள அவர்களுக்கு அவகாசம் இருப்பதில்லை.

பதிலின் மற்றொரு பகுதி, மோடி அரசாங்கத்தின் எதேச்சதிகாரத்தன்மை இது போன்ற ஊடகக் குழப்பத்தில் வளர்கிறது. ரஷ்யாவின் விளாடிமிர் புடின் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் ஒரே மாதிரியான பாணிகளைக் கொண்டுள்ளனர். இதில் டிரம்பை “திசை திருப்புதலின் தலைவர்” என்று வேனிட்டி ஃபேர் (Vanity Fair) போன்ற பத்திரிக்கைகள் அழைக்கின்றன. “தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பெறுவது மூலமாகவும், செய்திகளை தன்னைச் சுற்றியே சுழலவிடுவதன் மூலமும், கண்ணிவெடி ட்வீட்-களின் மூலமும் டிரம்ப் பத்திரிக்கை மாண்பை சிதைக்கிறார். இதன் விளைவாக அவரது நிர்வாகத்தின் மீதான பகுப்பாய்வு அல்லது விமர்சனத்தை தவிர்க்க முயன்றார்” என்று எழுத்தாளர் மைக் மரியானி (Mike Mariani) விளக்குகிறார்.

ஆனால் மோடியுடன் ஒப்பிடுகையில் டிரம்ப் இந்த விளையாட்டில் ஒரு குழந்தை எனலாம். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி செய்திகளைக் கட்டுப்படுத்த சமூக ஊடகங்களில் மூர்க்கத்தனமான விஷயங்களைக் கூறி ஒரு கிளர்ச்சிக்காரனாக தனது திறமையை மட்டுமே நம்பியிருந்தார். ஆனால் மோடியின் கட்டுப்பாட்டு முறைகள் மிகவும் கட்டமைப்பு ரீதியானவை. இந்தியாவில் பெரும்பாலான தேசிய ஊடகங்கள் பாஜக-மோடியின் அதிகாரபூர்வமற்ற கட்டுப்பாடுகளின் கீழ் செயல்படுகின்றன. இதன் விளைவாக, பாஜகவே பல செய்தி சுழற்சிகளுக்கு ஆதாரமாக இருப்பது மட்டுமல்லாமல், அவற்றின் வீச்சையும் கட்டுப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:

♦ இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை பரப்பும் மீடியாக்கள்!
♦ ஊடக சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல்! ஜனநாயகத்திற்கு கல்லறை!

இந்தியாவில் ஜனநாயகம் செயல்படுவதற்கான குறைந்தபட்ச நிலைமைகள்கூட சிதைக்கப்பட்டுவருகிறது. தேர்தலில் வாக்காளர்கள் சரியான முடிவுகளை எடுக்க தடங்களற்ற செய்திஅறிவு முக்கியமானது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை ஊடகங்களின் பெரும்பகுதி மோடியின் அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டு, செய்திகளைக் கொண்டுசேர்ப்பதற்குப் பதிலாக மக்களின் கவனத்தை திசை திருப்புவதையே வேலையாகக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, மணிப்பூரில் தொடரும் உள்நாட்டுப் போரில் நாள்தோறும் நடந்துவரும் படுகொலைகள் மற்றும் திரிபுராவில் சட்டமன்ற இடைத்தேர்தல் மோசடி தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ள நிகழ்வுகளை ஊடகங்கள் வெறுமனே புறக்கணித்து தில்லியில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டை ஒரு நிமிடம்கூட விடாமல் “லைவ் கவரேஜில்” காட்டிக்கொண்டிருந்தன.

எதிர்கட்சிகளோ தம் முதுகுகளைத் திருப்பிக்கொண்டு ஊடகங்களைத் தாக்கி, இன்னும் பாரம்பரிய ஊடகங்களின் வீச்சைக் கொண்டிராத சமூக ஊடகங்களில் கவனம் செலுத்த முயன்றன. ஆனால் சமூக வலைதளங்களிலும் பாஜகவே கோலோச்சிக்கொண்டிருக்கிறது.  ஆக, ஒட்டுமொத்த செய்தி ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் பாஜக என்ற ஹிந்துத்வா கட்சி கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தல் நெருங்கிவருகிறது.

ஆங்கிலத்தில்:  Shoaib Daniyal (scroll.in/article/1055735)

தமிழில்: செந்தழல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here