தாலிபானின் புதிய சட்டங்கள், ஆப்கானில் பெண்கள் தங்கள் வீட்டுக்குள் பேசும் அடிப்படை உரிமைகளை மறுத்திருக்கிறது. “ஒரு வயதுவந்த பெண் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியேறும் போதெல்லாம், அவள் தன் குரல், முகம் மற்றும் உடலை மறைக்க கடமைப்பட்டிருக்கிறாள்” என்று புதிய சட்டங்கள் கூறுகின்றன.

மதஅடிப்படைவாதிகள் அறிவியலுக்கு எதிரானவர்கள் என்பதை அவர்களின் செயல்பாடுகள் மூலம் நாம் அறிந்துக் கொள்ளலாம். இந்தியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் என பல நாடுகள் மக்களை மதங்களின் மூலம் கட்டுப்படுத்த  முயல்கிறது. அடிபணிந்து செல்ல கட்டாயப்படுத்துகிறது. என்ன உடை உடுத்த வேண்டும், என்ன விதமான உணவுகளை உண்ண வேண்டும், இதை பேசக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

கடந்த காலங்களில் இந்தியாவில் மாட்டுக்கறிக்கு எதிரான காவி பாசிச கும்பலின் அரசியலும், ஈரானில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான போராட்டமும், ஈராக்கில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை சட்டமாக்குவதற்கு எதிரான போராட்டமும் சமீபத்திய உதாரணங்கள். இது குறித்து நமது இணையதளத்திலும் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.

தற்போது ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் மத அடிப்படைவாதிகள் பெண்களை தீவிரமாக முடக்கும் சட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். அந்த சட்டங்களின் மூலம் பெண்களை குடும்ப அடிமைகளாக்கும் அளவுக்கு கொடூரமாக உள்ளது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

ஆப்கானில் பெண்கள் பொது இடங்களில் தடிமனான உடைகளை கொண்டு தங்கள் உடலை முழுவதுமாக மூடிக் கொள்ள வேண்டுமாம். பொதுவெளியில் சத்தமாக பேசக் கூடாது. வீட்டிற்கு உள்ளேயும் சத்தமாக பேசக் கூடாது. செல்போன்களிலும், கேமாராக்களிலும் படம் பிடிக்க கூடாது. அதனை சமூக வலைதளங்கலிலும் பதிவிடக்கூடாது. ரேடியோக்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. பெண்கள் பாடல் பாடி ரெக்கார்ட் செய்யக்கூடாது என மூடத்தனமான சட்டங்களின் மூலம் பெண்களை மொத்தமாக முடக்கியுள்ளது.

இதற்கு தாலிபான் மதஅடிப்படைவாதிகள் சொல்லும் காரணங்கள் பைத்தியக்காரத்தனமாய் உள்ளது.  பெண்களின் குரலால் ஆண்களின் மனம் திசைதிருப்பப்படலாம் என கூறியுள்ளனர் மதவாத மிருகங்கள். இந்த  புதிய சட்டங்களுக்கு தாலிபான் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா ஒப்புதல் அளித்துள்ளார்.

ஏற்கனவே பெண்கள் வீட்டில் சத்தமாக பாடவும், படிக்கவும் தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சட்டங்களை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இந்த சட்டங்கள் ஹலால் மற்றும் ஹராம் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அமல்படுத்தப்படுகின்றன.

மதவாதிகள் பெண்களை ஆதிக்கம் செலுத்தவும், அடிமைப்படுத்தவும் விரும்புகிறார்கள். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் இதில் படுபிற்போக்காளர்களாய் இருக்கிறார்கள். பெண்களை தங்களது காம இச்சையை தீர்க்கவும் குழந்தை பெற்றுக்கொடுக்கும் இயந்திரங்களைப் போலவும் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை. படித்தால் வெளியுலகம் தெரிந்துக் கொண்டு பிற்போக்காளர்களுக்கு எதிராக திரும்பிவிடுவார்களோ என்ற அச்சத்தில் படிப்பதற்கும் அனுமதியளிப்பதில்லை.

அமெரிக்க ஆதரவு அரசிடமிருந்து ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றி 3 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. இந்த மூன்றாண்டுகளில் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்திவருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் மொத்தமுள்ள 1.4 கோடி பெண்களை நிரந்தர அடிமைகளாக  மாற்றியுள்ளார்கள் தாலிபான்கள்.

அங்குள்ள இஸ்லாமிய ஆண்களும் இந்த பிற்போக்குதனத்தை ஆதரிக்கிறார்கள். அவர்களுக்கும் புதிய சட்டங்களை தாலிபான்கள் இயற்றியிருந்தாலும் அதனால் பெரிதாய் பாதிப்பில்லை. ஆண்கள் தொப்புள் தெரியாமல் உடையணிய வேண்டும் என்றும், தாடியை மழிக்கக் கூடாது என்றும் சட்டம் கூறுகிறது.

படிக்க:

♦ ஜூலியன் அசாஞ்சே  விடுதலை! அமெரிக்க பயங்கரவாதிகளின் உண்மை முகம்.

♦ இந்திய தாலிபான்களின் கொடூர முகம்!

பெண்களை அடிமைப்படுத்தும் தாலிபான்களை எதிர்த்து உலகளவில் பெரிய எதிர்ப்பில்லை என்பது ஆச்சரியப்படுத்துகிறது. 2021 ஆம் ஆண்டு தாலிபான்களால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேருவது தடுக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்புக் கூடாது தற்போது பெண்களை மொத்தமாக முடக்கும் இச்சட்டத்திற்கு எழவில்லை. சர்வதேச சமூகம் இந்த விசயத்தில் அமைதி காப்பது ஆபத்தானது. தாலிபான்களுக்கு சாதகமானது.

இவர்கள் இயற்றியிருக்கும் இந்த சட்டத்திற்கு அறவொழுக்கச் சட்டம் என பெயரிட்டுள்ளார்கள். ஆண்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பெண்களை ஒடுக்குவதற்கு பெயர் தான் அறவொழுக்கமாம்..

இதனை எதிர்த்து போராடும் நிலையில் ஆப்கான் பெண்களின் நிலை இல்லை. தாலிபான்களுக்கு எதிராக மட்டுமில்லாமல் மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக ஆப்கான் மக்கள் ஒன்றினைந்து போராட வேண்டிய அவசிய சூழலையே இத்தருணம் உணர்த்துகிறது. இல்லையேல் தொழில்நுட்பம் மிகுந்திருந்தாலும் காட்டுமிராண்டி காலத்திற்கே தாலிபான்கள் இழுத்துச் செல்வார்கள். இதனால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலையிலிருந்தே இந்த பிரச்சினையே அணுக வேண்டியுள்ளது. 

  • சுவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here