மின் ஒப்பந்தங்கள் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த அதானி!

இந்த குற்றப்பத்திரிகையில் அதானி நிறுவனம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

1
மோடியின் நண்பரும் தேசங்கடந்த தரகு முதலாளியுமான அதானி

2 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபம் ஈட்டக்கூடிய சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெறுவதற்காக, தன் அதானி க்ரீன் நிறுவனத்துக்குச் சாதகமான நிபந்தனைகளை உருவாக்க இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாக மோடியின் நண்பர் கவுதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

அமெரிக்க துணை உதவி அட்டர்னி ஜெனரல் லிசா மில்லர் தனது அறிக்கையில், “இந்த குற்றப்பத்திரிகையில் அதானி நிறுவனம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க முதலீட்டாளர்களை ஈர்க்க ஊழல் மற்றும் மோசடி மூலம் பெரிய எரிசக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறவும் அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்களால் இந்தக் குற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.”

பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமத்தின் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் 62 வயதான கெளதம் அதானி மற்றும் நியூயார்க்கின் அதானி எரிசக்தி துணை நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் உட்பட ஏழு பேர் சேர்ந்து பத்திர மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

கெளதம் அதானியால் நிறுவப்பட்ட அதானி க்ரீன் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருக்கும் அவரது மருமகன் சாகர் அதானியும், அந்த நிறுவனத்தின் நிர்வாகியான வினித் ஜெயின் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

சூரிய மின் உற்பத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு 2020 மற்றும் 2024 க்கு இடையில் 250 மில்லியன் டாலருக்கும்  அதிகமான லஞ்சம் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் கிடைத்த மின் விநியோக ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து அதானி நிறுவனம் பில்லியன் கணக்கான டாலர்களை திரட்டியதாகக் கூறப்படுகிறது.

கனடா நாட்டின் பெரிய ஓய்வூதிய நிதியமான CDPQ இன் மூன்று முன்னாள் ஊழியர்கள் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது அவர்கள் அது தொடர்பான மின்னஞ்சல்களை அழித்து, அமெரிக்க அரசாங்கத்திற்குத் தவறான தகவலை வழங்க ஒப்புக்கொண்டதன் மூலம் லஞ்சம் பற்றிய விசாரணையைத் தடுத்ததாகக் அமெரிக்காவின் நியூயார்க் அரசு வழக்கறிஞர் (US Attorney) பிரையன் பீஸ் கூறினார். உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் CDPQ, அதானி நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் உள்ள கவ்டாவில் உலகின் மிகப்பெரிய சோலார் ஆலைகளில் ஒன்றான அதானி க்ரீன் நிறுவனம், 750 மில்லியன் டாலர் கார்ப்பரேட் பத்திரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து 175 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை திரட்டியது என்று அமெரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


படிக்க: இலங்கையில் அதானிக்கு எதிராக வீசும் அரசியல் புயல்!


அவர்களின் புகாரின்படி, சாகர் அதானி அஸூர் நிர்வாகிகள் மற்றும் பிறரிடம் “ஊக்குவிப்புகள்” அல்லது லஞ்சம் பற்றி கூறியதாகக் கூறப்படுகிறது, அவர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கு பொறுப்பான இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களை ஒப்புககொள்ள அரசு அதிகாரிகளை “ஊக்குவிக்க” முன்மொழிந்துள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்கள்.

அதானி கிரீன் எனர்ஜி இந்திய பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் திட்டமிடப்பட்ட 600 மில்லியன் டாலர் பத்திர வெளியீட்டை நிறுத்தி வைப்பதாகக் கூறியுள்ளது. 

இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது அம்பலமான பிறகு அதானி கிரீன் எனர்ஜி இந்திய பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் திட்டமிடப்பட்ட 600 மில்லியன் டாலர் பத்திர வெளியீட்டை நிறுத்தி வைப்பதாகக் கூறியுள்ளது.

கௌதம் அதானி கடந்த இரண்டு தகாப்தங்களாக இந்தியாவின் மிகவும் வலிமையான தொழில்துறை குழுக்களில் ஒன்றாக தனது கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார், அதன் முக்கிய துறைமுகங்கள் மற்றும் வர்த்தக வணிகத்தை சுரங்கம், விமான நிலையங்கள், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என அனைத்திலும் எப்படி வளர்ந்தார் என்பதற்கான சான்று தான் அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க தேர்தல் வெற்றிக்கு டொனால்ட் டிரம்பை வாழ்த்தி X தளத்தில் பதிவிட்ட பதிவில், அதானி தனது குழு “இந்தியாவிற்கும் (அமெரிக்காவுக்கும்) இடையேயான கூட்டாண்மையின் ஒரு பகுதியாக அமெரிக்க எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யும்” என்றும் கூறினார்.

2014-ல் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 8.42 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மோடியின் ஆட்சியின் 8 ஆண்டுக்கால இடைவெளியிலேயே 2022 ஆம் ஆண்டு 206 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.


படிக்க: நாடு கடந்தும் அதானி கொள்ளையடிக்க தரகு வேலைப் பார்க்கும் பாசிச மோடி!


அதானி என்ற தரகு முதலாளி, படிப்படியாக தேசங்கடந்த தரகு முதலாளியாக மாறி ஆஸ்திரேலியாவின் லிங்க் எனர்ஜி நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள சுரங்கங்களையும், இந்தோனேசியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள், ரயில்வே போக்குவரத்துகளையும், மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக இஸ்ரேலில் உள்ள ஹைபா போன்ற துறைமுகங்களையும், ஆப்பிரிக்காவில் உள்ள விமான நிலையங்கள், கனிம சுரங்கங்களையும் கட்டுப்படுத்த துவங்கிய போது திடீரென்று பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்ற ’நல்ல முதலாளி’ என்று அவரை உச்சி முகர்கிறார்கள்.

