கலி கால கிருஷ்ண பரமாத்மா!


ஏழைத்தாயின் பிள்ளை
ஏழ்மையை ஒழிக்குமென
சொன்னார்கள்

இப்படி ஏழைகளை
மறைக்குமென
கனவிலும்
எண்ணவில்லை

இந்தியாவின் அவமானம்
பாபர் மசூதி இடிப்பு
இந்தியாவின் அவமானம்
பெஸ்ட் பேக்கரி கொலைகள்

இந்தியாவின் அவமானம்
வங்கிகளை ஏமாற்றுபவர்கள்
இந்தியாவின் அவமானம்
ஊழல் லஞ்சம்
இந்தியாவின் அவமானம்
வறுமை பசி

இந்தியாவின் அவமானம்
படித்தவர்களை
பகோடா போடச்சொன்னது

பிரதமரோ குடிசைகளை
அவமானமாகக் கருதுகிறார்

வலசை வருகின்ற
பறவைகள்
அம்பானியின்
ஐம்பதாவது மாடியில்
மோதி உயிர்விடுகின்றன

பிரிட்டன் பிரதமர்
வருகையின்போது
இந்தியக் குடிகளுக்கு
சொந்தக் குடிசைகளே சிறையாகிவிடுகிறது

எங்கள்
குடிசைகளைப் போலவே
அரைநிர்வாணமாக நிற்கும்
காந்தியைப் பார்த்துகூட
இங்கிலாந்து பிரதமருக்கு
கண் கூசலாம்

அவர் சிலைகளை மறைத்தும்
நீங்கள் திரை
கட்ட வேண்டியிருக்கும்

அடுத்தமுறை ரஷ்ய பிரதமர்
வாரணாசி வந்தால்
கங்கைக்கரை
அகோரிகளைச் சுற்றி
திரை கட்டுவீர்களா?

இல்லை, இந்தியாவின்
பாரம்பரியமென பம்முவீர்களா?

பாலிவுட் நாயகியரின்
அரை நிர்வாணமோ
சங்கராச்சாரிகளின்
வெற்றுடம்போ
ஆபாசமில்லை
கலை, கலாச்சாரம்

ஏழை குடிசைகள்
ஏழைகளின் வெற்றுடம்பு
நடுவீதியில் திறந்துகிடக்கும்
அவர்கள் வாழ்வு

உங்களுக்கு அவமானம்

மசூதியை
இடிக்கக் கூப்பிட்டபோது
இந்துவாக இருந்தோம்
போரிஸ் ஜான்சன் வரும்போது
ஏழைகளாகத் தெரிகிறோமா?

ஓட்டுப் போடும்போது
இந்தியர்களாக இருந்தோம்
இங்கிலாந்து பிரதமர் வரும்போது
ஏழைகளாகத் தெரிகிறோமா?

துவாபர யுகத்தில்
கிருஷ்ணபரமாத்மா இப்படிதான் திரௌபதியின் மானத்தை
துணி கொடுத்து காத்தானாம்

பாகவத புராணம் சொல்கிறது
கலிகாலத்தின் அடையாளத்தை

ராஜாவுக்கும், திருடனுக்கும்
ஒரேலட்சியம், ஒரே குறிக்கோள்
‘மக்களுடைய சொத்தை
எப்படி கொள்ளையடிப்பது?’

மோடி ஜீ!
நீங்கள் கலி காலத்தின்
கிருஷ்ண பரமாத்மா

குஜராத்தின் மானத்தை
இழுத்துப் போர்த்தி
காப்பாற்றுகிறீர்கள்

நம் மஹாஆஆ பாரத டிரமா
திரை விழாமல்
இன்னும் தொடர்கிறது!

  • கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here