
பொதுவாக சிங்கம், புலி, சிறுத்தை, யானை, கரடி, ஓநாய், காட்டெருமை, மான் உள்ளிட்ட எண்ணற்ற விலங்கினங்கள் காட்டில் வாழ்கின்றன என்பதை நாம் அறிவோம்.
இவற்றில் சிலவற்றை பிடித்துக் கொண்டு வந்து மிருகக்காட்சி சாலைகளில் மக்களின் பொழுதுபோக்கிற்காக பாதுகாப்பான முறையில் அடைத்து வைக்கக்கூடிய நிலைமைகள் உலகம் முழுமையும் உண்டு. அப்படி அடைக்கப்படும் விலஙகினங்களுக்கு உரிய உணவுகளையும் பராமரிப்புகளையும் அந்தந்த அரசுகளே மேற்கொள்கின்றன. இதில் கூட மிகப் பெரும் குற்றம் இருப்பதாக நாம் சுட்டிக்காட்ட விரும்பவில்லை.
அதே நேரத்தில் காட்டு விலங்கினமான யானைகளை இழுத்து வந்து அதற்கு சில பயிற்சிகளைக் கொடுத்து அவற்றை கோவில் யானைகளாக மாற்றி, அதற்கான பாகன்களை நியமித்து, அந்தப் பாகன்கள் யானைகளைக் குளிப்பாட்டி யானையின் நெற்றிகளிலும் தும்பிக்கை உட்பட இன்னும் சில பாகங்களிலும் வெள்ளை நிறத்தில் விபூதி பட்டைகளை சாத்துவதும், சிவப்பு நிற குங்குமப்பொட்டுகளை வைத்து அலங்கரிப்பதும், மாலைகள் இடுவதும், கோவில் திருவிழா காலங்களில் அந்த யானையை முன்னிறுத்தி ஊர்வலம் செல்வதும், மைசூர் கேரளா போன்ற இடங்களில் ராஜபுத்திர அரண்மனைகளில் இருந்தும், கோயில்களில் இருந்தும் யானைகளை ஊர்வலம் விடுவதும் வழக்கமாக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய வைப்பது, பிச்சை எடுக்க வைப்பது – இப்படிப்பட்ட கேவலங்களை பக்தியின் பெயரால் நடைமுறைப்படுத்துவது பேரவலம்!
காட்டு யானை போன்ற விலங்கினத்திற்கு விபூதி பட்டைகள் முதல் குங்குமப் பொட்டுகள் வரை இட்டு அவற்றுக்கு மத அடையாளம் திணிப்பது கேவலத்திலும் கேவலம் என்பதனை எவரும் உணர்வதில்லை. யானை என்ன இந்துத்துவ கொள்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட விலங்கினமா? இந்த அறிவு கெட்டத்தனத்தினை உலகத்தில் வேறு எங்காவது காண முடியுமா?
அவ்வப்போது காட்டில் வாழ வேண்டிய இப்படிப்பட்ட மாபெரும் உருவம் கொண்ட விலங்கினங்களை அடக்கியாண்டு மனிதன் தன் கொட்டடியில் வீழ வைத்திருப்பது என்பது விலங்குத் தன்மையை விட மிகவும் மோசமானது!
அதன் விளைவே மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது 18-11-2024 அன்று திருச்செந்தூர் ‘முருகன் கோயில் யானை’-யிடம் (யானையின் பெயர் ‘தெய்வானை’யாம்) அருகில் சென்று (யானைப்பாகன் உதயகுமாரின் உறவினரும், முன்னாள் ராணுவ வீரருமான) சிசுபாலன் என்பவர் செல்பி எடுத்துக் கொண்டதும், யானையின் தும்பிக்கைக்கு முத்தம் கொடுத்ததும் – அதனை விரும்பாத யானை அவரைத் தாக்கியது! அவரைப் பாதுகாக்க ஓடிச் சென்ற யானைப்பாகன் உதயகுமாரையும் யானை – தெய்வானை கடுமையாகத் தாக்கியது! இதன் காரணமாக இரண்டு பேருமே பரிதாபகரமான முறையில் உயிரிழக்க நேர்ந்துள்ளது.
இந்த அப்பாவி இரண்டு சூத்திரர்களும் (சிசுபாலன் & உதயகுமார்) மரணமுற்றதை யடுத்து, ஏற்பட்டுவிட்ட தீட்டைப் போக்க பூணூல் பார்ப்பனர்களான அர்ச்சர்கள் என்ற பெயரில் உள்ள தடிமாடுகள் ‘சம்ப்ரோட்சனம்’ செய்து தீட்டைப் போக்கியுள்ளனர்.
இறந்து போன இரண்டு மனித உயிர்கள் – அவர்களின் குடும்பங்களின் வறிய நிலை – இதனைப் பற்றி எல்லாம் கூடுதலாக அக்கறைப்படுவதற்கு யாரும் அதிகளவில் அக்கறை காட்டவில்லை! விவாத மேடை அமைத்து விவாதிக்க ஊடகங்கள் முன்வரவில்லை. இதுவரை அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியதாக
எவ்விதத் தகவலும் வரவில்லை.
படிக்க: அலைபாயும் வனவிலங்குகள்: வெடிக்க காத்திருக்கும் பேராபத்து!
கூடுதலாக என்ன செய்தி வருகிறது என்றால் ‘ இனி எவரும் யானைகளுக்கு அருகில் செல்லக்கூடாது; தனிப்பட்ட முறையில் பக்தர்கள் நேரடியாக உணவுகள் வழங்க கூடாது; செல்பி எடுக்க கூடாது; ஆசிர்வாதம் வாங்க கூடாது..’ இப்படி உயிரிழப்பு ஏற்படுகின்ற காலகட்டங்களில் மட்டும் அரசு குறிப்பாக அறநிலையத்துறை அறிவிக்கை செய்வது கேலிக்குரியது என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
உண்மையிலேயே காட்டு விலங்கினங்கள் மீது அறிவியல் பூர்வமாக சிந்திக்க கூடிய அரசுகளாக இருக்குமாயின், உடனடியாக அரசின் கட்டுப்பாட்டிலோ, தனியாரின் கட்டுப்பாட்டிலோ உள்ள அனைத்து காட்டு விலங்கினங்களையும் மரியாதையாக அவைகள் வாழும் இயற்கை சார்ந்த காட்டிலேயே விட்டுவிட வேண்டும் என்பதே முற்றிலும் நியாயத்தின் பாற்பட்ட செய்கையாக இருக்க முடியும். ‘சமூக நீதி’ பேசும் ‘திராவிட மாடல்’ – தமிழ்நாடு அரசு இதனைச் செய்ய முன் வருமா? இதுவும் கூட பாசிச பார்ப்பன – ஆர் எஸ் எஸ் – பாஜக – சங்பரிவார் – காவிக் கூட்டத்திற்கு எதிரான நடவடிக்கையாக இருக்க முடியும் என்பதனையும் அரசு உளமாற சிந்திக்க வேண்டும். நல்லது நடக்கும் என எதிர்பார்க்கலாமா?
- எழில்மாறன்.