கௌதம் அதானி திடீரென இவ்வாறு வளர்ந்ததற்கும், அவருக்கும் இந்திய ஒன்றியத்தின் பிரதமாரான மோடிக்கும் உள்ள தொடர்பு; அவருக்கும் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு உள்ள தொடர்பு போன்றவற்றுக்கும் எந்த விதமான தொடர்போ இல்லை என்பதை நம்பச் சொல்கின்றனர் ஆர்எஸ்எஸ் பாஜகவின் ஊது குழல்களான கோடி மீடியாக்கள்.

தன் வாழ்நாள் முழுவதும் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளியாலும், 24 மணி நேரமும் தன் விவசாய நிலத்தில் பாடுபடும் விவசாயிகளாலும் சொந்த வாழ்க்கையில் அதிகபட்சம் ஒரு வீடு, தனது வாரிசுகளுக்கு கல்வி மற்றும் திருமணம் போன்றவற்றை கூட நிறைவேற்ற திண்டாடும் நிலையில் கோடிக்கணக்கானவர்கள் வாழும் நம் நாட்டில் பல லட்சம் கோடி ரூபாய்களை சுருட்டிய ஒரு தொழிலதிபரை பற்றி நாடு முழுவதும் விவாதம் நடப்பதில்லை.

தனது வீட்டு சமையல் எண்ணெய் முதல் தான் பயன்படுத்துகின்ற அனைத்து பொருள்களிலும், தான் பயன்படுத்துகின்ற போக்குவரத்தையும், தான் பயன்படுத்துகின்ற மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அனைத்தையும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களையும் கட்டுப்படுத்துகின்ற தரகு முதலாளி கடைந்தெடுத்த அயோக்கியன் என்பது பகிரங்கமாக அம்பலமான பிறகும் உழைக்கும் வர்க்கமாகிய நாம் மௌனமாக வேடிக்கை பார்க்கக் கூடாது. அதானி போன்ற கார்ப்பரேட்டுகளும் அவர்களுக்குச் சேவகம் செய்யும் காவிப் பாசிஸ்டுகளும் வீழ்த்தப்பட்டால்தான் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் வரும்.

  • பரூக்.

1 COMMENT

  1. குஜராத்தில் உள்ள கௌதம் அம்பானியின் மருமகன் சாகர் அம்பானி நிர்வாக இயக்குனராக உள்ள க்ரீன் நிறுவனத்திற்கு
    சாதகமான நிபந்தனைகளை உருவாக்கி அதன் மூலம் இரண்டு பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக லாபம் ஈட்டக் கூடிய சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற கௌதம் அம்பானியின் குழுமம் இந்திய அதிகார வர்க்கத்திற்கு 250 மில்லியன் டாலர்களை லஞ்சமாக கொடுத்த அசிங்கத்தை அமெரிக்க துணை உதவி அட்டர்னி ஜென்ரல் லிசா மில்லர், கௌதம் அம்பானி மற்றும் மோடி பாஜக ஆர் எஸ் எஸ்
    கூட்டத்தை முழுமையாக நிர்வாணப்படுத்தி விட்ட கேவலமான நடவடிக்கைகளை கட்டுரையாளர் தோழர் பரூக் சுருக்கமாக இருந்தாலும் நறுக்கென பதிவு செய்துள்ளார். தோழருக்கு பாராட்டுக்கள்! ஆனால் ஒன்று. கௌதம் அதானி கூட்டமோ, மோடி பாஜக ஆர் எஸ் எஸ் சங்கி கூட்டமோ சாக்கடையில் விழுந்து கிடந்த பன்றிகள் கூட்டம் உதறிவிட்டு ஓட்டம் பிடிப்பது போல் கடந்து செல்வார்களேயொழிய, இதற்காக கிஞ்சிற்றும் கவலைப்படப் போவதில்லை. ஜனநாயகத் தூண்கள் என்று வரிந்து கட்டிக் கொண்டிருக்க கூடிய மோடியின் ஊடகங்கள் இவர்களை என்றுமே குற்றவாளியாக்க ஒரு துரும்பளவும் வாய் திறக்கப் போவதில்லை. இப்படி எல்லாம் கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு தான் கனடா ஆஸ்திரேலியா இந்தோனேசியா இஸ்ரேல் ஆப்பிரிக்கா உள்ளிட்ட எண்ணற்ற நாடுகளில் நிலக்கரி சுரங்கங்களையும் ஆகாய விமானத் தளங்களையும் துறைமுகங்களையும் கௌதம் அதானி குழுமம் வாரிச் சுழற்றுவதற்கு ‘நம்ம மோடி அய்யா’ ‘நன்றாகவே’ தரகு வேலை பார்க்கிறார்! அரை வயிற்றுக் கஞ்சிக்காக ஏங்கித் தவிக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்கள் வாழும் நாட்டில் இப்படிப்பட்ட கொள்ளையர்களுக்கு நாட்டின் இறையாண்மையையே அடகு வைத்து பல லட்சம் கோடி கடன்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஈவு இரக்கமில்லாமல் மோடி கூட்டம் தள்ளுபடி செய்து கொடுக்கிறது என்றால், எவ்வளவு காலம் நாட்டு மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது? களம் புகுவோம்! வெற்றி காண்போம்! அதற்கு ஒரு தூண்டுதல் விசை பரூக் அவர்களின் கட்டுரை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here